வேட்பாளராக கமலா ஹரீஸின் நியமனமும், அடையாள அரசியலின் வலதுசாரி தர்க்கமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனநாயகக் கட்சி புதன்கிழமை அதன் மாநாட்டின் மூன்றாம் நாள் இரவு, ஜோ பைடெனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹரீஸின் உத்தியோகப்பூர்வ நியமனத்தில் உச்சத்தை எட்டியதுடன் நிறைவடைந்தது.

புதன்கிழமை நடைமுறைகளும், அந்த ஒட்டுமொத்த நிகழ்வின் முட்டாள்தனமான மற்றும் மேலோட்டமான அதே போக்கில் இருந்தன. ஹிலாரி கிளிண்டனில் இருந்து நான்சி பிலோசி வரையில் பல்வேறு பிற்போக்குவாதிகளும் பல கோடி மில்லியனர்களும், அனைத்து தவறுகளையும் சரி செய்யவும் அமெரிக்காவைச் செல்வசெழிப்பான மற்றும் நீதி நேர்மையான பாதைக்குக் கொண்டு வரவும், டெலாவேரிலிருந்து வந்த பெருநிறுவன ஊழல் பேர்வழி பைடெனுக்கு வாழும் துறவியாக வடிவம் கொடுத்து, அவரைத் தேர்ந்தெடுப்பது அவசர தேவையாக அறிவித்தனர்.

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய் தோற்றுவித்துள்ள பாரிய சமூக பொருளாதார பேரழிவு மற்றும் அதற்கு ஆளும் வர்க்கத்தின் இருகட்சிகளது விடையிறுப்பைக் கையாள நிஜமான வேலைத்திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. ஒவ்வொன்றும், பைடெனின் வாழ்க்கையையும் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் கமலா ஹரீஸ் இன் வாழ்க்கையையும் கற்பனை கலந்து விவரிக்கும் அளவுக்குச் சுருங்கிப் போயிருந்தது.

ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டமை அமெரிக்க அரசியலில் ஒரு "வரலாற்று சிறப்புமிகு" தருணமாக சித்தரிக்கப்பட்டது. இந்த முகமதிப்பீடானது, முற்றிலுமாக, ஹரீஸ் தான் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் முதல் ஆபிரிக்க அமெரிக்கர் என்பதன் மீதும், உலகின் மிகப் பழமையான அரசியல் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்க பெண்மணி என்ற உண்மையின் மீதும் அடித்தளமிட்டிருந்தது. இதிலிருந்து, அந்நாடெங்கிலும் உள்ள இளம் பெண்களும் ஏதோவொரு நாள் அவர்களும் ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் துணை ஜனாதிபதியாக ஆகலாம் என்ற உண்மையைத் தீர்மானிப்பார்கள் என்ற தவிர்க்கவியலாத பிரகடனங்களும் இருந்தன.

பைடெனின் வசீகர வார்த்தையை நாம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டால், இவை அனைத்துமே "அர்த்தமற்ற பேச்சுக்கள்” (malarkey) ஆகும். ஹரீஸ் ஏற்கனவே பணக்காரர்களின் நலன்களுக்கு ஒரு நம்பத்தகுந்த சேவகியாகவும் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுப்பதில் பலசாலியாகவும் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கடந்த வாரம் எழுதுகையில், பைடென் ஹரீஸைத் தேர்ந்தெடுத்ததால் வோல் ஸ்ட்ரீட் நிதியாளர்கள் "நிம்மதி பெருமூச்சு" விட்டிருப்பதாக குறிப்பிட்டது. தொழில்துறை சார்ந்த பிரசுரம் American Banker குறிப்பிடுகையில் தேர்தல் பிரச்சாரத்திற்கான அவரின் ஒரே சீரான நிதி ஓட்டம் நிதியியல் தொழில்துறை தொழில்வல்லுனர்களிடம் இருந்தும் அவர்களின் மிகவும் நம்பத்தகுந்த சட்ட அலுவலகங்களிடம் இருந்தும் வந்துள்ளது.

டிசம்பர் 2019 இல் ஜனாதிபதி வேட்பாளருக்கான அவரின் முயற்சியை நிறுத்துவதற்குச் சற்று முன்னதாக, ஹரீஸ் பிரச்சாரம் எண்ணெய்வள செல்வந்த வாரிசு ஜோர்டன் கெட்டி மற்றும் பெரும் பேராசை முதலாளித்துவவாதி டீன் மெட்ரோபௌலொஸ் உட்பட பெரும்பாலான பில்லியனிய ஆதரவாளர்களைப் பெருமைப்படுத்தியது.

2004 இல் இருந்து 2011 வரையில் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அரசு தரப்பு வழக்குரைஞராக, ஹரீஸ் பின்தொடர்ந்த திட்டநிரலில் ஒழுக்கம் தவறிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதும் உள்ளடங்கி இருந்தது. 2011 இல் இருந்து 2017 வரையில் கலிபோர்னியாவின் தலைமை அரசு தரப்பு வழக்குரைஞராக அவர், குழந்தைகள் பல நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் அவர்களின் பெற்றோர்கள் "முழு பலத்துடன் சட்டத்தின் விளைவுகளை" முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று அம்மாநிலம் முழுவதிலுமான பெற்றோரை எச்சரித்திருந்தார்.

