கோவிட்-19 உயிரிழப்புகள் ஒரு மில்லியனை நெருங்குகையில்

தொற்றுநோய்க்குத் தயாரிப்பு செய்ய தவறியதற்காக உலக சுகாதார அமைப்பு அரசாங்கங்களைக் கண்டிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துல்லியமாக கோவிட்-19 தன்மைகளைக் கொண்ட ஓர் உலகளாவிய தொற்றுநோய் அபாயம் குறித்து உலகெங்கிலுமான அரசாங்கங்கள் எச்சரிக்கப்பட்டிருந்தன என்பதையும், அதுபோன்றவொரு சம்பவத்தை தடுக்க அவை நடைமுறையளவில் எந்தவொரு தயாரிப்போ அல்லது வேலைகளோ செய்யவில்லை என்பதையும் கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட ஓர் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

பெருந்திரளான மக்களிடையே ஏற்படும் தொற்றுநோய்களின் வெடிப்பை எதிர்த்து போராடுவதற்குரிய சர்வதேச தயாரிப்பு நிலையைக் கண்காணிப்பதற்காக, உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கியால் கூட்டாக செயல்படுத்தப்படும் ஓர் அமைப்பான உலகளாவிய தயார்நிலை கண்காணிப்பு ஆணையம் (Global Preparedness Monitoring Board) அந்த அறிக்கையை வெளியிட்டது. அது தொடக்கத்திலேயே குறிப்பிடுகிறது: “ஒரு நாசகரமான தொற்றுநோயின் அபாயங்களைக் குறித்து இந்தளவுக்கு தெளிவாக உலகிற்கு இதுவரையில் ஒருபோதும் முன்னெச்சரிக்கை செய்திருக்கப்படவில்லை, அல்லது இதுபோன்றவொரு அச்சுறுத்தலைக் கையாள இதற்கு முன்னர் ஒருபோதும் இந்தளவுக்கு அறிவும், ஆதாரவளங்களும், தொழில்நுட்பங்களும் இருந்ததில்லை. இருந்தும் கூட, இது மாதிரியான பரந்த மற்றும் அழிவார்ந்த சமூக பொருளாதார பாதிப்புடன் கூடிய ஒரு தொற்றுநோயை உலகம் இதற்கு முன்னர் கண்டதில்லை.”

இதுபோன்ற எச்சரிக்கைகள் உலக சுகாதார அமைப்பாலேயே கூட வெளியிடப்பட்டிருந்தன. கடந்தாண்டின் "உலகம் அபாயத்தில் உள்ளது" என்ற அறிக்கையில், “உயிருக்கு ஆபத்துண்டாக்கும் ஒரு சுவாச நோய்கிருமியின் காரணமாக வேகமாக பரவும் தொற்றுநோய்" அச்சுறுத்தல் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும் மற்றும் பொருளாதார சீரழிவை உண்டாக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது என்பதை அது தெளிவுபடுத்தியது. அந்த எச்சரிக்கைகள் அமெரிக்காவினாலும் ஏனைய ஒவ்வொரு பிரதான சக்திகளாலும் உதறிவிடப்பட்டன.

இந்த விளைவு கடந்த நூற்றாண்டு உலக போர்களுக்குப் பின்னர் பார்த்திராத ஓர் உலகளாவிய பேரழிவாக உள்ளது. இவ்வார முடிவில், இந்த தொற்றுநோய்க்கு ஒரு மில்லியன் மனித உயிர்கள் இழக்கப்பட்டிருக்கும், இந்த எண்ணிக்கை 2021 இன் தொடக்கத்தில் இரட்டிப்பாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் இந்த நோயால் ஏற்படும் நீண்டகால உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நூறு மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை ஏற்கனவே வேலைவாய்ப்பு இழப்பாலும், சக தொழிலாளர்கள், அண்டைஅயலார், நண்பர்கள் மற்றும் குடும்பங்களின் உயிரிழப்புகளாலும் நொருங்கிப் போயுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கைகள் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டன என்பது மட்டுமல்ல, இந்த தொற்றுநோய் "பெரிதும் ஒன்றோடொன்று இணைந்த பொருளாதாரங்கள் மற்றும் சமூக அமைப்புமுறைகளின் பலவீனத்தையும், மற்றும் நம்பிக்கையின் பலவீனத்தையும் எடுத்துக்காட்டி" உள்ளது. அந்த ஆவணம் தொடர்ந்து குறிப்பிடுகையில், “அது தேசங்களுக்கு இடையேயும் சமூகங்களுக்கு உள்ளேயும் பிளவுகளைத் தீவிரப்படுத்தி உள்ளதுடன், அதை சாதகமாக்கிக் கொண்டுள்ளது. அது, சமூக பாதுகாப்பு இல்லாமல் உடல்நல பாதுகாப்பு இல்லை என்ற உறுதியான வார்த்தைகளில் நம்மை நினைவூட்டி, சமத்துவமின்மைகளை சாதகமாக்கிக் கொண்டுள்ளது. கோவிட்-19 உலகின் சீரழிவை ஆதாயமாக்கிக் கொண்டுள்ளது,” என்று குறிப்பிடுகிறது.

