முன்னோக்கு

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உலகளாவிய பிரச்சாரமும், தொழிலாள வர்க்கத்திற்கான சர்வதேச மூலோபாயமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முனைவு உலகெங்கிலுமான நாடுகளில் வர்க்க போராட்டத்தின் மத்திய புள்ளியாக ஆகியுள்ளது. இலாபங்களை உருவாக்குவதற்காக பெற்றோர்களை வேலைக்குத் திரும்ப செய்ய, ஆசிரியர்களையும் மாணவர்களையும் மீண்டும் வகுப்பறைகளுக்கு செல்ல நிர்பந்திப்பதற்காக ஆளும் உயரடுக்குகளின் முயற்சிகள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பரந்த தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பது, ஏற்கனவே உலகளவில் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுநோய் பரவலில் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ஒவ்வொரு நாளும், சுமார் 260,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கங்கள் பின்தொடர்ந்த குற்றகரமான அலட்சிய கொள்கைகளின் காரணமாக உலகெங்கிலும் 5,500 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் மற்றும் சுவீடன் உட்பட மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள், பாரிய நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளை அடிப்படையாகக் கொண்ட "சமூக நோய் எதிர்ப்புச் சக்தியை" அபிவிருத்திசெய்ய நனவுபூர்வமாக முயற்சிசெய்கின்ற அதிகாரிகளால் தலைமை தாங்கப்படுகிறது. 

உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்கா, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சர்வதேச முனைவிற்கு கூர்மையான வெளிப்பாட்டை வழங்குகிறது. ஜூலை ஆரம்பத்தில் இருந்தே, ட்ரம்ப் நிர்வாகம், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான "பாதையில் விஞ்ஞானம் குறுக்கே நிற்கக்கூடாது" என்று அறிவித்ததில் இருந்து, கல்வியாளர்களை "முக்கிய உள்கட்டமைப்பு தொழிலாளர்கள்" என்று முத்திரை குத்தியது வரையில், மீண்டும் திறக்கப்படாத அரசு பள்ளிகளுக்கான நிதிகளை அதை செய்கின்றன தனியார் பள்ளிகள், வட்டாரப் பள்ளிகள் மற்றும் வட்டாரப் பள்ளிகளுக்கு திருப்பி விட அச்சுறுத்தியது வரையில், அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க வலியுறுத்தி அன்றாடம் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

மிகவும் சமீபத்தில், இந்த மனிதக்கொலை பிரச்சாரத்திற்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்க, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வலதுசாரி ஹூவர் பயிலகத்தின் ஓர் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஸ்காட் அட்லஸை ட்ரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்கா முன்மாதிரியாக ஏற்க வேண்டிய முன்மாதிரி நாடாக அட்லஸ் சுவீடனைக் குறிப்பிடுகிறார். “சமூக நோய் எதிர்ப்புச்சக்தி பெருக்கத்தை" அதிகரிக்க வசதி செய்வதற்காக ஸ்வீடனின் தலைமை தொற்றுநோய் நிபுணர் Anders Tegnell வெளிப்படையாகவே பள்ளிகளை மீண்டும் திறக்க ஊக்குவித்திருந்தார் என்பது கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதன் விளைவாக, ஸ்வீடனில் கோவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கை அதன் அண்டைநாடான பின்லாந்தை விட ஒன்பது மடங்கிற்கு அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இந்த கொள்கையை ஏற்பது மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லக்கூடும்.

