பெலாரூஸில் லூக்காஷென்கோ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் அதிகரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெலாரூஸில் ஆகஸ்ட் 9 ஜனாதிபதி தேர்தலால் தூண்டிவிடப்பட்ட பாரிய போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி அலெக்சாண்டர் லூக்காஷென்கோவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை சுமார் 200,000 பேர் மின்ஸ்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மில்லியன் பேர் வாழும் பெலாரூசிய தலைநகரில் அந்த போராட்டம், அந்நாட்டில் 1991 இல் ஸ்ராலினிச ஆட்சியால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய மிகப் பெரிய போராட்டமாகும்.

ஞாயிற்றுக்கிழமை மின்ஸ்கில் நடந்த போராட்டங்கள்

ஸ்வெட்லானா டிக்கோனோவ்ஸ்காயா (Svetlana Tikhonovskaya) தலைமையில் லூக்காஷென்கோ-விரோத எதிர்ப்பின் அடையாளமாக 1991 இல் இருந்து 1995 வரையில் பெலாரூஸின் தேசிய கொடியாக இருந்த சிவப்பு-வெள்ளை கொடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். “பெலாரூஸ் நீடூழி வாழ்க" என்று கூச்சலிட்டவாறு, போராட்டக்காரர்கள் லூக்காஷென்கோவின் இராஜினாவைக் கோரினர். புதிய தேர்தல்கள், பொலிஸ் வன்முறையை நிறுத்துவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது ஆகியவை அவர்களின் கோரிக்கைகளில் உள்ளடங்கி இருந்தன. “டிக்கோனோவ்ஸ்காயா பெலாரூஸ் குடியரசின் ஜனாதிபதியும், முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார்" என்று குறிப்பிட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

கடந்த வாரம் ஒரு வன்முறையான ஒடுக்குமுறையில் பொலிஸ் ஒரு போராட்டக்காரரைக் கொன்று, 7,000 க்கும் அதிகமானவர்களைக் கைது செய்திருந்த நிலையில், இம்முறை அதுபோல செய்யாமல், அது போராட்டங்களை ஒடுக்குவதைத் தவிர்த்துக் கொண்டது.

ஆனால் லூக்காஷென்கோ சனிக்கிழமை காலை தலைமை தளபதியைச் சந்தித்ததுடன், மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள் ஏற்பட்ட குரோட்னோவில் துணைஇராணுவப்படை துருப்புகள் நிலைநிறுத்தப்படும் என்று அறிவித்தார். இன்று மின்ஸ்க் டிராக்டர் ஆலையில் தொழிலாளர்கள் அவரின் இராஜினாமா கோரி கூச்சலிட்டதுடன், அவரை ஏளனம் செய்த போது லூக்காஷென்கோ இன்னும் அதிகமாக அவமானப்படுத்தப்பட்டார்.

போலாந்து பத்திரிகை தகவல்களின்படி, மின்ஸ்க் போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், மின்துறை தொழிலாளர்கள், டிரக் மற்றும் எந்திர உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் என பெலாரூஸின் பல முக்கிய வேலையிடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். பல மருத்துவமனை தொழிலாளர்களும் போராட்டங்களில் இணைந்துள்ளனர். இன்றிலிருந்து தொடங்கி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் பரவி வருகின்றன. மின்ஸ்க் போராட்டக்காரர்களைப் போலவே வேலைநிறுத்தக்காரர்களும் அதே கோரிக்கைகளை எழுப்பி வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன, வெவ்வேறு ஆலை மேலாளர்கள் வெளிநடப்புகளை ஆதரித்திருப்பதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன. சமூக சமத்துவமின்மை மீதும், கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கான விடையிறுப்பு மீதும் உள்ள கோபம் வேலைநிறுத்தங்களை இன்னும் கூடுதலாக எரியூட்டி வருகின்றன.

