பெலாரூஸில் பாரிய போராட்டங்கள் அதிகரிக்கையில் மேர்க்கெலும் மக்ரோனும் புட்டினுக்கு அழைப்பு விடுக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெலாரூஸில், சர்ச்சைக்குரிய ஆகஸ்ட் 9 தேர்தல்களுக்குப் பின்னரும், கோவிட்-19 தொற்றுநோய் விவகாரத்தை ஜனாதிபதி அலெக்சாண்டர் லூக்காஷென்கோ பேரழிவுகரமாக கையாள்வது குறித்து அதிகரித்து வரும் மக்கள் சீற்றத்திற்கு மத்தியிலும் நாடெங்கிலுமாக வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. பெலாரூஸ் இந்த வார இறுதியில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்டெடுத்தற்கு, மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பிந்தைய மிகப்பெரிய போராட்டங்களை எதிர்கொண்டது. லூக்காஷென்கோவின் இராஜினாமாவைக் கோரியும், மற்றும் பொலிஸ் வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைக்கும் பெரும் கைது நடவடிக்கைகளை கண்டித்தும் தோராயமாக 200,000 பேர் இந்த வாரம் தலைநகரில் அணிவகுத்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் அணிதிரட்டல் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பெலாரூஸ் தொடர்பான ஐரோப்பிய கவுன்சிலின் வழமைக்கு மாறான இரகசிய கூட்டத்திற்கு முன்னதாக, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இருவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேற்று அழைத்துப் பேசினர்.

Soligorsk இல் உள்ள பெலாரூஸ்காலி பொட்டாஷ் (Belaruskali potash) தொழிற்சாலை உட்பட, நேற்று அரசுக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டன. இது, உரத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனத்தை தயாரிக்கும் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது, இது பெலாரூஸின் ஏற்றுமதி வருவாயில் ஒரு கணிசமான பகுதியை சம்பாதிக்கிறது. அரசு ஒளிபரப்பாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டனர், அதேபோல மின்ஸ்கில் உள்ள Kupalausky திரையரங்கும் இதில் அடங்கும். இயக்குனர் பாவெல் லதுஷ்கோ (Pavel Latushko) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பக்கபலமாக இருந்ததிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் திரையரங்குகளில் நடிகர்கள் பெருமளவில் இராஜினாமா செய்தனர்.

தேசியளவிலான பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகளுக்கு மத்தியில், திங்களன்று தொடங்கிய வேலைநிறுத்தங்களில் மின்ஸ்க் போக்குவரத்து தொழிலாளர்களும், வாகன மற்றும் டிராக்டர் தொழிற்சாலைத் தொழிலாளர்களும், அத்துடன் மருத்துவப் பணியாளர்களும் இணைந்து கொண்டனர். மின்ஸ்கில் உள்ள பெலாரூஸ்காலி மற்றும் MSKT டிராக்டர் தொழிற்சாலைகள் உட்பட, பல பணியிடங்களில் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 18, 2020, செவ்வாய்க்கிழமை, பெலாரூஸ், மின்ஸ்கில் சுதந்திர சதுக்கத்தில் உள்ள அரசாங்க கட்டிடத்தின் முன்பாக நடந்த ஒரு ஆர்ப்பாட்ட பேரணிக்காக பெலாரூசியர்கள் ஒன்றுகூடியுள்ளனர் (AP Photo/Dmitri Lovetsky)

பெலாரூஸில் உள்ள யூனியன் அதிகாரிகள், அவர்கள் இயக்கத்தின் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் என்றும், ஆர்ப்பாட்டங்களை நிறுத்த லூக்காஷென்கோவை பதவிவிலகக் கோரியும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். “அவர்கள் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். லூக்காஷென்கோவின் இராஜினாமாவும், மற்றும் [ஆர்ப்பாட்டக்காரர்கள்] மீதான மோசடிக்கும் அவர்களை அடித்து துன்புறுத்தியதற்கும் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதும் மட்டுமே எங்களை அமைதிப்படுத்த முடியும்,” என்று சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் அதிகாரி யூரி ஸக்காரோவ் (Yuri Zakharov) நேற்று AP க்கு தெரிவித்தார்.

