துறைமுக வெடிவிபத்து மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் லெபனான் அரசாங்கம் இராஜினாமா செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

லெபனான் பிரதம மந்திரி ஹாசன் தியாப் நேற்று மாலை நாட்டுக்கு வழங்கிய ஒரு தொலைக்காட்சி உரையில் அவரது அரசாங்கம் இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை பெய்ரூட்டின் துறைமுக பண்டகச்சாலையில் சேமிக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் பயங்கரமாக வெடித்ததன் மீது அதிகரித்து வரும் சீற்றத்திற்கு மத்தியில் இந்நகர்வு வந்தது.

லெபனான் ஜனாதிபதி Michel Aoun, (இடதுபுறம் உள்ளவர்), திங்கட்கிழமை, ஆகஸ்ட் 10, 2020 இல் லெபனானின் கிழக்கு பெய்ரூட்டின் பாப்தாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், லெபனான் பிரதம மந்திரி ஹாசன் தியப்பிடமிருந்து இராஜினாமா கடிதத்தைப் பெறுகிறார். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ Dalati Nohra)

வாரயிறுதியில் அங்கே நடந்த கோபமான ஆர்ப்பாட்டங்களில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படைகள் கண்ணீர் புகைகுண்டுகளையும் இரப்பர் தோட்டாக்களையும் பிரயோகித்து, 700 க்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்திய போது, அந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு இட்டுச் சென்றன.

அரசாங்கத்தின் இராஜினாமாவை அறிவித்து தியாப் கூறுகையில், லெபனானில் ஊழல் "அரசை விட பெரியதளவில்" உள்ளது என்ற தீர்மானத்திற்கு அவர் வந்திருப்பதாக தெரிவித்தார். “இந்த குற்றம்" படர்ந்து பரவியுள்ள ஊழலின் விளைவு என்று தொடர்ந்து கூறிய அவர், இந்த மரணகதியிலான வெடிவிபத்துக்குப் பொறுப்பானவர்களை விசாரணைக்கு இழுக்குமாறு அழைப்பு விடுத்தார். மக்களின் தரப்பில் நிற்பதற்காகவும், அவர்களுடன் சேர்ந்து மாற்றத்திற்கான போரில் போராடுவதற்காகவும், அவர் "ஒரு படி பின்னோக்கி" எடுத்து வைப்பதாக தயிப் அறிவித்தார்.

லெபனானைத் தாக்கிய அந்த "பூகம்பத்திற்கு" அவர் அரசாங்கத்தில் முன்னர் பதவியிலிருந்தவர்களின் ஊழல் மீது தியாப் பழி சுமத்தினார், “அவர்களின் [அரசியல் வர்க்கத்தின்] ஊழல் தான் ஏழாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த இந்த பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதால், அவர்கள் தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும்,” என்றார்.

தியாப் தற்காலிக நிர்வாக பொறுப்பில் இருப்பாரென செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர் இரண்டு மாதங்களுக்கே பதவியில் இருக்கப் போவதாக கூறி, முன்கூட்டிய நாடாளுமன்ற தேர்தல்களைச் சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

அரசாங்கம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் நெருங்கிய கூட்டாளியான சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக வளர்ச்சி அமைச்சர் Damianos Kattar உட்பட பல அமைர்களும் இராஜினாமா செய்தனர். சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் தகைமையின்மையை Damianos Kattar மேற்கோளிட்டார்.

அந்த வெடிவிபத்தின் உடனடி காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அந்த விபத்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களும் மற்றும் ஆளும் உயரடுக்கும் காட்டிய குற்றகரமான அலட்சியம் மற்றும் ஈவிரக்கமற்ற புறக்கணிப்பின் விளைவாகும். அதுபோன்ற சக்தி வாய்ந்த இரசாயனங்களை முறையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளின்றி குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் சேமித்து வைப்பதன் அபாயங்கள் குறித்து மீண்டும் மீண்டும் கூறப்பட்ட எச்சரிக்கைகளை அவர்கள் பல ஆண்டுகளாக புறக்கணித்திருந்தனர்.

பெய்ரூட் ஆளுநர் Marwan Abboud கூற்றின்படி, அந்த வெடிப்பினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது, 110 பேர் இன்னமும் காணவில்லை, அவர்களில் பலர் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்களாக இருக்கலாமென நம்பப்படுகிறது, அவர்களைக் கண்டுபிடிப்பதே மிகவும் கடினமாக ஒன்றாக ஆகியுள்ளது. 6,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அந்த துறைமுகத்தில் உயிர்பிழைத்தவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை என்பதால் இராணுவம் மீட்பு நடவடிக்கையைக் கைவிட்டுள்ளது.

