போர்ட்லாந்து, கெனொசாவில் வலதுசாரி வன்முறையை ட்ரம்ப் ஆமோதிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விஸ்கான்சின் கெனொசாவில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களில் இரண்டு போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொன்ற வலதுசாரி துப்பாக்கிதாரியை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை மதியம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், பாதுகாத்தார். அந்த வறிய "கிராமப்புறங்களைக் கொண்ட" நகரத்தில் செவ்வாய்கிழமை திட்டமிடப்பட்டுள்ள ஒரு கூட்டத்திற்கு முன்னதாக ட்ரம்ப் பேசியிருந்தார் — ஜேகப் பிளேக்கின் பொலிஸ் படுகொலை நடந்து வெறும் ஒரு வாரமே ஆக உள்ள நிலையில், அவரை வர வேண்டாமென அம்மாநில மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், ஓர் அரசியல் ஆத்திரமூட்டல் தன்மை கொண்ட ஒரு தலையீடாக அவர் பேசியிருந்தார்.

கடந்த செவ்வாயன்று இரவு, ஒரு தாக்கும் துப்பாக்கியால் சுட்டு, பொலிஸ் வன்முறைக்கு எதிராக போராடி கொண்டிருந்தவர்களில் நிராயுதபாணியான இருவரைப் படுகொலை செய்த 17 வயது நிரம்பிய முன்னாள் பொலிஸ் பயிற்சி மாணவன் கைல் ரிட்டன்ஹவுஸ் (Kyle Rittenhouse) இன் நடவடிக்கைகளை ட்ரம்ப் கண்டிப்பாரா என்று அவரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

சட்டத்தைக் கையிலெடுத்த அந்த வலதுசாரி நபர், சுயபாதுகாப்புக்காகவே அவ்வாறு நடந்து கொண்டதாக ட்ரம்ப் வாதிட்டார், “அவர்களிடம் அவர் விலகிச் செல்ல முயன்று, கீழே விழுந்து எழுந்தார், பின்னர் அவர்கள் அவரை மிகவும் வன்முறையாக தாக்கினார்… அவர் மிகப் பெரும் பிரச்சினையில் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒருவேளை அவர் கொல்லப்படலாம்,” என்றார்.

இந்த விபரம் ஒரு திட்டமிட்ட பூசிமொழுகல். ரிட்டன்ஹவுஸ் ஒரு பொலிஸ் பற்றாளர். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் பிரச்சார பேரணிக்காக பயணித்திருந்த அவர் அங்கே முன்வரிசையில் அமர்ந்திருப்பதைக் காணொளிகள் காட்டுகின்றன. கடற்படையில் சேர முயன்றார் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 25 இல், வடக்கு இலினோயில் உள்ள அவர் வீட்டிலிருந்து கிளம்பிய அவர், AR-15 ரக துப்பாக்கியுடன் அம்மாநில எல்லையை ஒட்டி கெனொசா வந்தடைந்தார், அங்கே டஜன் கணக்கான வலதுசாரி துப்பாக்கிதாரிகளுடன் இணைந்தார், இவர்களின் நடவடிக்கைகள் பொலிஸால் கண்டுங்காணாது அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், ஒருங்கிணைக்கப்பட்டும் இருந்தன.

29 வயதான ஜேகப் பிளேக் முதுகில் ஏழு தோட்டாக்களால் சுட்டு முடமாக்கிய பொலிஸ் துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து அமைதியாக போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரை ரிட்டன்ஹவுஸ் சுட்டுக் கொன்றார். அவர் சுட்டதில் மூன்றாவது ஒரு போராட்டக்காரரும் காயமடைந்திருந்தார்.