ரஷ்ய எல்லையில் வெறும் 10 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான பெலாரூஸில் உள்ள அரசியல் சூழ்நிலை பற்றி விவாதிக்க மேர்க்கெலும் மக்ரோனும் புட்டினை அழைத்து பேசினர். அவர்கள் பெலாரூஸின் நிலைமைகள் குறித்த தங்களது ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்கும் விதமாக ஊடகங்களுக்கு சுருக்கமான அறிக்கைகளை வழங்கியதுடன், அந்நாட்டின் அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் அல்லது நேட்டோ ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்வெட்லானா டிகோனோவ்ஸ்காயாவின் வசம் மாற்றப்பட வேண்டும் என்று அதற்கு அழைப்பு விடுத்தனர்.

“பெலாரூசிய அரசாங்கம், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும், அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், மேலும் இந்த நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சி மற்றும் சமூகத்துடனான ஒரு தேசியளவிலான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று சான்சிலர் வலியுறுத்தினார்,” என்று மேர்க்கெலின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரெஃபான் செய்பேர்ட் (Steffen Seibert) கூறினார்.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண “அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தரும்படி” மக்ரோன் புட்டினை கேட்டுள்ளதாக எலிசே ஜனாதிபதி மாளிகை தெரிவிக்கிறது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு “ஆக்கபூர்வ பங்காற்ற விரும்புகிறது… அதனால் மக்களுக்கு எதிரான வன்முறை உடனடியாக நிறுத்தப்படும் என்பதுடன், சமீபத்திய நாட்களில் அமைதியாகவும் பெரியளவிலும் வெளிப்படுத்தப்பட்ட அபிலாஷைகளை மதிக்கும் வகையிலான ஒரு அரசியல் தீர்வு விரைவாக வெளிப்பட முடியும்” என்றும் மக்ரோன் கூறினார்.

கிரெம்ளின் அதன் பங்கிற்கு, மேர்க்கெல் உடனான உரையாடல் “பெலாரூஸின் முன்னேற்றங்களில் கவனம் செலுத்தக்கூடிய ஆழமான விவாதமாக” இருந்தது என்று தெரிவித்தது. மேலும் இது, “நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில் வெளியிலிருந்து அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான எந்தவொரு முயற்சிக்கும் ரஷ்ய தரப்பு அழுத்தம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்” என்றும் தெரிவித்தது.

தேர்தல்களுக்குப் பின்னர் டிக்கோனோவ்ஸ்காயா லித்துவேனியாவிற்கு தப்பிச் சென்றதன் பின்னர் எதிர்க்கட்சியின் முன்னணி பிரமுகராக உள்ள மரியா கொலெஸ்னிகோவா (Maria Kolesnikova) நேற்று, லூக்காஷென்கோவிடம் இருந்து அதிகாரத்தை கைமாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு “ஒருங்கிணைப்பு சபை” உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் “நிச்சயமாக ரஷ்யாவும் உட்பட, எங்களது அனைத்து கூட்டாளர் நாடுகளுடனும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்குவதற்கான எதிர்க்கட்சிகளின் விருப்பம் மற்றும் தயார்நிலை பற்றியும்” வலியுறுத்தினார்.

பேர்லினும் பாரிஸூம் மாஸ்கோவை அழைத்து பேசியது, திரு லூக்காஷென்கோ மற்றும் பெலாரூஸியப் பொருளாதாரம் இரண்டின் மீதும் மாஸ்கோ கொண்டிருக்கும் அதிகப்படியான செல்வாக்கிற்கான ஒப்புதலாக” அமைந்துவிட்டது என்று இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது. மேலும், இந்த இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க லூக்காஷென்கோ மற்றும் டிக்கோனோவ்ஸ்காயா இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த புட்டின் இடைத்தரகர் வேலை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் விரும்புவதாகவும் இது கூறியது: அதாவது “இந்த நெருக்கடிக்கு ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கான செல்வாக்கை திரு புட்டின் பயன்படுத்துவார் என்பதே ஐரோப்பிய தலைநகரங்களின் நம்பிக்கையாக உள்ளது.”

லூக்காஷென்கோவை பதவி விலகக் கோரும் தலையங்கக் கட்டுரைகளை அமெரிக்காவின் நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் இந்த வாரம் பிரசுரித்ததற்குப் பின்னர், Carnegie Endowment சிந்தனைக் குழாமின் யூஜின் ரூமரை (Eugene Rumer) மேற்கோள்காட்டி, ஆட்சி மாற்றத்திற்கான அதிகப்படியான முயற்சிகளுக்கு எதிராக FT இவ்வாறு எச்சரிக்கை விடுத்தது: “பெலாரூஸின் எந்தவொரு எதிர்காலத் தலைவரும் கிரெம்ளினுடன் நல்லவிதமாக உறவுகளை பேண வேண்டும் என்பதுடன், அதன் உணர்திறன் மற்றும் உணர்ச்சிகள் குறித்து குறிப்பிட்ட அளவு வேறுபாட்டுடன் கவனம் செலுத்த வேண்டும். வேறொரு போக்கிலான முயற்சி என்பது, நம்பத்தகாததாகவும், ஆபத்தானதாகவும், மற்றும் பெலாரூஸிய மக்களின் அணுகுமுறைகளுக்கு எதிரானதாகவும் இருக்கும். பெலாரூஸின் நண்பர்கள் அதை அங்கீகரிக்க வேண்டும்.”