இந்த தொற்றுநோய் ஐரோப்பாவை எட்டிய போது, லூக்காஷென்கோ ஒரு தற்காலிக அடைப்பைக் கூட நடத்தாமல், அந்த வைரஸை மக்களிடையே பரவ விட்டார். 10 மில்லியனுக்கும் சற்று குறைவான மக்கள்தொகையில் ஏறத்தாழ 70,000 பேருக்கு இப்போது அந்த தொற்று ஏற்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இந்த எண்ணிக்கைகள் ஏறத்தாழ நிச்சயமாக குறைமதிப்பீடுகளாக உள்ளன. பிரேசில் மற்றும் அமெரிக்காவில் உள்ள அவரின் சமதரப்பினரைப் போலவே, லூக்காஷென்கோவும் அந்த வைரஸை ஒரு "சளிக்காய்ச்சல்" என்றும் "வெறும் புரளி" என்றும் ஏளனம் செய்திருந்தார். அந்த தேர்தலுக்குச் சற்று முன்பாக அவரே கூட கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 13 இல் இருந்து 5,000 முதல் 7,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Grodno-Azot ஆலையின் ஒரு வேலைநிறுத்தக்காரர், பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த தேர்தல் முடிவுகளை நம்பவில்லை என்று போலாந்தின் இணைய பத்திரிகையான Onet.pl க்குக் தெரிவித்தார். அவர் கூறினார், “இதற்கு மேல் பொறுக்க முடியாதளவுக்கு பொறுத்துக் கொண்டிருந்த அனைத்தையும் இந்த கொரொனா வைரஸ் உடைத்து விட்டது. லூக்காஷென்கோ நீண்ட நாட்களுக்கு முன்னர் 'எங்களுக்கு வைரஸ் இல்லை' என்றார். பின்னர் அவரே பாதிக்கப்பட்டதும் தான் அது இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டார். மக்கள் உயிரிழக்க தொடங்கினார்கள், மருத்துவர்கள் நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். இது மக்களை இன்னும் கோபமூட்டியது, ஆனால் எவ்வாறாயினும் அவர்கள் ஏற்கனவே கோபத்தில் தான் இருந்தார்கள். அதன் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டது.”

மக்கள்தொகையில் 21.5 சதவீதத்தினர் 2019 இல் உத்தியோகபூர்வ வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்வதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள்.

போராட்டங்களின் அளவும் அவற்றின் சம்பந்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் அடுக்குகள் அதிகரித்து வருவதும் இரண்டுமே லூக்காஷென்கோ ஆட்சியையும் எதிர்கட்சியையும் இரண்டையுமே பீதியடைய வைத்துள்ளன. லூக்காஷென்கோ, போராட்டக்காரர்களை "கடந்தகால குற்றங்களைக் கொண்ட வேலைவாய்ப்பற்றவர்கள்" என்று கண்டித்ததுடன், அந்த போராட்டங்கள் "நேட்டோ" மற்றும் "வெளிநாட்டு சக்திகளால்" தூண்டிவிடப்பட்டிருப்பதாக அறிவித்தார். அவர் பங்கிற்கு டிக்கோனோவ்ஸ்காயா, எதிர்கட்சியுடன் "பேச்சுவார்த்தையை" தொடங்குமாறு லூக்காஷென்கோவுக்கு அழைப்பு விடுத்ததுடன், அந்த போராட்டங்களை ஒழுங்கமைக்குமாறு பெலாரூஸ் எங்கிலுமான நகரசபை தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

திங்கட்கிழமை டிக்கோனோவ்ஸ்காயா ஒரு காணொளி அறிக்கை வெளியிட்டார், அதில் அவர், “நாடு மீண்டும் அமைதிக்கும் வழமைக்கும் திரும்புவதை" உறுதிப்படுத்தவும் மற்றும் புதிய தேர்தல்களுக்கான "சட்டபூர்வ அடித்தளத்தை உருவாக்கவும்" ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றுவதற்கு முன்மொழிந்தார். அப்பெண்மணி ஆதரவு வேண்டி பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளுக்கு முறையிட்டார்.

தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரச்சினையே, மதிப்பிழந்த இரும்புமனிதர் லூக்காஷென்கோவுக்கு எதிராகவும் மற்றும் உத்தியோகபூர்வ எதிர்கட்சி தலைவர் டிக்கோனோவ்ஸ்காயாவுக்கு எதிராகவும் இருவருக்கு எதிராகவும் அரசியல்ரீதியில் ஒரு சுயாதீனமான போராட்டத்தைத் தொடுப்பதாகும். அவர்கள் இருவருமே, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் மின்ஸ்கில் கையெழுத்தான டிசம்பர் 1991 உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட சோவியத் ஒன்றிய கலைப்பிலிருந்தும், அதற்கு பின்னர் முதலாளித்துவத்தை மீட்டமைப்பதற்கு மத்தியில் அரசு சொத்திருப்புகளைக் கொள்ளையடித்ததில் இருந்தும் மேலெழுந்த குற்றகரமான செல்வந்த தட்டுக்களின் வெவ்வேறு கன்னைகளுக்காக பேசுகிறார்கள்.

