கொரோனா வைரஸ் தொற்றுநோயும் முதலாளித்துவமும்

ரஷ்யாவின் தடுப்பூசி இலாபங்கள் மற்றும் பூகோள அரசியல் அனுகூலத்திற்கான உலகளாவிய போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 தடுப்பூசிக்கு ரஷ்யா அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக விளாடிமிர் புட்டினின் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு, மரண அபாயகரமான வைரஸிற்கான ஒரு தடுப்பூசியை முதலில் சந்தைப்படுத்துவதற்கும் பாரியளவில் உற்பத்தி செய்வதற்கும் தேசிய அரசுகளுக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையிலான உலகளாவிய மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.

தேசிய அடித்தளத்திலான முதலாளிகளின் போட்டிக் குழுக்களின் நிதிய மற்றும் பூகோள அரசியல் நலன்களுக்கு மருத்துவ விஞ்ஞானத்தையும் மற்றும் தொழில்நுட்பத்தினையும் விபரீதமான மற்றும் அழிவுகரமாக அடிபணியச்செய்தலை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்த, குறிப்பாக ஒருபுறம் அமெரிக்காவில் உள்ள ஆளும் உயரடுக்கினருக்கும், ரஷ்யாவிலும் சீனாவிலும் உள்ள அவர்களது சகாக்களுக்கும் இடையிலான மோதல், ஒரு சர்வதேசரீதியிலான மக்கள் சுகாதார பேரழிவின் மத்தியில் ஒரு உயிர்காக்கும் மருந்தின் பகுத்தறிவான மற்றும் திறமையான அபிவிருத்திக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது.

“உலகத்தில் முதலாவதாக.”மாஸ்கோவை தளமாகக் கொண்ட தொற்றுநோய்களுக்கும் மற்றும் நுண் உயிரியலுக்குமான Gamaleyaஅமைப்பினால் உருவாக்கிய தடுப்பூசியை தனது அரசாங்கம் பதிவுசெய்ததை புட்டின் அறிவித்தார். சோவியத் செயற்கைக்கோள்1957 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளை வியப்பில் ஆழ்த்தியதோடு, சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் “விண்வெளி பந்தயத்தை” தூண்டிய Sputnik ஐ குறிப்பிட்டு அவர் தடுப்பூசிக்கு “Sputnik V” என்று பெயரிட்டார்.

விளாடிமிர் புட்டின், நடுவே (Credit: en.kremlin.ru)

தடுப்பூசி "தேவைப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளையும்" கடந்துவிட்டது என்று அவர் கூறினார், ஆனால் உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது வேறு எந்த சர்வதேச விஞ்ஞான அல்லது மருத்துவ அமைப்புகளுக்கும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த எந்த தகவலையும் வழங்க அவரது அரசாங்கம் தவறிவிட்டது. மேலும், தடுப்பூசி ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறான முறையில், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை உள்ளடக்கிய மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு முன்பே, அவரது அரசாங்கம் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மனித சோதனைகளின் இந்த கட்டம், ஒரு தடுப்பு மருந்து பாதுகாப்பானதும் செயற்திறன் மிக்கதும் என்பதை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இன்றுவரை, வெறும் 76 நபர்களை மட்டுமே உள்ளடக்கிய ரஷ்ய தடுப்பூசியின் இரண்டு மாத மனித சோதனைகள் மட்டுமே உள்ளன. தடுப்பூசி திட்டத்திற்கு நிதியளிக்கும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாகி கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) செய்தியாளர்களிடம், “மருத்துவ பரிசோதனைகளுக்கு வெளியே உள்ள சிலருக்கு ஆகஸ்டில் தடுப்பூசி கிடைக்கும், மேலும் அக்டோபரில் பாரிய அளவில் கிடைக்கும்” என்றார். ரஷ்யா 20 நாடுகளில் இருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான மருந்துஅளவுகளுக்கு விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko), இந்த தடுப்பூசியை விநியோகிப்பதற்கான ஒரு பாரிய பிரச்சாரத்தை நாடு விரைவில் தொடங்கும் என்றார்.

