முன்னோக்கு

சமூக நெருக்கடியும், வர்க்க போராட்டமும், 2020 தேர்தலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் மிகப்பெரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு பின்புலத்தில் இந்த 2020 தேர்தல் நடக்கிறது.

கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பு அமெரிக்க சமூகத்தை ஆழமாக நிலைகுலைத்துள்ளது. 185,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 16 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இலவச உணவுக்கான வரிசை நகர கட்டிட தொகுதிகள் வரையில் நீண்டுள்ளதுடன், மழலைகளின் தாய்மார்களில் ஐந்தில் ஒருவர் அவர்களின் குடும்பத்திற்குச் சாப்பிடுவதற்குப் போதிய உணவு இல்லை என்று கூறுகின்றனர்.

தொற்றுநோய் ஆக்ரோஷமாக அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் தொழிலாளர்களைக் கட்டாயமாக வேலைகளுக்கு திரும்ப செய்வதற்கான ஆளும் வர்க்கத்தின் முயற்சிகள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலைக்கு இட்டுச் சென்றுள்ளதுடன், அந்நாடெங்கிலுமான ஆயிரக் கணக்கான பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் மில்லியன் கணக்கானவர்கள் பொலிஸ் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைக் காண முடிகிறது.

இந்த தொற்றுநோயால் அம்பலமாகி உள்ள அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த நெருக்கடி, மற்றும் உலகெங்கிலும் அதிகரித்து வரும் சமூக போராட்ட அலையின் பாகமாக பெருந்திரளான மக்களின் தீவிரமயப்படல் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் வெடிப்பார்ந்த அதிகரிப்பு என 2020 தேர்தல் பின்வரும் இரண்டு இரட்டை நிகழ்வுபோக்கால் வரையறுக்கப்படுகிறது.

அவர்களின் சொந்த வழியில், கடந்த வாரத்தின் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாடும் இந்த வாரத்தின் குடியரசு கட்சி தேசிய மாநாடும் சமூக எதிர்ப்பின் வெடிப்புக்கு அவ்விரு ஆளும் வர்க்க கட்சிகளது விடையிறுப்பைப் பிரதிநிதித்துவம் செய்தன, சமூக எதிர்ப்பின் வெடிப்புக்கு அவ்விரு கட்சிகளும் விரோதமாகவும் அச்சத்துடனும் உள்ளன.

மிகவும் நேரடியான விடையிறுப்பு குடியரசு கட்சியாளர்களிடம் இருந்து வருகிறது. ஒரு பேச்சாளர் மாற்றி ஒரு பேச்சாளர், மிரட்டும் தொனியில், சிலர் பட்டவர்த்தனமாக அலறலுடன், தேசத்தைச் சூழ்ந்து வரும் இடதுசாரி எதிர்ப்பலைக்கு எதிராக சீறினர். அவர்கள் "மார்க்சிசம்,” “சோசலிசம்" மற்றும் இடதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களின் "குண்டர் ஆட்சி" க்கு எதிராக கொந்தளித்தனர்.

ட்ரம்ப் சோசலிச உணர்வின் அதிகரிப்பைக் குறித்த அவரின் மிரட்சியான தீர்மானத்தில், பைடென், பிலோசி, சாண்டர்ஸ் அல்லது அலெக்சாண்டரியா ஒக்காசியோ-கோர்டெஸ் போன்ற ஜனநாயகக் கட்சியினரைக் குறித்து அவர் பேசவில்லை என்பது அவருக்குத் தெரியும். அவர்கள் அனைவரையும் அவர் அளவிட்டு வைத்துள்ளதுடன், கமலா ஹரீஸ் போன்ற ஒருசிலருக்கு அவர் நேரடியாகவும் நிதி வழங்கியுள்ளார். அதற்கு பதிலாக அவர், இருகட்சி அமைப்புமுறைக்கு வெளியே மேலெழுந்து வருகின்ற பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பு மீது மிரண்டு போயுள்ள ஆளும் வர்க்கத்தின் அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.

ஜனநாயகக் கட்சியினரின் விடையிறுப்பு இன்னும் அதிக போலித்தனமாக உள்ளது. தொழில்ரீதியான அனுதாபிகள் மற்றும் இடது அரசியல் பேசும் வார்த்தைஜால வனப்புரையாளர்களது அவர்களின் படையைப் பயன்படுத்தி, ஜனநாயகக் கட்சியினர், பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கும் மற்றும் சமூக பேரழிவை முகங்கொடுத்து வரும் அமெரிக்க தொழிலாளர்களுக்கும் அனுதாபிகளாக தங்களைக் காட்டிக்கொள்ள முனைந்தனர். ஆனால் இது அதிகரித்து வரும் எதிர்ப்பை ஒருவருக்கு எதிரெதிராக ஒருவரின் "அடையாளங்களில்" ஒழுங்குபடுத்தி அதை உடைக்கவும், அதை இனவாத அரசியல் முட்டுச்சந்துக்குள் திசைதிருப்பவும், மயக்கமூட்டி, நிராயுதபாணி ஆக்குவதற்காகவும் மட்டுமே ஆகும்.

