பிரெஞ்சு புதிய முதலாளித்துவக் கட்சியின் Révolution permanente வலைத் தளம் மாலியில் ஏகாதிபத்திய ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வரவேற்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மாலியில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கு அந்நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பானது, புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் (NPA) குட்டி முதலாளித்துவ போலித்தனத்தை அம்பலப்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 18 இல், அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மாலிய இராணுவத் தளபதிகளின் ஒரு ஆட்சிக்குழு ஜனாதிபதி இப்ராஹிம் பூபாக்கர் கெய்தாவின் (Ibrahim Boubacar Keïta) ஆட்சியைக் கவிழ்த்து, பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகளுக்கு அதன் விசுவாசத்தை அறிவித்தது. ஆர்ஜென்டினாவின் சோசலிச தொழிலாளர் கட்சி (PTS) உடன் தொடர்புபட்ட NPA இன் Révolution permanente வலைத் தளம் இந்த ஏகாதிபத்திய ஆதரவிலான பதவிக்கவிழ்ப்பு சதியை வரவேற்றதன் மூலமாக எதிர்வினையாற்றியது.

அதன் கட்டுரையில், பிலிப் அல்கோய் எழுதுகிறார்: “அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி பெருந்திரளான மக்களால் பமாகொ வீதிகளில் சந்தோஷமாக கொண்டாடப்பட்டது. இப்போதைக்கு, எந்த சூழ்நிலையிலும், உண்மையில், ஒரு 'நியாயமான கால இடைவெளிக்குள்' 'நம்பகமான பொது தேர்தல்களுக்கு இட்டுச் செல்லும் படைத்துறைசாரா அரசியல் பரிமாற்றத்தை' அவர்கள் விரும்புவதாக இந்த அதிகாரிகளின் குழு தெரிவிக்கிறார்கள். 'அதன் தலைவிதியை நிர்ணயிக்க பணிக்கப்பட்டவர்களின் தவறுகளால், மாலி நாளுக்கு நாள் குழப்பம், அராஜகம், பாதுகாப்பின்மைக்குள் மூழ்கி வருகிறது' என்பதால் தான் அவர்கள் அம்முடிவை எடுத்ததாக ஆட்சிக்கவிழ்ப்பாளர்கள் அறிவிக்கின்றனர்.”

“ஊரடங்கை ஏற்படுத்தியமை மற்றும் எல்லைகளை அடைத்தமை போன்ற" இராணுவ ஆட்சிக்குழுவின் "ஒடுக்குமுறை நடவடிக்கைகளை" அல்கோய் சுருக்கமாக ஆட்சேபித்தாலும், அதேவேளையில் அவர் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியை புரட்சியின் தொடக்கமாக முன்வைக்கிறார். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி "ஐயத்திற்கிடமின்றி பிரெஞ்சு அரசுடன் இணக்கமின்றி நடந்து கொண்ட இராணுவம் மற்றும் ஆளும் வர்க்கங்களது கன்னைகள் தலைமையில் நடந்தப்பட்டுள்ளது" என்றவர் குறிப்பிடுகிறார். 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு சமூக ஜனநாயகவாதி மார்சோ பிவேர் (Marceau Pivert) இன் பிரபல எதிர்வினையான, "எதுவும் சாத்தியமாகலாம்!” என்பதையும் கூட அவர் மேற்கோளிடுகிறார்.

அவர் குறிப்பிடுகிறார், “ஆனால் ஒரு விசயம் நிச்சயமானது, மாலியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியானது அதே அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் சின்னாபின்னமாகி உள்ள அப்பிராந்தியம் எங்கிலுமான நாடுகளிலும் இதே சூழ்நிலைக்கு வழி வகுக்குமென பிரான்சும் அதன் கூட்டாளிகளும் அஞ்சுகின்றனர். … Libération இல் வெளியிடப்பட்டஐவரி கோஸ்ட் பகுப்பாய்வாளர் Franck Hermann Ekra இன் கருத்துக்களைப் பொறுத்த வரையில், இது 'மாலிய முன்மாதிரி இப்போது தான் பிறந்துள்ளதைப் போலுள்ளது. ஆகவே, அதன் அண்டை நாடுகள் உள்ளடங்கலாக, ஒவ்வொருவரும் "எதுவும் சாத்தியமாகலாம்" என்று சிந்திக்கவும், மாலியில் என்ன நடந்ததோ அதே போன்ற எதிர்ப்பு அவர்களின் நாடுகளது ஸ்தாபக அரசுகளுக்கும் ஏற்படலாமென ஒப்பிடவும் விடப்பட்டிருப்பதாக உணர்கின்றனர்.'”