பாதுகாப்பு நெறிமுறைகளை புறக்கணிப்பதன் மூலம் தடுப்பூசி தயாரிப்பதற்கான இந்த அவசரம், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய சக்திகளிடமிருந்து மட்டுமல்ல, ரஷ்யாவிற்குள் உள்ள விஞ்ஞான மற்றும் வணிக அமைப்புகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நிறைவடையும் வரை தடுப்பூசி பதிவு செய்வதை தாமதப்படுத்துமாறு சுகாதார அமைச்சகத்தை கேட்டு மாஸ்கோவை தளமாகக் கொண்ட மருத்துவ பரிசோதனை அமைப்புகளின் சங்கம் திங்களன்று ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டது.

"துரிதகதியில் வழங்கப்பட்ட ஒப்புதல், [தடுப்பூசி] போட்டியில் ரஷ்யாவை முன்னிலைப்படுத்தாது" என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "இது தடுப்பூசி நுகர்வோரை தேவையற்ற ஆபத்துக்கு உட்படுத்தும்" எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில், Johns Hopkins பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் டானியல் சால்மன், “இது உண்மையில் பயமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது உண்மையில் ஆபத்தானது.” ரஷ்ய தடுப்பூசி பாதுகாப்பற்றது என்று தான் கருதுவதாக அமெரிக்காவின் உயர்மட்ட தொற்றுநோய் அதிகாரி டாக்டர் அந்தோனி ஃபவுசி செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தினார்.

ஒரு தடுப்பூசி தயாரிப்பதற்கான புட்டினின் அவசரத்தின் பின்னால் பூகோள அரசியல், வணிக மற்றும் உள்நாட்டு அரசியல் நோக்கங்கள் உள்ளன. தடுப்பூசி இலாபங்களுக்கான சர்வதேச போட்டியாளர்களிடமிருந்து தன்னகப்படுத்திக்கொள்வதற்கான ஒரு தெளிவான முயற்சியாகும். முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து தன்னகப்படுத்திக் கொள்வதற்கானதாகும். செவ்வாயன்று அவ்வாறான ஒரு அறிவிப்பு வெளியிடப்படுவதை எதிர்பார்த்து ரஷ்யாவின் தடுப்பூசி திட்டத்தை இழிவுபடுத்துவதற்காக வாஷிங்டன் புனைகதை பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

கடந்த மாதம், அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் கனேடிய புலனாய்வு அமைப்புகளின் கூட்டு அறிக்கையின் அடிப்படையில் ஒரு தொடர் போலியான கட்டுரைகளை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டது. இதில் மாஸ்கோ, அமெரிக்க தடுப்பூசி ஆராய்ச்சியை களவாடுவதாக முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அந்தக் குற்றச்சாட்டு பெரும்பாலும் கைவிடப்பட்டாலும், அமெரிக்கத் தேர்தல்களில் ரஷ்ய தலையீடு பற்றிய பொய்களின் பிரச்சாரம் தடையின்றி தொடர்கிறது. நவம்பர் ஜனாதிபதி போட்டியில் ஈரானும் சீனாவும் பைடெனின் வெற்றியை "விரும்புகையில்" ட்ரம்பின் மறுதேர்தலுக்கு ரஷ்யா தீவிரமாக செயல்படுவதாக கடந்த வாரம் தேசிய புலனாய்வு இயக்குனர் அறிவித்தார்.

ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த டைம்ஸ் தலைமையிலான இந்த பிரச்சார முயற்சிகள், ரஷ்யா அல்லது சீனா உருவாக்கிய எந்தவொரு தடுப்பூசியையும் இறக்குமதி செய்வதைத் தடைசெய்வதற்கான தயாரிப்புகள் ஆகும். பலராலும் ஒரு தடுப்பூசி உற்பத்தியில் அமெரிக்காவை விட அவை முன்னணியில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற தடுப்பூசி விநியோகத்தை அமெரிக்காவின் கூட்டுநாடுகளுக்கும் மற்றும் சார்பான நாடுகளுக்கும் தடுக்கிறது. கடந்த மாதம், ஃபவுசி காங்கிரஸ் முன் சாட்சியமளிக்கையில், ரஷ்யா அல்லது சீனா உருவாக்கிய எந்தவொரு தடுப்பூசியையும் அமெரிக்கா தனது எல்லைக்குள் விநியோகிப்பதைத் அநேகமாக தடுக்கலாம் என்று கூறினார்.