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, ரஷ்யாவுக்கும் மற்றும் வெறுப்பூட்டும் பொலிஸ் வன்முறைக்கும் மதிப்பளிக்கும் இத்தகைய கூற்றுக்கள் ஏகாதிபத்திய பாசங்குத்தனத்தின் ஊடாக எழுகின்றன. உக்ரேனை ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கடித்து, கியேவில் ஒரு ரஷ்ய ஆதரவு அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக, பாசிச தலைமையிலான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்தை வகுப்பதில் வாஷிங்டனுடன் ஒருங்கிணைந்து மேர்க்கெலின் அரசாங்கம் முன்னணிப் பாத்திரம் வகித்தது என்றால், அதேவேளை உள்நாட்டில் எழுந்த சமூக ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் வன்முறை கொண்டு நசுக்குவதில் மக்ரோன் இழிபுகழ் பெற்றுள்ளார். எவ்வாறாயினும், ஒரு புதிய மற்றும் ஆபத்தான அரசியல் வளர்ச்சியாக தாங்கள் கருதும் விடயங்களுக்கு மேர்க்கெலும் மக்ரோனும் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது வெளிப்படையானது.

“சோவியத்திற்கு பிந்தைய காலத்தை உலுக்கிய எந்தவிதமான வண்ண புரட்சிகளுடனும் பெலாரூஸிய இயக்கம் ஒத்துப்போகவில்லை. இது ஒரு மேற்கத்திய மாதிரியை பாதுகாக்கவில்லை அல்லது ரஷ்யாவை எதிர்க்கவில்லை” என்று லு மொண்ட் நாளிதழ் எச்சரித்தது. மேலும், “வரவிருக்கும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை எவரும் முன்கூட்டியே அறிய முடியாது. ஆனால் ஒரு உண்மை சுய தெளிவாக உள்ளது: இந்த சிறிய நாடு… 1991 இல் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிந்தைய முன்னுதாரணமற்ற மாற்றத்தைக் கண்டு வருகிறது. வல்லுநர்கள், இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்களான நாங்கள் இவ்வாறு நடக்கும் என்று நினைக்கவில்லை” என்றும் இந்த நாளிதழ் குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் சற்று அதிகமான எச்சரிக்கையுடனேயே செயல்படுகின்றன, ஏனென்றால் வேலைநிறுத்த இயக்கத்தால் அவை அதிர்ச்சியடைந்து போனதால், எதிர்க்கட்சியினரும் புட்டின் ஆட்சியும் கூட்டாக அதன் குரல்வளையை நெரிக்க வேண்டும் என்று அவை விரும்புகின்றன. தற்போதைக்கு, கியேவ் சதித்திட்டத்துடன் தொடங்கி, ரஷ்யாவை குறிவைக்கும் வகையில் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் ஆக்கிரமிப்பு இராணுவ கட்டமைப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர், குறைந்தபட்சம், அச்சுறுத்தலை சமாளிக்க அவர்கள் முன்மொழிகின்றனர்.

