முன்னோக்கு

கமலா ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அமெரிக்க அரசியலின் சீரழிவும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோ பைடெனுக்குத் துணை ஜனாதிபதியாக கமலா ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 2020 தேர்தல்களின் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தவாறே, ஜனநாயகக் கட்சியினர் சாத்தியமானளவுக்கு மிகவும் வலதுசாரி பிரச்சாரத்தைத் தொடுப்பதற்காக மிகவும் வலதுசாரி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அங்கே ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நிச்சயமாக ஒரு தவிர்க்கவியலாததன்மை உள்ளது. யார் மிகவும் மோசமாக, மிகவும் பிற்போக்குத்தனமாக, அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது முக்கிய பதவியின் வேட்பாளருக்கு யார் மிகவும் பொருத்தமான தேர்வாக இருப்பார்கள் என்றவொரு ஆய்வின் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலையில், உலக சோசலிச வலைத் தளம், ஹரீஸ் முதலிடத்தை ஜெயிக்க தவறினால் அனேகமாக அவரே துணை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்படலாம் என்று கணித்தது. அந்த பணிக்கு அவசியமான எல்லா ஈவிரக்கமில்லா தன்மையும், சுயமோகமும், தொழில்முறைத்தன்மையும் அவருக்கு இருந்தது, அத்துடன் ஜனநாயகக் கட்சியினர் இனவாத மற்றும் பாலியல் அடையாளத்தைக் கொண்டு ஆட்டிப் படைப்பதற்குப் பொருத்தமாக வம்சாவழி சார்ந்த பின்புலமும் அவருக்கு இருந்தது.

ஜமைக்கா தந்தை மற்றும் இந்திய அன்னையால் பெற்றெடுக்கப்பட்ட கமலா ஹரீஸ், அரசியல் பிற்போக்குத்தன சாயத்தில் மூழ்கியவராவார்.

ஜோர்ஜ் ஃபுளோய்டைப் பொலிஸ் படுகொலை செய்ததற்கு விடையிறுப்பாக அந்நாடெங்கிலும் இந்தாண்டு பாரிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டுள்ளது. ஆளும் வர்க்க கொள்கைகளின் நேரடி விளைவாக, இன்று வரையில் அண்மித்து 170,000 பேர் கொரொனா வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளனர், மரண எண்ணிக்கை இப்போதும் அன்றாடம் 1,000 க்கும் அதிகமாக உள்ளது. வேலைக்குத் திரும்ப செய்யும் ஆட்கொலை பிரச்சாரத்தின் மீது அங்கே வேலையிடங்களில் கோபம் அதிகரித்து வருவதுடன், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடையே பரந்த எதிர்ப்பு உள்ளது. பத்து மில்லியன் கணக்கானவர்கள் வேலைவாய்ப்பிழந்துள்ளதுடன், அவர்களுக்கு மத்திய அரசின் சலுகைகளும் வெட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதை முகங்கொடுத்து வருகிறார்கள்.

இந்த மிகப் பிரமாண்டமான அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில், இந்தளவிலான அவலங்களின் பின்புலத்தில், நியூ யோர்க்கின் மோசடியாளர் பாசிசவாத ட்ரம்புக்கும், டெலாவேரிலிருந்து வந்த ஒரு பெருநிறுவன மோசடியாளரும் (பைடன்) கலிபோர்னியாவின் முன்னாள் வழக்குரைஞருமான (ஹரீஸ்) ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கும் இடையே யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அமெரிக்க மக்களுக்கு "வாய்ப்பு" வழங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க அரசியலின் கேடுகெட்ட நிலையைக் குறித்த அனைத்தையும் எடுத்துரைக்கிறது.

பைடெனின் அறிக்கையைத் பின்தொடர்ந்து, ஊடகங்கள், செவ்வாய்கிழமை, அரசு பிரச்சாரத்தையே குமட்டி எடுக்கும் நடவடிக்கையில் பாய்ந்தன. ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டமை உலகெங்கிலும் "வரலாற்று சிறப்புமிகு" நிகழ்வாக, ஒரு திருப்புமுனை தருணமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவரின் அரசியலைப் பொறுத்த வரையில், தெளிவாக அங்கே ஹரீஸ் குறித்து "வரலாற்று சிறப்பு" எதுவும் இல்லை. சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட அரசு தரப்பு வழக்குரைஞராக (2004-2011), கலிபோர்னியாவில் அரசு தரப்பு தலைமை வழக்குரைஞராக (2011-2017), இறுதியில், அமெரிக்க செனட்டராக (2017 இல் இருந்து இப்போது வரையில்), பொலிஸை ஆதரிப்பதிலும், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அடைத்து வைப்பதிலும், வங்கிகளைப் பாதுகாப்பதிலும், இராணுவவாதம் மற்றும் போரை ஆதரிப்பதிலும் தான் அதிகமாக அவர் தடம் பதித்துள்ளார்.

