கோவிட்-19 மீள்தொற்றுக்கான பெருகிவரும் சான்றுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆசிரியர் ஒரு அமெரிக்கர், ஜேர்மனியில் நோயெதிர்ப்பு உயிரியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.

கோவிட்-19 பற்றிய முரண்பாடான தரவு காணப்பட்டாலும், அண்மையில் வெளியீடப்பட்ட ஆராய்ச்சியில் கோவிட்-19 இலிருந்து குணமடைவது, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுக்கு பிந்திய வெறும் இரண்டு மாதக் காலப்பகுதியில் புழக்கத்தில் உள்ள நடுநிலையாக்கும் நோய் எதிர்ப்பு கலங்களின் வீழ்ச்சியைக் காட்டிய ஆய்வுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. (இது பெரும்பாலான பருவகால கொரோனா வைரஸ்களுடன் ஒத்துப்போகின்றது. அந்த நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நீடிக்காது).

எவ்வாறாயினும், சில புதிய ஆய்வுகள், ஆரம்பகால வீழ்ச்சிக்கு பின்னரும் நடுநிலைப்படுத்தும் நோய் எதிர்ப்பு கலங்கள் (antibodies) குறைந்து பின்னர் மாறாத மட்டத்தில் இருப்பதை காட்டுகின்றன. மேலும் ஒப்பீட்டளவில் அதிக அளவு நடுநிலைப்படுத்தும் நோய் எதிர்ப்பு கலங்களை நாங்கள் இன்னும் கொண்டிருப்பதால், இது நாம் அஞ்சியதை விட நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நீடிக்கும் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். (SARS-1 இன் நீண்டகால நோய் எதிர்ப்பு கலங்களின் ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஓரிரு ஆண்டுகள் நீடித்து இருக்கலாம்).

மீள்தொற்றுக்கள் நிகழ்கின்றதா இல்லையா, மற்றும் எவ்வளவு குறுகிய காலத்திற்குள் அது நிகழ்கின்றது என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும். தற்போது வரை, RT-PCR பரிசோதனையைப் பயன்படுத்தி கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்கள், பின்னர் தொற்று அழிக்கப்பட்டவுடன், மீண்டும் தொற்றுக்குள்ளாகியுள்ளத்தாக அடையாளம் காணப்பட்ட சில நிகழ்வுகளை (முதன்மையாக சுகாதாரப் பணியாளர்களில்) நாம் பார்த்துள்ளோம்.

எவ்வாறாயினும், இந்த தனிமைப்படுத்தப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் மீள்தொற்றுக்களை உறுதிப்படுத்தபடவில்லை. ஏனென்றால் RT-PCR சோதனை வைரஸ் RNA ஐ தேடுகின்றதே தவிர, உடலில் இருக்கும் உயிருள்ள வைரஸை அல்ல. உயிருள்ள வைரஸ் RNA இருப்பதற்கு வழிவகுக்கும் (அதனால்தான் இந்த சோதனை, இயக்கத்திலுள்ள உள்ள தொற்றுநோய்களுக்கு நன்றாக வேலை செய்கிறது) சில நேரங்களில் அது தொற்று கடந்துவிட்ட பின்னர் சில “கழிவுகளை” எடுத்துக்கொள்கின்றது.

அதனை இந்த வழியில் சிந்திக்கலாம்: நமது நோயெதிர்ப்பு அமைப்பு, நோய்க்கான தனது பிரதிபலிப்பின் போது, நம் உடலில் உள்ள அனைத்து வைரஸ் துகள்களையும் முற்றிலுமாக அழித்து, வைரஸ் கழிவுகளை அதன் எழுச்சியில் விட்டுவிடுகிறது. இந்த கழிவுகள் சில வைரஸிலிருந்து வரும் RNA ஆகும். மேலும் வைரஸ் அழிக்கப்பட்ட பின்னர் இந்த RNA சிறிது நேரம் நம் உடலில் தங்கியிருக்கலாம். இரண்டாவது முறையாக தொற்றாளர்கள் என இனங்காணப்பட்டவர்கள் நோய்க்கான அறிகுறியற்றவர்கள் என்பதால், இது வெறுமனே இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட சோதனையில் எடுக்கப்பட்ட கழிவு என்று கருதப்படுகிறது.