திங்கட்கிழமை அட்லஸ் ஃபுளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு விஜயம் செய்து, அங்கே அவர் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் குடியரசுக் கட்சி ஆளுநர் Ron DeSantis இன்னும் அதிக ஆக்ரோஷமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஏற்கனவே 1.1 மில்லியன் ஃபுளோரிடா மாணவர்கள் நேரடியாக சென்று கற்பதைத் தொடங்கி உள்ளனர், இது சந்தேகத்திற்கிடமின்றி ஆகஸ்டின் இரண்டாவது பாதியில் குழந்தைகள் மத்தியில் 9,200 புதிய நோய்தொற்றுக்கள் ஏற்பட வழிவகுத்துள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் இருந்ததை விட, ஜூலை 9 இல் இருந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 191 சதவீதம் அதிகரிப்பு இருந்துள்ளது. அம்மாநிலத்தில் குறைந்தபட்சம் 611 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேயளவுக்கு வோல் ஸ்ட்ரீட்டிற்குக் கடமைப்பட்டிருக்கும் ஜனநாயகக் கட்சியும் ஆசிரியர்கள் சங்கத்தில் உள்ள அதன் ஆதரவாளர்களும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பிரச்சாரத்தில் முழு உடன்பாடாக உள்ளனர். அதிரடியான பலத்தைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக, அவர்கள், அலங்கார பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், பள்ளிகளை மீண்டும் திறப்பதைப் "பாதுகாப்பாக" செய்ய வேண்டுமென்ற மோசடியான வாதத்தை முன்னெடுக்கிறார்கள் என்பது மட்டுமே அவர்களிடம் உள்ள வித்தியாசமாக உள்ளது.

திங்களன்று ஒருங்கிணைந்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு (UFT) தலைவர் மிக்கெல் முல்க்ரூவ், அந்நகரிலும் அப்பிராந்தியத்திலும் வைரஸ் பரவலைத் தடுக்க எதுவும் செய்யவியலாத மற்றும் முற்றிலும் போதுமானதல்லாத பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில், அமெரிக்காவின் அந்த மிகப்பெரிய பள்ளி மாவட்டத்தின் வகுப்பறைகளுக்கு மீண்டும் நூறாயிரக் கணக்கான மாணவர்களைப் பலவந்தமாக அனுப்புவதற்காக, ஜனநாயக கட்சியாளரான நியூ யோர்க் நகரசபைத் தலைவர் பில் டு பிளேசியோவுடன் அவர் உடன்படுவதாக அறிவித்தார்.

புதன்கிழமை ஒரு பிரச்சார உரையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென் அறிவிக்கையில், “நமது பள்ளிகளைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் மீண்டும் திறப்பது, ஒரு தேசிய அவசரநிலையாகும்,” என்று அறிவித்தார். “இப்போது நாம் காணும் சூழல்களின் கீழ் பாதுகாப்பாக இருக்க கல்வியாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையான சாதனங்கள், ஆதாரவளங்கள் மற்றும் பயிற்சிகளை உறுதிப்படுத்த தவறியதற்காக" பைடென் ட்ரம்ப் மீது தந்திரோபாய விமர்சனங்களை மட்டுமே வைத்தார்.

ஜனநாயகக் கட்சியின் ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸ் புதன்கிழமை நிக்கோலஸ் க்ரிஸ்டோஃப்பின் ஒரு கருத்துரையைப் பிரசுரித்தது, அதில் அவர் "குழந்தைகள் நேரடியாக வந்து பாதுகாப்பாக மீண்டும் படிக்கத் தொடங்குவதை அனுமதிக்க அவசியான அனைத்தையும் நாங்கள் செய்ய வேண்டும்" என்றவர் வலியுறுத்தினார். “மதுக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், துப்பாக்கி விற்பனையகங்கள், உணவு விடுதிகள் மற்றும் மரிஜுவானா போதை மருந்து சிகிச்சை மையங்கள் வரையில் நாம் அனுமதித்திருக்கிறோம் ஆனால் பள்ளிகளைத் தொடர்ந்து மூடி வைத்திருக்கிறோம் என்பது அர்த்தமற்றதாக உள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

தொழிலாள வர்க்கத்தின் மீது பேரழிவுகரமான விளைவுகளோடு, இதே ஆளும் வர்க்க கொள்கைகளே உலகெங்கிலும் பின்தொடரப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது அதிகபட்ச கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளைக் கொண்ட நாடான பிரேசிலில், பாசிசவாத ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோ பிரேசிலிய சமூக ஜனநாயகக் கட்சிக்கான (PSDB) அவரின் பாசாங்குத்தனமான எதிர்ப்பாளர்கள் உட்பட அந்நாடு எங்கிலும் பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில மற்றும் உள்ளூராட்சி அரசியல்வாதிகளைச் சார்ந்துள்ளார். அமசனாஸ் மாநில தலைநகரான மனாஸில் வகுப்பறைகள் திறந்து ஒரு வாரத்திற்குள், 36 பள்ளிகளில் கோவிட்-19 வெடிப்புகள் ஏற்பட்டன.

