“இது பரிசோதனைக்கான வதை முகாம் போன்றது என்றே நான் நினைத்தேன்”

ஜோர்ஜியா புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையத்தில் கட்டாய கருத்தடையும், மருத்துவ முறைகேடும் நடப்பதாக ஒரு செவிலியர் குற்றம் சாட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தெற்கு ஜோர்ஜியாவில் உள்ள புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க (Immigration and Customs Enforcement) தடுப்புக்காவல் மையத்தில் ஜூலை மாதம் வரை பணியாற்றிய செவிலியர் ஒருவர், மையத்தில் புலம்பெயர்ந்த பெண்கள் பலருக்கு அவர்களது ஒப்புதல் இல்லாமல் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவர்கள் கட்டாய கருத்தடைக்குட்படுத்தப்படுவதாக கூறிய குற்றச்சாட்டின் பேரில் அவரின் சார்பாக ஒரு இரகசிய செய்தி வெளியீட்டாளர் புகார் அளித்துள்ளார்.

Project South என்ற சட்ட ஆலோசனைக் குழு தாக்கல் செய்துள்ள இந்த புகாரில், தடுப்புக்காவல் மையத்தில் உள்ள நிலைமைகள் “பரிசோதனைக்கான வதை முகாமை” ஒத்திருப்பதாக முன்னாள் செவிலியர் விவரிக்கிறார்.

மையத்தின் நிர்வாகிகள், கோவிட்-19 பரிசோதனை செய்ய அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுப்பதானது, நாட்டின் தடுப்புக்காவல் நிலையங்கள் எங்கிலும் உள்ள கைதிகளையும் பணியாளர்களையும் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயத்தில் ஆழ்த்துகிறது என்றும் இந்த புகார் விவரிக்கிறது. மேலும், மையத்தின் நிலைமைகளைப் பற்றி வெளிப்படுத்திய கைதிகள் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள் என்றும் அது குற்றம் சாட்டுகிறது.

ஜூன் 17, 2018, ஞாயிற்றுக்கிழமை, டெக்சாஸ், மெக்காலனில் உள்ள தடுப்புக்காவல் வசதி (புகைப்பட உதவி அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை)

இந்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை, புலம்பெயர்ந்தோர் மீதான பாசிசப் போரில் ட்ரம்ப் நிர்வாகம் நிகழ்த்திய கொடூரமான துஷ்பிரோயகம் பற்றிய மேலதிக ஆதாரங்களை வழங்குகிறது. கோவிட்-19 உட்பட, பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு இதுவரை ICE காவலில் இருந்தவர்களில் குறைந்தது 17 பேர் இறந்துள்ளனர். லூசியானாவில் உள்ள ஒரு மையத்தில் இரண்டு காவலாளிகள் ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸால் இறந்தனர்.

புகார்களின் இலக்கு, தனியார் சிறை நிறுவனமான LaSalle Corrections ஆல் நடத்தப்படும் இர்வின் கவுண்டி தடுப்புக்காவல் மையத்தின் (Irwin County Detention Center-ICDC) மீது இதற்கு முன்னர் 2012 இல் அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் (American Civil Liberties Union) எழுப்பியிருந்த புகார்களை பற்றி குறிப்பிடுவதாக இருந்தது. இந்த இடத்தில் நிலவிய பரவலான துஷ்பிரயோகம் மற்றும் அதன் ஒதுக்கமான அமைவிடம் காரணமாக அது மூடப்பட வேண்டும் என்று ACLU வலியுறுத்தியது. மனித உரிமை மீறல்கள், உரிய செயல்முறை உரிமைகளை மீறுதல் மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் ஆகியவற்றில் ICDC இன் குற்றகரமான செயல்பாட்டை Project South அமைப்பின் 2017 விசாரணை கண்டறிந்தது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் “கருப்பை சேகரிப்பாளர்” என்று அழைக்கப்படும் மருத்துவரிடம் அனுப்பப்பட்டனர் என்றும், தங்களுக்கு என்ன நடக்கிறது என்றோ அல்லது தாம் ஏன் இந்த நடைமுறையில் இருக்கிறோம் என்றோ பலருக்கு முழுமையான புரிதல் இல்லை என்று சமீபத்தில் புகாரளித்த செவிலியரான டான் வூட்டன் (Dawn Wooten) விளக்கினார். “அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்த இந்த பெண்களை நான் சந்தித்தபோது, இது ஒரு பரிசோதனைக்கான வதை முகாம் போல உள்ளது என்றே நான் நினைத்தேன்,” என்றும் “அவர்கள் நமது உடல்களை பரிசோதனைக்கு பயன்படுத்துவது போல இருந்தது” என்றும் வூட்டன் தெரிவித்தார்.