அந்நகரின் மக்கள்தொகையில் முழுமையாக பன்னிரெண்டு சதவீதத்தினர் —அதாவது 300,000 பேர்— அந்த வெடிப்பால் அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதையோ அல்லது சேதமடைந்திருப்பதையோ காண்கிறார்கள், அந்த வெடிவிபத்து கட்டிடங்களைத் தகர்த்து, ஜன்னல்களை உடைத்து, அண்டைபகுதிகளில் நெருப்பு பற்றுமாறு செய்திருந்தது. அதிகாரிகள் 10 இல் இருந்து 15 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாமென மதிப்பிடுகிறார்கள்.

தங்குவதற்கு வேறு இடமின்றி, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளில், பலரும் ஜன்னல்கள் அல்லது கதவுகள் கூட இல்லாத வீடுகளில், உறங்க நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ரோனா ஹலாபி BBC க்கு கூறுகையில், “அவர்களுக்குத் தங்குமிடம் தேவைப்படுகிறது, அவர்களுக்கு உணவு தேவைப்படுகிறது... அவர்களுக்குச் சுத்தப்படுத்திக் கொள்வதற்குச் சோப்புகள் தேவைப்படுகின்றன, அவர்களின் வீடுகளில் எஞ்சியிருப்பதை எடுப்பதற்கு அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது,” என்றார்.

அங்கே ஏற்கனவே நாள்தோறும் நீண்ட நேர மின்சார வெட்டுக்கள் இருந்த நிலைமைகளின் கீழ், அந்த வெடிவிபத்து இரண்டு நீர்ஏற்றும் நிலையங்கள் மற்றும் மின் நிலையங்களைக் கடுமையாக பாதித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் ஜனாதிபதி Michel Aoun அறிவிக்கையில், அலட்சியம் ஒரு காரணியாக இருந்தது என்பதற்குக் கூடுதலாக ஏதேனும் "வெளியிலிருந்து தலையீடு" இருந்ததா என்பது உட்பட, அந்த வெடிப்புக்கான காரணம் மீது ஒரு விசாரணையை அறிவித்தார். நான்கு நாட்களுக்குள் ஓர் அறிக்கை வரவிருக்கிறது. சுமார் 20 உயர்மட்ட அதிகாரிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அரசு பாதுகாப்புக்குத் தலைமை வகிக்கும் மேஜர் ஜெனரல் டோனி சலிபாவை ஒரு நீதிபதி கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளார். அத்துறைமுகத்தில் அந்த பொருட்களைச் சேமித்து வைக்கும் அபாயங்கள் குறித்து வெளிப்படையாகவே அரசு பாதுகாப்புத்துறை ஓர் அறிக்கை வரைந்திருந்ததுடன், அதன் ஒரு நகலை ஜூலை 20 இல் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி இருந்தது.

கடுமையான பொருளாதார நிலைமை, அரசு ஊழல் மற்றும் அந்நாட்டின் குறுங்குழுவாத அரசியல் அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான பாரிய சமூக போராட்டங்கள் வாஷிங்டன், பாரீஸ் மற்றும் ரியாத்தின் லெபனான் மனிதரான பிரதம மந்திரி சாத் ஹரிரியை (Saad Hariri) இராஜினாமா செய்ய நிர்பந்தித்த பின்னர், ஜனவரியில் தான், பொறியியல் துறை தொழில்வல்லுனரான தியாப் ஒரு "தொழில் உத்தியோகஸ்தராக" அந்த அரசுக்குத் தலைமை கொடுக்க நியமிக்கப்பட்டார்.

தியாப்பின் மந்திரிசபையில் உள்ள பலரும் அரசியல்ரீதியில் பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைந்திராத தொழில்துறையினர் என்கின்ற நிலையில், தியப்பின் அந்த மந்திரிசபை ஈரான் ஆதரவிலான ஹெஸ்பொல்லா குழுவின் ஆதரவைப் பெற்றிருந்தது. அந்த குழு அதன் கூட்டாளிகளுடன் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அரசியல் அணியைக் கொண்டிருந்தது.

இது ஹரிரியின் எதிர்கால இயக்கத்துடன் (Future Movement) இணைந்திருந்த கிறிஸ்துவ மற்றும் சுன்னி செல்வந்தர்களின் தீராத வெறுப்பை அவர் அரசாங்கத்திற்கு ஈட்டியிருந்தது, அந்த இயக்கம் அரசுக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், சமீபத்திய மாதங்களில் அவ்விரு போட்டி அணிகளுக்கும் இடையே சிறிய ஆனால் வன்முறையான மோதல்கள் வெடிப்பதற்கு இட்டுச் சென்றிருந்தது. கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி Aoun எச்சரிக்கையில், 1975 இல் இருந்து 1990 வரையில் வெளி சக்திகளின் ஆதரவு பெற்று மாறிக் கொண்டிருந்த கூட்டணிகளுக்கு இடையே ஒரு கடுமையான மற்றும் ஆயுதமேந்திய மோதலைக் கண்ட ஒரு நாட்டில் இது மற்றொரு உள்நாட்டு போரைத் தூண்டுமென எச்சரித்தார்.