எவ்வாறாயினும் இப்போது கதை மாறுகிறது. கடந்த வாரத்தில் இரண்டாவது முறையாக தொற்றாளர்கள் என இனங்காணப்பட்ட நபர்கள், அவர்களின் முதல் மற்றும் இரண்டாவது சோதனைகளில் இருந்து வைரஸ் RNA ஐ பெற்ற பல பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மேலும் இரண்டு RNA மாதிரிகளுக்கும் இடையில் போதுமான மரபணு மாறுபாடு இருந்தது. இது உண்மையில் இரண்டாவது முறையாக ஒரு புதிய தொற்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்களை நம்ப வைக்கிறது.

வைரஸ்கள் மக்கள் ஊடாக பரவும்போது, அவை வழியில் சிறிய பிறழ்வுகளை எடுக்கின்றன. எனவே வைரஸ் மரபணு தகவல்களை வரிசைப்படுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மாதிரி எத்தனை பிறழ்வுகளைக் கொண்டிருந்தது என்பதை அடிப்படையாக கொண்டு, இந்த பிறழ்வுகளை நாம் கண்காணிக்க முடியும்.

நீங்கள் இதை இவ்வாறு சிந்திக்கலாம் (இது விளக்க நோக்கங்களுக்காக நம்பமுடியாத அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டிருந்தாலும்): ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு வைரஸ் தொற்றினால், அது சராசரியாக ஒரு பிறழ்வை எடுக்கும். 10,000 பேர் பாதிக்கப்பட்ட பின்னர், எங்களுக்கு சுமார் 1,000 பிறழ்வுகள் இருக்கும். ஆகையால், ஒருவரின் அமைப்பில் உள்ள வைரஸ் RNA இன் மாதிரியை எடுத்து, அதில் முதல் வைரஸிலிருந்து 600 பிறழ்வுகள் கண்டறியலாம். அதாவது அந்த நபர் 6,000வது நபர் பாதிக்கப்பட்ட நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். நிச்சயமாக, இந்தவழி இதை விட இது மிகவும் சிக்கலானது. ஆனால் விடயம் என்னவென்றால், இந்த பிறழ்வுகளை அதே வைரஸா அல்லது வைரஸின் வளர்ச்சியில் வேறு கட்டத்திலிருந்து வந்ததா என்பதை தீர்மானிக்கலாம்.

தற்போது ஹாங்காங் இல் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் (Clinical Infectious Diseases பத்திரிகையில் வெளியிடப்பட உள்ளன), தற்போது ஆய்வின் பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன: பெல்ஜியம், நெதர்லாந்து, விஸ்கான்சின், மற்றும் லா குரோஸ் இல் முதல் மற்றும் இரண்டாவது சோதனைகளில் தொற்றாளர்கள் என இனங்காணப்பட்ட நபர்களில் போதுமான வேறுபாடுகள் கண்டறியப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள்தொற்று நிகழும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்த பாதிப்புகள் கடுமையானதல்ல, ஆனால் இந்த மீள்தொற்றுக்கள் அவற்றின் ஆரம்ப நோய்த்தொற்றுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பின் நிகழ்ந்தன.

இவை தனித்தனியான தொற்றுக்கள் என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொற்றாளர்கள் என இனங்காணப்பட்ட நபர்களுக்கு இன்னும் நிறைய மரபணு தகவல்கள் வரிசைப்படுத்தல்கள் செய்யப்பட வேண்டும். நிச்சயமாக இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. முதல் தொற்றுக்கு பின்னர் (அல்லது சாத்தியமான தடுப்பூசிக்கு) அடுத்தடுத்த தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குப் போதுமான அளவிற்கு நோய் எதிர்ப்பு கலங்களை பெரும்பான்மையான மக்கள் கொண்டிருப்பது நிச்சயமாக சாத்தியம் என்றாலும், அவற்றின் ஆரம்ப தொற்றுக்கு பின்னர் குறைந்த பட்சம் சில நபர்களாவது விரைவில் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று இப்போது தோன்றுகிறது. இது “சமூக நோயெதிர்ப்பு சக்தியை” உருவாக்குவதன் மூலமாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரு தடுப்பூசி மூலம் கூட SARS-CoV-2 இலிருந்து தற்காத்துக் கொள்ளும் சாத்தியத்தை இன்னும் கேள்விக்குள்ளாக்குகிறது.