தடுப்பூசி விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாடு, அதனது கூட்டாளிகள் மற்றும் எதிரிகள் மீது ஒரே மாதிரியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும். அவர்கள் மருந்துப்பொருளை வைத்திருக்கும் நாட்டின் விநியோகத்தை பெற்றுக்கொள்ள அந்த நாட்டின் நல்லெண்ணத்தில் சார்ந்து இருப்பார்கள்.

இரண்டாவதாக, தடுப்பூசி பந்தயத்தை வென்றெடுப்பதில் எண்ணற்ற பில்லியன் இலாபங்கள் உள்ளன.

மூன்றாவதாக, அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் நெருக்கடியில் உள்ளன, மேலும் முன்னோடியில்லாத வகையில் பணக்காரர்களுக்கு பிணை எடுப்பு மற்றும் அவர்களின் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கைகளின் பேரழிவுகரமான தாக்கத்தின் விளைவாக பெருகிவரும் உள்நாட்டு எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. அவை வேலைக்கு திரும்பச்செய்வது மற்றும் பள்ளிக்குச் செல்ல வலியுறுத்துவதை உலகளவில் செயல்படுத்தப்படுத்துவதால் எடுத்துக்காட்டப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் வளர்ச்சியில் முன்னேற்றங்களை மிகைப்படுத்தி தொற்றுநோய்க்கு அவர்கள் அளித்த பதிலில் வெளிப்படுத்தப்பட்ட குற்றவியலான திறனற்ற தன்மை மற்றும் மனித வாழ்க்கையை இழிவுபடுத்துதல் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி புட்டினுக்கும் ட்ரம்பிற்கும் பொதுவானதே.

ஒரு தடுப்பூசி பற்றிய புட்டினின் முன்கூட்டிய அறிவிப்பு, ரஷ்யாவில் தொற்றுநோய்களின் ஒரு மில்லியனை நோக்கி வேகமாகச் செல்லும் மற்றும் கொரோனா வைரஸிலிருந்து 15,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலைமையின் கீழ் நிகழ்கின்றது. அவரது ஆதரவு மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. மேலும் ரஷ்ய சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் மீதான கண்டனங்கள் கடுமையாக உள்ளன. குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களின் நிலைமைகளை பற்றி கண்டிக்கின்றனர். இதற்கிடையில், அவரது அரசாங்கம் சுகாதாரப் பாதுகாப்பு துறையில் வெட்டுக்களைக் கோரும் வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

ஆயினும்கூட, புட்டின் ஆட்சியின் ஊழல் மற்றும் குற்றவியல் தன்மையானதாக இருந்தபோதிலும், தொற்றுநோய்க்கு எதிரான போரின் எந்தவொரு உலகளாவிய ஒருங்கிணைப்பையும் நாசப்படுத்துவதில் முன்னணியில் இருப்பது அமெரிக்க அரசாங்கமும் ஆளும் உயரடுக்கும்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) வெளியேறி அதை சீனாவின் கைக்கூலி என்று அழைத்த ட்ரம்ப் தான், சீனாவுக்கு எதிரான ஒரு போர் காய்ச்சலை தூண்ட முயல்கிறார். ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களையும், அமெரிக்காவில் 160,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களையும் “சீனா வைரஸ்” என குற்றம் சாட்டினார். இதில், அவருடன் ஜனநாயகக் கட்சியும் இணைந்துள்ளது. அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென், பெய்ஜிங்கி தொடர்பாக "மென்மையாக" இருப்பதற்காக ட்ரம்பை வலதுசாரித்தனமாக வழமையாக தாக்குகிறார்.

ட்ரம்ப், தனது “விரைவான வேகத்திலான நடவடிக்கை” மூலம், தொற்றுநோயைப் பயன்படுத்தி, மருந்துத் துறையில் உள்ள தனது முதலாளித்துவ கூட்டாளிகளுக்கு வரி செலுத்துவோர் நிதியிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை வழங்குகிறார். ஒரு தடுப்புமருந்து வெளிவருமானால் 100 மில்லியன் மருந்தளவுகளை வழங்குமாறு திங்களன்று அவர் மொடேர்னாவுடன் 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்தார். இது தடுப்புமருந்தின் அபிவிருத்திக்கும் மற்றும் பரிசோதனைக்கு முன்னர் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்ட 950 மில்லியன் டாலருக்கு மேலாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், தடுப்பூசிகள் தொடர்பாக ஆராயும் ஐந்து நிறுவனங்களுக்கு 9 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது.

