முன்னோக்கு

தொற்றுநோய் மரண எண்ணிக்கை 200,000 ஐ நெருங்குகையில், அமெரிக்க செல்வந்த தட்டுக்கள் அவர்களின் செல்வவளத்தால் குதூகலமடைகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா ஒரு வரலாற்றுரீதியிலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருகடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. கொரொனா வைரஸ் தொற்றுநோயின் மரண எண்ணிக்கை 200,000 ஐ நெருங்கி கொண்டிருப்பதுடன், இந்தாண்டு இறுதிக்குள் இரண்டு மடங்காகக்கூடும். பாசிசவாத வன்முறையைப் பகிரங்கமாக தூண்டிவிடுவதை ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஜனநாயக ஆட்சி வடிவங்கள் முறிந்து வருகின்றன. பத்து மில்லியன் கணக்கானவர்கள் வேலையிழந்து, வறுமை மற்றும் வீடற்ற நிலைமையை முகங்கொடுக்கின்றனர். அமெரிக்க மேற்கு கடற்கரையோரம் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி கொளுந்து விட்டெறிந்து கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிப்போக்குகளில் எதையுமே பாரியளவிலான சமூக சமத்துவமின்மை மட்டங்களுக்கு வெளியே புரிந்து கொள்வது சாத்தியமில்லை. வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாதளவில் செல்வவள திரட்சியுடன் சேர்ந்து, அமெரிக்கா ஒரு நிதிய தன்னலக்குழுக்களுக்கு உரியதாக உள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 400 பில்லியனர்களின் அறிக்கை இதற்கான யதார்த்த உணர்வை வழங்குகிறது. மிகப்பெரும் 400 பணக்காரர்கள் (மக்கள் தொகையில் 0.00012 சதவீதத்தினர்) இப்போது 3 ட்ரில்லியனுக்கும் அதிகமாக செல்வவளத்தைக் கொண்டுள்ளனர்.

அந்த அறிக்கை அறிவிக்கிறது: “தொற்றுநோயே அதிர்ச்சியுறுகிறது: அமெரிக்காவின் 400 மிகப்பெரும் செல்வந்தர்கள் வைரஸையும் மீறிய பங்குச் சந்தையின் உதவியால், ஓராண்ட்டுக்கு முன்னர் இருந்ததைவிட 240 பில்லியனால் அதிகரித்து, உயர்நிலை 3.2 ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளனர். மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பல ட்ரில்லியன் டாலர் CARES சட்டத்தால் தூண்டப்பட்ட, பங்குச் சந்தையின் எழுச்சி ஏற்கனவே நிரம்பி வழிந்து கொண்டிருந்த பெரும் செல்வந்தர்களின் கஜானாக்களை இன்னும் நிரப்பி உள்ளது. இவர்கள் இப்போது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கு நிகரான சொத்து வளங்களைக் கொண்டுள்ளனர்.

ஜூலை 24 புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வழங்கிய விபரங்களே கூட தற்போதைய யதார்த்தத்தின் மிகப்பெரும் குறைமதிப்பீடாக உள்ளன. அதற்குப் பின்னர் இருந்து, உலகின் மிகப் பெரும் பணக்காரரான அமசன் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸின் செல்வவளம் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, அதேவேளையில் டெஸ்லா தலைமை செயலதிகாரி எலொன் முஸ்க்கின் செல்வவளம் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பெஸோஸின் கையிருப்பு சராசரி அமெரிக்க குடும்பத்தின் ஆண்டு வருவானத்தை விட மூன்று மில்லியன் மடங்கு அதிகமாகும்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் பிரதிபலித்த மலைப்பூட்டும் சமத்துவமின்மை மட்டம் அமெரிக்க சமூகத்தின் மத்திய அம்சமாக உள்ளது, இது வரி வெட்டுக்கள், பிணையெடுப்புகள், கூலி வெட்டுக்கள், ஓய்வூதிய குறைப்புகள் மூலமாகவும் மற்றும் 20 ஆம் நூற்றாண்டு போராட்டங்களில் தொழிலாளர்கள் வென்றெடுத்த ஏனைய சலுகைகளை வெட்டியதன் மூலமாகவும், முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய அளவிலான செல்வவளத்தைத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து நயவஞ்சகமாக பறித்து ஒரு சிறிய நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு கைமாற்றியதால் ஏற்பட்டதாகும்.