அவர் பதவிக்காலத்தின் போது, நெரிசல் மிகுந்த மாநில சிறைச்சாலைகளிலிருந்து கைதிகளை விடுப்பதற்கான உச்சநீதிமன்ற உத்தரவுக்குக் கலிபோர்னிய மாநில அரசின் எதிர்ப்புக்கும் ஹரீஸ் வழிகாட்டினார். நிறைய சிறைக்கைதிகளை விடுவிப்பது, (நேற்று இரவு ஹரீஸ் குறிப்பிட்டதைப் போல, “மக்களுக்காக") நாளொன்று 2 டாலருக்கும் குறைந்த செலவில் அம்மாநிலத்தின் கடுமையான காட்டுத்தீயை எதிர்த்து போராட கைதிகளின் மலிவு உழைப்பு தொகுப்பைத் தீர்ந்து போக செய்துவிடும் என்று அவரின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

2017 இல் இருந்து கலிபோர்னியாவில் இளநிலை செனட்டராக சேவையாற்றி வரும் ஹரீஸ், மத்திய அரசு வரவு-செலவு கணக்குத் திட்டம், நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை முகமைகளை மேற்பார்வையிடும் குழுக்களில் அமர்ந்துள்ளார்.

உளவுத்துறை கமிட்டியில் உள்ள அவரின் பதவி மூலமாக, ஹரீஸ் உலகெங்கிலுமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான நடவடிக்கை குறித்து மிகவும் அதிமுக்கிய தகவல்களைப் பிரத்யேகமாக அணுகியுள்ளார். அவர் வகித்த பாத்திரத்தில், அப்பெண்மணி மாஸ்கோவை நோக்கி இன்னும் அதிக விரோதமான நிலைப்பாடு எடுக்க ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தமளிக்கும் நோக்கிலான ஜனநாயகக் கட்சியின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை ஆதரித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ போர் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்க சிறைச்சாலையில் 175 ஆண்டுகள் தண்டனையை முகங்கொடுக்கும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸிற்கு தொல்லை கொடுப்பதையும் அவர் ஆதரிக்கிறார், அந்த அமைப்பு அமெரிக்காவுக்கு "குறிப்பிடத்தக்க பாதிப்பை" ஏற்படுத்தி இருந்ததாக அவர் அறிவித்தார்.

பென்டகனின் 750 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருடாந்தர வரவு-செலவு திட்டக்கணக்கை வெட்டுவதற்கு ஓர் ஆதரவாளராக இடது வேஷம் போடுகின்ற அதேவேளையில், அற்பமான 10 சதவீத நிதி ஒதுக்கீட்டை வெட்டும் வேர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸின் ஒரு முன்மொழிவுக்கு எதிராக ஜூலையில் வாக்களித்த ஹரீஸ், அந்த யோசனையை அவர் ஆதரிப்பதாகவும் ஆனால் இராணுவத்திற்கான எந்தவொரு வெட்டும் "மூலோபாயரீதியில்" செய்யப்பட வேண்டும் என்றார்.

வோல் ஸ்ட்ரீட் பில்லியனர்கள், உளவுத்துறை முகமைகள் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியை ஹரீஸ் பிரதிநிதித்துவம் செய்கிறார். முப்படைகளின் தலைமை தளபதிகளின் முதல் ஆபிரிக்க அமெரிக்க தலைவரும் 2003 ஈராக் போரின் பிரதான வடிவமைப்பாளருமான கொலின் பவல் மற்றும் இழிபெயரெடுத்த வெறுக்கத்தக்க போர்வெறியரென செனட்டர் ஜோன் மெக்கெயின் உள்ளடங்கலாக பைடெனை ஆமோதித்த பல குடியரசு கட்சியினரை ஜனநாயகக் கட்சியினர் அணித்திரட்டிய வெறும் ஒருநாளைக்குப் பின்னர் புதன்கிழமை ஹரீஸின் நியமனம் வந்தது.

நேற்றிரவு அந்த மாநாட்டில் ஹரீஸின் நிறைவுரை ஒபாமாவின் கருத்துக்களையே விஞ்சியிருந்தது, இது குறித்து நாம் பின்னர் நிறைய கூற வேண்டியுள்ளது. ஜனநாயகக் கட்சியினரால் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி பதவியை ஜெயித்த முதல் ஆபிரிக்க அமெரிக்கரான ஒபாமா வங்கிகளைப் பிணையெடுக்க நகர்ந்தார் என்பதும், ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷின் போர்களைத் தொடர்ந்ததுடன், டிரோன் படுகொலை கொள்கையை நடைமுறைப்படுத்தி, அவருக்கு முன்பிருந்த எவரொருவரையும் விடவும் அதிக புலம்பெயர்ந்தவர்களை நாடுகடத்தினார் என்று கூறினால் அது மட்டுமே போதுமானதாக இருக்காது.

