முன்னோக்கு

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய கட்டத்தில் நுழைகிறது: ஜனவரிக்குள் 400,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிக்கை மதிப்பிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோடைகாலம் முடிய இருக்கின்ற நிலையில், அமெரிக்கா, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முன்பினும் அதிக அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்து வருகிறது. வெப்பநிலை குறைகையில், மக்கள் வெளியில் இருப்பதை விட வீட்டுக்குள்ளேயே அதிக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதால் இது வைரஸ் பரவலை ஏற்படுத்துமென விஞ்ஞானிகளும் தொற்றுநோய் நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் பொதுவாக அக்டோபரில் தொடங்கும் சளிக்காய்ச்சல் காலத்துடன் இந்த தொற்றுநோய் சேர்வது, மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் மற்றும் சுகாதார நிலையங்களை முழுமையாக நிரப்பிவிடுக்கூடும்.

ஆனால், “சமூகளவில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும்" ஆளும் வர்க்க கொள்கை —அதாவது எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அந்த வைரஸ் பரவுவதை அனுமதிப்பது என்பது வரவிருக்கும் மாதங்களில் முன்பினும் அதிகமாக பயங்கர மரண எண்ணிக்கைக்கான நிலைமைகளை உருவாக்குவதில் பிரதான காரணியாக உள்ளது.

மரண எண்ணிக்கை ஏற்கனவே அதிர்ச்சிகரமாக உள்ளது. அனேகமாக இந்த வாரயிறுதி வாக்கில் அமெரிக்கா விரைவிலேயே 200,000 உயிரிழப்புகளின் புதிய மைல்கல்லைக் கடந்துவிடும். இந்நாட்டில் இதய நோய் மற்றும் புற்றுநோய் என இவற்றை அடுத்து, ஏற்கனவே கோவிட்-19 உயிரிழப்புகளுக்கான மூன்றாவது முக்கிய காரணமாக ஆகியுள்ளது.

ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு எதிராக போராடும் பீட்ஸ்பேர்க் அணிவகுப்பு (படம்: அசோசியேடெட் பிரஸ்/ Gene J. Puskar)

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் (IHME) பயிலகம், இந்தாண்டு இறுதிக்குள் 410,000 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று மதிப்பிட்டு ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது.

400,000 க்கும் அதிகமானவர்கள்! இது லூசியானாவின் நியூ ஓர்லியன்ஸ் அல்லது ஓஹியோவின் கிளீவ்லாந்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விட அதிகமாகும். IHME அனுமானிப்பது ஜனவரி 1 க்குள் நிஜமாகிவிட்டால், அது அண்மித்து நான்காண்டுகளில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்க சிப்பாய்களை விட ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் கொரோனா வைரஸில் அதிக பேர் உயிரிழந்திருப்பார்கள் என்பதை அர்த்தப்படுத்தும். அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு 1,000 பேரில் ஒருவருக்கும் அதிகமானவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

பாரியளவில் உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கை என்று தெரிந்துமே ட்ரம்ப் நிர்வாகம் அதை முன்னெடுத்து வருகிறது. வெள்ளை மாளிகையின் புதிய தொற்றுநோய் ஆலோசகர், ஸ்காட் அட்லஸ், வெளிப்படையாகவே இந்நோய் மூர்க்கமாக பரவ அனுமதிக்கும் விதத்தில் சமூக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவாக வாதிட்டுள்ளார்.

பள்ளிகளைத் திறப்பதும் மற்றும் ஆசிரியர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்வதும், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்திப்பதற்கு முக்கியமாக பார்க்கப்படுவதால், அந்த முனைவே இந்த ஆட்கொலை கொள்கையின் மத்தியப் புள்ளியாக உள்ளது. பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஏற்கனவே மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், இந்த வைரஸ் பரவுவதற்கான மையங்களாக ஆகியுள்ளன. SUNY Oneonta என்றவொரு பள்ளி விடயத்தில், வகுப்பறைகள் மீண்டும் திறக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் குறைந்த நாட்களில் 17 சதவீத மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டதால், அந்த பள்ளியை மூடி ஒவ்வொருவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதாக இருந்தது.