இந்த தொற்றுநோய் வெடித்த உடனேயே பேர்ணி சாண்டர்ஸ் "அரசியல் புரட்சி" குறித்த எல்லா பேச்சுக்களையும் கைவிட்டார் என்பது சமூக தீவிரமயப்படலின் அதிகரிப்பை ஜனநாயகக் கட்சியினர் உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. அதற்குப் பின்னர் இருந்து அவர் பெருநிறுவன பேர்வழி ஜோ பைடெனுக்கான மிகவும் உத்வேகமான ஆர்வலாளராக மாறியுள்ளார்.

தனிக்காப்புரிமை பெற்ற மருத்துவ விற்பனரின் உத்வேகத்தில், இரண்டு கட்சிகளும் அவர்களின் வேட்பாளர்களை அந்நாட்டின் நலிவை அதிசயத்தக்க விதத்தில் குணமாக்கும் மருந்தாக பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் இந்த தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், அது அமெரிக்க அரசியல் வாழ்வுக்கு எந்தவித வழமையான வடிவத்தையும் மீட்டமைக்க போவதில்லை என்பதை அது ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.

சொல்லப் போனால், அந்நாடு முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளைப் பெயரிட்டுக் கூறுமளவுக்குக் கூட அவ்விரு கட்சிகளது மாநாடுமே தகையற்று இருந்தன என்றளவுக்கு அவை மிகவும் கடுமையான, பரந்து பரவி ஊடுருவி உள்ளன.

அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏற்றுமதிகள் அதிகரித்தளவில் உலக அரங்கில் போட்டித்தன்மை இன்றி உள்ள நிலையில், அது கடன் பெறுவதில் சிக்கி உள்ளது. அதன் பெருநிறுவனங்கள், அவற்றின் விண்ணை முட்டும் மதிப்புகள் மற்றும் பாரியளவிலான நிர்வாகிகளுக்கான கொடுப்பனவுகளுடன், இன்னும் பெரிய அரசு கையளிப்புகள் இல்லாமல் உயிர்பிழைக்க முடியாது. குடியரசு கட்சி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை, பெடரல் ரிசர்வ் அதன் அடிப்படை அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர அறிவித்தது. நிதியியல் சந்தைகளுக்கு அது காலவரையின்றி இன்னும் அதிக பணத்தை வழங்கும் என்பதை அவற்றுக்குத் தெரிவிப்பதே அதன் ஒரே கண்கூடான உத்தேசமாக உள்ளது.

“எப்போதைக்கும் குறைந்த வட்டி!” என்று பிரகடனம் செய்த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், இந்த மூலோபாயம் "இன்னும் நிதிய வெறியாட்டத்திற்கும், பீதி மற்றும் உடைவுகளுக்கும்" இட்டுச் செல்லும் என்று அறிவித்தது. நிதியியல் சந்தைகள் உற்சாகமடைந்தன, ஒரு நூற்றாண்டில் மிக மோசமான அமைதிகால பொருளாதார நெருக்கடி என்று எது அழைக்கப்படுகிறதோ அதற்கு மத்தியில் மொத்தம் மூன்று பங்குச் சந்தை குறியீடுகளும் இப்போது வளர்ச்சி பகுதியில் உள்ளன.

காங்கிரஸ் சபை அவசரகால வேலைவாய்ப்பின்மை உதவியை நீடிக்க மறுத்துவிட்டதால் மில்லியன் கணக்கானவர்கள் உணவு செலவுகளைக் குறைத்து வருகின்றனர். ஆனால், உலகின் மிகப்பெரும் செல்வந்தரான ஜெஃப் பெஸோஸின் செல்வ வளமோ இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே அண்மித்து இரண்டு மடங்காகி உள்ளதுடன், அவர் 200 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்த பின்புலத்தில், டாலரின் மேலாதிக்கம் என்ற அமெரிக்காவின் "அளவுகடந்த தனிச்சலுகை" க்கு உயர்வளித்த பொருளாதார ஏற்பாடு முடிவுக்கு வரக்கூடும், ஏனெனில் தங்கத்தின் விலை அதிகபட்ச வரம்பை மீண்டும் மீண்டும் முறித்து வருகிறது.

சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையுடன் போட்டியிட முடியாமல், அது பல முக்கிய அம்சங்களில் அமெரிக்காவைச் சுற்றி வளைத்துள்ள நிலையில், வாஷிங்டன் பெய்ஜிங்குடன் ஒரு புதிய "பனிப்போரை" தூண்டிவிட்டு வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக போரில் இருந்துள்ளது, ஆனால் மத்திய கிழப்பை மீண்டும் கைப்பற்றுவதற்கான அதன் முயற்சி ஒரு பேரழிவாக இருந்துள்ளது. அதன் பலமான இராணுவ எந்திரம் பெரும் சுமையில் உள்ளது. ஒரு மேசை மீது நடத்தப்படும் கணினியில் சித்தரிக்கப்பட்ட ஒரு ஒத்திகை மோதல்கள் கூட, சீனாவின் இராணுவம் அமெரிக்காவைத் தோற்கடித்து விடுவதாக உள்ளிருப்பவர்கள் குறைகூறுகின்றனர். இருப்பினும், ஒவ்வொரு நாளும், இவ்விரு நாடுகளும் ஓர் இராணுவ மோதலை நோக்கி நெருக்கமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

சமத்துவமின்மை, பிற்போக்குத்தனம் மற்றும் போரின் நாசகரமான விளைவுகள்—இதன் விளைவாக ஏற்படும் மனித துன்பங்களுக்கு சமூகவியல் அலட்சியத்துடன்—இந்த தொற்றுநோய்க்கான அமெரிக்காவினது படுமோசமான விடையிறுப்பில் வெளிப்பாட்டை வழங்கி உள்ளன, இதன் பேரச்சமூட்டும் மரண எண்ணிக்கை அண்மித்து 200,000 ஆக உள்ளது.

பெருநிறுவன சட்டக்கடப்பாடுகள் மற்றும் சம்பளத்துடன் கூடிய வேலை நேர விடுப்பு ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்காக இந்த அதிகரித்து வரும் நோய்தொற்றுகளை மூடிமறைப்பதே வெள்ளை மாளிகை, உள்ளாட்சி அரசாங்கங்கள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களின் ஒரே கவலையாக உள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது, இந்த நோய்தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவருக்குப் பரிசோதனை தேவையில்லை என்று அதிர்ச்சிகரமாக இந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்தது.

“மரணங்களுக்கு ஏன் மதிப்பில்லை?” என்று இராணுவ வலைப்பதிவு Defense One இன் ஒரு கட்டுரையாளர் கேள்வி எழுப்புகிறார். முடிவில்லாத போர்கள், “அண்மித்து பொறுப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் … மனித உயிர்களை… பறித்த வெளிநாட்டு இராணுவ சாகசங்களால்" அமெரிக்கா மரணத்தில் "மயங்கி கிடக்கிறது" என்றவர் வாதிட்டார். உண்மையில் இரவு நேர செய்திகள் அன்றாட மரண எண்ணிக்கையைக் குறிப்பிடுவது கூட இல்லை என்றளவுக்குப் பெருந்திரளான மக்களின் உயிரிழப்புகள் அமைப்புமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தளம், “அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டன் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்" என்ற அதன் 2017 அறிக்கையில் விவரிக்கையில், ட்ரம்புக்கான ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு வெளியுறவு கொள்கை பிரச்சினைகளை மையப்படுத்தி உள்ளது. அவர்கள் ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி இன்னும் அதிக ஆக்ரோஷமான கொள்கையைக் கோரியுள்ளதுடன், ரஷ்யாவுடனான உக்ரேனின் "கடும் போரில்" ட்ரம்ப் போதுமானளவுக்கு அதற்கு ஆதரவாக இல்லை என்ற பிரத்யேகமான வாதங்களின் அடிப்படையில் தான் அவர் மீதான பதவிநீக்க குற்றவிசாரணையை முடுக்கிவிட்டது.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, இருகட்சிகளின் முழு ஆதரவின் அடிப்படையில் பெருநிறுவன வரிகளை வெட்டவும், எல்லை கட்டுப்பாட்டு பிரிவுகளில் ட்ரம்பின் தனிப்பட்ட கெஸ்டாபோவைக் கட்டமைக்கவும் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