இது அரசியல்ரீதியில் அபத்தமானது. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மாலிய பதவிக் கவிழ்ப்பு சதியைக் குறித்து பயப்படவில்லை, அதன் தயாரிப்பு குறித்து ஐயத்திற்கிடமின்றி முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்திற்கும் மேலாக, ஆபிரிக்கா எங்கிலும் அதுபோன்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் அலை ஒரு புரட்சியாக இருக்காது, மாறாக நவ-காலனித்துவ எதிர்புரட்சியாகவே இருக்கும்.

வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஒரு வரலாற்று சிறப்புமிகு அலை ஐயத்திற்கிடமின்றி ஆபிரிக்கா எங்கிலும் பரவி வருகிறது. மாலியில் ஆசிரியர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள்; அல்ஜீரிய இராணுவ ஆட்சிக்கு எதிராக 2019 பாரிய போராட்டங்கள்; ஐவரி கோஸ்டில் 2011 இல் பிரெஞ்சு இராணுவத் தலையீட்டால் நிறுவப்பட்ட ஜனாதிபதி Alassane Ouattara க்கு எதிரான போராட்டங்கள்; கெய்தாவுக்கு (Keïta) எதிரான போராட்டங்கள் என இவை எல்லாமும் ஆபிரிக்காவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பெருந்திரளான மக்களிடையே அதிகரித்து வரும் கோபத்தின் வெடிப்பைப் பிரதிபலிக்கின்றன.

மாலியில், 2013 இல் தொடங்கப்பட்ட பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், மாலியைப் பிரித்தாள பாரீஸ் பயன்படுத்தி வரும் எதிர்விரோத போராளிகள் குழுக்களால் நடத்தப்படும் இனப் படுகொலைக்கு எதிராகவும் அங்கே பல மாதங்களாக போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் பாரீஸ் மாலிய ஆட்சிக் கவிழ்ப்பு சதியை ஆதரிக்கிறது, ஏனென்றால் அதன் நோக்கம், மாலியில் இளைஞர் மற்றும் தொழிலாளர்களின் போர்-எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிராக உள்ளது. 2013 பிரெஞ்சு படையெடுப்புக்கு வழி வகுத்த 2012 ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் போலவே, இந்த 2020 ஆட்சிக் கவிழ்ப்பு சதியும் கிட்டா (Kita) இராணுவத் தளத்தில் தொடங்கியது; பிரெஞ்சு தேசிய பாதுகாப்புப் படைக்கு அவரது சேவைகளை அலங்கரித்துள்ளள தளபதி Ibrahim Dahirou Dembélé மீண்டும் அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது, அந்த பதவிக் கவிழ்ப்பு தலைவர்கள் குழப்பத்திற்கிடமின்றி ஓர் அறிவிக்கையை வெளியிட்டனர்.

பிரெஞ்சு துருப்புகள் (பார்கானே நடவடிக்கை - Operation Barkhane), அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் (தாகூபா - Takuba), அவர்களின் ஐ.நா. துணை அமைப்புகள் (மினுஸ்மா - Minusma) மற்றும் சாஹெல் நாடுகளில் உள்ள அவர்களின் துணை அமைப்புகள் (G5 சாஹெல்) ஆகியோருடன் மாலிய இராணுவம் தொடர்ந்து செயல்பட வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுத்தனர். “ஸ்திரப்பாட்டை ஏற்படுத்துவதிலும் பாதுகாப்பை மீட்டமைப்பதிலும் மினுஸ்மா, பார்கானே படைகள், G5 சாஹெல், தாகூபா படை ஆகியவை இப்போதும் நமது பங்காளிகளே. ஆயுதமேந்திய நமது சகோதரர்கள் உங்களின் சட்ட ஒழுங்கு மற்றும் திட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என்றவர்கள் அறிவித்தனர்.

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அவரின் பங்கிற்கு அந்த பதவிக் கவிழ்ப்பு சதியைச் சுருக்கமாக விமர்சித்திருந்தாலும், அதற்கு முன்னதாக அந்த புதிய இராணுவ ஆட்சிக்குழுவுடன் இணைந்து செயல்பட பிரெஞ்சு இராணுவம் மகிழ்ச்சி அடைவதாக சுட்டிக் காட்டினார்: “நாம் மாலிய இறையாண்மைக்கான மாற்றாளாக நம்மை கருத வேண்டியதில்லை. … ஜிஹாதிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்திலிருந்து நம்மை எதுவும் திசை திருப்ப முடியாது.”