அந்த படுகொலைகளுக்குப் பின்னர், அந்த துப்பாக்கிதாரி கைது செய்யப்படாமலும் அல்லது விசாரணைக்காகவும் கூட நிறுத்தப்படாமல் ஒரு தாக்கும் துப்பாக்கியை ஏந்தியவாறு பொலிஸ் அணிவரிசையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் இலினோயில் உள்ள அவர் வீட்டில் கைது செய்யப்பட்டு, முதல் நிலை கொலை நடவடிக்கைக்காக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஒரேகன் போர்ட்லாந்தில் பாதுகாப்பு ஊர்திகளிலும் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களிலும் சாரைசாரையாக சென்று பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியும், பெயிண்ட்-பந்து ஆயுதங்களால் சுட்டும், மிளகுப்பொடி தெளிப்பான்கள் மற்றும் ஏனைய நச்சுப்பொருட்களையும் வீசிய அவர் ஆதரவாளர்களையும் ட்ரம்ப் புகழ்ந்துரைத்தார். ஒரு கைகலப்பு வெடித்த போது அதில் வலதுசாரி ஆத்திரமூட்டல்காரர்களில் ஒருவர் சுடப்பட்டு கொல்லப்பட்டார், இந்த சூழல்கள் தெளிவின்றி உள்ளன. ஆனால் போர்ட்லாந்தின் ஆத்திரமூட்டல்காரர்கள் "[அவரின்] ஆதரவாளர்கள் என்றாலும் அதுவொரு அமைதியான போராட்டமாகவே இருந்தது. பெயிண்ட் ஒன்றும் தோட்டாக்கள் இல்லை,” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

வலதுசாரி வன்முறை மீதான இந்த பாதுகாப்பு ஒரு 30 நிமிட பாசிசவாத வசைபாடலின் இறுதியில் வந்தது, அதில் அவர் "அதிஇடது,” “இடதுசாரி தீவிர கொள்கையாளர்கள்" மற்றும் அன்டிஃபா (antifa) குறித்து பல முறை குறிப்பிட்டார். (இந்த அன்டிஃபா (antifa) அமைப்பு உண்மையில் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவே இல்லை, மாறாக அது பாசிசவாத வலதின் பிரதான கற்பனை உருவமாக ஆகியுள்ளது.)

அவர் கடந்த வார குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டில் செய்ததைப் போலவே, நவம்பர் 3 தேர்தலில் பைடெனின் வெற்றி அமெரிக்க சமூகத்தின் பொறிவை அர்த்தப்படுத்தும் என்று வாதிட்டு, ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென் ஆகியோரை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் "இடதுசாரி தீவிரக் கொள்கையாளர்களின்" ஒரு கலவையில் சேர்த்தார்.

அவர் வழக்கமாக செய்வதைப் போலவே, அவரைப் பொறுத்த வரையில் மனித முன்னேற்றத்தின் ஒரே அளவீடாக உள்ள பங்குச் சந்தையின் செயல்பாடுகளைப் பாராட்டியதன் மூலமாக பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்கிய ட்ரம்ப், “36 ஆண்டுகளில் டோவ் பங்குச் சந்தை சிறந்த இடத்தில்" உள்ளது என்று பாராட்டினார்.

பின்னர் அவர் கூறுகையில் புதிய கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 38 சதவீதம் குறைந்துள்ளதாக வாதிட்டார், இந்த புள்ளிவிபரம் —வெறுமனே பத்திரிகையாளர் சந்திப்புக்காக கூறப்படவில்லை என்றால்— இது பெரிதும் பரிசோதனையில் கணிசமான குறைப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. யதார்த்தத்தில் கொரொனா வைரஸ் ஆலைகள், மாமிசம் பதனிடும் ஆலைகள், கல்லூரி வளாகங்கள் மற்றும் அரசு பள்ளிகள் எங்கிலும் ஏறத்தாழ கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன, மேலும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இரண்டுமே வரவிருக்கும் மாதங்களில் அதிவேகமாக அதிகரிக்கக்கூடும்.

பின்னர் அவர், “ஜனநாயகக் கட்சியினர் நிர்வாக நகரங்களில் வன்முறை மீதான செய்திகளை புதுப்பிக்கும்" அவரின் முக்கிய நோக்கத்திற்கு நகர்ந்தார். பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு அதிகாரிகள் 200 க்கும் அதிகமானவர்களைக் கைது செய்திருந்ததுடன், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதித்துறையின் ஒரு கூட்டு விசாரணையை அறிவித்தார், இதை அவர் "போர்ட்லாந்தில் தொடங்கிய வன்முறையான இடதுசாரி உள்நாட்டு கிளர்ச்சி" என்று குறிப்பிட்டார்.