இது இந்த மாதம் மழலையர் பள்ளியில் இருந்து 12 வகுப்பு பள்ளிகள் வரை மீண்டும் திறக்கப்படுகையில் இன்னும் பல மடங்கு எதிரொலிக்கும். அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கை, சர்வதேச அளவில், வெவ்வேறு வடிவங்களில் பின்தொடரப்படுகிறது. பிரிட்டனில் இருந்து ஸ்பெயின், பிரேசில் வரையில், இந்த தொற்றுநோய் தீவிரமடைந்து வருகையிலும் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க அழுத்தமளித்து வருகின்றன. பிரான்சில், மே மாதம் ஆரம்பத்தின் உச்சத்தை விட அதிகமாக புதிய நோயாளிகள் அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் 12 மில்லியன் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தியாவில், அந்நாடு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரொனா வைரஸ் நோயாளிகளில் பிரேசிலை மிஞ்சி சென்று கொண்டிருக்கின்ற போதினும், நரேந்திர மோடி அரசாங்கம் போக்குவரத்து மற்றும் வியாபார நடவடிக்கைகள் மீது எஞ்சியிருக்கும் எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கி வருகிறது.

இந்த தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்தே உலக சோசலிச வலைத் தளம் விவரித்துள்ளதைப் போல, உலக அரசாங்கங்களின் விடையிறுப்பு சமூக தேவை மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல மாறாக இலாபத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த சமூக நலன்கள்தான், வரவிருக்கும் மாதங்களில் இந்நோய் பயங்கரமாக பரவுவதற்கான நிலைமைகளையும் உருவாக்கி வருகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஆணையிடும் ஒரு கொள்கையை ட்ரம்ப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்நிர்வாகத்திற்கு பல உதவியாளர்களும் ஒத்துழைப்பாளர்களும் உள்ளனர். ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில், அதிர்ச்சியூட்டும் உயிரிழப்புகளுக்கு அலட்சியமே மேலோங்கிய மனோபாவமாக உள்ளது. முதலைக் கண்ணீர் விட, ஊடக பண்டிதர்களும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும் அதிக கண்ணீரைச் சிந்துகின்றனர்.

இந்த வாரயிறுதியில் கமலா ஹரீஸ் குறிப்பிட்டதைப் போல, ட்ரம்ப் "தரந்தாழ்ந்து தோற்று போய், திறமையின்றி" உள்ளார் என்று பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வாதம் ஒரு தட்டிக்கழிப்பு மற்றும் மூடிமறைத்தலாகும். உண்மையில் இந்த தொற்றுநோய் சம்பந்தமாக இருகட்சிகளது ஒருமனதான ஆதரவுடன் ஆளும் வர்க்க கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ட்ரம்ப் நிர்வாகம் முற்றிலும் திறமையுடன் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பைடென் மற்றும் ஹரீஸில் இருந்து வேர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் வரையில், ஜனநாயகக் கட்சியினர் மார்ச் மாதம் வோல் ஸ்ட்ரீட்டுக்கு நிதி பாரியளவில் கையளிக்கப்பட்டதை முற்றிலுமாக ஆமோதித்தனர் என்பதுடன், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்திப்பதற்கும் மற்றும் மாணவர்களை மீண்டும் வகுப்பறைகளுக்குச் செய்ய நிர்பந்திப்பதற்குமான இந்த ஆட்கொலை கொள்கையை ஆதரித்துள்ளனர். “பொருளாதாரம் தொடர்ந்து இயங்க" —அதாவது, இலாபங்களின் ஓட்டத்தை மீண்டும் தொடர— அனைத்தும் செய்யப்பட வேண்டும் என்பதே மந்திரமாக உள்ளது.

இந்த தொற்றுநோயை நிறுத்த ஜனநாயகக் கட்சியினரிடம் எந்த வேலைத்திட்டமோ அல்லது கொள்கைகளோ இல்லை. இந்த தேர்தல் அதன் இறுதி கட்டத்தில் நுழைகின்ற நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் நெடுகிலும் அவர்களிடையே என்ன நிரம்பி இருந்ததோ அதுவே அவர்களின் மத்திய குவிமையமாக உள்ளது: அதாவது, ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் அதிக ஆக்ரோஷமான நடவடிக்கையில் இறங்குவதற்கு அழைப்பு விடுக்கின்றனர். நூறாயிரக் கணக்கானவர்களை கொன்றுள்ள ஒரு தொற்றுநோயின் முன்னால், அவர்கள் மில்லியன் கொல்லப்படக்கூடிய போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்றனர்.

வரவிருக்கும் தேர்தலில் ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு கன்னைக்கும் தொழிலாளர்கள் அடிபணிய செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளுடன் தலையீடு செய்ய வேண்டும்.