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடி, வளைகுடா மற்றும் லெபனானிய நாட்டினரிடம் இருந்து வந்த சுற்றுலாத்துறை வருவாய்கள் மற்றும் பண வரவுகள் குறைந்திருப்பதைக் கண்டுள்ளதற்கு மத்தியில் இந்த துறைமுக வெடிப்பு வருகிறது. தொடர்ந்து கொண்டிருக்கும் சமூக அடைப்பு தொழிலாளர்கள், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் சொல்லொணா துயரங்களை ஏற்படுத்தி உள்ளது. குறுங்குழுவாத அடிப்படையிலான கட்சிகள் வழங்கும் சமூக பாதுகாப்பு மட்டுப்பட்டதாக மட்டுமே உள்ளதுடன், மருத்துவக் கவனிப்போ அளவிலா விலை கொடுக்க சக்தி இருப்பவர்களைச் சார்ந்துள்ளது.

மார்ச் மாதம் அந்த அரசாங்கம் 1.2 பில்லியன் டாலர் யூரோ பத்திரம் மீது திவால்நிலைமையை அறிவித்து, பின்னர் அதை அதன் அனைத்து வெளிநாட்டு கடன்களுக்கும் விரிவாக்கியது, அதேவேளையில் லிராவின் பொறிவு மிகப் பெரியளவில் கடன்பட்டுள்ள அந்த நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு செலாவணியைத் துடைத்தழித்து, பணவீக்கம் மற்றும் பரந்த வறுமைக்கு எரியூட்டி வருகிறது.

அவசரகாலநிலை அறிவித்த பின்னர், சில நாட்கள் கழித்து, செலாவணிக்கு முட்டுக்கொடுக்க மத்திய வங்கி சந்தைக்குள் டாலர்களைப் பாய்ச்சும் என்றும், அமெரிக்க மேலாதிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனுக்கு முறையிட தயாரிப்பு செய்து வருவதாகவும் அந்த அரசு அறிவித்தது. அதுபோன்ற எந்தவொரு கடனும் மில்லியன் கணக்கானவர்களைக் கொடிய வறுமைக்குள் தள்ளக்கூடிய ஆளும் வர்க்கத்தின் முக்கிய ஒன்றுக்கொன்று முரண்பாடான நலன்களைக் குறுக்காக வெட்டும் வழமையான "சுதந்திர சந்தை சீர்திருத்தங்களுக்கான" கோரிக்கையுடன் பிணைந்திருக்கும்.

ஆனால் அனைத்திற்கும் மேலாக சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு கடன் என்பது, எண்ணெய் வளம் மிக்க சுன்னி அரசுகளுடன் அரசியல் அணிசேர்க்கை மீது சார்ந்திருக்க செய்யும், இவற்றுடனான உறவுகள் கடந்த ஆறாண்டுகளாக தணிந்துள்ளன. இதுபோன்றவொரு அணிசேர்க்கை ஈரானுக்கு எதிராக, அதன் நீட்சியாக, சிரியா மீதும் திருப்பி விடப்படலாம், இது ஹெஸ்பொல்லாவுக்கு ஒவ்வாத நிலைமைகளாகும். IMF இன் நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால், 2018 இல் ஒரு நிதியுதவி மாநாட்டில் ஐரோப்பிய மற்றும் பிராந்திய சக்திகளால் உறுதியளிக்கப்பட்ட கடன்களும் கிடைக்காமல் போகலாம்.

இதற்கும் கூடுதலாக, கடந்தாண்டு அமெரிக்கா ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக அதன் தடையாணைகளைப் பரவலாக்கியது. ஹெஸ்பொல்லாவை அது ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தியுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்துள்ளது அத்துடன் உள்ளூர் வங்கிகளை மூட நிர்பந்திக்கும் விதத்தில் அதையும் இலக்கில் வைத்துள்ளது. அவ்விதத்தில் லெபனானில் ஏற்கனவே கடுமையாக உள்ள நிதியியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சுமையேற்றி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் சீசர் சட்டம் நடைமுறைக்கு வந்தது, இது சிரிய அரசுக்கு எதிராகவும் மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள அரசுகளுக்கு எதிராகவும் தடையாணைகளை விதித்து, அவ்விதத்தில் ஹெஸ்பொல்லாவின் நிதி நிலைமைகளை மேற்கொண்டும் பலவீனப்படுத்துவதுடன், லெபனான் சிரியா எண்ணைய் கொள்முதல் செய்வதிலிருந்து அதை தடுக்கிறது.