பெலாரூஸ் தொழிலாளர்கள், லூக்காஷென்கோவுக்கும் மற்றும் டிக்கோனோவ்ஸ்காயாவைச் சுற்றியுள்ள எதிர்க்கட்சிப் படைகளுக்கும் எதிராக ஒரு அரசியல் ரீதியான சுயாதீன போராட்டத்தை ஒழுங்கமைப்பது அவசியம். 1994 முதல் பெலாரூஸை ஆண்டு வரும் லூக்காஷென்கோ, 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததிலிருந்தும், மற்றும் அதன் விளைவாக அரசு சொத்துக்கள் சூறையாடப்பட்டதிலிருந்தும் வெளிப்பட்ட முதலாளித்துவ திருட்டுத்தனத்திற்கு தலைமை வகிக்கும் ஒரு பிற்போக்குத்தனமான பலசாலியாவார். ஆனால் எதிர்க்கட்சியோ, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கும் புட்டின் ஆட்சிக்கும் இடையில் சூழ்ச்சி செய்யும் அதே திருட்டுத்தனம் உள்ள மற்றொரு கன்னையை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ரஷ்ய அரசு எரிவாயு நிறுவனமான Gazprom க்கு சொந்தமான Belgazprombank வங்கியின் முன்னாள் வங்கியாளரான விக்டொர் பாபரிகொ (Viktor Babariko), அல்லது இந்த ஏப்ரலில் ரஷ்யாவிற்கு தப்பிச் செல்வதற்கு முன்னர் லூக்காஷென்கோவுடன் நெருங்கி பணியாற்றிய தொழிலதிபரான வலேரி செப்கலோ (Valery Tsepkalo) போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆட்சியுடன் கொள்கை ரீதியான வேறுபாடுகள் எதுவுமில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவர தயாராக உள்ளது, ஏனென்றால் சிக்கன நடவடிக்கைகளையும், லூக்காஷென்கோவின் கோவிட்-19 தொற்றுநோய் குறித்த கொலைகார “சமூக நோய் எதிர்ப்புசக்தி” கொள்கையையும் அவர்கள் தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்பதே, இவற்றை ஐரோப்பிய ஒன்றியமும் உள்நாட்டில் செயல்படுத்துகிறது.

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியைச் (SPD) சேர்ந்த நில்ஸ் ஷ்மிட் (Nils Schmid), பெலாரூஸில் ஆட்சி மாற்றத்திற்கான தனது விருப்பமான மாதிரி 2014 கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி அல்ல, மாறாக முதலாளித்துவ மீட்டெடுப்பும் சோவியத் ஒன்றிய கலைப்பும்தான் என்று Deutschlandfunk வானொலிக்கு தெரிவித்தார்.

மேலும் அவர், “பெலாரூஸின் பரந்த மக்கள் இயக்கம் 1989-1990 இல் கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றத்தை நினைவுபடுத்துகிறது. எனவே, ஒரு அரசியல் மாற்றத்தை ஒழுங்கமைப்பதற்கான மாதிரி என்பது வீதிகளில் இறங்கி ஒரே அடியில் ஆட்சியை கவிழ்க்கும் ஒரு இயக்கத்தை காட்டிலும் ஒரு வட்டமேசையைச் சுற்றிய கூட்டத்தை அதிகம் சார்ந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். லூக்காஷென்கோ இன்னும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார், இப்போது வரை மேயர்கள் அல்லது பாதுகாப்பு படையினர் போன்ற ஒருசில அதிகாரிகளே அவருடன் முறித்துக் கொண்டுள்ளனர்” என்றும் கூறினார்.

கோவிட்-19, குறைவூதியங்கள் மற்றும் பொலிஸ் அரசு வன்முறை ஆகியவற்றிற்கு எதிராகப் போராட, பெலாரூஸில் உள்ள தொழிலாளர்களின் பிரதான கூட்டாளிகள் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் சர்வதேச அளவில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் பெரும் பணக்காரர்களுக்காக டிரில்லியன் கணக்கான யூரோக்களை வங்கிக்கும் பெருநிறுவன பிணையெடுப்புகளுக்கும் வாரியிறைக்கும் நிலையில், ஆளும் வர்க்கம் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கத் தேவைப்படும் மூலவளங்களையும் வழங்காது, ஐரோப்பா முழுவதும் இராணுவ-பொலிஸ் வன்முறை வெடிப்பதையும் தடுக்காது என்பது தெளிவாகிறது. அதிகாரத்தை கைப்பற்றி சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் தங்களது சொந்த உழைப்பால் உருவாக்கிய, அவசரமாக தேவைப்படும் மூலவளங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

இதன் பொருள், பெலாரூஸ் மற்றும் ரஷ்யாவிற்குள், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்டெடுப்பிலிருந்து தோன்றிய திவாலான அரசியல் தீர்வை எதிர்ப்பது, ஆட்சி அல்லது ஏகாதிபத்திய ஆதரவு எதிர்க்கட்சியுடன் இணைந்த கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை முறித்துக் கொள்வது, மற்றும் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் தேசியவாத மற்றும் எதிர் புரட்சிகர பாத்திரத்திற்கு எதிராக மார்க்சிச சர்வதேசவாதத்திற்கான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தின் பக்கம் திரும்புவது என்பதாகும்.

Loading