பிரிட்டனில் போரிஸ் ஜோன்சன் அரசாங்கம் வகுப்பறைகளில் மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினரைப் போலவே, வலதுசாரி பிளேயரிச சர் கெர் ஸ்டார்மரின் கீழ் தொழிற்கட்சியும் எந்தவித தாக்கத்தையும் கொண்டிராத விமர்சனங்களுடன், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பிரச்சாரத்தை முழுமையாக ஆதரிக்கிறது.

ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் பொருளாதாரத்தைப் பரந்தளவில் மீண்டும் திறப்பதன் பாகமாக ஆகஸ்ட் ஆரம்பத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க தொடங்கியது, இது அந்நாடு எங்கிலும் உடனடியாக வெடிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுநோயின் ஆரம்ப மாதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயின் உட்பட ஐரோப்பா எங்கிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான திட்டங்கள் உள்ளன. செவ்வாய்கிழமை பிரான்ஸ் எங்கிலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, 12 மில்லியன் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அதேவேளையில் அந்நாடு எங்கிலும் இந்த தொற்றுநோய் மீண்டுமொருமுறை பரவி வருகிறது.

ரஷ்யாவில், செவ்வாய்கிழமை பள்ளிகள் தேசியளவில் மீண்டும் திறக்கப்பட்டன. அதே நாளில் தான் அந்நாடு ஒரு மில்லியன் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கையைக் கடந்தது. அதிகாரிகள் எந்த முன்னெச்சரிக்கைகளும் எடுப்பதில்லை என்பதுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிய வேண்டுமென கூட கூறுவதில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் செவ்வாய்கிழமை குறிப்பிடுகையில் பள்ளிகளில் வெடிப்பு ஏற்பட்டால் முழுமையாக இணையவழி வகுப்புகளுக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றார்.

ஒவ்வொரு நாட்டிலும், இத்தகைய கொள்கைகள் மிகப்பெரியளவில் எதிர்ப்பைத் தூண்டிவிட்டு வருகின்றன. பள்ளிகளை மீண்டும் திறப்பதைக் கண்டித்து உலகெங்கிலும் நூற்றுக் கணக்கான போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளிகளை மீண்டும் திறப்பதை எதிர்த்து 100 இக்கும் அதிகமான பேஸ்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அவை உலகெங்கிலும் நூறாயிரக் கணக்கான உறுப்பினர்களை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் கல்வியாளர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் சுயாதீனமான பாதுகாப்பு குழுக்களை உருவாக்க தொடங்கி உள்ளனர், அங்கே தேசியளவில் சர்வதேச அளவிலும் கூட வேலைநிறுத்த நடவடிக்கைக்கான உணர்வு அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் உலக சோசலிச வலைத் தளம் 200 பிரிட்டிஷ் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நடத்திய ஒரு ஆய்வில், பள்ளிகளை மீண்டும் திறப்பதை நிறுத்தி வைப்பதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க விரும்புவதாக அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறினர். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பரந்த எதிர்ப்பை ஒழுங்கமைக்க இந்த சனிக்கிழமை பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி ஓர் இணையவழி கூட்டத்தை நடத்துகிறது, இது பரந்த ஆர்வத்தை ஈர்த்துள்ளது.

ஜேர்மனியில், கடந்த வாரயிறுதியில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) நடத்திய ஒரு பொது கூட்டத்தில் அந்நாடு எங்கிலும் இருந்து நூற்றுக் கணக்கான ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் வந்திருந்தனர். ஜேர்மனி டோர்ட்முண்டில், பாதுகாப்பான பள்ளி நிலைமைகளுக்காக போராடவும் மற்றும் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும் மாணவர்கள் அவர்களின் பள்ளியில் சமீபத்தில் ஒரு குழுவை நிறுவினர்.