வாஷிங்டன், ரியாத் மற்றும் பாரீஸூம் பெய்ரூட்டின் மீது "அதிகபட்ச பொருளாதார அழுத்தத்தை" அளிக்க முனைந்துள்ளன, அவை லெபனான் மற்றும் சிரியாவில் ஹெஸ்பொல்லாவை ஓர் அரசியல் மற்றும் இராணுவ சக்தி என்று இல்லாமல் செய்யும் நோக்கில் ஈரானுக்கு எதிரான அவற்றினது பரந்த பிரச்சாரத்தின் பாகமாக, லெபனானுக்கு எதிராக ஒரு முற்றுகைக்கு நிகரான ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவர்களின் உள்ளூர் முகவர்களான ஹரிரி மற்றும் அவரின் கூட்டாளிகளினது சுன்னி எதிர்கால இயக்கத்தை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டு வர ஏற்பாடு செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் அழுத்தத்தைத் தொடர்ந்தார். பெய்ரூட்டுக்கு, பிரதானமாக மருத்துவக் கவனிப்பு, கல்வி, உணவு மற்றும் வீட்டுவசதிக்காக அண்மித்து 300 மில்லியன் டாலர் அவசரகால மனிதாபிமான உதவி வழங்க சூளுரைத்துள்ள ஐ.நா. சபையுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த ஒரு இணையவழி கூட்டத்தில் அவர் கூறுகையில், “அது கடுமையாக கண்காணிக்கப்படும்" என்று எச்சரித்தார். அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த லெபனான் அதுவே பொறுபேற்கும் வரையில் அந்நகரை மறுகட்டமைப்பு செய்வதற்கான எந்த பணமும் வழங்கப்படாது. சமீபத்திய நாட்களில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்து வரும் சக்திகளில், கிறிஸ்துவ மற்றும் சுன்னி கட்சிகளும், அமெரிக்காவுடன் அணிசேர்ந்த ஹரிரியின் எதிர்கால இயக்கத்தைச் சுற்றியுள்ள முன்னாள் தளபதிகளும் உள்ளடங்கி உள்ளனர். “மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவும்" மற்றும் ஏறக்குறைய மூன்றாண்டு காலத்திற்குள் ஒரு புதிய தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல்களுக்கு வழி வகுக்கவும், அவர்கள் "சாத்தியமானளவுக்கு இராணுவத் தலைமையில்" அமைந்த, வங்கிகள் மற்றும் ஏனைய வணிக பிரமுகர்கள் உள்ளடங்கிய, ஓர் இடைக்கால "இரட்சிப்பு" அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். ஏகாதிபத்தியத்திற்கான சேவையில், செல்வந்தர்களின் நேரடி ஆட்சியை மீட்டமைப்பதும் மற்றும் லெபனான் மற்றும் சிரியாவில் "குண்டர்களின்" (ஹெஸ்பொல்லாவைக் குறிக்கும் வழக்குச் சொல்) செல்வாக்கை மட்டுப்படுத்துவது அல்லது இல்லாதொழிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

இது முன்பினும் பரந்து பரவி வரும் நெருக்கடியால் சூழப்பட்டுள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க அடுக்குகளின் நியாயமான கோபம் மற்றொரு அரசியல் கொள்ளையர்களின் கூட்டத்திற்குப் பின்னால் திருப்பி விடப்படும் நிஜமான அபாயங்களை சுட்டிக்காட்டுகிறது, இந்த முறை இது ஹெஸ்பொல்லாவின் வறிய ஆதரவாளர்கள் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டு, அனேகமாக இராணுவ தளபதிகளின் தலைமையில் இருக்கலாம்.

தற்போதைய நிலைமையில் கேள்விக்கிடமின்றி என்ன தீர்க்கமாக உள்ளதென்றால், உலக சோசலிச அரசுகளின் கூட்டமைப்பின் பாகமாக முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து ஐக்கிய மத்தியக் கிழக்கு சோசலிச அரசுகளைக் கட்டமைக்கும் போராட்டத்தில், வெறுமனே லெபனானில் மட்டுமல்ல அப்பிராந்தியம் எங்கிலும் எல்லா மதம், குறுங்குழுக்கள், தேசிய மற்றும் இனவழி பிளவுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு முன்னோக்கை முன்னெடுக்கும் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதாகும். இதற்கு அப்பிராந்தியம் எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பது அவசியமாகும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

COVID-19 pandemic hits Lebanon, piling health crisis onto political and economic meltdown
[16 April 2020]

Loading