பரிசோதனைகள் குறைந்தும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அமெரிக்காவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக அதிகரிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் கூடுதலாக ஒரு மில்லியன் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாவதற்கு வெறும் இரண்டு வாரங்களே ஆயின. ஆகஸ்ட் 6 அன்று, நாட்டின் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையான மைல்கல்லாக ஐந்து மில்லியனை எட்டியுள்ளது.

இந்த கட்டுரையை எழுதுகையில், அமெரிக்காவில் 5,187,611 கோவிட்-19 நோயாளிகள் இருந்தனர் என்பதுடன், 165,500 பேர் இறந்துள்ளனர். மேலும், தற்போது கோவிட்-19 நோயறிகுறி உள்ளவர்கள் 2,367,820 பேர் உள்ளனர் என்பதுடன், 50,000 க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19 சிகிச்சைக்காக குழந்தைகளும் SARS-CoV-2 அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாத மத்தியில் கோவிட்-19 நோயறிகுறி உள்ளவர்களின் விகிதம் 4.5 சதவிகிதம் என்ற குறைந்த புள்ளியில் இருந்து பின்னர் 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, ட்ரம்ப் நிர்வாகத்தால் அதிகளவு பரிசோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் தொடர்ந்து பல வாரங்களாக அதே விகிதம் இருந்தது.

உலகளவில், கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 20 மில்லியனாக இருப்பதுடன், இறப்பு எண்ணிக்கை 732,000 ஆக உள்ளது. உலக மக்கள்தொகையில் அமெரிக்கா 4.25 சதவிகிதத்தை கொண்டுள்ள நிலையில், மொத்த கோவிட்-19 நோயாளிகளில் 26 சதவிகிதத்தையும் மற்றும் ஒட்டுமொத்த இறப்பில் 22.6 சதவிகிதத்தையும் அது கொண்டுள்ளது. தனிநபர் அடிப்படையில், பிரேசில், பெரு மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் மட்டும் அமெரிக்காவை காட்டிலும் கூடுதல் நாளாந்த நோயாளிகளை கொண்டுள்ளன (தோராயமாக ஒரு மில்லியனுக்கு 163 தொற்றுக்கள் என்ற விகிதத்தில்).

ஆகஸ்ட் 5, 2020, புதன்கிழமை, டெக்சாஸில் உள்ள கோட்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் (AP Photo/LM Otero)

அபாயகரமாக, வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் (University of Washington School of Medicine) சுகதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation-IHME), டிசம்பர் 1 ஆம் திகதிக்குள்ளாக அமெரிக்காவில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 295,011 ஐ எட்டும் என்று தற்போது கணித்துள்ளது. மேலும் இந்நிறுவனம், அடுத்த 113 நாட்களில் மற்றொரு 135,000 பேர் (அதாவது நாளொன்றுக்கு 1,195 இறப்புக்கள் வீதம்) இதற்கு பலியாவார்கள் என்றும் மதிப்பிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் பாதியளவு கல்வி மாவட்டங்கள் ஆசிரியர்களின் நேரடி கல்வியூட்டலை காட்டிலும் இணையவழி கல்வியூட்டலை செயல்படுத்தினாலும், முறையான முகக்கவசப் பயன்பாடு இருக்காது என்ற ஊகத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

IHME இயக்குநர் டாக்டர் கிறிஸ்தோபர் முர்ரே (Dr. Christopher Murray), உலகளவில் பொதுமக்களால் முகக்கவசம் முறையாக பயன்படுத்தப்பட்டால், மதிப்பீடு செய்யப்பட்ட கூடுதல் இறப்பு எண்ணிக்கை அந்த நாள் முதல் 49 சதவிகிதமாக குறைந்து, 228,271 என்ற குறைந்தளவு மொத்த எண்ணிக்கையை எட்டும் என்பதை ஒப்புக்கொண்டார். அதேவேளை, உத்தரவுகள் தளர்த்தப்படுமானால், இறப்பு எண்ணிக்கை 391,000 ஆக அதிகரிக்கக்கூடும். கைபேசி தரவின் அடிப்படையில், சமூக இயக்கம் குறித்த தற்போதை மதிப்பீடு நோய்தொற்றுக்கு முந்தைய விதிமுறைகளுக்கு 25 சதவிகிதம் குறைவாக உள்ளது. தேசியளவிலான கட்டுப்பாடுகளின் உச்சத்தில், இயக்கம் தொற்றுநோய்க்கு முந்தைய போக்குகளுக்கு உட்பட்ட வகையில் 55 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

IHME, நோய்தொற்று பரவல்களின் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையை முன்கணிப்பதில் தொடர்ந்து அதிகப்படியாக பழமைவாதத்துடன் இருந்து வருகிறது, மேலும் அனைத்து மதிப்பீடுகளின் படி, இலையுதிர் கால மற்றும் குளிர்கால பருவநிலை மாற்றங்களின்போது சமூக பரிமாற்றத்தின் இயக்கவியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை நோய்தொற்று ஏற்படுத்த முடியும்.

