துருக்கியை அச்சுறுத்தும் வகையில் பிரான்ஸ் கிரீஸூடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிரீஸ் மற்றும் துருக்கியின் சர்ச்சைக்குரிய நீர்நிலைகளில் துருக்கியின் புதிய எண்ணெய் ஆய்வுக்கு பதிலிறுக்கும் வகையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நேற்று கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரெஞ்சு மற்றும் கிரேக்கப் படைகளின் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு உத்தரவிட்டார். கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னரே உள்ள அரசியல் மற்றும் மூலோபாய மோதல்களை இது மேலும் தீவிரப்படுத்துவதால், நேட்டோ சக்திகளுக்கு இடையிலான போர் அபாயம் அதிகரித்து வருகிறது.

புதன்கிழமையன்று, “எண்ணெய் ஆய்வு தொடர்பான ஒருதலைப்பட்ச முடிவுகளை” நிறுத்துமாறு துருக்கியை மக்ரோன் கோரியிருந்தார். மேலும், “கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய பங்காளிகளின் ஒத்துழைப்புடன், வரும் நாட்களில் கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரெஞ்சு இராணுவ இருப்பை தற்காலிகமாக வலுப்படுத்துவேன்” என்று அவர் மேலும் கூறினார்.

கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis) இந்த நடவடிக்கையை பாராட்டுகையில், “இமானுவல் மக்ரோன் கிரேக்கத்தின் உண்மையான நண்பராவார் என்பதுடன், ஐரோப்பிய மதிப்புக்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் தீவிர பாதுகாவலரும் ஆவார்” என்றார்.

நேற்று, பிரெஞ்சு இராணுவ அமைச்சகம், இரண்டு ரஃபால் போர் விமானங்களையும், Lafayette போர்க்கப்பலையும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பப்போவதாக தெரிவித்தது. இந்த நிலைநிறுத்தல், “கடல்வழி சுதந்திரம், மத்தியதரைக் கடலில் கடல்வழி பயணத்திற்கான பாதுகாப்பு மற்றும் சர்வதேச சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றுடனான பிரான்சின் தொடர்பை வலியுறுத்துவதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் இது கூறியது. இந்த படைகள் கிரேக்கத் தீவான கிரிட்டிற்கு (Crete) வந்து சேர்ந்துள்ளன, அதே நேரத்தில் இரண்டு பிரெஞ்சு ரஃபால் போர் விமானங்களும் சைப்ரஸில் தரையிறங்கியுள்ளன என்று ராய்ட்டர்ஸ் மற்றும் அனடோலு முகமையின் (Anadolu agency) செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்காரா அதன் நில அதிர்வு ஆய்வுக் கப்பலான Oruc Reis இரண்டு வாரங்களுக்கு சர்ச்சைக்குரிய நீர்நிலையில் மீண்டும் நடவடிக்கைகளை தொடங்கும் என அறிவித்ததன் பின்னர் பிரான்சின் போர்க்குணமிக்க தலையீடு தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்புக்கள் அங்காராவுக்கும் ஏதென்ஸூக்கும் இடையிலான பதட்டங்களை அதிகரித்துள்ளன. துருக்கிய அதிகாரிகள், தங்களது போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் இந்த பிராந்தியத்திலுள்ள Oruc Reis மற்றும் துணைக் கப்பல்களுடன் சேர்ந்து பாதுகாப்புக்காக உடன்செல்லும் என்று அறிவித்தனர், அங்கு கிரேக்க போர்க்கப்பல்களும் கண்காணிப்பில் உள்ளன.

துருக்கி “பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் கீழறுக்கும் அதன் சட்டவிரோதமான நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” எனக் கோரி கிரீஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் ஆயுதப்படைகள் அதிகளவு எச்சரிக்கையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. “பல கடற்படை படைகள் வரையறைக்குட்பட்ட பகுதியில் ஒன்றுகூடுகையில்” “விபத்திற்கான அபாயம்” இருப்பதாக புதன்கிழமை அன்று மிட்சோடாகிஸ் எச்சரித்ததுடன், இந்த நிலைமை குறித்து அங்காராவை குற்றம்சாட்டினார்.

செவ்வாயன்று ஏஜியன் கடலில் ரோட்ஸ் (Rhodes) தீவில் ஒரு தனியார் படகின் மீது கிரேக்க கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒரு முழுமையான போர் விரைந்து வெடிப்பதற்கான “விபத்தின்” அபாயம் அங்கு எழுந்தது. அப்போது கப்பல் தளத்தில் இரண்டு துருக்கிய மற்றும் ஒரு சிரிய குடிமக்களை அவர்கள் காயப்படுத்தினர்.

