பொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெரால்ட் டார்மனினுக்கு எதிரான #MeToo பிரச்சாரம் அவர் இந்த மாதம் உள்துறை அமைச்சரானதிலிருந்து தீவிரமடைந்துள்ளது. பசுமை கட்சியினர், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI), சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் வலதுசாரி குடியரசுக் கட்சியினர் (LR) அனைவரும் அவரது இராஜினாமாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த பிரச்சாரத்தில் முற்போக்கானது எதுவும் இல்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூற வேண்டும். தொற்றுநோய், வங்கி பிணை எடுப்பு, சிக்கன நடவடிக்கை, பாரியளவிலான மரணங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்புகளுக்கு எதிரான பொலிஸ் அடக்குமுறை ஆகியவற்றுக்கு இடையே ஐரோப்பிய அரசாங்கங்களின் படுகொலைக்குத் திரும்பும் கொள்கையில் தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த கோபம் உள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், டார்மனின் கூறப்படும் பாலியல் முறைகேட்டில் கவனம் செலுத்துவது, வளர்ந்து வரும் இந்த எதிர்ப்பை, பாலின அரசியல் மற்றும் பொலிஸ் அரசுக்கு ஆதரவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரச்சாரத்தின் பின்னால் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் 2009 இல் நிகழ்ந்த சம்பவங்களுடன் தொடர்புடையவை. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மக்ரோன் நிர்வாகத்தில் டார்மனின் அமைச்சரான பின்னர் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது குற்றம் சாட்டிய, சோஃபி பாட்டர்சன்-ஸ்பாட்ஸ், (Sophie Patterson-Spatz) டார்மனினுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும், இதனால் அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தன்மீதான குற்றப் பதிவைத் துடைத்தார் என குறுஞ்செய்திகளை அனுப்பினார். பாலியல் சந்திப்பு சம்மதமில்லாமல் நடந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி வழக்குரைஞர்கள் 2017-2018 ஆம் ஆண்டில் மூன்று முறை சம்பிரதாயமாக விசாரணையை கைவிட்டனர். டார்மனின், வழக்கு தொடர்பான எதிலும் குற்றவாளி எனக் கருதுவதென்பது ஒருபுறம் இருக்க, ஒருபோதும் விசாரணைக்கே உட்படுத்தப்படவில்லை.

"ஜெரால்ட் டார்மனின் உள்துறை அமைச்சகத்திலிருந்து வெளியேற வேண்டும்" என்ற தலைப்போடு, பாலியல் முறைகேடு பிரச்சாரத்திற்கான ஒரு அறிக்கை ஜூலை 23 அன்று Libérationபத்திரிகையில் வெளிவந்தது. இதை Generation.S இன் Claire Monod மற்றும் Sophie Taillé-Polian ஆகியோர் எழுதியுள்ளனர். சோசலிஸ்ட் கட்சியின் சமீபத்திய உடைவான மனோன் ஓப்ரி, LFI இன் கிளெமொன்டீன் ஓப்ரி, பசுமைக் கட்சியின் பெண் தலைவர்கள், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகியோரால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

"ஜெரால்ட் டார்மனின் நிரபராதி என்று கருதப்படுகிறார்" என்று அவர்கள் எழுதுகிறார்கள். "ஆனால் பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல் மற்றும் பலவீனத்தை துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றுக்கான ஆரம்ப விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை உள்துறை அமைச்சு பதவிக்கு உயர்வு வழங்கியதை எவ்வாறு நியாயப்படுத்துவது? மற்றும் அவருடைய வக்கீல்கள் உண்மைகளை மறுக்கவில்லை, ஆனால் அவர்களின் சட்ட விளக்கம்?” டார்மனின் உயர்வு, "குடியரசுக் கட்சியின் அரசியல் பிளவுகளை மேலும் மீறும் ஒரு நெருக்கடியை" உருவாக்கியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள், “இந்த நியமனத்தை விட குடியரசின் காவல்துறை தகுதியானது, அரசியலிலும் மற்ற இடங்களிலும் பெண்கள் இனி மௌனம் சாதிக்க மாட்டார்கள்! ஜெரால்ட் டார்மனின் உள்துறை அமைச்சராக இருக்க முடியாது” என முடிக்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆப்கானிஸ்தானில் இருந்து சிரியா மற்றும் மாலிக்கு நடந்த போர்களில் இரத்தம் சிந்திய, பிரெஞ்சு அரசை தார்மீக ரீதியில் சுத்திகரிப்பதற்கு டார்மனின் நீக்கம் அவசியம். பிரெஞ்சு காவல்துறையின் உயர் தார்மீக தராதரங்களின்படி வாழும் ஒருவரால் அவர் மாற்றப்பட வேண்டும்!

