இந்தியா: மதர்சன் நிறுவன “விசாரணை”, வேலைநிறுத்தப் போராட்டம் செய்தவர்களை பணிநீக்கம் செய்ய முத்திரை குத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவில் தமிழ் நாட்டிலுள்ள மதர்சன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் & இன்ஜினியரிங் (MATE) கம்பனியின் ஸ்ரீபெரம்புதூர் ஆலையில் நடத்தப்பட்ட உள் விசாரணை - சம்பளம், நிலைமைகள், சங்க அங்கீகாரம் ஆகியவற்றுக்காக கடந்த ஆண்டு 140 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போராளித் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

ஜூலை 20 ம் தேதி, மதர்சன் நிர்வாகம், போராட்டத்தின் போது பணிநீக்கம் செய்யப்பட்ட 51 நிரந்தர தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது, ஒரு உள் நிறுவன விசாரணை அவர்களுக்கு எதிரான "குற்றச்சாட்டுகளை" உறுதிப்படுத்தி இருப்பதாக அவர்களுக்குத் தெரிவித்தது. இந்த கடிதம் விசாரணையின் போலியான ஆய்வின் முடிவுகளுக்கு பதிலளிக்க பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தான் அளித்தது.

இந்த தொழிலாளர்களை இவ்வாறாக மதர்சன் பழிவாங்குவதற்கு, நீண்ட நாட்களாக நீட்டித்த வேலைநிறுத்தத்தை மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடது தொழிற்சங்க மையம் (LTUC) காட்டிக் கொடுத்தது தான் நேரடியாக வசதியாக இருந்தது. நான்கு மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தவர்களின் எந்தவொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படாமலும் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படாமலும் இருந்த நிலையில் மீண்டும் வேலைக்கு திரும்புமாறு வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தவர்களை LTUC ஜனவரி 13 ம் தேதி அறிவுறுத்தியது. கம்பனி ”விசாரணைக்கு” தொழிற்சங்கம் ஒப்புதல் அளித்தது, 51 நிரந்தரத் தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படாவிட்டால் அதனை சட்டரீதியாக சவால் செய்யும் என்று கூறியது.

சம்வர்தனா மதர்சன் குழுமம் மற்றும் ஜப்பானை தளமாகக் கொண்ட சுமிட்டோமோ வயரிங் சிஸ்டம்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட MATE க்கு 42 நாடுகளில் ஆலைகள் உள்ளது. மொத்தமாக 135,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். 2018 ஆம் ஆண்டில், இந்த மாபெரும் நிறுவனத்திற்கு 11.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்தது. அதன் ஸ்ரீபெரம்புதூர் ஆலையுடன், சேர்த்து தமிழ்நாட்டில் மேலும் இரண்டு தொழிற்சாலைகளை MATE நடத்தி வருகிறது, மேலும் இராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 11 ஆலைகளை நடத்துகிறது.

MATE இன் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் 1,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர், ஆனால் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே நிரந்தரமானவர்கள், மீதமுள்ளவர்கள் ஒப்பந்த அல்லது பயிற்சி ஊழியர்கள். நிர்வாக அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலை மீறி, ஆலையின் மொத்த 568-நிரந்தர தொழிலாளர்களில் 300 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். வேலைநிறுத்தம் செய்பவர்கள் ஊதிய உயர்வு, சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர்கள் சங்கம் (CAMJTS) தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினர்.

புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம் ஆரம்பத்தில் அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலுடன் (AICCTU) இணைக்கப்பட்டது, இது இந்தியாவில் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிச லெனினிச-விடுதலை (CPI-ML-Liberation) இன் தொழிற்சங்கப் பிரிவாகும். எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் முடிவுக்கு வருகின்ற சமயத்தில், AICCTU இல் விளக்கம் அளிக்கப்படாத கோஷ்டி பிளவுகளைத் தொடர்ந்து, பிராந்திய ரீதியாக பிரிந்த LTUC உடன் CAMJTS இணைந்தது.

MATE-LTUC செய்து கொண்ட வேலைக்குத் திரும்பும் ஒப்பந்தபடி, நிர்வாகத்தின் “ஒழுக்க விசாரணைகள்” குறித்த ஒரு இறுதித் தீர்ப்பு எடுப்பதற்கு உதவி தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்படும். ஆனால் இது நிர்வாகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டது, ஜூலை 20 கடிதங்கள் உதவி தொழிலாளர் ஆணையரை கடந்து அனுப்பப்பட்டன. இதுவரை, உதவி தொழிலாளர் ஆணையாளரோ அல்லது LTUC யோ MATE நிர்வாகத்தின் தன்னிச்சையான ஒப்பந்த மீறலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எழுப்பவில்லை.

LTUC யின் செவிட்டுத்தனமான மவுனம் ஆச்சரியமானதல்ல, ஆனால் ஸ்ரீபெரும்புதூர் போராட்டம் முழுவதும் AICCTU உடன் இணைந்து அது வகித்த பங்கின் தொடர்ச்சியாகும். இரு தொழிற்சங்க கூட்டணிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தின, ஆலையில் நூற்றுக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அணிதிரட்ட மறுத்தன, மேலும் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் வேறு எங்கும் உள்ள மற்ற மதர்சன் குழு தொழிலாளர்களிடம் கூட ஆதரவு கேட்டு அழைப்பு விடவில்லை.