இந்த விவாதம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய (EU) வெளியுறவு அமைச்சர்களின் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மிட்சோடாகிஸ் அரசாங்கமும் கோரியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். வியன்னாவில் நடக்கும் மற்றொரு கூட்டத்தில், கிரேக்க வெளியுறவு அமைச்சரும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோவும் சந்தித்து இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் பற்றி விவாதிக்க உள்ளனர்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) அச்சுறுத்தும் தொனியுடன் பேச்சுவார்த்தைக்கான தனது அழைப்புக்களை சேர்த்துக் கொண்டார். வியாழக்கிழமை அவர், ஏதென்ஸ் உடனான பேச்சுவார்த்தை “மட்டும் தான் கிழக்கு மத்தியதரைக் கடல் விவகாரம் குறித்த தீர்மானத்திற்கான ஒரே வழி,” என்றார், என்றாலும் கிரீஸூம் சைப்ரஸூம் “கெடுக்கும் நோக்கம் கொண்டவை” என்று குற்றம்சாட்டியதுடன், “எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ எங்களது அனுமதியின்றி எங்கள் பகுதிகளில் ஆய்வு நடத்த முடியாது” என்றும் கூறினார்.

பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புக்குப் பின்னர் லெபனானில் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் அப்பட்டமான நவகாலனித்துவ தலையீட்டையும் எர்டோகன் விமர்சித்தார்: "மக்ரோனும் அவரைப் போன்றவர்களும் தங்களது நடவடிக்கைகளின் மூலம் காலனித்துவ காலத்தை இப்பிராந்தியத்தில் மீண்டும் கொண்டுவர விரும்புகிறார்கள்" என்று கூறினார்.

துருக்கிய வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த Cagatay Erciyes திங்களன்று இவ்வாறு ட்வீட் செய்தார்: “கஸ்டெல்லோரிசோ (Kastellorizo) என்ற சிறிய தீவின் காரணமாக 40,000 சதுர கிலோமீட்டர் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியை கிரீஸ் உரிமை கோருகிறது, இது துருக்கிய நிலப்பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், கிரேக்க நிலப்பகுதியிலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.”

ஜூலை மாதம், இப்பகுதியில் எண்ணெய் ஆய்வு தொடர்பான பதட்டங்கள் இரு நேட்டோ சக்திகளுக்கும் இடையிலான இராணுவ மோதலாக கிட்டத்தட்ட சீரழிந்தன. பதட்டங்களைத் தணிக்க ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தலையிட்டதன் பின்னர், பேர்லின் ஆதரவிலான ஏதென்ஸ் உடனான பேச்சுவார்த்தைகளின் போது ஆராய்ச்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக அங்காரா கூறியது. எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தை முயற்சிகள், எரிசக்தி வளங்கள் மற்றும் மூலோபாய நன்மைகள் குறித்து ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளுக்கு இடையே வளர்ந்து வரும் போட்டிகளுக்கு மத்தியில், ஒருசில வாரங்களுக்குள்ளாகவே தகர்ந்து போயின.

இந்த மோதல்கள், 2011 ஆம் ஆண்டில் லிபியாவில் நடந்த ஏகாதிபத்திய போர் மற்றும் சிரியாவில் நடந்த பினாமி போர் ஆகியவற்றால் தொடங்கப்பட்டதான, பிராந்தியங்களின் இலாபங்களையும் வளங்களையும் மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்திய தலைமையிலான மோதலிலிருந்து உருவெடுக்கின்றன. மத்தியதரைக் கடலில் கடலுக்கடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களின் கண்டுபிடிப்பு இந்த மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஏகாதிபத்திய சக்திகள், பிரான்சின் Total மற்றும் இத்தாலியின் ENI எண்ணெய் நிறுவனங்கள் போன்ற நாடுகடந்த நிறுவனங்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக போரை நடத்தும் அதேவேளை, துருக்கி, கிரீஸ் மற்றும் எகிப்து போன்ற பிராந்திய சக்திகள் ஏகாதிபத்திய கொள்ளை நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் எஞ்சிய இலாபங்களுக்காக போராடுகின்றன.

2011 ஆம் ஆண்டில் லிபியாவில் முவாம்மார் கடாபியின் (Muammar Gaddafi) ஆட்சியை நேட்டோ அழித்தமை நீண்டகால மற்றும் வெடிக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, இதில் பிரான்ஸ் ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தது. ஆகஸ்ட் 6 அன்று, எகிப்தும் கிரிஸூம் இரு நாடுகளுக்கும் இடையிலான “கடல்சார் அதிகார வரம்புகளை நீக்குதல்” குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது, துருக்கியும் மற்றும் லிபிய தலைநகர் திரிப்போலியில் ஃபயஸ்-அல்-சர்ராஜின் தேசிய உடன்படிக்கை அரசாங்கமும் (Government of National Accor-GNA) ஒப்புக் கொண்ட போட்டி கடல்சார் உரிமைகோரல்களை குறைக்கிறது, இது கிழக்கு மத்தியதரைக் கடலில் எண்ணெய் வளம் மீதான துருக்கியின் உரிமைகோரல்களை நியாயப்படுத்தும் வகையில் அதன் பிராந்திய நீர்பரப்பை பெரிதும் விரிவுபடுத்தியது.