டார்மனினின் #MeToo எதிர்ப்பாளர்களின் வலதுசாரி தன்மை, ஏகாதிபத்தியத்துடனான அவர்களின் கருத்தொருமைப்பாடு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான விரோதப் போக்கு பற்றிய தெளிவான சுய-குற்றச்சாட்டைக் கண்டுபிடிப்பது கடினம். ஆண்கள், பெண்கள் உட்பட, எண்ணற்ற "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களையும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் கைது செய்து அடிப்பது, கண்களில் சுடுவது மற்றும் குடியேறியவர்களை சுற்றி வளைப்பது என பொலிஸ் படைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற வகையில் கழித்திருக்கிறார்கள்.

டார்மனினுக்கு எதிரான #MeToo பிரச்சாரத்தைப் பற்றி குறிப்பாக கவனிக்கத்தக்கது என்னவென்றால், டார்மனின் மற்றும் மக்ரோன் நிர்வாகம் பின்பற்றும் பொலிஸ்-அரசு கொள்கைகளை அதன் தலைவர்கள் தவிர்க்கிறார்கள், உண்மையில் மறைக்க முயற்சிக்கிறார்கள்.

கடந்த திங்கட்கிழமை, நாஜி-ஒத்துழைப்பு விச்சி ஆட்சிக்கும் இன்றைய பிரெஞ்சு காவல்துறையினருக்கும் இடையிலான வரலாற்று தொடர்புகளை எழுப்பியதற்காக கொலோம்பின் பசுமை கட்சி மேயர் பாட்ரிக் சைமோவிட்ச் மீது வழக்குத் தொடுப்பதாக டார்மனின் அறிவித்தார். தீவிர வலதுசாரி பொலிஸ் தொழிற்சங்கங்களால் கோரப்பட்ட இந்த முடிவு, உண்மையில் பிரான்சின் காவல்துறை அல்லது பாசிசம் குறித்து ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்று விமர்சனங்களை குற்றகரமானதாக்கிறது.

செவ்வாயன்று, டார்மனின் தேசிய சட்டமன்றத்தின் ஒரு குழுவிற்கு பாசிசவகைப்பட்ட உரையில் "பொலிஸ் வன்முறை" என்ற சொற்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் "நான் மூச்சுத் திணறுகிறேன்" என்று கூறினார். அவர் கூறினார்: "வன்முறை வகைகளை ஒப்பிடுவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. சில சட்டபூர்வமானவை -இது காவல்துறையினரின் பலம்- சில சட்டவிரோதமானது -இது பொலிஸ் அல்லது gendarmes அல்லாதவர்களால் பலம் பயன்படுத்தப்படுவது” என்று அவர் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மிருகத்தனமான பொலிஸ் வன்முறை முறையானது, ஏனென்றால் அதைச் செய்வது காவல்துறையினரே.

டார்மனினுக்கு பதிலாக #MeToo பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படும் ஒரு நபர், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்தக் கொள்கைகளை ஒரு சிறியளவும் மாற்றாது. டார்மனினுக்கு எதிராக #MeToo, பெண்களைப் பாதுகாக்கிறது என்ற கூற்றை இந்த மோசமான வழக்கின் ஆய்வு வெடிக்கச் செய்கிறது.