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான ஆபிரிக்க ஐக்கிய அமைப்பின் (SADI) தலைவர் Oumar Moriko வகித்த பாத்திரம் குறித்து Révolution permanente வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அமைப்பை "வரலாற்றுரீதியில் மார்க்சிச-லெனினிசத்தால் ஈர்க்கப்பட்ட கட்சி" என்று குறிப்பிட்டு, NPA நீண்டகாலமாக அதனுடன் கூடி செயல்பட்டு வந்துள்ளது.

அந்த பதவிக் கவிழ்ப்பு சதியின் அந்நாள் சுமார் மதியம், கெய்தாவுக்கு விசுவாசமான துருப்புகளுக்கு எதிரான தற்காப்பில் இருந்த பதவிக் கவிழ்ப்பாளர்களை ஆதரிக்குமாறு மொரிகோ (Moriko), தலைநகர் பமாகொவில் இளைஞர்களுக்கு ஒரு முறையீட்டை வெளியிட்டார். இந்த முறையீடுகள், Imam Mahmoud Dicko தலைமையிலான தேசப்பற்று படைகளின் ஒட்டுமொத்த ஜூன் 5 இயக்கம்-பேரணியால் எதிரொலிக்கப்பட்டது, SADI இந்த அமைப்பைச் சேர்ந்ததாகும். இப்போது அவர்களின் ஆதரவுடன், மாலிய இராணுவ ஆட்சிக்குழு ஐயத்திற்கிடமின்றி எவ்வாறு பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பின் குரல்வளையை நெரிப்பது என்பதைக் குறித்து விவாதித்து வருகிறது.

ஆபிரிக்காவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இன்னும் பரந்த அடுக்குகள் போராட்டத்தினுள் நுழைகையில், அவர்களை ஏகாதிபத்தியம் மற்றும் எதிர்புரட்சிக்குப் பின்னால் தள்ள Révolution permanente அதனால் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருகிறது. இது ஆபிரிக்காவிலும், பாரிசிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். ஐரோப்பாவில் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுவதற்கு, ஒரு மார்க்சிச சர்வதேசியவாதத்தை, அதாவது, NPA போன்ற செல்வாக்கான குட்டி முதலாளித்துவக் கட்சியால் ஊக்குவிக்கப்படும் ஜனரஞ்சக பொய்கள் மற்றும் பிரமைகளுக்கு எதிராக போராடுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும்.

1968 இன் நடுத்தர வர்க்க மாணவர் அமைப்பு தலைவர்கள், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரும் அக்டோபர் புரட்சியின் இணை தலைவருமான ட்ரொட்ஸ்கியின் பிம்பத்துடன் என்னென்ன எச்சசொச்ச அடையாளங்கள் எஞ்சியிருந்ததோ அவற்றிலிருந்து முறித்துக் கொள்ள இந்த முன்னாள் "ட்ரொட்ஸ்கோ-குவேராயிசவாதிகள்" 2009 இல் NPA ஐ நிறுவினர். ஆபிரிக்காவில் பல தசாப்தங்களாக ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் மற்றும் போர்களைத் தொடங்கிய பெருவணிக சோசலிஸ்ட் கட்சியின் (PS) செயல்பாடுகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு, இவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஏகாதிபத்தியத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவாளர்களாக உள்ளனர்.

2011 இல் லிபியா மற்றும் சிரியாவில் தொடங்கப்பட்ட நேட்டோ போர்களில், NPA வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸெநோ அப்போது அங்கிருந்த ஆட்சிகளுக்கு எதிராக பிரெஞ்சு இராணுவம் இஸ்லாமிய "போராளிகளை" ஆயுதமேந்த செய்ய வேண்டுமென மீண்டும் மீண்டும் கோரினார். இவ்விதத்தில், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி நூறாயிரக் கணக்கான உயிர்களைப் பறித்த போர்களிலும் மற்றும் 10 மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக ஆக்குவதிலும் உடந்தையாய் இருந்துள்ளது. இப்போது சில சந்தர்ப்பங்களில் “சீரழிக்கப்பட்ட லிபியாவில் ஏகாதிபத்திய போர்" என்று அது எதை குறிப்பிடுகிறதோ அதில் NPA என்ன பாத்திரம் வகித்தது என்று கூறாமல், அதை நேர்மையின்றி விமர்சிப்பதன் மூலமாக தனக்கு ஒரு மெல்லிய "இடது" திரையை வழங்க முயன்றுள்ள Révolution permanente, மீண்டும் மாலியில் பிரெஞ்சு செயல்பாடுகளை ஆதரித்து வருகிறது.