பில்லியனர்களின் சமீபத்திய இந்த செல்வ வள அதிகரிப்பு, அவர்களின் பாகத்தில் எந்தவிதத்திலும் உழைப்பை உறிஞ்சியதன் அடிப்படையில் ஏற்பட்டதல்ல, மாறாக மத்திய வங்கி (பெடரல் ரிசர்வ்) மற்றும் காங்கிரஸ் சபையிடம் இருந்து ட்ரில்லியன் கணக்கிலான டாலர் கடன் பெற்று, பங்குச் சந்தை ஊதிப் பெருத்ததினால் ஏற்பட்டதாகும், இந்த கடன்கள் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் தான் சுமத்தப்படும். டோவ் சந்தை மற்றும் எஸ்&பி 500 சந்தை புதிய மட்டங்களுக்கு அதிகரிப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொன்றும் அடிபணிய செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 33,000 டாலர் சம்பாதிக்கும் நடுத்தர அமெரிக்கர் ஒருவர் பெரும் செல்வந்த அமெரிக்கர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அளவுக்கு சம்பாதிக்க 97 மில்லியன் ஆண்டுகள் ஆகக்கூடும். 3.2 ட்ரில்லியன் டாலர் என்பது ஓராண்டுக்கு எதற்கெல்லாம் செலவிடலாமென பாருங்கள்:

• 2016-17 கல்வி ஆண்டில், அரசு ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு 739 பில்லியன் டாலர் செலவிடப்பட்டு, 50.8 மில்லியன் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டதுடன் 3.2 மில்லியன் ஆசிரியர்களும் 3.2 மில்லியன் கல்வித்துறை பணியாளர்களும் பணியில் இருந்தனர்.

• மத்திய அரசு இந்தாண்டு மருத்துவக் கவனிப்பு திட்டங்களுக்கு 1.3 ட்ரில்லியன் டாலர் செலவிடும் என்று காங்கிரஸ் சபை வரவு-செலவுத் திட்டக்கணக்கு அலுவலகம் கணக்கிடுகிறது.

• 2017 இல் நீரிழிவுநோயால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 327 பில்லியன் டாலர் செலவானது, இந்த மொத்த தொகையில் 40 பில்லியன் டாலர் இன்சுலினுக்காக செலவிடப்பட்டது. நீரிழிவுநோய் நோயாளிகள் உயிர்பிழைப்பதற்கு அத்தியாவசியமான இன்சுலினின் சராசரி செலவு ஆண்டுக்கு 6,000 டாலர் அதிகரிப்பதுடன், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

• அமெரிக்க வேளாண் துறை விபரங்களின்படி, 2019 இல் குடும்ப நுகர்வு செலவில் உணவு மற்றும் இதர பொருட்களுக்காக அமெரிக்கர்கள் 800 பில்லியன் டாலர் செலவிட்டிருந்தனர். ஏழைகளும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களும் இன்றியமையா ஊட்டச்சத்தைப் பெறுவதற்காக மத்திய அரசு இதில் 60 பில்லியன் டாலரை உணவு வில்லைகளாக வழங்கியது.

• கலிபோர்னியாவின் பாரடைஸ் நகர சீரழிவு உட்பட மிகப் பெருமளவில் நாசங்கள் ஏற்பட்ட2018 காட்டுத்தீ காலத்தில் 24 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது. அதீத தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலை மாற்ற பேரிடர்கள் என்று கூறப்பட்ட அனைத்திற்கும் அந்தாண்டு 91 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது.