லூக்காஷென்கோ பல தசாப்தங்களாக நேட்டோ மற்றும் மாஸ்கோவுக்கு இடையே சமநிலையைப் பேண முயன்றுள்ளார். 2014 க்குப் பின்னர் இருந்து மாஸ்கோவுடன் பதட்டங்கள் பெரியளவில் இருந்துள்ளன, அப்போது அவர் கியேவில் நேட்டோ-ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்திருந்தார். இந்தாண்டு ஆரம்பத்தில், எண்ணெய் வழங்கல்களுக்கான ரஷ்ய மானியங்கள் மீது நீண்டகாலமாக ரஷ்யாவுக்கும் பெலாரூஸிற்கும் இடையே இருந்து வரும் ஒரு பிரச்சினை மேலெழுந்தது.

இந்த தேர்தல்களுக்கு முன்னர் பல வாரங்கள் அவரை "தூக்கியெறிய" முயல்வதாக குற்றஞ்சாட்டி ரஷ்யாவை கண்டித்து வந்த பின்னர், அவர் கிரெம்ளின் பக்கம் திரும்பி உள்ளார். சனிக்கிழமை லூக்காஷென்கோவும் புட்டினும் தொலைபேசியில் உரையாடினர். புட்டின் பொதுவான ஆதரவு அறிக்கைகள் வழங்கியிருப்பதாகவும், இராணுவ உதவிகள் ஒருபுறம் இருக்க, அரசியல் வாக்குறுதிகள் எதையும் கூட தெளிவாக வழங்கி இருக்கவில்லை என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் லூக்காஷென்கோ கூறுகையில், “பெலாரூஸ் குடியரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான உதவி வழங்கப்படும் என்பதில் முதல் கோரிக்கையிலேயே நாங்கள் உடன்பட்டோம்,” என்றார்.

அந்த தொலைபேசி அழைப்புக்கு முன்னதாக, இத்தேர்தலுக்குச் சற்று முன்னர் அந்த ஆட்சி கைது செய்திருந்த 32 ரஷ்ய இராணுவ ஒப்பந்ததார்களை அது விடுதலை செய்தது, இது நெருக்கமான உறவுகளை அது கோருகிறது என்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பும் ஒரு சமிக்ஞையாக இருந்தது. இந்த விடுவிப்பு, பல ஆண்டுகளாக லூக்காஷென்கோவுடன் செயல்பட்டு வந்து அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் அதன் உறவுகளை அதிகரிக்க ஊக்குவித்து வந்துள்ள உக்ரேனின் ஜெலென்ஸ்கி அரசாங்கத்திற்குச் சினமூட்டியது.

பெலாரூஸிற்கு தேவையான எல்லா எண்ணெய் தேவைகளையும் வாஷிங்டன் வினியோகிக்கும் என்று லூக்காஷென்கோவுக்கு கூறுவதற்காக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பொம்பியோ பெப்ரவரியில் மின்ஸ்க்கிற்கு விஜயம் செய்திருந்தார். “நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எங்களை அழைக்க வேண்டும்,” என்று பொம்பியோ கூறியிருந்தார். நேட்டோ-பெலாரூஸ்ய இராணுவப் பயிற்சிகளை நடத்தவும் லூக்காஷென்கோ சமீபத்தில் முன்வந்திருந்தார்.

எதிர்கட்சியை ஆதரித்துள்ள ஆனால் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதற்காக லூக்காஷென்கோவுடன் நெருக்கமான இராணுவ மற்றும் அரசியல் கூட்டுறவை முயற்சித்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில், பெலாரூஸிய அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் எவ்வாறு முன்நகர்வது என்பதன் மீதான கவலையையும் விவாதத்தையும் தூண்டியுள்ளன.

தேர்தல் முடிவுகளைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், வெள்ளிக்கிழமை உயர்மட்ட பெலாரூஸிய அரசு அதிகாரிகள் மீது தடையாணைகளைக் கொண்டு வந்தது. சனிக்கிழமை வார்சோவில், பொம்பியோ ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் மீது அவரின் ஆதரவை அறிவித்தார். ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், லூக்காஷென்கோ "வெளியேற வேண்டுமென" ஜேர்மன் நிதியமைச்சர் ஓலஃப் சொல்ஷ்ஸ அறிவித்தார்.

வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் ஒன்று எதை அது அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியத்தின் மெதுவான விடையிறுப்பு என்று குறிப்பிட்டதோ அதைக் குறித்து புலம்பி, லூக்காஷென்கோ "வெளியேற வேண்டுமென" எழுதியது, நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம் ஒன்று அந்த ஆட்சி மீது அதிகபட்ச அழுத்தமளிக்க அழைப்புவிடுத்தது. அது எழுதுகையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் "அவை உத்தியோகபூர்வ முடிவுகளை ஏற்கவில்லை என்றும், அவர் அவரின் குண்டர்களைத் திரும்ப பெறாத வரையில் அவரை வெற்றியாளராக அங்கீகரிக்கப் போவதில்லை என்றும், அங்கே ஒரு புதிய நம்பகமான தேர்தல் வேண்டும் என்றும்" அறிவிக்க வேண்டும், “இந்த புள்ளியை அடிக்கோடிட்டுக் காட்ட, வாஷிங்டன் மின்ஸ்க் இக்கு ஒரு புதிய தூதரை அனுப்புவதை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று எழுதியது.

இதற்கு முரண்பட்ட விததத்தில், ஜேர்மன் பத்திரிகை Die Zeit இவ்வாரம் எழுதுகையில், உண்மையில் மின்ஸ்கில் ஆட்சி மாற்றம் மாஸ்கோவின் நலன்களுக்குச் சேவையாற்றும் என்ற கவலையோடு, ஒரு "பலவீனமான லூக்காஷென்கோவை" கிரெம்ளின் விரும்புகிறது என்று எழுதியது. சமீபத்திய ஒரு பேட்டியில், டிக்கோனோவ்ஸ்காயா பெலாரூஸ் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான "ஐக்கிய" ஒப்பந்தத்தை நிராகரித்திருந்ததாகவும், ஆனால் கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதைத் தெளிவாக கண்டிக்க தவறியதாகவும் அது சுட்டிக் காட்டியது.

எதிர்கட்சி தலைவர் விக்டொர் பாபரிகொ (Viktor Babariko) மே மாதம் வரையில் ரஷ்ய அரசு கட்டுப்பாட்டிலான Gazprom நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு பெலாரூஸிய வங்கி Belgazprombank ஐ நடத்தி வந்ததையும் அது குறிப்பிட்டது. மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் Valery Tsepkalo ஒரு வணிகர் ஆவார், இவர் அமெரிக்காவுக்கான தூதராக இருந்தது உட்பட பல தசாப்தங்களாக லூக்காஷென்கோ ஆட்சிக்காக வேலை செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட தடை செய்யப்பட்டதற்குப் பின்னர் ஏப்ரலில் அவர் குடும்பத்துடன் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார்.

லூக்காஷென்கோவும் எதிர்கட்சியும் ஓர் உடன்படிக்கையை எட்டினாலும் எட்டாவிட்டாலும், அந்த ஆட்சி நேட்டோவை அல்லது மாஸ்கோவை எதை நோக்கி சாய்ந்தாலும், தொழிலாளர்கள் பெலாரூஸிய முதலாளித்துவ ஆளும் உயரடுக்குடன் ஒரு மோதலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். எந்தவொரு கன்னையும் ஜனநாயக உரிமைகளை வழங்கவோ அல்லது கோவிட்-19 தொற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கவோ நோக்கம் கொண்டிருக்கவில்லை. அவை அனைத்துமே, இலாபங்களை உறிஞ்சுவதையும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பையும் தொடர்வதற்காக, தொழிலாளர்களை மீண்டும் கட்டுப்பாட்டில் எடுத்து வேலைக்குத் திரும்ப செய்ய முயன்று வருகின்றன.

இந்த தொற்றுநோய்க்கான லூக்காஷென்கோவின் விடையிறுப்பையும், சமூக சமத்துவமின்மை, பொலிஸ் ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டாளிகள், ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகள் ஆவர். இந்த தொற்றுநோய்க்கு முதலாளித்துவ வர்க்கத்தின் விடையிறுப்பு எதிராகவும் தசாப்த கால சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அங்கே வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன.

சமூக நெருக்கடி மற்றும் இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆதாரவளங்களைப் பெறுவதற்கும், ரஷ்யாவில் மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் போருக்கு அதிகரித்து வரும் ஏகாதிபத்திய முனைவை நிறுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொதுவான, சர்வதேச போராட்டமும், சோவியத் ஒன்றியத்தின் முதலாளித்துவ மீட்சியிலிருந்து மேலெழுந்த ஆட்சியை எதிர்ப்பதும் அவசியமாகும். அத்தகைய ஒரு சர்வதேச சோசலிச போராட்டத்தின் அரசியல் அடித்தளம், அக்டோபர் 1917 புரட்சி மீதான ஸ்ராலனிசத்தின் தேசியவாத காட்டிக்கொடுப்புக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தை நோக்கி நோக்குநிலை கொண்டிருக்க வேண்டும்.

Loading