இந்த நோக்குநிலை 2020 தேர்தலிலும் தொடர்கிறது. உண்மையில் ஜனநாயகக் கட்சியினர் வலதுசாரி முன்னாள் குடியரசு கட்சியினர் உடனான ஒரு கூட்டணி, தளபதிகள், அரசு உளவுத்துறை அதிகாரத்துவத்தின் பிரதிநிதிகள், நிதியியல் செல்வந்த தட்டுக்களின் உறுப்பினர்களின் கூட்டணியுடன் சேர்ந்து செயல்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலான செல்வ செழிப்பான புறநகர் பகுதிவாசிகள் தான் மீண்டும் மீண்டும் அக்கட்சியின் இலக்கு மையமாக கையாளப்பட்டுள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனநாயகக் கட்சி 2020 தேர்தலை 2016 தேர்தலின் மறுதேர்தலாக போட்டியிட்டு வருகிறது, அதில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் வென்றிருந்த போதினும் தேர்வுக்குழு வாக்குகளில் அவர் தோற்றிருந்தார்.

ட்ரம்ப் அவரின் பதவிநீக்க குற்றவிசாரணைக்கு முன்னர் குறிப்பிட்டவாறு அவர் தேர்தலை ஒரு "உள்நாட்டு போர்" என்பதாகவும், இதில் அரசியல், இராணுவம் மற்றும் துணைஇராணுவப்படை போராட்டங்களின் எல்லா அணுகுமுறைகளும் அனுமதிக்கப்படுகிறது என்றும் ஜோடிக்கிறார். ஆனால் இதற்கு முரண்பட்டரீதியில், அவரின் ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர்கள், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வார்த்தைகளில் கூறுவதானால், இந்த மோதலை ஓர் "உள்கட்சி பூசலாகவும்", இதில் மிகப் பெரிய தவறு கூட மிகவும் கண்மூடித்தனமாக நடத்தப்படும் என்றும் பார்க்கின்றனர்.

இது ஏனென்றால், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருவணிகத்தின் இரண்டு கட்சிகளில் ஒன்றாக இருந்து பேசுகையில், ஜனநாயகக் கட்சியினரும் ட்ரம்ப் போலவே முதலாளித்துவத்திற்கு எதிரான அதிகரித்து வரும் பெருந்திரளான மக்கள் எதிர்ப்பால் பீதியுற்றுள்ளதுடன், விரோதமாக உள்ளனர்.

ஆனால் வாஷிங்டனில் இந்த மோதல்களுக்கு வெளியே, மற்றொரு அரசியல் சக்தியும் காட்சியில் நுழைந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக, அமெரிக்காவின் தொழில்துறை இதயதானம் எங்கிலும் பிரதான உற்பத்தி ஆலை வளாகங்களில் தொழிலாளர்களும், அத்துடன் அமெரிக்கா எங்கிலுமான ஆசிரியர்களும் அதிகரித்தளவில் அவர்களை பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கும் அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களது முயற்சிகளை எதிர்க்க அவர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க தொடங்கி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் போராட்டங்கள் சிலவற்றின்படி, மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் பொலிஸ் வன்முறைக்கு எதிராகவும், அமெரிக்க நகரங்களில் மத்திய அரசின் துருப்புக்களை ட்ரம்ப் நிர்வாகம் நிலைநிறுத்துவதற்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துள்ளனர்.

தன்னைத்தானே முசேலினியின் சாயலில் நிலைநிறுத்தி, பெரும்பாலும் ட்ரம்ப் சீறினாலும் கொதித்தாலும், அமெரிக்க அரசியல் வாழ்வின் அடுத்தக் கட்டம், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் தாக்குதலுடன், வலதை நோக்கி அல்ல இடதை நோக்கிய ஓர் இயக்கமாக தான் இருக்கும்.

இந்த இயக்கம் இதுவரையில் அதன் தலைமையைக் காணவில்லை. ஆனால் அது வந்து கொண்டிருக்கிறது. உலக சோசலிச வலைத் தளம் மீதான தணிக்கை அதிகரிக்கப்படுவது, புரட்சிகர சோசலிசம் பெருந்திரளான மக்களைக் காணும் என்ற ஆளும் வர்க்கத்தினுள் மேலோங்கி உள்ள அச்சத்தையே எடுத்துரைக்கிறது.

அமெரிக்கா ஒரு புரட்சிகர நெருக்கடிக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது, அதன் மத்திய தன்மை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரதிநிதித்துவம் செய்யும் ட்ரொட்ஸ்கியின் வரலாற்று பாரம்பரியமும் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய மக்கள் இயக்கமும் ஒன்றோடொன்று சந்திக்கும் இடமாக இருக்கும்.

Loading