பல்லாயிரக்கணக்கான தாய்லாந்து எதிர்ப்பாளர்கள் புதிய அரசியலமைப்பிற்கு அழைப்பு விடுக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாங்காக்கில் உள்ள தம்மாசத் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த நிலையில், தாய்லாந்தின் மாணவர் தலைமையிலான எதிர்ப்பு இயக்கம் மக்கள்தொகையின் பரந்த அடுக்குகளுக்கு மத்தியிலும் பரவி வருகிறது.

2014 அமெரிக்க ஆதரவுபெற்ற மிக சமீபத்திய இராணுவ சதித்திட்டத்திற்கு பின்னர் ஆகஸ்ட் 16 இல் நடந்த கடைசி பெரும் பேரணியை காட்டிலுமான நாட்டின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது கருதப்படுகிறது.

இந்த கூட்டம் சனிக்கிழமை பிற்பகுதியில் தொடங்கி இரவு முழுவதும் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் முடிவடைந்தது. கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் 100,000 க்கும் அதிகமானவர்கள் இதில் கலந்து கொண்டதாக மதிப்பிட்டனர், அதேவேளை பாதுகாப்புப் படையினர் இந்த எண்ணிக்கையை 50,000 என குறைத்துக் காட்டுகின்றனர்.

பாங்காக்கின் காவல்துறை 18,000 க்கும் குறைவாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றதாக குறைந்த மதிப்பீட்டை வழங்கியது. என்றாலும், இதை சமூக பதட்டங்களை அதிகரிப்பதற்கான அறிகுறியாகவும் அரசு அடக்குமுறைக்கு அச்சுறுத்தலாகவும் கருதி, போராட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் 10,000 அதிகாரிகளை பொலிசார் அணிதிரட்டியிருந்தனர்.

பாங்காக்கின் சனாம் லுவாங்கில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் (Credit: @arulprk)

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, பல்கலைக்கழக மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பிரயுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha) அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்தளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Free Youth மற்றும் ஏனைய மாணவர் குழுக்கள் உட்பட இயக்கத்தின் தலைவர்கள், பிரயுத் இராஜினாமா செய்யவும் பாராளுமன்றத்தை கலைக்கவும் கோருகின்றனர், அத்துடன் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அரசாங்க விமர்சகர்களின் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

முன்னாள் ஜெனரலான பிரயுத், கடந்த ஆண்டின் மோசடி நிறைந்த தேர்தலில் பிரதமராக வருவதற்கு முன்னரே, 2014 ஆட்சிக் கவிழ்ப்பிற்கு சதித்திட்டம் தீட்டி, இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவராக இருந்து ஆட்சி செய்தவராவார்.

ஆர்ப்பாட்டத் தலைவர்கள் முடியாட்சியை சீர்திருத்தம் செய்வதற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் தான் அரியணையில் அமர்ந்தது முதல், மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் (King Maha Vajiralongkorn) முடியாட்சி சொத்துக்கள் மற்றும் இராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டை பலப்படுத்தியுள்ளார்.

சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்த மாணவர் குழுவான தம்மாசத் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கான ஐக்கிய முன்னணி (United Front of Thammasat and Demonstration), மன்னரின் அரசியலமைப்பு அதிகாரங்களைக் கட்டுப்படுத்தக் கோரி முன்னரே 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சிலர் தாய்லாந்தின் மாட்சிமைச் சட்டத்தை (lese majeste law) இரத்து செய்ய அழைப்பு விடுத்துள்ளனர், மன்னரை அவமதித்தாக கருதப்படும் எவரையும் 15 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்கு இது உட்படுத்தும்.

சனியன்று இரவு மன்னர் தாய்லாந்தில் இல்லை, அதாவது 2016 இல் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறியதிலிருந்து தனது பெரும்பகுதி நேரத்தை ஐரோப்பாவில் தான் அவர் செலவிட்டுள்ளார்.

பல வாரங்களுக்கு முன்னரே, இந்த எதிர்ப்பு ஒரு பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 19 என்பது, தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளவரும் பில்லியனர் ஜனரஞ்சகவாதியுமான பிரதமர் தாக்சின் ஷினாவத்ராவுக்கு (Thaksin Shinawatra) எதிராக முன்னர் நிகழ்த்தப்பட்ட 2006 இராணுவ ஆதரவுபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்தை நினைவுகூரும் வகையில் குறிப்பாக தேர்வு செய்யப்பட்டிருந்தது.