அவரின் எஞ்சிய அறிக்கை பெரிதும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பாராட்டுரையையும், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரை இடதுசாரி பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களாக மற்றும் ஆதரிப்பவர்களாக அவர்கள் மீதான பழிசுமத்தலையும் கொண்ட கலவையாக இருந்தது. (“இந்நாட்டில் சட்ட அமலாக்கத்தின் மீது போர் நடத்தப்படுகிறது. சட்ட அமலாக்கம் இல்லாமல், குழப்ப நிலை உண்டாகும்,” என்றார்.)

“அமெரிக்கா சுதந்திரமான நேர்மையான தேசம் என்பதை நமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க" “சட்டத்தை மீறுபவர்களை சிறையிலடைப்பதும், அவர்களின் வெறுப்பான சித்தாந்தத்தை தோற்கடிப்பதும்" அவசியம் என்றார். ட்ரம்பின் விருப்பமான கேபிள் தொலைக்காட்சி நிகழ்ச்சி, “Fox and Friends,” ஒளிபரப்பாகும் தினத்திற்கு முந்தைய நாள் Newt Gingrich வெளியிட்ட அசாதாரண அறிக்கையை அவர் எதிரொலிப்பதாக தெரிந்தது, அந்நிகழ்ச்சியில் பிரதிநிதிகள் சபையின் முன்னாள் சபாநாயகர் கூறுகையில் வீதியில் வன்முறை "காய்ச்சலை முறிக்க" ஒரே வழி "அங்கே யாரும் இல்லாத வரையில் மக்களைக் கைது செய்து கொண்டே இருக்க" வேண்டும் என்றிருந்தார்.

பொலிஸ் மீதான பாராட்டுக்களையும், முசோலினியின் உரையில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் தேசியவாதத்தைக் கையிலெடுத்து ஜனநாயகக் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்களையும் ஒருங்கிணைந்து ட்ரம்ப் பாராட்டினார். “பகிர்ந்து கொள்ளப்படும் தேசிய அடையாளத்தை மீளக் கட்டமைப்பதும் பொதுவான அமெரிக்க மதிப்புகள் மற்றும் ஒழுக்கங்கள் மீது ஒருமுகப்படுவதுமே ஒற்றுமைக்கான ஒரே வழி, அது நம்மிடம் நிறையவே உள்ளது,” என்றார். “இது நமது தேசத்தின் பள்ளிக்கூடங்களையும் உள்ளடக்கி உள்ளது,” என்றார்.

குடியரசு தேசிய மாநாட்டின் இறுதிய அமர்வுக்குப் பின்னர் வியாழக்கிழமை இரவு சம்பவத்தில் செனட்டர் ராண்ட் பவுல் மற்றும் ஏனையவர்களையும் வெள்ளை மாளிகைக்கு வெளியே ட்ரம்ப்-எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக அணுகினர், அதற்குப் பின்னர் குறிப்பாக அந்த சம்பவத்தால் ட்ரம்ப் தொந்தரவுக்கு உள்ளானதாக தெரிந்தது. இந்த சம்பவம் வலதுசாரி ஊடகங்களாலும் குடியரசுக் கட்சியாலும் இடதுசாரி "குண்டர் வன்முறை" க்கு ஓர் எடுத்துக்காட்டாக சித்தரிக்கப்படுகிறது, இது இந்த மாநாடு நெடுகிலும் குணாம்சப்பட்டிருந்த மக்கள் எதிர்ப்பின் அதீத அச்சத்தின் ஓர் அறிகுறியாகும்.

அவர் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு, குறிப்பாக கொரொனா வைரஸின் அபாயங்களைப் பொருட்படுத்தாமல், தொழிலாளர்களை அவர்களின் வேலைகளுக்குத் திரும்ப நிர்பந்திக்கவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளிக்குத் திரும்ப செய்வதற்குமான அவரின் ஆட்கொலை முயற்சிக்கு, தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஆரம்ப அசைவுகளே அதிகரித்தளவில் ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கண்டனங்களுக்குப் பின்னால் இருக்கும் உந்துசக்தியாக உள்ளது.