அங்கே ஏற்கனவே கோபமும் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. பள்ளிக்கு மீண்டும் திரும்புவதற்கான ஆட்கொலை பிரச்சாரத்தை எதிர்க்க ஆசிரியர்கள் சுயாதீனமான குழுக்களை ஒழுங்கமைக்க தொடங்கி உள்ளனர். மில்லியன் கணக்கானவர்களை வேலையிலிருந்து வெளியே தள்ளும் மற்றும், வறுமை, வெளியேற்றம் மற்றும் பட்டினியை முகங்கொடுக்கச் செய்யும் இந்த சமூக நெருக்கடியின் அளவு ஒரு சமூக வெடிப்புக்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

அதே நேரத்தில் பொலிஸ் வன்முறை மீதும் அங்கே போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. போர்ட்லாந்தில், போராட்டங்கள் தொடர்ந்து 100 நாட்களுக்கும் அதிகமாக நடத்தப்பட்டுள்ளன. விஸ்கான்சின், கெனொசாவில் ஜேகப் பிளேக் சுடப்பட்டதைத் தொடர்ந்தும், நியூ யோர்க் ரோசெஸ்டரில் டேனியல் ப்ரூட்டைப் பொலிஸ் சுட்டுக் கொல்வதைக் காட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்தும், கடந்த இரண்டு வாரங்களாக, ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. பாசிசவாத வன்முறையை வேண்டுமென்றே தூண்டிவிடுவது உட்பட ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் பொலிஸின் விடையிறுப்பாக போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன.

சோசலிசத்திற்கான ஓர் ஒருங்கிணைந்த ஐக்கியப்பட்ட பாரிய அரசியல் இயக்கத்தைத் தொழிலாள வர்க்கத்திற்குள் அபிவிருத்தி செய்வதே முக்கிய பிரச்சினையாகும். பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் தனிமைப்படுத்தப்படக் கூடாது. அவை ஆசிரியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், சேவைத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளின் எதிர்ப்புடன் ஆளும் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராக இணைக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் நமது சகோதர கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வேலைத்திட்டத்திற்காக போராடுகின்றன. வேலைக்குத் திரும்ப செய்வதற்கும் மற்றும் பள்ளிக்குத் திரும்ப செய்வதற்குமான பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்டு, இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முழு வருமானம் வழங்கப்பட வேண்டும்.

உயிர்களைக் காப்பாற்ற சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். பில்லியனர்களின் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு, அனைவருக்குமான இலவச மருத்துவக் கவனிப்பு, வேலைவாய்ப்பற்றோருக்கு அவசரகால நிவாரணம் மற்றும் பெற்ற கடன்கள், அடமானக் கடன்கள், வாடகை ஆகியவற்றை இரத்து செய்வது உட்பட மிக அவசர சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய வங்கிகளுக்குக் கையளிக்கப்பட்ட ட்ரில்லியன் கணக்கிலான டாலர்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

பின்வருவதைக் கவனியுங்கள்: இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் 200,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்று IHME குறிப்பிடுகிறது. இந்த நாட்டின் 200 மிகப்பெரிய செல்வந்தவர்கள் ஒட்டுமொத்தமாக 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வவளத்தைக் கொண்டுள்ளனர், இதை ஒட்டுமொத்த சமூகத்திற்காக செலவிட்டால், மருத்துவக் கவனிப்பிலும் பொதுக்கல்வி உள்கட்டமைப்பிலும் மிகப் பிரமாண்டமாக முதலீடு செய்ய இது அனுமதிக்கும். இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரையில் ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போதுமான வருமானம் பெறுவதை உறுதிப்படுத்த இது போதுமானதற்கும் மேலாக இருக்கும்.

இந்த தொற்றுநோயை நிறுத்த இதுபோன்ற அடிப்படை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு புரட்சிகர கேள்வியாகும். இது, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளின் அடிப்படையில் எல்லா சமூக மற்றும் பொருளாதார வாழ்வையும் மறுகட்டமைப்பு செய்ய, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை அதன் சொந்த கரங்களில் எடுப்பதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்கவியலாததாகும்.

ஆளும் வர்க்கமும் அதன் கட்சிகளும் மரணம் மற்றும் இலாபத்திற்கான கட்சிகளாக உள்ளன. தொழிலாள வர்க்கம் உயிர்வாழ்வுக்கும் சோசலிசத்திற்கும் போராட வேண்டும். இதுதான் வரவிருக்கும் மாதங்களில் முன்னிறுத்தப்படும் அடிப்படை பிரச்சினையாக இருக்கும்.

Loading