பிரான்ஸ் மாலியை ஆக்கிரமித்த பின்னர், அந்த போருக்கு SADI மற்றும் NPA இரண்டினது ஆதரவுக்கு அடியிலிருக்கும் சடரீதியிலான வர்க்க நலன்களை WSWS விவரித்திருந்தது, இதை முதன்முதலில் NPA வார பத்திரிகை தான் விமர்சித்தது. NPA வகித்த பாத்திரம் மீதான இந்த பகுப்பாய்வுடன் வெகுவாக ஒன்றும் சேர்க்க வேண்டியிருக்காது:

“உண்மையில் பிரான்சின் போர்கள் ஏகாதிபத்திய சூறையாடலின் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளாகும், அதற்காக பிரான்சிலுள்ள தொழிலாளர்களும் வரி உயர்வுகள் மற்றும் புதிய சமூக வெட்டுக்கள் மூலமாக பணம் செலுத்துகிறார்கள். அவை பாரீசின் மூலோபாய இடத்தையும், அதன் எண்ணெய் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளது இலாபங்களையும் அதிகரித்துக் கொள்ள நோக்கம் கொண்டுள்ளன. ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவம், ஊடக வேலைத்திட்டங்கள், “இடது" கல்வியாளர்களுக்கான மானியங்களுக்கு நிதி வழங்குவதன் மூலமாக, முதலாளித்துவ வர்க்கம் NPA போன்ற போலி-இடது சக்திகளுக்குத் திருப்பி விடும் பண ஓட்டத்திற்கும் இது ஆதாரமாக அமைந்துள்ளது.”

இது பமாகொவில் மாலிய பதவிக் கவிழ்ப்பாளர்களை Révolution permanente ஊக்குவிப்பதன் அடியிலிருக்கும் வர்க்க நலன்களையும் விவரிக்கிறது. அந்த பதவிக் கவிழ்ப்பு சதியும் SADI இன் தலையீடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரெஞ்சு போருக்கு இருக்கும் எதிர்ப்புக்கு எதிராக ஒடுக்குமுறை மற்றும் வன்முறைக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன. ஆகவே அல்கொய் அவரது கட்டுரை நெடுகிலும் அவர் ஊக்குவித்துள்ள இந்த இராணுவ ஆட்சிக்குழுவிலிருந்து, தன்னை தொலைவில் நிறுத்திக் கொள்வதற்கான முயற்சியில் ஒரு சில வெற்று வாய்சவடால்களையும் சேர்த்துள்ளார்:

“மாலியின் தொழிலாளர்கள் மற்றும் அடிமட்ட வர்க்கங்களைப் பொறுத்த வரையில், விடுதலை மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு இந்த இராணுவ ஆட்சிக் குழுவின் மீது நம்பிக்கை வைப்பது ஒரு பேராபத்தான பிழையாக இருக்கும். பிற்போக்குத்தனமான பிரமுகர்களால் நிரம்பியுள்ள M5-RFP கூட்டணி அல்லது இஸ்லாமிய அமைப்புகள் மீது நம்பிக்கை வைப்பதும் இதேயளவுக்கு பேரழிவுகரமாக இருக்கும். அதன் மிகவும் வெளிப்படையான இராணுவவாத வடிவத்தில், குறிப்பாக அவர்களின் மிகவும் மோசமான எதிரி ஏகாதிபத்தியம் என்பதைக் கூற வேண்டியதே இல்லை. இந்த சக்திகள் எல்லாமே மாலியிலும் ஒட்டுமொத்த ஆபிரிக்க கண்டத்திலும் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படுபவர்களின் எதிரிகளாவர்,” என்கிறார்.

இந்த வெட்கக்கேடான பட்டியலில் ஒரு சில சக்திகளைச் சேர்க்க வேண்டியுள்ளது: M5-RFP கூட்டணிக்குள் மிகவும் எரிச்சலூட்டும் கூறுபாடாக SADI கட்சியும் அதன் பிரெஞ்சு கூட்டாளி NPA உம் உள்ளன, இதற்குள் உள்ள மிகவும் வெட்கக்கேடான பாசாங்குக்காரர்கள் Révolution permanente இன் ஆதரவாளர்களாக உள்ளனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் போலவே மாலி மற்றும் ஆபிரிக்காவின் தொழிலாளர்களும் இந்த குட்டி முதலாளித்துவ போலி-இடதுக்கு எதிரான போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளாக ட்ரொட்ஸ்கிச கட்சிகளைக் கட்டமைக்க வேண்டும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Tens of thousands rally in French-occupied Mali for resignation of president
[22 June 2020]

Malians protest to demand departure of French occupation troops
[16 January 2020]

The NPA’s support for France’s wars in Africa
[13 January 2014]

Hands off Mali!
[15 January 2013]

France: What is the LCR’s New Anti-Capitalist Party?
[5 February 2009]

Loading