எதிர்ப்பாளர்களில் பலர் தாக்சனின் “சிவப்பு சட்டை அணியினராக” இருந்தனர், இவர்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அரசு சார்பு ஸ்தாபக “மஞ்சள் சட்டை அணியினருடன்” மோதினர் என்ற நிலையில், இராணுவத்தால் கொடூரமாக அடக்கப்படுவதற்கு முன்னரே இந்த மோதலில் 80 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

தாய்லாந்து இராணுவத்தை எதிர்க்கும் மாணவர் எதிர்ப்பிற்கான வரலாற்று மையமாக உள்ள தம்மாசத் பல்கலைக்கழகத்தின் பூட்டப்பட்ட வாயில்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரோஷமாக தகர்த்து நுழைந்தபோது இந்த சம்பவம் தொடங்கியது. வளாகத்திற்குள் பேரணியை நடத்த மாணவர் தலைவர்களுக்கு அனுமதி வழங்க பல்கலைக்கழகம் முன்னரே மறுத்து, அனைத்து வகுப்புகளையும் இரத்து செய்வதாகவும், வளாகத்தை மூடுவதாகவும் அறிவித்தது. பேரணியின் காரணமாக அருகிலுள்ள சில்பாகோர்ன் பல்கலைக்கழகமும் (Silpakorn University) மூடப்பட்டது.

அதிகரித்துக் கொண்டிருந்த கூட்டம், சனாம் லுவாங் (Sanam Luang), அல்லது “ராயல் மைதானம்” (“Royal Ground”) என்று அழைக்கப்படும் அருகேயுள்ள திறந்தவெளிக்கு சென்றது, அங்கு மழை பெய்து கொண்டிருந்தபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரங்களுக்கு பேச்சுக்களை கேட்டதுடன் இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்தனர். பாங்காக்கின் பெருமைமிக்க அரண்மனைக்கு (Bangkok’s Grand Palace) முன்னால் அமைந்துள்ள இந்த பகுதி பாரம்பரியமாக அரச தகன விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக “மக்கள் மைதானம்” என்று இதற்கு பெயரிடுவதாக எதிர்ப்பாளர்கள் அறிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், “இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது, பொய்யாகக் கூறப்பட்டதைப் போல இது மன்னரின் சொத்து அல்ல என்று இந்த இடத்தில் மக்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பித்தளையிலான ஒரு நினைவுகூரல் தகடு மைதானத்தில் சீமேந்து பூச்சுடன் பதிக்கப்பட்டது. தகடு பதிக்கப்பட்டபோது மக்களிடையே மகிழ்ச்சி வெடித்ததுடன், “நிலப்பிரபுத்துவம் ஒழிக, மக்கள் நீண்ட காலம் வாழ்க” என்ற கோஷத்தையும் அவர்கள் எழுப்பினர்.

1932 இல், சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளின் கூட்டணியான கானா ரட்ஷடோனால் (Khana Ratsadon) அரசியலமைப்பு முடியாட்சி ஸ்தாபிக்கப்பட்டதை குறிக்கும் ஒரு தகடு 2017 இல் காணாமற் போனதற்கு மற்றொரு மாற்றீடாக இந்த தகட்டை பதிக்க திட்டமிடப்பட்டது. இந்த எதிர்ப்பு ஒரு புதிய கானா ரட்ஷடோன் அல்லது “மக்கள் கட்சி” உருவாவதைக் குறிக்கிறது என்று மாணவர் தலைவர்கள் அறிவித்தனர்.

முடியாட்சி சீர்திருத்தம் தொடர்பான 10 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு கடிதத்தை வழங்குவதற்காக கூட்டம் அரசாங்க மாளிகையை நோக்கி அணிவகுத்துச் சென்றது, ஆனால் பொலிஸ் கட்டுப்பாட்டிலான தடைகளால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தனியுரிமை சபையில் (Privy Council) அந்த கடிதத்தை சமர்ப்பித்தனர். காவல்துறைத் தலைவரான புக்பாங் போங்பேத்ரா (Phukphong Phongpetra) ஒரு காணொளி ஒளிபரப்பில், இந்த கடிதத்தின் பேரில் இந்த விவகாரத்தை எவ்வாறு தொடர்வது என்பது பற்றி பொலிசார் தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.

இந்த இயக்கத்தின் தலைவரான பரித் சிவாரக் (Parit Chiwarak) கூட்டத்தினரிடம் இவ்வாறு தெரிவித்தார்: “இன்று இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். தாய்லாந்து மீண்டும் நாளை இதேமாதிரி இருக்காது என்பதை மட்டும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.”