கருத்தடை எந்தளவிற்கு நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்த பெண்களில் ஒருவர், அக்டோபர் மற்றும் டிசம்பர் 2019 மாதங்களுக்கு இடையில் ICDC இல் தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில் ஐந்து பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டது பற்றி தனக்கு தெரியும் என்று Project South அமைப்பிற்கு தெரிவித்தார்.

ICDC இல் இந்த நடைமுறைகளை மேற்கொண்ட மருத்துவரைப் பற்றி வூட்டன் கூறுகையில், “அவர் சிகிச்சையளிக்கும் ஒவ்வொருவருக்கும் கருப்பை நீக்கம் செய்யப்பட்டுள்ளது, இது எல்லோருக்கும் பொருந்தும்” என்றார்.

“அதிலும் ஒரு இளம் பெண்ணிற்கு அவர் தவறான கருப்பை நீக்கம் கூட செய்துள்ளார்,” என்றும் வூட்டன் கூறினார். மேலும், “அந்த பெண்ணின் இடப்பக்க கருப்பையில் நீர்க்கட்டி இருந்ததால் அவளது இடது கருப்பை தான் அகற்றப்பட வேண்டும்; ஆனால் அவரோ அவளது வலப்பக்க கருப்பையை அகற்றிவிட்டார். அதனால் அவள் முற்றிலும் மனமொடிந்து போனாள். இந்நிலையில் தனது இடப்பக்க கருப்பையை நீக்க அவள் மீண்டும் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்த நிலையில், மொத்த கருப்பை நீக்க அறுவைசிகிச்சையால் அவள் பாதிக்கப்பட்டாள். அவள் இன்னமும் தனக்கு குழந்தைகள் வேண்டும் என்றே விரும்புகிறாள், ஆனால் இப்போது அவள் தனது வீட்டிற்குச் சென்று தனது கணவரிடம் தன்னால் குழந்தைகளை சுமக்க முடியாது என்று கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது… மேலும், அவள் மயக்கத்திலிருந்து முழுமையாக விடுபடாதிருந்தபோது, தவறான கருப்பையை தான் நீக்கிவிட்டதாக மருத்துவர் செவிலியரிடம் கூறியதை தான் கேட்டதாகவும் அவள் கூறினாள்” என்றும் வூட்டன் தெரிவித்தார்.

ஸ்பானிய சொற்றொடர்களை கூகுளில் தேடுவதையோ அல்லது அங்கு பின்பற்றப்படும் மருத்துவ நடைமுறைகள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள பிற தடுப்புக்காவல் கைதிகளையோ மருத்துவ ஊழியர்கள் நம்பியுள்ள நிலையில், ஒப்புதல் பெறுவதில் பெரும்பாலும் சிக்கல் இருப்பதாகவும் வூட்டன் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த புலம்பெயர்ந்த பெண்கள், அதாவது ஒட்டுமொத்தமாக அனைவரும், உண்மையிலேயே, தங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை தங்களுக்கு விளக்கமளிக்கும் நபர்களைப் பொறுத்து அனைத்தையும் புரிந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்றும் வூட்டன் தெரிவித்தார்.

Project South உடன் பேசிய ஒரு கைதி, மருத்துவமனையில் தனக்கு கோவிட்-19 க்கான நோயெதிர்ப்பு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தடுப்புக்காவல் மையத்திற்கு தான் திருப்பியனுப்பட்டதனால் மட்டுமே கருப்பையை நீக்கும் துயரகரமான அனுபவம் தனக்கு ஏற்படவில்லை என்ற தனது நிலையைப் பற்றி விவரித்தார்.

ஒரு மருத்துவர் அவளிடம் கருப்பை நீர்க்கட்டியை பிற பகுதி பாதிக்கப்படாமல் நீக்குவதற்கு மருத்துவமனைக்கு செல்லும்படி ஆரம்பத்தில் கூறியுள்ளார். என்றாலும், அறுவைசிகிச்சை நாளன்று, அவளை கொண்டு சென்ற அதிகாரி அவளிடம், உண்மையில், அவளுக்கு கருப்பை நீக்க அறுவைசிகிச்சை மூலம் அவளது கருப்பை அகற்றப்படப் போவதாகக் கூறினார். ஆனால், அவளுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று இருப்பது உறுதியானாதால் அந்த செயல்முறை தடுக்கப்பட்டது.