இந்த தேர்ந்தெடுப்பைக் குறித்து நிச்சயமாக வோல் ஸ்ட்ரீட் மகிழ்ச்சி அடைந்துள்ளது. “பெருவணிகங்கள் ஆதரிக்கக்கூடிய துணை ஜனாதிபதி தேர்வு" என்பது நியூ யோர்க் டைம்ஸின் உள்பக்க தலைப்பாக இருந்தது. இராணுவத்தைப் பொறுத்த வரையில், வயதான பைடென் அவரின் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாவிட்டால் என்ன ஆகும் என்பதே அதன் பிரதான கவலையாக உள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு வெளியுறவு கொள்கை பிரச்சினைகளில் ஒருமுனைப்பட்டுள்ளது. தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறெந்த திட்டநிரலும் கொண்டிராத ஹரீஸ், இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கரங்களில் கைப்பாவையாக இருப்பார்.

ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் "வரலாற்று சிறப்புமிகு" தன்மையில் மொத்தத்தில் அவரின் இனம் மற்றும் பாலினமே மூலகாரணமாக அமைந்துள்ளது. அவர் "முதல் அமெரிக்க-ஆபிரிக்க துணை ஜனாதிபதியாக" ஆகலாம், “முதல் ஆசிய-அமெரிக்க துணை ஜனாதிபதியாக" ஆகலாம், “முதல் பெண் துணை ஜனாதிபதியாக" ஆகலாம். அவர் ஏற்கனவே "ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசு கட்சியின் தேசிய வேட்பாளர்களில் முதல் கருப்பின பெண்மணியாக" உள்ளார். ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் குறித்த ஒவ்வொன்றிலும், ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் வேலைத்திட்டம் குறித்து எந்தவொரு வார்த்தையும் இல்லாமல், ஏறக்குறைய அடையாளமயப்படுத்தலே சம்பந்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், அவர்களின் இனம், பாலினம் அல்லது வம்சாவழி எதுவாக இருந்தாலும், இதில் ஒரு துளி வேறுபாடும் இல்லை. அனைத்திற்கும் மேலாக, கிளாரென்ஸ் தோமஸ், கொண்டாலிசா ரைஸ், சூசன் ரைஸ், ஹிலாரி கிளிண்டன், இன்னும் பலரை விட்டு விட்டாலும் கூட, உலகம் ஏற்கனவே ஒபாமாவை எடுத்துக்காட்டாக கொண்டுள்ளது.

ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இனம், பாலினம் மற்றும் இதர வடிவ அடையாளங்களில் தன்னை நிலைநிறுத்திய அரசியலின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது—வர்க்கம் தவிர அனைத்தும். பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களின் வெடிப்புக்கு ஜனநாயகக் கட்சியினர் விடையிறுத்ததில், வர்க்க பிரச்சினைகளை முக்கியமற்றதாக செய்யவும், இனவாத பிளவுகளை ஊக்குவிக்கவும் மற்றும் பொலிஸ் வன்முறையானது "வெள்ளையின அமெரிக்கா" ஆல் "கறுப்பின அமெரிக்கா" ஒடுக்கப்படுவதன் ஒரு வெளிப்பாடு என்ற பொய்யைப் பரப்பவும் அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்தனர். இந்த இனவாத பிரச்சாரத்தின் விளைவாக தான், மரண வழக்கில் ஒருமுறை ஒரு அப்பாவியைச் சிக்க வைப்பதற்காக ஆதாரத்தை மூடிமறைத்தவரும், புலம்பெயர்ந்த பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளைப் பிரிக்க செயல்பட்டவருமான ஒரு வலதுசாரி முன்னாள் வழக்குரைஞரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இந்த இனவாத பிரச்சாரத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் ஹரீஸின் "வரலாற்று சிறப்புமிகு" தேர்வை அறிவிக்கும் பிரச்சார பயணத்திற்குத் தாவி உள்ளனர். இன-எதிர்ப்பாளராக ஆவது எப்படி என்ற நூலின் ஆசிரியரும் நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்தை ஊக்குவித்த முக்கியஸ்தர்களில் ஒருவருமான இப்ராம் கென்டி ட்வீட்டரில் குறிப்பிடுகையில், “GOP வேட்பாளரை விடவும் மற்றும் அமெரிக்க வரலாற்றிலேயே எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரை விடவும் சிறப்பாக, ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க மக்களைப் பிரதிபலிக்கும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை இப்போது கொண்டுள்ளனர்,” என்று எழுதினார்.