இதற்கிடையில், மற்றொரு புதிய முற்பதிவு இன்று வெளிடப்பட்டது. இது வெளிப்படையாக, முந்தய விவாதங்களை விட மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. The Lancet இதழில் ஒரு முற்பதிவாக வெளியிடப்பட்ட இந்த புதிய தகவல், நெவாடாவில் மீள்தொற்றைப் பற்றிய ஒரு ஆய்வை கவனத்திற்கு எடுக்கின்றது. 25 வயதான இந்த நபர் முதலில் ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்டு, கோவிட் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டார், மேலும் தொண்டை வலி, இருமல், தலைவலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை கொண்டிருந்தார். ஒன்பது நாட்களுக்குப் பின்ன்ர் அறிகுறிகள் இல்லாதுபோயின, அதன் பின்னர் 12 மற்றும் 29 நாட்களில் மேலும் இரண்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இரண்டிலும் தொற்று இல்லை என முடிவு வந்தது. இது தொற்று அழிக்கப்பட்டதை காட்டியது.

இருப்பினும், ஆரம்பத்தில் குறைந்திருந்த அறிகுறிகளை 31 நாட்களுக்கு பின்னர் அந்த நபர் மீண்டும் அனுபவிக்க தொடங்கினார். மேலும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரத்திற்குள், அறிகுறிகள் ஹைபோக்ஹியா (குறைந்த ஒக்சிசன் அளவு) மற்றும் ஒரு பொதுவான நிமோனியாவாக அதிகரித்து, அவசரமான மேலதிக பிராணவாயு ஏற்றுதல் தேவைப்பட்டது. பின்னர் மீண்டும் பரிசோதனை செய்யும்போது, கோவிட் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டது.

முக்கியமாக, ஏப்ரல் மாதத்தில் ஆரம்ப சோதனையிலிருந்து ஒரு மாதிரி மற்றும் ஜூன் மாதத்தில் இந்த சோதனையின் மாதிரி இரண்டும் மரபணு ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டன. வரிசைப்படுத்தல் முடிந்ததும், இரண்டு மாதிரிகளுக்கிடையேயான பிறழ்வுகள் வரைப்படமாக்கப்பட்டன. மேலும் இரண்டு மாதிரிகளுக்கும் இடையில் போதுமான பிறழ்வுகள் இருப்பதால், இது நிச்சயமாக இரண்டு தனித்தனி நோய்த்தொற்றுகள் தான் என தீர்மானிக்கப்பட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் என்னவென்றால், இரண்டாவது தொற்று ஆரம்ப தொற்றை காட்டிலும் மிகவும் கடுமையானது. இது முந்தைய மீள்தொற்று நிகழ்வுகளில் நாம் காணாத ஒன்று, மற்றும் ஆரம்ப நோய்தொற்றுக்கும் மீள்தொற்றுக்கும் இடையிலான நேரம் 48 நாட்கள் மாத்திரமே.

SARS-CoV-2 இன் நோய் எதிர்ப்பு கலங்கள் சார்பான விரிவாக்கத்தின் (antibody-dependent enhancement- ADE) இன் நேரடி ஆதாரங்களை நாங்கள் இதுவரை காணவில்லை (இது குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு கலங்கள் உண்மையில் கலங்களில் வைரஸ் நுழைவதற்கு உதவுகிறது மற்றும் தொற்றுநோயை மிகவும் மோசமாக்கிறது), ஆனால் நோய் எதிர்ப்பு கலங்கள் சார்பான விரிவாக்கம், SARS-CoV-1 இல் நிகழ்வதற்கான சில சான்றுகள் எங்களிடம் உள்ளன. கோவிட்-19 க்கு காரணமான காவிக்கு மிக நெருக்கமான SARS-CoV-1 வைரஸிற்கு விலங்கு மாதிரிகளில் தடுப்பூசி போடுவதன் காரணமாக குறைந்த அளவு நோய் எதிர்ப்பு கலங்கள் இருக்கும்போது மிகவும் கடுமையான நோய் மற்றும் கடுமையான நுரையீரல் பாதிப்பிற்கு வழிவகுக்கிறது.

இந்த சான்றுகள், “சமூக நோயெதிர்ப்பு சக்தி” தொடர்பான விளக்கத்தை சிக்கலாக்குவது மட்டுமல்லாமல், தடுப்பூசி அபிவிருத்தி செயல்முறையையும் சிக்கலாக்குகிறது. உயிரியல் மூலக்கூற்று “அதிசய மருந்துகளை” தேடுவதை விட, வைரஸின் விஞ்ஞானத்தை புரிந்துகொள்ள முற்பட்டிருந்தால், பொருத்தமான பொது சுகாதார நடவடிக்கைகள் மிகவும் பகுத்தறிவுடையதாக இருந்திருக்கும் என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது.

Loading