இரண்டு முதலாளித்துவ கட்சிகளும் பாதுகாக்கும் இந்த இலாபகர அமைப்புமுறையை அச்சுறுத்தும், பத்து மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் அபிவிருத்தி அடைந்து வரும் இயக்கம் மீதான ட்ரம்பின் அச்சத்தை ஜனநாயகக் கட்சியும் பகிர்ந்து கொள்கிறது. இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய் சம்பந்தமாக அவரின் குற்றகரமான அலட்சியத்தாலும், அவரைப் போன்ற பில்லியனர்களின் சொத்துக்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் அவர் காட்டும் வெளிப்படையான அசட்டைத்தனத்தாலும், ட்ரம்ப் அடிமட்டத்திலிருந்து கட்டுப்படுத்தவியலாத ஒரு மேலெழுச்சியைத் தூண்டிவிட்டு வருவதாக ஜனநாயகக் கட்சியினர் எச்சரிக்கின்றனர்.

இது தான் திங்கட்கிழமை காலை பீட்ஸ்பேர்க்கில் பைடென் வழங்கிய உரையின் அர்த்தமாக இருந்தது. ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குப் பின்னர் பொதுவெளியில் பீட்ஸ்பேர்க்கில் தான் அவர் முதன்முதலில் தோன்றியிருந்தார் என்பதுடன், அவர் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி இரண்டு மாதங்களுக்கான கருப்பொருளை கோடிட்டுக் காட்டிய அவரது முதல் பொது உரையாக இருந்தது.

வெகு குறைந்த கால அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட அந்த உரையின் முக்கிய நோக்கமே, ட்ரம்பின் சட்ட ஒழுங்கு மற்றும் கம்யூனிச விரோத வாய்சவடால்களை, சட்ட ஒழுங்கிற்கும் மற்றும் "வன்முறையை" ஒடுக்குவதற்கும் ஆதரவாக ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் பாகத்திலிருந்து வழங்கப்படும் ஒரு தெளிவான அறிக்கையுடன் எதிர்கொள்வதாக இருந்தது என்பது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது. குடியரசுக் கட்சி மாநாட்டுக்குப் பின்னர் கருத்துக்கணிப்புகளில் பைடென் முன்னணி இழந்து வருகிறார் என்பதற்கான அறிகுறிகள் மீது அங்கே ஜனநாயகக் கட்சி வட்டாரங்களில் பதட்டம் அதிகரித்து வருகிறது.

பைடென், “வன்முறை எந்த வடிவம் எடுத்தாலும் அதற்கு எதிராக நாம் நிற்க வேண்டும்,” என்று அறிவித்து, சட்டத்தைத் தன் கைகளில் எடுக்கும் பாசிசவாதிகள் மற்றும் படுகொலை பொலிஸ்காரர்களின் வன்முறையையும், போராட்டக்காரர்களிடையே உள்ள "தீவிரவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளின்" வன்முறையையும் சமாந்தரமாக காட்டுகிறார். “கொள்ளையடிப்பது போராடுவது இல்லை. தீவைப்பதும் போராடுவது இல்லை. இது எதுவுமே போராடுவது இல்லை. நேடியான மற்றும் வெளிப்படையான அர்த்தத்தில் அது சட்டமீறல். இதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். … இதை நான் ஆணித்தரமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றவர் அறிவித்தார்.

“நமது நகரங்களில்" “வன்முறை" மற்றும் "குழப்பங்களுக்கு", ஜனநாயகக் கட்சியினர் அல்ல, ட்ரம்பே பொறுப்பு என்பதே ட்ரம்புக்கு எதிரான தாக்குதலில் அவரின் அடிப்படை தொனியாக இருந்தது. “ட்ரம்ப்பின் அமெரிக்காவில்" பாதுகாப்பின்மையை உணரும் நடுத்தர வர்க்க புறநகர் பகுதி மக்கள், சமூக எதிர்ப்பைத் தணிக்க பொலிஸ் மற்றும் அவர்களை விமர்சிப்பவர்களுடன் நடைமுறையளவில் பைடென் அதிகமாக இணைந்து செயல்படுவார் என்பதால் பைடென் வசம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று உணர்கின்றனர்.