கென்டியைப் பொறுத்த வரையில், அரசியல்வாதிகள் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சமூக பொருளாதார சக்திகளின் காரணமாக அல்ல, மாறாக முற்றிலும் அவர்களின் இனம், வம்சாவழி சார்ந்து மற்றும் அவர்களின் பாலினம் சார்ந்து அமெரிக்க மக்களைப் "பிரதிபலிக்கிறார்கள்". நலன்கள் இனத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இது முற்போக்கான அரசியல் இல்லை, மாறாக வலதுசாரி இனவாத அரசியல், இது பொதுவாக பலவற்றை டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத அரசியலுடன் பகிர்ந்து கொள்கிறது.

Black Lives Matter அமைப்பின் செயல்பாட்டாளர் Shaun King எழுதுகையில், அவர் "ஒரு புத்திசாலியான கருப்பின பெண்மணியைப் பார்ப்பதில், HBCU [வரலாற்றுரீதியில் கருப்பினத்தவர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்] இல் படித்து வந்த ஒருவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பதில் நம்ப முடியாதளவில் பெருமிதம் கொள்வதாக" எழுதினார். நடைமுறையில் "கனவுகள் நிறைவேறுகின்றன" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ட்வீட்டரில் விமர்சிப்பவர்கள், இந்த அறிக்கைக்கும் அவரின் நவம்பர் 2018 பிரகடனத்திற்கும் இடையிலான முரண்பாட்டை உடனடியாக சுட்டிக்காட்டினர், அந்த பிரகடனத்தில் அவர் பைடெனும் ஹாரீசும் "அவர்கள் இருவரும் பாரிய தடுப்புக்காவலைக் கட்டமைக்கவும் & முன்னெடுக்கவும் உதவினர்" என்பதால் அவர் அவர்களை ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜனநாயகக் கட்சிக்காக கூலிக்கு மாரடைப்பவர்கள், அரசியல் கோட்பாடுகளை ஒருபோதும் பலமான கவசமாக கொண்டிருப்பதில்லை. அவர்கள் பைடென் நிர்வாகத்தில் பதவிகளையும், நிதி ஆதாயங்களை வாரிவழங்கும் மற்ற சந்தர்ப்பங்களையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

பின்னர் அங்கே பேர்ணி சாண்டர்ஸூம் இருக்கிறார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்குப் போட்டியிட்டவர்களில் சாண்டர்ஸ் தான், சமூக சமத்துவமின்மையை அவர் தாக்கியதற்காகவும் மற்றும் ஸ்தாபகத்திற்கு எதிராக ஓர் "அரசியல் புரட்சிக்கு" அழைப்பு விடுத்ததற்காகவும் பரந்த ஆதரவை வென்றார். அந்த அடிப்படையில் அவர், ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் பைடெனுக்கு எதிராக பிரதான போட்டியாளராக மேலெழுந்திருந்தார். ஆனால் இறுதியில் ஜனநாயகக் கட்சியின் "சாண்டர்ஸ் அணிக்கு" ஒன்றும் கிடைக்கவில்லை.

ஆனால் விளைவைப் பாராட்டுவதில் இருந்து இது சாண்டர்ஸைத் தடுத்துவிடவில்லை. ஹரீஸ் "நமது அடுத்த துணை ஜனாதிபதியாக வரலாறு படைப்பார்" என்று சாண்டர்ஸ் ட்வீட் செய்தார்.

சாண்டர்ஸ் மார்ச் மாத மத்தியில் அவர் பிரச்சாரத்தை நிறுத்தியதற்குப் பின்னர், எலிசபெத் வாரென் மற்றும் பலருடன் சேர்ந்து, பைடென் பிரச்சாரத்தை உற்சாகப்படுத்தும் முக்கியஸ்தர்களாக அவருக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்றுள்ளார். சமூக கோபம் அதிகமாக அதிகரிக்கும் அளவுக்கு, ஜனநாயகக் கட்சியினரும் அதிகமாக அம்பலமாகிறார்கள், இருப்பினும் ஜனநாயகக் கட்சிக்கான அவரின் ஆதரவு மிகவும் தீர்மானகரமாக உள்ளது.