அதற்கு பதிலாக, தொழிலாள வர்க்க விரோத தமிழ்நாடு மாநில அரசாங்கம் மற்றும் பல்வேறு அரசாங்க தொழிலாளர் அதிகாரிகளிடம் பாதிப்பற்ற மற்றும் பயனற்ற முறையீடுகள் செய்வதற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை தொழிற்சங்கங்கள் வழிநடத்தின. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று நிறுவனம் ஒப்புக் கொண்டால் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அனைத்து கோரிக்கைகளையும் கைவிடுவதற்கும் தயார் என்று AICCTU மற்றும் LTUC அதிகாரத்துவங்கள் இரண்டுமே MATE நிர்வாகத்திடம் தெரிவித்தன.

AICCTU இன் கோஷ்டிவாத பிளவு மற்றும் LTUC இன் உருவாக்கம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவோயிச-ஸ்ராலினிச அமைப்புகளின் வலதுசாரி தமிழ் பிராந்தியவாத நோக்குநிலையின் மற்றொரு வெளிப்பாடாகும். LTUC, பல்வேறு தமிழ் தேசியவாத அமைப்புகள் முன்னெடுக்கும் பேரினவாத “வெல்க தமிழ்” (Rise up Tamil) பிரச்சாரங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது. மதர்சன் வாகன உதிரிப் பாக தொழிலாளர்களை இந்தியா முழுவதும் உள்ள அவர்களது சக தொழிலாளர்களிடமிருந்து பிரிப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியில், வேலைநிறுத்தம் செய்பவர்களை தமிழ் தேசியவாத ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் பங்கேற்குமாறு மாவோயிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவுறுத்தினர்

AICCTU மற்றும் LTUC இன் பிற்போக்குத்தனக் கொள்கைகள், தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு CPI-ML-Liberation திட்டத்திலிருந்து ஊற்றெடுக்கின்றன. அது இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உடன் தேர்தல் கூட்டணியில் இணைந்திருக்கிறது.

2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இந்த அமைப்புகள் பெருவணிக திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைமையிலான தேர்தல் கூட்டணியில் இணைந்தன. பீகார் மாநிலத்தில், சிபிஐ-எம்எல்-விடுதலை முதலாளித்துவ சார்பு காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு மாற்று அரசாங்கத்தை உருவாக்க உதவுவதாக உறுதியளித்தது.

மதர்சன் வேலைநிறுத்தம் முழுவதும், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) AICCTU மற்றும் LTUC இன் துரோகக் கொள்கைகளை அம்பலப்படுத்தி கட்டுரைகளை வெளியிட்டது மற்றும் மதர்சன் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க கூடிய ஒரு சோசலிச மற்றும் சர்வதேச திட்டத்தை விவரித்தது.

AICCTU மற்றும் LTUC அலுவலர்கள் தடுப்பதற்கு எடுத்த கடுமையான முயற்சிகளை மீறி இந்த விஷயங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (International Committee of the Fourth International) இந்திய ஆதரவாளர்கள் வேலைநிறுத்தம் செய்தவர்கள் மத்தியில் விநியோகித்து கலந்துரையாடினர்.

MATE நிர்வாகத்தின் போலியான விசாரணைகள் மற்றும் பழிவாங்கப்பட்ட வேலைநிறுத்தக்காரர்களை மேலும் தொடர்ந்து அச்சுறுத்தும் அதன் முயற்சிகள் WSWS குறிப்பிட்ட எச்சரிக்கைகளை ஊர்ஜிதம் செய்கின்றன.

MATE தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அது தொழிற்சங்கங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டது தொடர்பான மையப் படிப்பினை என்னவென்றால் நிரந்தர வேலைகள், தரமான ஊதியங்கள், மேம்பட்ட வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முதலாளித்துவ அமைப்பையும் அதன் அனைத்து அரசியல் முகவர்களையும் சவால் செய்வதன் மூலம் மட்டுமே முன்னெடுத்து செல்ல முடியும். இதற்கு அனைத்து ஸ்ராலினிச-மாவோயிச கட்டுப்பாட்டில் உள்ள, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொண்டு தொழிலாளர்கள் உண்மையான சுயாதீனமான சாமானிய குழுக்களை அமைக்க வேண்டும், அவை இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் வாகனத் தொழிலாளர்களை ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அணிதிரட்ட போராடும்.

பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத சில பழிவாங்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் நிர்வாகத்தின் ஜூலை 20 கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் WSWS ஐ தொடர்பு கொண்டனர், மேலும் LTUC மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார்கள்.

போராட்டத்தின் போது வழிகாட்டுதலுக்காக WSWS பக்கம் திரும்பிய இந்த தொழிலாளர்கள், MATE இன் கடிதங்கள் குறித்து தொழிற்சங்கம் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்கள். LTUC அலுவலர்கள் ஏன் WSWS க்கு மிகவும் விரோதமாக இருந்தார்கள் என்பதையும், ஏன் வேலைநிறுத்தம் செய்பவர்கள் WSWS நிருபர்களுடன் பேசக்கூடாது என்று சொன்னார்கள் என்பதையும், இப்போது அவர்கள் உணர்வதாக விளக்கினார்கள்.

Loading