இலங்கை செயற்பாட்டாளரான தமிழ் விரிவுரையாளரை வேட்டையாடுவதை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் தொழிலாளர்களும் எதிர்க்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மனித உரிமை வழக்கறிஞரும், சமீப காலம் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் தலைவருமான குமாரவடிவேல் குருபரன் வேட்டையாடப்படுவதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் குறித்த பல்கலைக்கழகத்திலும் அதைச் சுற்றியும் ஒரு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தனர்.

ஜூலை 16 அன்று குருபரன் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரச இராணுவத்தின் உத்தரவிட்டபடி, யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், அவர் சட்டத்தரணியாக தொழில் செய்வதை தடுக்கும் தீர்மானம் ஒன்றை எடுத்தன. அண்மையில் மேற்கொண்ட இந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைக்கு எதிராக அவர் நவம்பர் 23 அன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்.

குருபரன்

எட்டு மாதங்களுக்கும் மேலாக குறித்த மனு விசாரிக்கப்படாததால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும், சட்டத்தை கடைப்பிடிப்பதற்கான தனது உரிமையை இழப்பதை இனி தாங்க முடியாது என்றும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறினார்.

இந்த இராணுவத் தலையீட்டின் நோக்கம், இராணுவத்தின் குற்றங்கள் மற்றும் கொழும்பு ஆட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குருபரன் நீதிமன்றத்தில் வாதாடுவதில் இருந்து அவரை நீக்குவதாகும். இந்த வழக்குகளில் முதன்மையானது, 1996இ ல் இராணுவக் காவலில் வைக்கப்பட்டிருந்த 24 தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமாக, ஒரு இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி. சி. கெப்பெட்டிவலான மீது, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு வழக்காகும்.

மேலும், போரில் இறந்த தமிழர்களை அவர்களின் உறவினர்கள் நினைவுகூருவதை கட்டுப்படுத்துவதையும், கொழும்பு அரசாங்கத்தின் இனவெறி கொள்கைகளை சவால் செய்யும் பல சட்ட நடவடிக்கைகளிலும் குருபரன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இது கல்வி சுதந்திரம் மற்றும் சட்டத் தொழிலின் சுயாதீனத்துக்கும் எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ஆகும். இராணுவ அடிப்படையிலான சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவின் ஜனநாயக-விரோத வேலைத்திட்டத்தின் மூலம், இராணுவமும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலின் போது, சில தமிழ் அரசியல் கட்சிகள் குருபரன் மீதான தாக்குதலைக் கண்டித்த போதிலும், இப்போது அவர்கள் முற்றிலும் அமைதியாக இருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம், உலகசோசலிசவலைத்தளத்தில் சிங்கள மற்றும் தமிழ் பக்கங்களில் வெளியிடப்பட்ட "குமாரவடிவேல் குருபாரனுக்கு எதிரான வேட்டையாடலை நிறுத்து!" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்த தாக்குதலை கண்டனம் செய்தன. இந்த கட்டுரை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. குருபாரனின் தமிழ் தேசியவாத அரசியலுடன் வேறுபாடுகள் இருந்தபோதிலும், சோ.ச.க. இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.

இராணுவமயமாக்கலுக்கு எதிரான, ஜனநாயக உரிமைகளுக்கான இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, எங்களது தோழர் தோழிகள் கட்டுரையின் பிரதிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் நாட்டின் பல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகித்து கலந்துரையாடினர்.

குருபரன் மீதான தாக்குதலின் அரசியல் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரகர்கள் கொடுத்த விளக்கங்களை மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் ஆர்வத்துடன் கேட்டதுடன் துண்டு பிரசுரங்களை ஆவலுடன் வாங்கிக்கொண்டனர். முதலாளித்துவ ஊடகங்கள் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை காட்டாததால், அநேக மாணவர்கள் இந்த தாக்குதல் குறித்து அறியாமல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

எங்கள் பிரச்சாரகர்களுடன் பேசிய விரிவுரையாளர்களில் ஒருவரான என். சிவகரன், “உங்கள் நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். இந்த அடக்குமுறை குறித்து நீங்கள் பொதுமக்களிடம் பேச வேண்டும். குருபரன் தனது மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்,” என எமது நிருபர்களிடம் கூறினார்.

பல்கலைக்கழக ஊழியரான எஸ். தங்கராஜா கூறியதாவது: "நீங்கள் ஒரு பெரிய வேலை செய்கிறீர்கள். பல புத்திஜீவிகள் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தாலும், இந்த தாக்குதலுக்கு அதிக எதிர்ப்பு காட்டவில்லை. பல்கலைக்கழகத்தில் பல அமைப்புகள் இருந்தாலும், அவரைப் பாதுகாக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை. அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் எதிர் நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தலுக்கு பயந்து பலர் அமைதியாக இருக்கிறார்கள். உங்கள் நடவடிக்கைகள் எழுந்து நிற்க அவர்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டில் பலர் இராணுவ ஆட்சியை எதிர்க்கின்றனர்.”

பெயர் குறிப்பிட விரும்பாத விஞ்ஞான பீடத்தின் மாணவர் ஒருவர், “விரிவுரையாளர்கள் மீதான தாக்குதல்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இது விரிவுரையாளர்களாகவும், மறுபுறம், வக்கீல்களாகவும் பணியாற்றுவதற்கான வழக்கறிஞர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். எனக்கு தெரிந்தவரை, அவர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரானார்,” என கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: "குருபாரனின் நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மீது இராணுவம் அழுத்தம் கொடுத்ததால் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அவரது வழக்கறிஞர் வாழ்க்கையை இடைநிறுத்தியுள்ளது. இது தாம் விரும்பும் வழக்கறிஞரின் சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு உள்ள ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.”

பெயர் குறிப்பிட விரும்பாத கலை பீட மாணவர் ஒருவர், “இது குறித்து எனக்கு தெளிவான அறிவு எதுவும் இல்லை. ஆனால் உங்களுடன் கலந்துரையாடிய பிறகு, சட்ட விரிவுரையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினையை நான் புரிந்துகொண்டேன். இந்த தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இது குறித்து பல்கலைக்கழக மாணவர் சங்கமும் மௌனமாக இருக்கின்றது. ஜனநாயக உரிமைகள் குறித்து மாணவர் சங்கம் ஏன் அமைதியாக இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை,” என்றார்.

Loading