அமெரிக்க அரசியலை மாற்றுவதற்கான, சோசலிசத்தை கைவரப் பெறுவதற்குமே கூட, சாண்டர்ஸைப் பாதையாக வாதிட்ட அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), ஜாகோபின் பத்திரிகை மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஏனைய அரசியல் முகவர்களின் என்னவொரு அம்பலம்! அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களைத்தாங்களே முட்டாள்களாக்கி கொள்கிறார்கள். அவர்கள் ஏதோவொரு வடிவத்தில் தங்களை ஜனநாயகக் கட்சியுடன் இணைத்துக் கொள்வார்கள், பல்வேறு விதமான அரசியல் மோசடிகளுடன் சேர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அந்த கட்சிக்குள் ஒரு "முற்போக்கான இயக்கத்தை" எவ்வாறு அவர்கள் கட்டமைத்து வருகிறார்கள் என்பதை குறித்த பேச்சுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி அதில் உள்ளடங்கி இருக்கும்.

அமெரிக்க அரசியலின் புத்திஜீவித கலாச்சார பொறிவை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், ஏதோவொன்று இந்த ஒட்டுமொத்த நிகழ்முறையிலும் நம்ப முடியாதளவில் தரந்தாழ்ந்து வெட்கக்கேடாக உள்ளது.

இந்த அனுபவத்திலிருந்து, அதாவது சாண்டர்ஸ் சம்பந்தப்பட்டதில் இருந்து மட்டுமல்ல, மாறாக முதலாளித்துவத்திற்கும் அதன் அரசு எந்திரத்திற்கும் நேரடியாக சவால் விடுக்காமலேயே தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு எளிமையான பதில்கள் கிடைக்குமென நம்புகின்ற இந்த ஒட்டுமொத்த நடைமுறைவாத அரசியல் வகைப்பாட்டில் இருந்தும் நிச்சயமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஒரு மார்க்சிச மற்றும் வர்க்க பகுப்பாய்வில் வேரூன்றிய ஓர் ஆழ்ந்த தத்துவார்த்த புரிதலுடன் தொடங்க வேண்டும். ஜனநாயகக் கட்சியானது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கட்சியாகும். அது இடைவிடாது ஊக்குவித்து வரும் இனவாத மற்றும் பாலின அடையாள அரசியல் உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளின் நலன்களுக்கு வெளிப்பாட்டை வழங்குகிறது, அது அரசிலும், கல்வித்துறையிலும் மற்றும் பெருநிறுவன பொதுக்குழுக்களிலும் அதிகாரம் மற்றும் தனிச்சலுகை கொண்ட பதவிகளுக்கான அவற்றின் போராட்டத்தில் இந்த வலதுசாரி சித்தாந்தத்தைப் பயன்படுத்துகிறது. DSA மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகள் உட்பட போலி இடது இந்த சமூக அடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

இவை அனைத்துமே தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், சோசலிசத்திற்கான ஒரு நிஜமான இயக்கம் அபிவிருத்தி அடைவதற்கு எதிராகவும் திரும்பி உள்ளன. ஆனால் புறநிலைமைகளோ, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பலமான ஒரு வர்க்க போராட்ட வெடிப்புக்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி விளங்கப்படுத்தி உள்ளவாறு, இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோயானது "உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் ஏற்கனவே பெரியளவில் முன்னேறி உள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வரும், உலக வரலாற்று வினையூக்கி நிகழ்வாகும்.”

தொழிலாள வர்க்கத்தின் குறுக்கீடு—தலையீடு—இல்லாமல் எதுவும் முற்போக்காக மேலெழப்போவதில்லை. சோசலிச சமத்துவக் கட்சியும் எங்களின் தேர்தல் பிரச்சார குழுவும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டமைப்பதற்காக நோக்குநிலை கொண்டுள்ளன. எங்களின் பிரச்சாரம் மட்டுந்தான், பிற்போக்குத்தனமாக இன மோதல்களை ஊக்குவிப்பவர்கள் மற்றும் சாண்டர்ஸின் "அரசியல் புரட்சியை" ஊக்குவித்தவர்களை அம்பலப்படுத்தி, முன்னோக்கு சம்பந்தமான முக்கிய கேள்விகளை மேலுயர்த்தும் ஒரே பிரச்சாரமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP), சமத்துவமின்மை, போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஆளும் வர்க்கத்தின் எல்லா கன்னைகளையும் எதிர்த்து, ஆளும் உயரடுக்கின் ஆட்கொலை கொள்கைக்கு எதிராக தொழிலாளர்களின் அமைப்புக்குத் தலைமை கொடுத்து வருகிறது. இதுவே முன்னோக்கிய பாதையாகும்.

எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கவும், SEP இல் இணையவும், socialism2020.orgவலைத்தளத்தைப் பார்வையிடவும்.

Loading