பிரேசில்வாசிகளில் 80 சதவீதத்தினர் பள்ளிகளை மீண்டும் திறப்பதை எதிர்ப்பதாகவும், அதேவேளையில் 60 சதவீதத்தினர் இந்த கொள்கை "இந்த தொற்றுநோயை கடுமையான அதிகரிக்கும்" என்பதை அங்கீகரிப்பதாகவும் Datafolha ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் கண்டறிந்தது. நடந்து வரும் தபால்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துடன் இணையும் விதத்தில், அங்கே தேசியளவில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு பெரும் ஆதரவு உள்ளது, ஆனால் கல்வித்துறை தொழிலாளர்களின் தேசிய கூட்டமைப்பும் (CNTE) மற்றும் பிற தொழிற்சங்கங்களும் இதை நடக்காமல் தடுக்க அவர்கள் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில், மூன்று வாரங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழு விரைவிலேயே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை எதிர்ப்பவர்களை ஈர்க்கும் துருவமாக மாறியுள்ளது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நூற்றுக் கணக்கான கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும், பிற தொழிலாளர்களும் அக்குழு நடத்திய இரண்டு இணையவழி கூட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். ஃபுளோரிடா, ஜேக்சன்வில்லி பகுதியில் கல்வியாளர்களின் அளப்பரிய எதிர்ப்பை ஒழுங்கமைக்க கடந்த வாரம் டுவல் உள்ளாட்சி கல்வியாளர்களின் சாமானிய குழு ஸ்தாபிக்கப்பட்டது, அதேவேளையில் நியூ யோர்க் நகரம், டெட்ராய்ட், டெக்சாஸ், ஹவாய் மற்றும் அந்நாடு எங்கிலும் ஏனைய நகரங்கள் மற்றும் மாநிலங்களிலும் இதேபோன்ற குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் இந்த தொற்றுநோய் பரவலைத் தீவிரப்படுத்துவதற்கும் உத்தேசித்துள்ள ஆளும் உயரடுக்கின் ஓர் உலகளாவிய பிரச்சாரத்தை முகங்கொடுத்துள்ள தொழிலாள வர்க்கம் ஓர் உலகளாவிய முன்னோக்கால் வழிநடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஆசிரியர் சங்கங்கள் தேசியவாதத்தை ஊக்குவித்து, இந்த இலாபகர அமைப்புமுறையின் தேவைகளுக்கு தொழிலாள வர்க்க நலன்களை அடிபணிய செய்கின்ற நிலையில், ஒரு சர்வதேச நெருக்கடியான இந்த தொற்றுநோயை தொழிலாள வர்க்கத்தின் ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலமாக மட்டுமே தடுக்க முடியும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சமூக சக்தியாக அதன் ஒருங்கிணைந்த பலத்தை அணித்திரட்டுவதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் சாமானிய பாதுகாப்பு குழுக்களின் வலையமைப்பைக் கட்டமைப்பதே கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் முகங்கொடுக்கும் மத்திய பணியாகும். பொறுப்பின்றி பள்ளிகளை மீண்டும் திறப்பது நிறுத்தப்பட வேண்டும், பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்குப் பிணைகொடுக்க வாரியிறைக்கப்பட்ட பாரிய ஆதாரவளங்கள் தொலைதூரத்திலிருந்து பயில்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கவும் மற்றும் இந்த உயிராபத்தான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர்தர மருத்துவக் கவனிப்பை வழங்கவும் திருப்பி விடப்பட வேண்டும்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் சகோதரத்துவக் கட்சிகளும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல், மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சமூகத்தை ஜனநாயகரீதியில் பகுத்தறிவார்ந்து மறுஒழுங்கமைப்பு செய்யும், உலக சோசலிசத்திற்கான அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தைக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் இயக்கத்திற்கு உயிரூட்ட போராட வருகின்றன.

Loading