தானோம் கிட்டிக்காசோரின் (Thanom Kittikachorn) இராணுவ சர்வாதிகாரத்தை கவிழ்த்த 1973 மாணவர் தலைமையிலான பாரிய எழுச்சியின் ஆண்டுதினமான அக்டோபர் 14 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொது வேலைநிறுத்தத்தில் தாய்லாந்தின் தொழிலாளர்களும் இணைந்துகொள்ளுமாறு பரித் ஊக்குவித்தார்.

எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாள வர்க்கமும் அதிகரித்தளவில் ஈடுபட்டு வருகிறது. பாங்காக்கில் உள்ள தொழிலாளர்களுக்கு கூடுதலாக, நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு எங்கிலுமான மாகாணங்களில் இருந்து, குறிப்பாக கோன் கான் (Khon Kaen) மாகாணத்திலிருந்து பேருந்துகள் நிரம்ப எதிர்ப்பாளர்கள் வந்திருந்தனர்.

கோவிட்-19 தொற்றுநோயின் சமூக தாக்கத்தால் தாய்லாந்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. பரவலான பணிநீக்க நடவடிக்கைகள், போதுமான நிதியுதவி இல்லாமை மற்றும் முதியோருக்கான தாமதமான ஓய்வூதியக் கொடுப்பனவுகள் போன்ற அனைத்தும் நாட்டின் எப்போதும் விரிவடைந்துவரும் சமூக சமத்துவமின்மைக்கு பங்களித்துள்ளன.

சியாம் வணிக வங்கியிலிருந்து (Siam Commercial Bank) மக்கள் தங்களது பணத்தை திரும்பப் பெறும்படி பரித் அழைப்பு விடுத்தார், இதில் 22 சதவிகித பங்குகளுடன் மன்னர் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கிறார். “வங்கியிலிருந்து உங்களது மொத்தப் பணத்தையும் எடுத்துவிட்டு வங்கி புத்தகங்களை எரியுங்கள்,” என்றும் கூறினார். ட்விட்டரில் பரித் முன்வைத்த கோரிக்கைகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் #แบนSCB (Ban SCB) என்ற ஹேஸ்டாக் பதிவுடன் 347,000 க்கும் மேற்பட்ட பதில் ட்வீட்டுக்கள் கிடைத்து ஆதரவு பெருகியது.

வளர்ந்துவரும் இயக்கம் குறித்து இராணுவ ஆதிக்கத்திலான அரசாங்கம் கொண்டுள்ள அச்சம் சமீபத்திய வாரங்களில் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கு அது எடுத்த இடைவிடாத முயற்சிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பேரணிகளில் பங்கேற்றதன் பின்னர் எதிர்ப்பாளர்களில் குறைந்தது 61 பேர் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், 28 தலைவர்கள் மீது அதிகாரிகள் தேசத்துரோக குற்றங்களை சுமத்தியுள்ளனர், அதே நேரத்தில் முடியாட்சியை விமர்சிக்கும் உள்ளடக்கத்தை மக்கள் பார்ப்பதைத் தடுக்கும்படி Facebook நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை, ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர், மாணவர் குழு தலைவர்களிடமிருந்து முடியாட்சி சீர்திருத்த கோரிக்கைகள் அடங்கிய 50,000 கையேடுகளை பொலிசார் பறிமுதல் செய்தனர், காரணம் கையேடுகளில் சட்டவிரோதமான உள்ளடக்கம் எதுவும் உள்ளதா என்பதை தீர்மானிக்க அவர்கள் விரும்பினர் என்று கூறப்படுகிறது. பேரணியின்போது அந்த கையேடுகளை விநியோகிக்க மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

லம்பூன் மற்றும் ஃபாயோ (Lamphun and Phayao) போன்ற வடக்கு மாகாணங்களிலிருந்து பாங்காக்கிற்கு பயணம் செய்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை இரவு பொலிஸ் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களது அடையாள அட்டைகள் அதிகாரிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பரித் தனது முகநூல் பக்கத்தில், பாங்காக் போராட்டத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த சியாங் மாய் (Chiang Mai) நகரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களின் வீடுகளுக்குச் சென்று பொலிசார் அவர்களை சந்தித்து பாங்காக் ஆர்ப்பாட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அவர்களிடம் கூறியதாக பதிவிட்டுள்ளார்.

இராணுவ ஆட்சிக் குழுவினால் வடிவமைக்கப்பட்ட தற்போதைய அரசியலமைப்பை திருத்துவதற்கான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு என திட்டமிடப்பட்டுள்ள அடுத்தகட்ட போராட்டம் வியாழக்கிழமை அன்று பாராளுமன்றத்தின் முன்பு நடைபெறவுள்ளது.

Loading