அமெரிக்காவில், புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும், பரிசோதனை செய்தல், தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச அளவிலான பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், தேசியளவிலான பற்றாக்குறை நிலவுவது என்பதை தாண்டி பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான தனது உந்துதலால் கொலைகார மற்றும் குற்றகரத்தன்மையை ஏற்கிறது.

தனிநபர் கோவிட்-19 நோய்தொற்று குறித்த உலகளாவிய வரைபடம்

இந்தியானா, மிசிசிப்பி மற்றும் லூசியானா மாநிலங்களில் பல பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்பட்டு முதல் நாளிலேயே கோவிட்-19 நோய்தொற்று பலருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில், பள்ளிகளை மூடுவதற்கான அல்லது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தனிமைப்படுத்துவதற்கான அவசியம் உருவாகிறது. ஆசிரியர்களின் நேரடி கல்வி பயிற்றுவிப்புக்கு ஏற்ப பள்ளிகளை பாதுகாப்பாக திறக்க முடியும் என்ற கூற்றுக்களின் பொய்த்தன்மையை அனுபவம் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது. உண்மையில், பள்ளிகளில் நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் அதிரடியாக அதிகரிப்பதற்கான சாத்தியங்களுக்குத்தான் வழிவகுக்கப்பட்டு வருகின்றது.

இது அநேகமாக ஃபுளோரிடாவில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, அதாவது மாநில அளவில் 530,000 கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர் என்பதுடன், சனிக்கிழமை மட்டும் 8,500 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கல்வி ஆணையர் ரிச்சர்ட் கோர்கோரன் (Richard Corcoran), பள்ளிகளை மீண்டும் தொடங்கும் போது வகுப்பறையில் பாதுகாப்பாக கல்வி பயிற்றுவிப்பதற்கான தேவைகளை மாவட்டம் நிறைவேற்றவில்லை என்று ஒரு அறிக்கையை வாரியம் வெளியிட்டதன் பின்னர், அதற்கு “சட்டத்தைப் பின்பற்ற வேண்டும், அது மிகவும் எளிது,” என்று ஹில்ஸ்போரோ கவுண்டி பள்ளி வாரியத்திற்கு (Hillsborough County School Board) தெரிவித்தார். இதற்கிடையில், பள்ளிகளை மீண்டும் திறக்க கடுமையாக அழுத்தம் கொடுத்துவந்த ஆளுநர் ரோன் டிசாண்டிஸ் (Ron DeSantis), பள்ளி வாரியங்களின் பரிந்துரைகள் அல்லது இடர் மதிப்பீட்டுக்களை வழங்க மறுக்குமாறு ஃபுளோரிடா எங்கிலுமான சுகாதார இயக்குநர்களை அறிவுறுத்தினார்.

ஆகஸ்ட் 5 அன்று, டெக்சாஸில் உள்ள மூன்று கிராமப்புற பள்ளி மாவட்டங்கள் முதலில் வகுப்புகளைத் தொடங்கியிருந்தன. சில டல்லாஸ் பகுதி மாவட்டங்கள் இலையுதிர் கால வகுப்புகளை முதல் நாளன்று தொடங்குவதற்கு தயாராக இருந்த நிலையில், பொதுப் பள்ளிகளின் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட வேண்டுமா என மாநில அதிகாரிகள் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். “தரவு சேகரிப்பு குறித்த இந்த கேள்வி இன்னமும் முகமையின் தீவிர விவாதத்தில் உள்ளது, மேலும் ஏதேனும் தரவு தேவைப்பட்டால், அது எவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி வரும் வாரங்களில் புதிய தகவல்கள் சேகரிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று டெக்சாஸ் கல்விச் சங்கத்தின் (Texas Education Association) செய்தித் தொடர்பாளர் ஃபிராங்க் வார்ட் (Frank Ward) தெரிவித்தார்.