நிச்சயமாக இதில், ஜேகப் பிளேக், ஜோர்ஜியா ஃபுளோய்ட், ப்ரென்னா டெய்லெர் மற்றும் பொலிஸ் வன்முறைக்குப் பலியான ஏனைய ஆபிரிக்க அமெரிக்கர்களின் குடும்பங்கள் மீது நன்கு பழக்கப்பட்ட அனுதாபம், கொரொனா வைரஸால் ஏற்பட்ட மிகப்பெரும் மரண எண்ணிக்கை மற்றும் அந்த தொற்றுநோய்க்கு ட்ரம்பின் திறமையற்ற விடையிறுப்பு, கோவிட்-19 ஆல் தூண்டிவிடப்பட்ட பொருளாதார பொறிவு குறித்த சில மேலோட்டமான கருத்துக்கள், ட்ரம்பின் திவாலான சமூக பாதுகாப்பு திட்டம் மீதான ஓர் எச்சரிக்கை என இவை அனைத்தும் சேர்ந்திருந்தன. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் என்பதை ஜோ பைடென் என்பதைக் கொண்டு பிரதியீடு செய்ததைத் தவிர, இத்தகைய சமூக கேடுகள் எதையும் கையாள ஒரேயொரு நடைமுறை நடவடிக்கையைக் கூட அவர் முன்மொழியவில்லை.

“கலகக்காரர்களுக்கு மென்மையாக விட்டுக்கொடுக்கும் ஒரு தீவிர சோசலிச கொள்கையாளர் போல நான் தெரிகிறேனா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்?” என்று கூறி, பைடென் சோசலிசத்தின் மீதான எந்தவொரு அனுதாபத்தையும் அவர் நேரடியாக கைதுறந்தார். மத்திய அரசு உடைமைகளைப் பாதுகாப்பதில் ஒபாமா-பைடென் நிர்வாகத்தின் சாதனைகளைச் சுட்டிக்காட்டி அவர் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி ஒபாமாவும் நானும் வெள்ளை மாளிகையில் இருந்த போது, நாங்கள் மத்திய அரசு சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. நாங்கள் அதை செய்தோம்… இரகசிய மத்திய அரசு துருப்புகளை நிலைநிறுத்துவதைச் சுற்றி நாங்கள் பயத்தைத் தூண்டிவிடுவதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். நாங்கள் சர்வசாதாரணமாக எங்கள் வேலையைச் செய்தோம்…"

மிகவும் அபாயகரமாக, அவர், வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் வந்ததில் இருந்து ஜனநாயகக் கட்சியின் முக்கிய அம்சமாக இருந்துள்ள ரஷ்ய-விரோத வாய்வீச்சைத் தழுவினார். அவர், நியூ யோர்க் டைம்ஸ் கண்டுபிடித்த போலியான "ஆப்கான் அரசியல் நன்கொடை" விடயத்தையே மீண்டும் கூறினார். நியூ யோர்க் டைம்ஸ், ஒரு துணுக்கு ஆதாரமும் இல்லாமல், அமெரிக்க சிப்பாய்களைக் கொல்ல தாலிபானுக்குக் கிரெம்ளின் பணம் கொடுத்து வருவதாக வாதிடுகிறது. ட்ரம்ப் “ஒரு ரஷ்ய தலைவருக்கு [ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு] அடிபணிந்த பாத்திரம்" வகித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுவதன் மீதும் அவரைக் கண்டித்த பைடென், இது "அபாயகரமானது என்பது மட்டுமல்ல. இது உலகின் ஏனைய பகுதிகளைப் பார்க்க அவமானகரமாக உள்ளது,” என்றார்.

ஆகவே, ஒரு பொலிஸ் அரசை உருவாக்க முனையும் குடியரசுக் கட்சி ட்ரம்பின் அதிதீவிர வலது பிதற்றல்களா, அல்லது அணுஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் அதிக ஆக்ரோஷமான போர் தயாரிப்புகளைக் கோரும் ஜனநாயகக் கட்சி பைடென் வழங்கும் "பகுத்தறிவார்ந்த" மாற்றீடா என்பதே முதலாளித்துவ இருகட்சி அமைப்புமுறையால் அமெரிக்க மக்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பாக உள்ளது.

Loading