மே 2009 இல், 36 வயதான சோஃபி ஸ்பாட்ஸ் (பிறப்பு ஒல்கா பாட்டர்சன்), பாரிஸ் அலுவலகங்களில் ஆளும், வலதுசாரி UMP (இன்று LR) டார்மனினை அணுகினார். ஒல்கா பாட்டர்சன்-ஸ்பாட்ஸ் ஒரு முன்னாள் விலைமாதும் UMP யின் உறுப்பினருமாவர். டார்மனின் அப்போது Tourcoing இல் 25 வயதான UMP நகராட்சி கவுன்சிலராக இருந்தார்.

பாட்டர்சன்-ஸ்பாட்ஸ் தனது குற்றவியல் பதிவை அழிக்க டார்மனின் உதவியைக் கோரினார், அதில் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள் மற்றும் முன்னாள் காதலருக்கு அச்சுறுத்தும் அழைப்புகளும் இருந்தன. அன்று இரவு, பேட்டர்சன்-ஸ்பாட்ஸ் மற்றும் டார்மனின் ஒரு உணவகத்தில் இரவு உணவு அருந்தினர், மத்திய பாரிஸில் உள்ள குழு உடலுறவில் ஈடுபடும் ஒரு கிளப்புக்குச் (club échangiste) சென்றனர், இரவு முழுவதும் ஒரு ஹோட்டலில் கழித்தனர். ஆறு மாதங்களுக்குப் பின்னர், நவம்பர் 2009 இல், பாட்டர்சன்-ஸ்பாட்ஸின் வழக்கை விசாரிக்குமாறு டார்மனின் அப்போதைய நீதித்துறை அமைச்சர் மிஷேல் அல்லியோ-மரி இடம் கேட்டார்.

அவர்கள் இருவரும் 2012 வரை தொடர்ந்து குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டனர். டிசம்பர் 17, 2009 அன்று அனுப்பப்பட்ட பாட்டர்சன்-ஸ்பாட்ஸின் செய்திகளில் ஒன்று, பின்னர் ஊடகங்களுக்கு கசிந்தது, அவர் விஷயத்தில் உதவி செய்வார் என்பதால் டார்மனினுடன் தூங்கினார் என்று அது கூறுகிறது. அப் பெண் எழுதினார்: “ஒருவரின் நிலையை தவறாகப் பயன்படுத்துதல்!! என் பார்வையில் இது ஒரு மோசமான முட்டாள்தனம்!! எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் வேதனையில் இருக்கும்போது, கொள்கை உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்!!!! உங்களுடன் தூங்க நான் செல்ல வேண்டிய முயற்சி உங்களுக்குத் தெரிந்தவுடன் !!!! என் விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்".

டார்மனின் பதிலளித்தார்: “நீங்கள் சொல்வது சரிதான். அநேகமாக நான் ஒரு மோசமான முட்டாள் (sale con). என்னை மன்னிக்குமாறு நான் எப்படி கேட்க முடியும்?”

டார்மனின் அணிகளில் உயர்ந்தார், 2012 இல் தேசிய சட்டமன்ற உறுப்பினரானார். 2017 ஆம் ஆண்டில், மக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், டார்மனின் பொது நடவடிக்கை மற்றும் கணக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள், பாட்டர்சன்-ஸ்பாட்ஸின் கணவர் பியர் ஸ்பாட்ஸ், நீதி அமைச்சருக்கு டார்மனின் பாலியல் பலாத்காரம், அதிகார துஷ்பிரயோகம், மற்றும் ஒரு ஆற்றொணா சூழ்நிலையில் ஒரு நபரை சுரண்டல் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி, நீதி அமைச்சருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்.

ஒரு குற்றவியல் விசாரணை ஜூன் 2017 இல் திறக்கப்பட்டது, ஆனால் இந்த வழக்கு, ஜூலை 11, 2017 அன்று வழக்குரைஞர்களால் கைவிடப்பட்டது, ஏனெனில் பாட்டர்சன்-ஸ்பாட்ஸ் ஒரு நேர்காணலுக்கான பொலிஸ் கோரிக்கைகளை மறுத்துவிட்டார். பின்னர் அவர் ஒரு நேர்காணலைக் கோரி வழக்குரைஞர்களுக்கு கடிதம் எழுதியபோது இது 2018 ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டது, ஆனால் அடுத்த மாதமே மீண்டும் கைவிடப்பட்டது.