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல பள்ளிகளின் மறுதிறப்புக்கள், பள்ளிப் பருவ குழந்தைகளிடையே நோய்தொற்று பரவுவதற்கான ஆபத்துக்கள் குறைவு என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக சில சம்பவங்களை மேற்கோள்காட்டி மேற்கொள்ளப்பட்டன. என்றாலும், இந்த நாடுகள் புதிய நோய்தொற்றுக்களை கண்காணித்துக் கண்டறிவதற்கான மிகுந்த திறமையுள்ள கண்காணிப்பு அமைப்பை கொண்டிருப்பதோடு, இவற்றின் தனிநபர் நோய்தொற்று பரவல் வீதமும் அமெரிக்காவை காட்டிலும் கணிசமாகக் குறைவாக உள்ளது.

அமெரிக்காவில் புதிய பரிசோதனைகளுக்கும் புதிய நோய்தொற்றுக்களுக்கும் இடையிலான ஒப்பீடு

ஒரு இஸ்ரேலிய பள்ளியில் மே மாதம் ஏற்கனவே அறியப்பட்ட இரண்டு கோவிட்-19 நோயாளிகளால் 153 மாணவர்களுக்கும் 25 பணியாளர்களுக்கும் நோய்தொற்று பரவியது என்பது குறிப்பிடத்தக்கது, இதில் பள்ளிக்கு வெளியே பள்ளியுடன் நெருங்கிய தொடர்புடைய 87 பேருக்கு நோய்தொற்று பரவியதும் அடங்கும். அந்த நேரத்தில், தேசியளவிலான நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை பல நாட்கள் 30 க்கும் குறைவாகவே இருந்தது.

குழந்தைகளைப் பற்றி சிறந்த முடிவுகளைக் கொடுக்கும் வகையில், அவர்கள் குறைவாகவே பரிசோதிக்கப்படுவதால், அவர்களைப் பற்றிய ஆய்வுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) கருத்துப்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 200,000 பேருக்கு மேலாக கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பரவியிருப்பதாகத் தெரிகிறது. கோவிட்-19 இறப்புக்களில் ஒரு சதவிகிதத்திற்கு குறைவானதாக இது உள்ளது. அங்கு கவாசாகி நோய் போன்ற அறிகுறிகளுடன் 342 பேர் உள்ளனர், இது மருத்துவ ரீதியாக குழந்தைகள் மத்தியில் காணப்படும் பலபடித்தான அழற்சி நோய்க்குறி (Multisystem inflammatory syndrome) என்று அறியப்படுகிறது. இதனால் ஆறு குழந்தைகள் இறந்துள்ளனர்.

இருந்தாலும், சமீபத்திய கண்டுபிடிப்புக்கள், குழந்தைகள் எளிதில் நோய்தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதுடன், வைரஸை பரப்பும் திறனும் அவர்களிடம் உள்ளது என்ற உண்மையை பள்ளிகளை திறப்பது பற்றிய விவாதத்தின் முன்னணி விடயமாக கொண்டுவந்துள்ளன. ஜியோர்ஜியா சுகாதாரத் துறைக்காக டாக்டர் கிறிஸ்டின் எம். ஜாப்லெவ்ஸ்கி (Dr. Christine M. Szablewski) வெளியிட்ட ஆய்வில், ஒரே நாள் இரவில் நடத்தப்பட்ட பரிசோதனை முகாமில் 6 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், “இந்த விசாரணை அனைத்து வயது குழந்தைகளும் SARS-CoV-2 நோய்தொற்றுக்கு ஆளாகின்றனர் என்பதையும், ஆரம்ப அறிக்கைகளுக்கு மாறாக, நோயைப் பரப்புவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதையும் நிரூபிக்கும் ஆதாரங்களையும் சேர்த்துக் கொண்டுள்ளது” என்று நிறைவு செய்தார்.