அவள் மீண்டும் ICDC க்கு அனுப்பப்பட்ட பின்னர், அவளுக்கு இருந்த கடுமையான இரத்தப்போக்கின் காரணமாக அவளுக்கு அந்த அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று ஒரு செவிலியர் அவளிடம் கூறினார். மேலும் அந்த செவிலியர், அவளது தடித்திருந்த கருப்பை சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அவளிடம் தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என்னவென்று ஒருபோதும் கண்டறியப்படவில்லை என்றும், மருத்துவர்கள் முற்றிலும் மாறுபட்ட செயல்முறை பற்றி பேசியதாகவும் அந்த பெண் விளக்கினார். கருப்பையை நீக்கம் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்று அந்த பெண் விளக்கமளித்தத்தைத் தொடர்ந்து செவிலியர் கோபமடைந்து கூச்சலிடத் தொடங்கினார். தனது அனுபவத்தை பிரதிபலிக்கும் விதமாக, அந்த பெண் “அவர்கள் எனது சரீரத்தில் குழப்பதை ஏற்படுத்த முயன்றதைப் போல உணர்ந்தேன்” என்று கூறினார்.

Project South இன் அறிக்கையும் வூட்டனின் சாட்சியங்களும், புற்றுநோய் மற்றும் ஹெச்.ஐ.வி. மருந்துகொடுக்கப்படுவதை நிறுத்திவைப்பது உட்பட, பல்வேறு வகையான மருத்துவ முறைகேடுகளை மதிப்பாய்வு செய்தன. கைதிகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும், மருத்துவ பிரிவு அவர்களுக்கு ibuprofen மாத்திரைகளை மட்டுமே வழங்கி அவர்களை மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்கு அனுப்பிவிடும்.

கோவிட்-19 நோய்தொற்று பரவாமல் தடுக்க கோவிட்-19 நோயாளிகளை கையாளுவது தொடர்பான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (Centers for Disease Control and Prevention-CDC) வழிகாட்டுதல்களை ICDC பலமுறை புறக்கணித்ததாக வூட்டன் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் இணையத்தில் வெளியிடப்பட்டதான ICDC கைதிகள் தங்களது பாதுகாப்புக்காக மன்றாடும் ஒரு காணொளியில், அவர்களுக்கு ஒரு ஒற்றை துணியோ அல்லது காகித முகக்கவசமோ வழங்கப்பட வேண்டுமென நிர்வாகத்தை கட்டாயப்படுத்தினர், என்றாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில், கைதிகள் துணி அல்லது உடைந்த உணவுக் கொள்கலன் துண்டுகளிலிருந்து தற்காலிக முகக்கவசங்களை தயாரித்து பயன்படுத்துவதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்டில் தடுப்பு மையத்தில் 41 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது, ஆனால் உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக அதிகமாக இருக்கும் என்று வூட்டன் கூறினார், கைதிகளை தீவிரமாக பரிசோதிக்க ICDC நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தாமாகவே கோரியவர்களுக்கு கூட பரிசோதனை செய்ய மறுக்கப்பட்டது என்பதுடன், கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட புள்ளிவிபரமும் முழுமையாக ICE அல்லது வெளியுறவுத் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்று ICE கூறியது. மேலும், கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ள நோயாளிகள் தற்போது கூட வேறு வசதிகளுக்கு மாற்றப்படுகிறார்கள் அல்லது நாடுகடத்தப்படுகிறார்கள், மேலும் புதிதாக வருபவர்களும் முறையாக தனிமைப்படுத்தப்படுவதில்லை என்ற நிலையில், வைரஸ் தொடர்ந்து பரவுவது உறுதியாகிறது. தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சுயமாக தெரிவித்த ஊழியர்கள் இன்னமும் தொடர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள், மேலும் இந்த நிலையத்தில் குறைந்தது 13 அதிகாரிகளுக்கு கோவிட்-19 நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப் தனது வலதுசாரி அடித்தளத்தை கட்டியெழுப்ப பாடுபட்டுக் கொண்டிருக்கையில், நவம்பர் 3 தேர்தலுக்கு முன்னதாக புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மீது அதிகரித்தளவில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மத்தியில், வூட்டன் அம்பலப்படுத்தியுள்ள கொடூரங்கள் வெளிவந்துள்ளன. திங்களன்று, எல் சால்வடோர், ஹைட்டி, நிக்காரகுவா மற்றும் சூடான் நாடுகளிலிருந்து தஞ்சம் புகுந்தவர்களுக்கான பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை ட்ரம்ப் நிர்வாகம் நீக்குவதற்கு வகை செய்ய ஒரு கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்ற குழு ஒப்புதல் அளித்தது, இதனால் அண்ணளவாக 400,000 பேருக்கு சட்டபூர்வமான அந்தஸ்து நீக்கப்படுகிறது, அதிலும் இவர்களில் பலர் அமெரிக்காவில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள், மேலும் குடிமக்களாக இருக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு இருக்கிறார்கள். ஒன்பதாவது சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (US Court of Appeals for the Ninth Circuit) 2-1 தீர்ப்பு புலம்பெயர்ந்தோர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், அவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு வழி செய்கிறது.

Loading