இலங்கையில் தொற்றுநோய்க்கு மத்தியில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆகஸ்ட் 14 அன்று, அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, “இப்போது கொவிட் தொற்றுநோய் சமூகத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகக் கருதப்படுவதனால்... மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வழக்கமான கல்விக் நடவடிக்கைகளை மேற்கொள்ள” முடியும் என்று கூறினார். அதன்படி, பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 17 முதல் பணிகளைத் தொடங்கி இருக்கின்றன.

முந்தைய பல சந்தர்ப்பங்களிலும் பல்கலைக்கழகங்களின் பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்ட போதிலும், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொது மக்களின் எதிர்ப்பின் காரணமாக அந்த முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டன. அரசாங்கம், உலகளாவிய தொற்றுநோய் இருக்கின் நிலையிலும், மக்களின் உயிர் வாழ்வைப் புறக்கணித்து, முதலாளித்துவ இலாபம் ஈட்டும் செயல்முறையை புதுப்பித்ததுடன், அதற்காக ஒரு பாதுகாப்பான சூழல் இருப்பதாக போலியாக காட்டி, ஒட்டு மொத்த வெகுஜன வாழ்க்கையையும் முன்னர் போன்று நடத்துவதற்கு மக்களை தூண்டிவிட்டு வருகின்றது. அதே முயற்சியின் ஒரு பகுதியாகவே, பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

ஆயினும், இங்குள்ள சுகாதார அபாயங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. ஆகஸ்ட் 13 அன்று, பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள், ராஜாங்கனையில் உள்ள ஒரு பாடசாலை மாணவனுக்கு கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது. ஐம்பது மாணவர்கள், ஆறு ஆசிரியர்கள் மற்றும் 40 குடியிருப்பாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக லங்கதீப பத்திரகை தெரிவித்துள்ளது. ராஜாங்கனை பகுதியில் 102 மாணவர்களுக்கு தற்செயலாக பரிசோதனை நடத்தப்பட்ட போதே பாதிக்கப்பட்ட மாணவர் கண்டுபிடிக்கப்பட்டார். இது வைரஸ் சமூக பரவுலில் இருப்பதற்கான சந்தேகத்தை எழுப்புகிறது. வைரஸ் பரவுவதைக் கண்டறிவதற்கான முதல் படியாக பரவலான பரிசோதனை நடத்த வேண்டியது அவசியமாகும்.

உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19 தொற்றுநோயை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்ததில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையில், நோயானது ஏதாவதொரு வழியில் குணமடைவதற்கு மாறாக, பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அழைத்துள்ளதன் மூலம் வைரஸ் பரவுவது மட்டுமே நடந்துள்ளது.

தான் சொல்வது பொய் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் நன்கு அறிவார். அதனால், சமூகத்திலிருந்து வைரஸ் ஒழிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அதே மூச்சில், "சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்" என்றும் கூறியதன் மூலம், ஏதேனும் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டிருந்தால் அதற்கான குற்றத்தை மாணவர்கள் மீது போடுவதற்கான எச்சரிக்கையையும் சேர்த்துள்ளார்.

ஜூன் 15 அன்று, மருத்துவ பீடங்களின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சைகளின் தொடக்கத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைகளின்படி, “விடுதிகளில் உள்ளவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு அறை வழங்குவது கட்டாயமாகும். விடுதிகள், விரிவுரை மண்டபங்கள், நடைமுறை வகுப்புகள், நூலகங்கள் மற்றும் விரிவுரை அரங்குகளில் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிப்பது கட்டாயமாகும்.” இரண்டு வாரங்களுக்கு அவர்களைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, தேர்வுகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

"கடந்த கொரோனா தொற்றுநோயின் போது, ஒரு மாணவர் மட்டுமே தங்குமிடங்களில் ஒரு அறையில் வைக்கப்பட்டார், ஆனால் சமூகத்திலிருந்து கொரோனா தொற்றுநோய் காணாமல் போனதால், மாணவர்கள் பொதுவாக விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்" என்று தலைவர் கூறினார். விரைவாக பரவும் தொற்றுநோயைத் தடுக்க உதவும் இடைவெளியைப் பேணுவதை மீறுவதாக நேரடியாகக் கூறிவிட்டு, சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சொல்வது முற்றிலும் முரணானது ஆகும்.