சமூகங்களின் நுண்ணிய தன்மையும், மற்றும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் நிகழும் விரிவான பரஸ்பர செயல்பாடுகளும் அனைத்து புவியியல் துறைகளையும் புதிய நோய்தொற்று வெடிப்புக்கான ஆபத்திற்குட்படுத்துகின்றன. மருத்துவத்திற்கான வாண்டர்பில்ட் பல்கலைக்கழக பள்ளியின் (Vanderbilt University School of Medicine) உறுப்பினரான டாக்டர் டினா ஹார்டர்ட் (Dr. Tina Hartert), “எங்களது நகரங்களிலுள்ள பள்ளிகள், நகரங்களில் என்ன நடக்கிறதோ அது பள்ளிகளிலும் நடக்கப் போகிறது என்பதை அறிவதற்கான சிறிய மினி-மைக்ரோகாஸ்ம்ஸ்களாக (mini-microcosms) உள்ளன. ஏதோவொரு வழியில் உறுதியான தரவு கிடைக்கும் வரை, ஏனைய சுவாச பிரச்சினை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கான பல தசாப்த கால தரவுகளை நம்புவதற்கு எங்களுக்கு காரணம் உள்ளது. அதேவேளை, இந்த வைரஸ் அப்படிப்பட்டதாக இருக்காது என்று நம்புவதற்கு பெரியளவில் காரணங்கள் எதுவுமில்லை” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

குழந்தைகள் மருத்துவ விஞ்ஞானத்திற்கான அமெரிக்க கல்விச்சாலை (American Academy of Pediatrics) இந்த வாரம் வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில், ஜூலை மாதம் கடைசி இரண்டு வாரங்களில் மட்டும் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரொனா வைரஸ் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

கைசர் குடும்ப அறக்கட்டளை (Kaiser Family Foundation) ஆய்வின்படி, நான்கு தொழிலாளர்களில் ஒருவர், அவர் அல்லது அவள் நோய்தொற்றுக்கு ஆளானால், கடுமையாக பாதிக்கப்படுவதற்கான அதிகபட்ச ஆபத்து அவருக்கு இருக்கும். ஆசிரியர்களிடையே, சுமார் 1.47 மில்லியன் (24 சதவிகிதம்) பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். கூடுதலாக, பள்ளி வயது குழந்தைகளுடன் வீடுகளில் வாழ்ந்து வரும் மில்லியன் கணக்கான வயோதிகர்களும் இந்நிலைக்கு ஆளாவர்.

அனைத்து கணக்குகளின்படி, இதுவரை ஏராளமாக பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை பெருமிதமடைகின்ற போதிலும், இந்த தொற்றுநோய் பரவும் வேகத்தில் அமெரிக்கா கண்மூடித்தனமாக பறந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்திய வாரங்களில் அமெரிக்காவில் நாளாந்த கோவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்பது மிகவும் கவலைக்குரியது. ஜூலை 24 அன்று, கண்டறியப்பட்ட புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 75,204 ஆக அதிகரித்தபோது, அந்த நாளில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு நாள் உச்சபட்ச எண்ணிக்கையாக 926,876 ஐ எட்டியது. அப்போதிருந்து, இந்த எண்ணிக்கை குறைந்து, ஆகஸ்ட் 8 அன்று 665,029 பரிசோதனைகள் மட்டும் எடுக்கப்பட்டிருந்தன. அன்று 53,923 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியதாக அமெரிக்கா தெரிவித்தது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூட ஆகஸ்ட் 6 அன்று கருத்து தெரிவிக்க கடமைப்பட்டதாக உணர்ந்தது: “ஒவ்வொரு நாளும் தேசியளவில் புதிய கொரொனா வைரஸ் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 75,000 க்கும் மேலாக உச்சமடைந்திருந்ததிலிருந்து குறைந்து கொண்டே வந்தது, என்றாலும், நோய்தொற்று பரிசோதனை மற்றும் தரவுகள் சேகரிப்பு தொடர்பாக பெரிய மாநிலங்களில் நிலவும் சிக்கல்களால் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குழப்பத்திற்குரியதாக உள்ளது.”

அதிகபட்ச தீவிரமான பரிசோதனைகள் நோய்தொற்றுக்கள் குறித்த புள்ளிவிபரங்களை அதிகப்படியாக்குவதாகவும், பரிசோதனைகள் அதிகரிக்கப்படுவதால் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையும் பெரிதும் அதிகரிப்பதானது தவறாக அதிகரித்துக் காட்டப்படுவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் பலமுறை புகார் அளித்துள்ளார். தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தும் கொலைகார பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகளை மீளத் திறக்கும் உந்துதலின் பின்னணியில், பெருநிறுவன உயரடுக்கின் சார்பாக செயல்படும் அரசாங்கம், தொற்றுநோயின் உண்மையான தாக்கத்தின் அளவை மறைக்க ஒரு குற்றகரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதை நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.

மேலதிக வாசிப்புகளுக்கு:

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு

[5 August 2020]

Loading