இத்துடன் சேர்ந்து, வெறும் 400 நபர்களின் செல்வவளம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு ஓர் ஆண்டுக்கான பொதுக்கல்வி, மருத்துவக் கவனிப்பு, ஊட்டச்சத்து மற்றும் பேரிடர் நிவாரண செலவுகளுக்கான தொகையாகும். இந்த தொற்றுநோயின் காரணமாக உலகெங்கிலும் இந்தாண்டு 132 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பட்டினியில் வீழ்வார்கள் என்றும், இது ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களின் எண்ணிக்கையை 1 பில்லியனுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் என்றும் ஐ.நா. சபை சமீபத்தில் அறிவித்தது.

மில்லியன் கணக்கானவர்களை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியில் இருந்து காப்பாற்றுவதற்கான அத்தியாவசிய தேவைக்கு இடையே, உலக உணவு திட்டம் தேவையானவர்களுக்கு உணவு வழங்குவதற்கான அதன் முயற்சியில் 5 பில்லியன் டாலர் பற்றாக்குறையை முகங்கொடுக்கிறது. அமெரிக்காவில் 400 மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வவளம் இந்த தொகையை விட 600 மடங்கு அதிகமாகும்.

அரசியலின் ஒவ்வொரு அம்சமும் இந்த சமூக அடுக்கின் நலன்களுக்கு அடிபணிய செய்யப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் தான் இந்த தொற்றுநோய் அபாயம் ஆரம்பத்தில் மூடிமறைக்கப்பட்டு, வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பு ஒழுங்கமைக்கப்பட்டு, வேலைக்குத் திரும்ப செய்வதற்கான மற்றும் பள்ளிக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

திட்டமிட்ட சமூக கொள்ளையடிப்பு இதுபோன்றவொரு நோய் வெடிப்புக்கு நாட்டை பலவீனமாக வைத்திருந்தது. மருத்துவத்துறையை இலாபத்திற்கான மருத்துவத்துறை நிறுவனங்களின் மற்றும் மாபெரும் காப்பீட்டு நிறுவனங்களின் சூறையாடும் நலன்களுக்கு அடிபணிய செய்யப்பட்டிருந்தமை, முதியவர்களுக்கான மருத்துவச் சேவை மையங்களை மரண அறைகளாக மாற்றி, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அவசியமான தனிநபர் பாதுகாப்பு சாதனங்களும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அவசியமான செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற ஏனைய மருத்துவச் சாதனங்களும் இல்லாமல் செய்திருந்தன.

பாசிசத்தையும் மற்றும் அதீத தீவிர வலதைப் பேணி வளர்ப்பதையும் நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் முனைவை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் எந்தவொரு அறிகுறியையும் முற்றுமுதலாக நசுக்க விரும்பும் ஆளும் வர்க்கத்தின் கன்னைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் செல்வந்த தட்டுக்களின் வர்க்க நலன்களுடன் சம்பந்தப்படுத்தாமல் புரிந்து கொள்ள முடியாது. இந்த நாணயத்தின் மறுபக்கம், வர்க்க போராட்டத்தைத் தணிக்க இனம் மற்றும் அடையாள அரசியலைப் பயன்படுத்த முயலும் கன்னையை ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதித்துவம் செய்வதுடன், அதேவேளையில் அதிகார பதவிகளைப் பெறவும், உயர்மட்ட 10 சதவீதத்தினரின் செல்வவளத்தில் தங்களுக்கும் பெரும் பங்கைப் பங்கிட்டு கொள்ளவும் போராடுவதற்காக இனம் மற்றும் பாலினம் அரசியலைப் பயன்படுத்தி வரும் நடுத்தர மத்திய தட்டு வர்க்கத்தின் பிரிவுகளை அவர்கள் வளர்த்து வருகின்றனர்.