இந்த "சுகாதார வழிகாட்டுதல்களை" ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, பல்கலைக்கழகங்களில் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கான திட்டங்களை அமுல்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகி வருவதையே கீழ்வரும் விதிமுறைகள் காட்டுகின்றன.

· மாணவர்கள் தங்கள் படிப்புகள் மற்றும் தேர்வுகளை முடித்த உடனேயே பல்கலைக்கழகங்களில் இருந்து அவர்கள் தங்கள் தங்குமிடங்களுக்கு வெளியேற வேண்டும்.

· எந்த காரணத்திற்காகவும் மாணவர்கள் இரவு 7 மணிக்குப் பின்னர் வளாகத்தில் இருக்கக்கூடாது.

· பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளையாட்டு, சமூக பணி அல்லது வேறு எந்த கூட்டத்திலும் பங்கேற்க அனுமதி கிடையாது.

மேலும், இதற்கு இணையாக, மானியங்கள் ஆணைக்குழு அனைத்து பல்கலைக்கழக அதிபர்களுக்கும் ஆகஸ்ட் 10 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் மாணவர்களும் நிர்வாக சபையும் எதிர்கொள்ளும் பகிடிவதை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான துன்புறுத்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும், முறைப்பாடுகள் அனுப்பப்பட்ட ஒரு வார காலத்துக்குள் அது சம்பந்தாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்களும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், பகிடிவதைக்கு எந்த சலுகையும் அளிக்கவில்லை என்றாலும், பகிடி வதை நடவடிக்கைகளை குறைப்பதாகக் கூறிக்கொண்டு, நிர்வாகங்கள் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்துவதை கடுமையாக எதிர்க்கின்றன.

இருப்பினும், தலைவரின் "வழக்கமான கல்வி நடவடிக்கையின்" கீழ், நெரிசலான, சுகாதாரமற்ற, கட்டுப்பாடற்ற, துப்புரவான காற்றோட்டம் அற்ற, தூசி நிறைந்த கல்விக் கூடங்கள், நூற்றுக்கணக்கானவர்கள் உணவு வாங்க வேண்டிய கூடாரம் போன்ற சிறிய உணவகங்கள் மற்றும் அழுக்கு கழிப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு போன்ற ஒரு நிறுவனத்திடமிருந்து மாணவர்களின் ஆரோக்கியத்திற்கான ஒரு சாத்தியமான திட்டத்தை எதிர்பார்ப்பது ஒரு மாயை ஆகும். இருப்பினும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இந்த மாயையையே மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

எந்தவொரு மாணவருக்கும் பி.சி.ஆர் சோதனை செய்துகொள்வதற்கான வாய்ப்பு உட்பட, சிறந்த சுகாதாரமுடைய அதிநவீன தங்குமிடங்கள், விரிவுரை அரங்குகள் மற்றும் உணவகங்களை உடனடியாக வழங்க வேண்டும். ஆனால், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள கோடாபய ராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பொதுச் சேவைகளில் பாரிய வெட்டுக்களுக்குத் தயாராகி வருகின்ற அரசாங்கம், அதற்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சியடைந்து வரும் போராட்டங்களை கொடூரமாக நசுக்கும் ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

எனவே, மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் முழு முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்காகவும், முதலாளித்துவ தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்ட சுயாதீன நடவடிக்கைக் குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்டும் இத்தகைய போராட்டத்தின் மூலம், ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதன் ஊடாக, இந்த உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு சர்வதேச சோசலிச திட்டத்தை செயல்படுத்த முடியும்.

Loading