மிகவும் துல்லியமாக, கோவிட்-19 இன் பேரழிவுகரமான பாதிப்பு "உலக சீரழிவின்" விளைபொருளாகும். இந்த தொற்றுநோய் உலகெங்கிலுமான நாடுகளில் "ஜனரஞ்சகவாதம், தேசியவாதம் மற்றும் எதேச்சதிகாரவாதத்தின் அதிகரிப்புக்கு பங்களிப்பு" செய்திருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த தொற்றுநோய் "அரசியல் மோதல்களையும்" மற்றும் முன்னொருபோதும் இல்லாதளவில் சமூக சமத்துவமின்மை மட்டங்களுடன் பிணைந்த "அதிகரித்த பாதிப்புகளையும் எரியூட்டி" உள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தொற்றுநோய் பெரிதும் ஒருங்கிணைந்த இந்த நவீன சமூகத்தின் இயல்புக்கும் மற்றும் முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது.

இதன் விளைவாக, தொற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கு அவசியமான ஆதாரவளங்கள் கிடைக்கும் விதத்தில் ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு தொற்றுநோய்க்கு போதுமானளவில் தயாராக இருக்க உலகம் முழுவதிலும் மொத்தம் ஒவ்வொரு ஆண்டும் 40 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ள நிலையில், அந்த ஆவணத்தின் தரவுகள்படி, உலக அரசாங்கங்கள் ஆண்டுக்கு கூடுதலாக ஒரு நபருக்கு 5 டாலர் செலவிட்டிருந்திருக்க வேண்டும். இப்போதைய நிலையில், இந்த தொற்றுநோய்க்கு விடையிறுப்பாக செலவு இதுவரையில் 11 ட்ரில்லியன் டாலராக உள்ளதுடன், இன்னும் அதிகரித்து கொண்டிருக்கிறது. “பள்ளிகள் மூடப்பட்டதன் விளைவாகவும் ஓர் உலகளாவிய பின்னடைவின் விளைவாகவும்" இன்னும் கூடுதலாக 10 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது, இது இளம் தலைமுறையினர் மீதே மிகப்பெரும் சுமையாக விழும்.

அந்த அறிக்கை இந்த தொற்றுநோயின் உயிராபத்தான பக்க விளைவுகளைக் குறித்தும் குறிப்பிடுகிறது. “உலகெங்கிலும் தடுப்பூசி நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன, இது போலியோவைக் களைவதை அச்சுறுத்துவதுடன், சாத்தியமானளவில் தடுக்கக்கூடிய புதிய வெடிப்புகளுக்கு இட்டுச் செல்லக்கூடும், அவற்றினால் ஏற்படக்கூடிய மரணங்கள், நோய்கள் மற்றும் நீண்டகால பாதிப்புகளும் உள்ளன. எச்ஐவி, காசநோய் மற்றும் மலேரியா சிகிச்சைகளைப் பெறுவது தடைப்பட்டுள்ளதால் அது 2020-2021 மட்டுமே இன்னும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மரணங்களை ஏற்படுத்த அச்சுறுத்துகிறது.”