ஒபாமா நிர்வாகத்தின் வலதுசாரி கொள்கைகள் தான் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் மேலுயர்வதற்கு வழி வகுத்தது.

ஹரீஸின் வேட்பாளர் நியமனம் குறித்து வெற்றுத்தனமான அடையாளப்படுத்தலை மிதமிஞ்சி முடிவின்றி கொண்டாடுவது, அடையாள அரசியலை நிலைநிறுத்தி ஹரீஸின் முன்வரலாறையும், அவ்விதத்தில் ஜனநாயகக் கட்சியினதும் வலதுசாரி உள்ளடக்கத்தை மூடி மறைத்தால், 2008 இல் பராக் ஒபாமா ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுகையில் நடந்ததைப் போல மீண்டும் சேவையாற்றுமென ஜனநாயகக் கட்சியினர் நம்புகின்றனர். இது போலி-இடது மார்க்சிச எதிர்ப்பார்களால் இடைவிடாது ஊக்குவிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான இன, வம்சாவழி மற்றும் பாலின அடையாள அரசியலின் தர்க்கமாகும்.

ஆனால் பெண்களையும், ஆபிரிக்க அமெரிக்கர்களையும் மற்றும் இன்னும் ஏனைய வம்சாவழி சிறுபான்மையினரையும், நகரசபைகளில் இருந்து, நகரசபை அலுவலகங்களுக்கும், பொலிஸ் துறைகள் மற்றும் ஜனாதிபதி பதவிக்கே கூட, அதிகாரப் பதவிகளுக்கு அதிகரித்த எண்ணிக்கையில் மேலுயர்த்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னெடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் கடந்த நான்கு தசாப்தங்களாக மக்களின் ஒரு சிறிய அடுக்கு அதிகாரப் பதவிகளுக்கும் தனிச்சலுகைகளுக்கும் மேலுயர்ந்துள்ள அதேவேளையில் அடிமட்ட 90 சதவீதத்தினரில் எல்லா இன மற்றும் பாலினத்தவர்களின் நிலைமைகளோ சீரழிந்துள்ளன என்கின்ற நிலையில், அந்த காலக்கட்டத்தில் செல்வவள சமத்துவமின்மை இனவாத குழுக்களுக்குள் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளது.

ஒபாமா மட்டுமின்றி, உச்சநீதிமன்ற நீதிபதி கிளாரென்ஸ் தோமஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கொண்டாலிசா ரைஸ் மற்றும் சூசன் ரைஸ், மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் போன்றவர்களும் —இவர்களுடன் பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரட் தாட்சர் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இவர்களையும் ஒருவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்— ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரதிநிதியைப் போலவே பெண்களும் இன சிறுபான்மையினரும் அதேயளவுக்கு ஈவிரக்கமின்றி நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பின்தொடர முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் துணை தலைமை வேட்பாளர் இடத்திற்கு ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் வேறொன்றும் பொருந்தி வருகிறது. இந்தாண்டு ஆரம்பத்தில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான பல இனத்தவரும் பல வம்சாவழியைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்த பாரிய போராட்டங்களில், தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான ஒரு மோதல் என்பதற்கு மாறாக இதில் சம்பந்தப்பட்டிருப்பது "வெள்ளையின அமெரிக்கா" மற்றும் "கருப்பின அமெரிக்காவுக்கு" இடையிலான மோதல் என்பதாக பிற்போக்குத்தனமான மற்றும் மோசடியான வாதத்தைப் பயன்படுத்தி, அவர்களை இனரீதியில் பிளவுபடுத்தும் அரசியலுக்குள் திசைதிருப்பியதே ஜனநாயகக் கட்சியினரின் விடையிறுப்பாக இருந்தது. இந்த முயற்சி இப்போது கலிபோர்னியாவின் "உயர்மட்ட காவலரை" ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்திருப்பதில் உச்சத்தை அடைந்துள்ளது.

இது பலம் வாய்ந்த ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்க இயக்கம் உருவெடுப்பதில் இருந்து தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கோவிட்-19 தொற்றுநோய் தொழிலாள வர்க்கத்தின் உயிர்கள் மீது ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கின் குற்றகரமான அலட்சியத்தை அம்பலப்படுத்தி உள்ளது. அண்மித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ட்ரில்லியன் டாலர் CARES சட்ட பிணையெடுப்பு எடுத்துக் காட்டியதைப் போல, இப்போது வரையில் கொரொனா வைரஸால் உயிரிழந்துள்ள 175,000 இக்கும் அதிகமானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள 5.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களை விலையாக கொடுத்து அவர்களின் பங்கு ஆதாயங்கள் மற்றும் பெருநிறுவன இலாபங்கள் மீதே அவர்களின் கவலை உள்ளது.

தொழிலாள வர்க்க நலன்களை முன்னெடுப்பதற்கான போராட்டமானது, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியையும் மற்றும் அவை பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையையும் எதிர்ப்பதில், வர்க்க போராட்ட முறைகள் மூலமாக தொடுக்கப்பட வேண்டும்.

Loading