மேலும், sciencemag.org செவ்வாயன்று குறிப்பிட்டது போல, "அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம்" என்று அழைக்கப்படுவது செயல்திறன் சோதனைகளை நிறைவு செய்வதற்கு முன்னர் மருந்துகளைப் பயன்படுத்துவதை Food and Drug Administration அங்கீகரிக்க முடியும். "நவம்பர் மாதம் தனது மறுதேர்தல் வாய்ப்புகளுக்கு உதவ ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோவிட்-19 தடுப்பூசியைக் கொண்டு வருவாரா என்ற கவலை அதிகரித்து வருகிறது" என்று அந்த வெளியீடு சுட்டிக்காட்டியுள்ளது.

உலக மக்களுக்கு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும் பெருமளவில் விநியோகிப்பதற்கும் முக்கிய தடைகள், ஆளும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் வர்க்க நலன்களாகும். தொற்றுநோயைப் பயன்படுத்தி சமூகத்தின் பொருளாதார வளங்களை கொள்ளையடிப்பதற்கும், தொழிலாள வர்க்கத்தை மேலும் வறுமையில் ஆழ்த்துவதற்காக வர்க்க உறவுகளை மறுசீரமைப்பதற்கும் உதவ வைரஸைக் கட்டுப்படுத்துவதும், ஒழிப்பதும் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதும் பின்னோக்கி தள்ளப்படுகின்றது.

உலக சோசலிச வலைத் தளம் முன்பு கூறியது போல்:

ஒரு பகுத்தறிவார்ந்த மனித சமூகத்தில், அனைத்திற்கும் மேலாக ஓர் உயிராபத்தான தொற்றுநோய்க்கு மத்தியில், ஓர் உயிர்காக்கும் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் இரகசியத்தைக் காக்கும் பிரச்சினை என்பது ஒருபோதும் முன்னுக்கு வராது. தனிப்பட்ட இலாபம் அல்லது தேசிய ஆதாயம் சம்பந்தப்பட்ட எல்லா கேள்விகளும், ஒவ்வொரு நாட்டின் வல்லுனர்களினது அறிவையும் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் புரட்சிகரமான வெற்றிகளையும் பயன்படுத்தி, அந்த வைரஸைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இறுதியில் இல்லாதொழிக்கவும், சரீரரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவசியமான மருத்துவ சேவை மற்றும் சமூக உதவிகளை வழங்கவும், ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சியைப் பின்தொடர்வதற்காகவே முற்றிலுமாக அடிபணியச் செய்யப்பட்டிருக்கும்.

எவ்வாறாயினும், முதலாளித்துவத்தின் அமைப்புமுறைக்குள் இது சாத்தியமற்றது. இது ஒரு ஒட்டுண்ணி உயரடுக்கின் செல்வமயமாக்கலுக்கும் அதன் கொள்ளையடிக்கும் பூகோள அரசியல் நலன்களைப் பின்தொடர்வதற்கும் அனைத்து சமூகத் தேவைகளையும் கீழ்ப்படுத்துகிறது. உற்பத்தி சாதனங்கள் தனியார் உடமையாகவும் இலாபத்திற்காக உற்பத்தி செய்யப்படும் முதலாளித்துவ அமைப்புமுறையானது, உலகத்தை போட்டி தேசிய அரசுகளாகப் பிரிப்பதோடு, உயிர்வாழ்வதற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முழுமையான தடையாக நிற்கிறது.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவ தன்னலக்குழுவை கையகப்படுத்துவதற்கும் தூக்கிவீசுவதற்குமான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

மொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி

வைரஸ் ஆராய்ச்சிகளை இணையவழியில் ரஷ்யா திருடுவதாக இட்டுக்கட்டப்பட்ட வாதங்களை அமெரிக்கா முன்நகர்த்துகிறது

SARS-CoV-2 வைரஸ் தடுப்பூசிக்கான போட்டியை தேசியவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்க மனிதரில் மாதிரி பரிசோதனைகள் செய்து பார்ப்பது முன்தள்ளப்படுகின்றன

Loading