பிரசவ கால சிகிச்சைகள் மற்றும் உணவு வினியோகங்கள் தடைபடுவதால் அடுத்த ஆறு மாதங்களில் இன்னும் கூடுதலாக உலகெங்கிலும் 1.2 மில்லியன் குழந்தைகளும் 56,700 தாய்மார்களும் உயிரிழக்கக்கூடும் என்று இதுபோன்ற உத்தேச கணிப்புகள் மதிப்பிடுகின்றன.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அங்கே தீர்வே இல்லை. அமெரிக்காவில் ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு, 204,000 பேர் உயிரிழந்துள்ளனர். மே, ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பகுதியாக இந்த தொற்றுநோயைப் பெரிதும் குறைத்துக் காட்டியிருந்த ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மே அல்லது ஏப்ரலில் இருந்த அதிகபட்ச மட்டங்களுக்கு உயர்ந்துளது அல்லது அதற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வசந்தகால தொடக்கத்தில் இந்த தொற்றுநோயின் உலக குவிமையமாக விளங்கிய இத்தாலியே கூட, ஒவ்வொரு நாளும் அண்மித்து 1,500 புதிய நோயாளிகளுடன் மீண்டும் தொற்றுநோய்களின் அதிகரிப்பை அனுபவித்து வருகிறது. இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகள் விண்ணைத் தொடும் அளவுக்குத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஐரோப்பாவில் இந்த தொற்றுநோயின் அதிகரிப்பானது, விஞ்ஞானிகளும் மருத்துவ வல்லுனர்களும் அனுமானித்தவாறே மற்றும் எச்சரித்தவாறே, சமூக இடைவெளி மீதான கட்டுப்பாடுகளை நீக்கியதுடனும், அத்தியாவசியமல்லாத தொழில்துறைகள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறந்ததுடனும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்தளவுக்கு உயிரிழப்புகளும் பாதிப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருவதை வெறுமனே அந்த அறிக்கை குறிப்பிடுவதைப் போல "நல்லரசு" இல்லாததால் ஏற்படுவன என்று சாட்டிவிட முடியாது. ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும், மனித உயிர்களைப் பொருட்படுத்தாமல் அந்த வைரஸ் மக்களைத் தொற்றுவதை வேண்டுமென்ற அனுமதித்து—மறைமுகமாக, அதிகரித்தளவில் வெளிப்படையாக—"சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆட்கொலை கொள்கை உலகின் எல்லா முன்னணி அரசாங்கங்களிலும் பொதுவாக உள்ளது என்ற உண்மையானது, இந்த வைரஸிற்கு குற்றகரமான மற்றும் திறமையற்ற விடையிறுப்பை டொனால்ட் ட்ரம்ப் போன்ற தனிப்பட்ட தலைவர்களின் அகநிலையான தனிமனித பண்புகள் மீது சாட்டுவதற்கான முயற்சிகளைக் குறித்த பொய்மைகளை வழங்குகிறது. ட்ரம்பும், இந்தியாவில் மோடி மற்றும் பிரேசிலில் போல்சொனாரோ போன்ற ஏனைய பாசிசவாத தலைவர்களும், உலகை ஆளும் பெருநிறுவன நிதியியல் செல்வந்த தட்டுக்களின் குற்றகரமான இயல்புக்கு மிகவும் வெளிப்படையான ஆளுருவாக விளங்குகின்றனர். அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருப்பதே உலக அமைப்புமுறையாக முதலாளித்துவம் காட்டுமிராண்டித்தனம் மற்றும் போருக்குள் இறங்கி இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த வைரஸைக் கட்டுப்படுத்தவும் இல்லாதொழிக்கவும் அவசியப்படும் பகுத்தறிவார்ந்த, மனிதாபிமான விஞ்ஞான கொள்கைகளும், நிதியியல் ஆதாரவளங்களும், சர்வதேச கூட்டு ஒத்துழைப்பும் அரசாங்களது கொள்கைகளுக்குக் கட்டளையிடும் பில்லியனர்களின் பொருளாதார நலன்களைக் குறுக்காக வெட்டுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே, அவர்கள் அவர்களின் பங்குச் சொத்துமதிப்புகளைப் பாதுகாத்து விரிவாக்க செயல்பட்டு வந்தனர் என்பதுடன், அனேகமாக மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை விலையாக கொடுத்து, பெருநிறுவன பிணையெடுப்புகளுக்கு ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களை ஒழுங்குப்படுத்தினர்.