சமீபத்திய ஒரு சான்றாக, எதையும் இன அடிப்படையில் நிர்ணயம் செய்யும் நியூ யோர்க் டைம்ஸ் இந்த வாரம் அதன் "அதிகார முகங்கள்" பட்டியலில் (Faces of Power) “செல்வாக்கான பதவிகளில்" பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டது. அந்த பட்டியலில் ஒவ்வொருவரும் கருப்பினத்தவராக, ஹிஸ்பானிக், ஆசிய அல்லது அமெரிக்க பூர்வீகத்தினராக இருந்தால் மட்டும் என்ன வித்தியாசம் இருக்கும்? உண்மையில், மிகப்பெரிய அமெரிக்க நகரங்களில், பெரும்பான்மையான பொலிஸ்மா அதிபர்கள் கறுப்பர்கள் அல்லது ஹிஸ்பானிக் என அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது - காவல்துறையினரால் பாரபட்சமாக கொல்லப்படும் இளம் கறுப்பினத்தவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாம்.

இனம் மற்றும் பாலினம் மீது உயர்மட்ட நடுத்தர வர்க்க கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே நிலவும் ஆவேசம், அமெரிக்க சமூகத்தின் சமூக உறவுகளை வரையறுக்கும் இந்த விகாரமான செல்வவள மட்டங்களில் இருந்து கவனத்தைச் சிதறடிப்பதற்காக ஆகும். இந்த அரசியல் வடிவத்திற்கும் தொழிலாள வர்க்க நலன்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால், அது இனவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான கோபத்தை உயர்மட்ட 1 சதவீதத்தினர் குவித்து வைத்துள்ள குவியலில் இருந்து பெரும் பங்கைப் பெற விரும்பும் உயர்மட்ட 10 சதவீத சிறுபான்மை சிறிய அடுக்கின் நலன்களை முன்னெடுக்க முயல்கிறது.

ஒவ்வொரு தருணத்திலும், விஞ்ஞானம், பகுத்தறிவு மற்றும் மனித நல்லிணக்கம் ஆகியவை நிதி மூலதனத்தின் ஒட்டுண்ணித்தனமான எஜமானர்களான செல்வந்த தட்டுக்கள், அதாவது சமூகத்தின் தற்போதைய ஆட்சியாளர்களின் பொருளாதார நலன்களுடன் முரண்படுகின்றன. இந்த பிரச்சினையை எதிர்க்காமல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதோ அல்லது உயிர்களைக் காப்பாற்றுவதோ சாத்தியமில்லை.

கோவிட் 19 தொற்றுநோய், காலநிலை மாற்றத்தால் எரியூட்டப்பட்ட அதிகரித்தளவில் உயிராபத்தான காட்டுத்தீ மற்றும் உலகளாவிய பட்டினி போன்ற மக்கள் பிரச்சினைகளுக்கு வெகுஜனங்களின் தலையீடு அவசியப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் இரும்புப்பிடியை உடைக்காமல் மனிதகுலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அதன் செல்வ வளம் பறிமுதல் செய்யப்பட்டு சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும். மிகப்பெரும் பெருநிறுவனங்களும் வங்கிகளும் இலாபத்திற்காக அல்ல மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நோக்குநிலை கொண்ட ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளாக தொழிலாள வர்க்கத்தால் மாற்றப்பட வேண்டும்.

முதலாளித்துவ சமூகம் குணாம்சப்படுத்தும் சமூக சமத்துவமின்மையும், அதிலிருந்து பெருக்கெடுக்கும் அனைத்து கொள்கைகளும், அளப்பரிய சமூக கோபத்தின் அதிகரிப்புக்கும் தொழிலாள வர்க்க போராட்டத்திற்கும் எரியூட்டி வருகின்றன. இந்த போராட்டங்கள் நனவுப்பூர்வமாக புரட்சிகரமான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டு ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.

Loading