பிப்ரவரி 16 அன்று வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான குறிப்பில் வழக்குரைஞர்கள் இந்த முடிவை விளக்கினர், "மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் புகார்தாரரின் சம்மதமின்மையை நிறுவவில்லை, மேலும் அவை அவருக்கு எதிரான எந்தவொரு தடை, அச்சுறுத்தல், ஆச்சரியம் அல்லது வன்முறைக்கும் ஆதாரம் கொடுக்கவில்லை." பிரெஞ்சு சட்டத்தில் ஒரு கற்பழிப்பு செயலுக்கு, "வன்முறை, வற்புறுத்தல், அச்சுறுத்தல்கள் அல்லது ஆச்சரியம்" தேவைப்படுகிறது.

பாட்டர்சன்-ஸ்பாட்ஸ் இரண்டாவது குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளார், இந்த முறை குற்றவியல் நீதிமன்றத்தில் அல்ல சிவில் நீதிமன்றத்தில். இந்த இரண்டாவது வழக்கும் கைவிடப்பட்டு மேல்முறையீட்டில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வழக்கின் இரு தரப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, டார்மனின் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பாட்டர்சன்-ஸ்பாட்ஸின் வழக்கறிஞர், அப்பெண்ணுக்கு உதவி செய்வதாக டார்மனின் வாக்குறுதியானது, “ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கற்பழிப்புக்கான தயாரிப்பு கூறு” எனக் கூறியுள்ளார். இருப்பினும் இரு தரப்பினரும், இரவு உணவில் இருந்து ஒரு குழு உடலுறவில் ஈடுபடும் ஒரு கிளப்புக்கும் (club échangiste) ஒரு ஹோட்டலுக்கும் சென்றுள்ளனர், ஆனால் பாட்டர்சன்-ஸ்பாட்ஸ் பின்னர் அவரது சம்மதத்தை ஒப்புக் கொண்டு குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார்.

குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் அது பொருத்தமற்றது என்று வாதிடுபவர்கள், தங்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள் அல்லது மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள். ஏனெனில் டார்மனின் ஒரு பிற்போக்குத்தனமானவர், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்பட வேண்டும். குற்றமற்றவர் என்று கருதப்படுவதற்கான தாக்குதல், தொழிலாளர்களை குறிவைக்கும் அரசையும் அதன் அடக்குமுறை சக்திகளையும் தொடர்ந்து பலப்படுத்துகிறது.

டார்மனினுக்கு எதிரான #MeToo பாணி பிரச்சாரம், நடுத்தர வர்க்கத்தின் ஒரு சலுகை பெற்ற பிரிவின் கோரிக்கைகளை வெளிப்படுத்துகிறது. இது மக்ரோனுக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான போராட்டத்திற்கு விரோதமானது. ஆனால் ஒரு குறுகிய அடுக்கு செல்வந்த பெண்களுக்கு மாநில மற்றும் நிறுவனங்களில் அதிக பதவிகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறது.

மக்ரோனின் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் எதிர்ப்பு முற்றிலும் மாறுபட்ட வழிகளில் உள்ளது - சமூக சமத்துவம், ஜனநாயக உரிமைகளுக்காகவும் மற்றும் வறுமை, சிக்கனம், போர் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சிக்கு எதிரானதாகவும் உள்ளது. #MeToo இயக்கம் உட்பட அரசியல் ஸ்தாபகம், மக்ரோனுக்கான இந்த வர்க்க எதிர்ப்பிற்கு விரோதமானது. பாலின, இன அரசியலைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை பிரித்து விரக்தியுறச் செய்ய விரும்புகிறது. டார்மனினுக்கு எதிரான #MeToo தார்மீக பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள உந்து சக்தி இதுவேயாகும்.

Loading