கடலோர நகரமான சிர்ட்டே (Sirte) மற்றும் ஜூஃப்ராவில் (Jufra) உள்ள விமானத் தளத்தையும் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும், இத்தாலிய மற்றும் துருக்கிய ஆதரவு பெற்ற GNA க்கு எதிராக பிரெஞ்சு மற்றும் ரஷ்ய ஆதரவு கலீஃபா ஹப்தாரின் (Khalifa Haftar) படைகளுக்கு ஆதரவளிக்க தனது இராணுவத்தை லிபியாவிற்கு அனுப்ப எகிப்திய பாராளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதலளித்தது.

கடந்த ஆண்டு நேட்டோ கூட்டணியின் “மூளை இறந்துவிட்டதாக” மக்ரோன் அறிவித்ததன் பின்னர், லிபியாவில் துருக்கியுடனான மறைந்திருக்கும் மோதலில் கெய்ரோவிற்கு பாரிஸ் தனது ஆதரவை அறிவித்தது. “விரோதப் படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை தயார் செய்வதற்காக” பிரெஞ்சு கடற்படை கடந்த மாதம் மத்தியதரைக் கடலில் எகிப்திய போர்க்கப்பல்களுடன் கூட்டு கடற்படை பயிற்சிக்கான பயிற்சிகளை நடத்தியது.

கிரீஸூக்கு “முழு ஆதரவு” அளிப்பதற்கான இஸ்ரேலின் அறிவிப்பு ஒன்றே இப்பகுதியில் வளர்ந்து வரும் போர் அபாயத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது. ஒரு அறிக்கையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் “கிரீஸூக்கு அதன் கடல் மண்டலங்களிலும் மற்றும் அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை (exclusive economic zone - EEZ) வரையறுக்கும் அதன் உரிமைக்கும் இஸ்ரேல் தனது முழு ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது” என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல், கிரீஸ் மற்றும் சைப்ரஸ் அனைத்தும் கிழக்கு மத்தியதரைக் கடலில் இருந்து ஐரோப்பாவிற்கு கிரீஸ் மற்றும் இத்தாலி வழியாக எரிவாயுவைக் கொண்டு செல்லும் ஈஸ்ட்மெட் குழாய்வழித் திட்டத்தின் (EastMed pipeline project) பகுதியாக உள்ளன.

கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் பால்கன் பிராந்தியத்தின் வளங்களை முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பின் கட்டமைப்பிற்குள் பகுத்தறிவு ரீதியாகவும் மற்றும் அமைதியான முறையிலும் வளர்த்தெடுக்க முடியாது என்பது முன்னெப்போதையும் விட தெளிவாகியுள்ளது. பால்கன் போர்கள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே முதலாம் உலகப் போராக சீரழிந்தபோது, 1910 களில் இருந்ததைப் போலவே, பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய போட்டிகள், பிரதான இராணுவ சக்திகளுக்கு இடையிலான வெளிப்படையான மோதலாக சிதைவதற்கு அச்சுறுத்துகின்றன, நேட்டோ கூட்டணியையும் பிளவுபடுத்த அச்சுறுத்துகிறது.

இத்தகைய வளர்ச்சியை எதிர்ப்பதற்கான ஒரே வழி, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு சோசலிச மற்றும் போர் எதிர்ப்பு இயக்கத்திற்காக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதாகும்.

இந்த நிலைமைகளின் கீழ், ஏஜியன் கடலின் இருபுறமும் உள்ள முதலாளித்துவ எதிர்க்கட்சிகள், கிரேக்க மற்றும் துருக்கிய அரசாங்கங்களின் ஆக்கிரோஷமான, இராணுவவாத கொள்கைகளை ஆதரிக்கின்றன.

முன்னாள் கிரேக்க பிரதமரும், சிக்கன-சார்பு சிரிசா (“தீவிர இடது கூட்டணி”) கட்சியின் தற்போதைய தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras), துருக்கிக்கு எதிராக கிரேக்க இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு போர்வெறி கொண்ட அழைப்பை விடுத்துள்ளார். செவ்வாயன்று அவர் இவ்வாறு கூறினார்: “இந்த சட்டவிரோதமான நில அதிர்வு நடவடிக்கைகள் எப்படி தடுக்கப்பட வேண்டும் மற்றும் எப்படி தடுக்கப்பட முடியும் என்பது, அக்டோபர் 2018 இல் எங்கள் ஆயுதப்படையினர் அதற்கு திறம்பட முயற்சித்தது முதல் அவர்களுக்குத் தெரியும். அவர்களது திறமைகள் குறித்து எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.”

கெமாலிஸ்ட் குடியரசு மக்கள் கட்சியின் (Kemalist Republican People’s Party - CHP) செய்தித் தொடர்பாளரான Faik Oztrak, “Oruk Reis ஆய்வுக் கப்பல் இப்பகுதியில் நிலைநிறுத்தப்படுவது சரியானதே” எனத் தெரிவித்து, எர்டோகன் அரசாங்கத்தின் கிழக்கு மத்தியதரைக் கடல் கொள்கைக்கு தனது கட்சியின் முழு ஆதரவை சமிக்ஞை செய்துள்ளார்.

வளர்ந்து வரும் இந்த மோதல்களிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி, போருக்கு மூலகாரணமாகவுள்ள, காலாவதியான முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையை தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான, கிரேக்க, துருக்கிய, பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடாகும்.

Loading