“இந்த மருத்துவ நெருக்கடியைக் கடந்து வர, நாம் இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்,” என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடந்த மாதம் ட்வீட் செய்தார். “நடைமுறையளவில் எல்லா குழந்தைகளுக்கும், ஏதோவொரு விதத்தில், இந்த கொரொனா வைரஸ் நோய்தொற்று ஏற்படலாம்,” என்று ஸ்பெயின் மாட்ரிட்டின் பிராந்திய முதல்வர் கடந்த புதன்கிழமை அறிவித்தார். இது ஜூனில் 300 ஆக இருந்த தினசரி நோய்தொற்றுகள் ஞாயிற்றுக்கிழமை 30,000 ஆக அதிகரித்துள்ள ஒரு நாட்டில் நடக்கிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் டவுன்ஹால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்" குறித்து கூறுவதற்கு முன்னதாக தன்னை வெளிப்படுத்தும் விதமாக, “உங்களுக்கு சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கும் மனோநிலை உருவாக்கப்படும்,” என்று கூறிய போது, மிகவும் வெளிப்படையாக இருந்தார். "சமூக நோயெதிர்ப்புச் சக்தி மனோநிலையைப் போலவே, அது நடத்தப்படும் — சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கம் செய்யப்படும், அது செய்யப்பட இருக்கிறது,” என்றவர் தொடர்ந்து கூறினார். இதன் விளைவாக இந்த தொற்றுநோய் "மறைந்துவிடும்" என்றார்.

மிகவும் மிதமான மதிப்பீடுகளின்படியே கூட, இதுபோன்றவொரு கொள்கை இறுதியில் வரவிருக்கும் ஆண்டுகளில் உலகளவில் கோவிட்-19 ஆல் 23 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும். கொரொனா வைரஸிற்கு "சமூக நோயெதிர்ப்புச்சக்தி பெருக்கம்" அபிவிருத்தி செய்கையில் உலக மக்களில் 71 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என்று மிகவும் நம்பகமான உத்தேச மதிப்புகள் எச்சரிக்கின்றன. அதுவும் இது மீண்டும் தொற்று ஏற்படும் விபரங்களைக் கணக்கில் எடுக்கவில்லை, இது குறித்து ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்றவொரு உலக பேரழிவு சூழல்களைத் தடுக்க ஒவ்வொரு முயற்சியும் செய்யப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுவதைப் போல, “அரசியல் தலைமையே" தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஆனால் முதலாளித்துவ அரசாங்கங்களின் அரசியல் தலைமை அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையாக இருக்கும்.

இது, இந்த தொற்றுநோய் ஏற்படவிருப்பது குறித்து எச்சரிக்கப்பட்டும் அதை அனுமதித்த அரசாங்கங்கள் மற்றும் நிதிய அமைப்புகளுக்கு முறையிடுவது குறித்த கேள்வியல்ல என்பதில் தொழிலாள வர்க்கம் தெளிவாக இருக்க வேண்டும்.

பேரழிவுகரமாக இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தவறியமை, மனித உயிர்களை விட தனியார் இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு சமூக அமைப்புமுறையின் விளைவாகும். ஒரு தொற்றுநோயைத் தடுக்க ஆண்டுக்கு அவசியப்படும் 40 பில்லியன் டாலர் மிகப் பெரிய செலவாக கருதப்பட்ட அதேவேளையில் தான், உலகெங்கிலும் இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்குகளும் பெருநிறுவன பிணையெடுப்புகளும் அதிகரித்தன.

இந்த நோயைக் கண்டறிந்து வேரூடன் களைய அவசியப்படும் சடரீதியிலான எல்லா பொருட்களையும் மற்றும் விஞ்ஞான ஆதாரவளங்களையும் ஒதுக்குமாறு உழைக்கும் மக்கள் கோர வேண்டும். இதற்கு இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ கட்டமைப்புக்கு எதிரான ஒரு போராட்டம் அவசியப்படுகிறது.

ஆசிரியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பல பிரிவுகளின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் வெளிப்படுத்தப்பட்டவாறு, உயிராபத்தாக வேலைக்குத் திரும்ப செய்வதற்கான முனைவுக்கு தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பானது, முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டி சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில், எல்லா நாடுகளினது தொழிலாளர்களின் வர்க்க நனவுப்பூர்வ, சுயாதீனமான அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

The coronavirus conspiracy: What did they know, and when did they know it?
[11 September 2020]

Loading