COVID-19: பிரெஞ்சு NPA இன் Révolution Permanente வலைத் தளம் மக்ரோனின் பள்ளி மறுதிறப்புக் கொள்கையுடன் இணைந்துகொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 பெரும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் சர்வதேச எதிர்ப்பின் மத்தியில், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) Révolution Permanente (RP) வலைத் தளமானது அரசின் கொள்கைக்கு தன்னை உடந்தையாக்கிக் கொள்கிறது. அரசு சுகாதார வழிகாட்டுதல்களை பற்றி தந்திரோபாய விமர்சனங்களைச் செய்துகொண்டு, பள்ளிகளை மீண்டும் திறப்பதை அது மெளனமாக ஆதரிக்கிறது. அதன் கோரிக்கைகள் பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிகளுடன் முற்றிலும் ஒத்துப்போகின்றன.

தொழிலாளர்களை ஆலைகளுக்கு மீண்டும் போவதற்கும், மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லுவதற்கு தள்ளுகின்ற முயற்சிகளை தொழிற்சங்கங்கள் எடுத்து வருகின்றன. ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பானது (CGT) வெளிப்படையாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மற்றும் ஜேர்மனிய சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அது மே 20 திகதியன்று ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்புடன் (DGB) கையெழுத்திட்டது. மே 20 ம் தேதி ஒரு அறிக்கையில், ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) மற்றும் பிரெஞ்சு கூட்டமைப்புகளான CFDT, CGT, FO, CFTC மற்றும் UNSA ஆகியவைகள் "கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பின்னர், மே 18, 2020 அன்று பிரெஞ்சு ஜனாதிபதியாலும் ஜேர்மனிய சான்சிலராலும் முன்வைக்கப்பட்ட ஐரோப்பிய பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பிராங்கோ-ஜேர்மன் முன்முயற்சியை குறிப்பாக பாராட்டுகிறது."

பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் பாரிய வங்கிப் பிணையெடுப்புக்கள் ஆகியவைகள் இந்த திட்டத்தின் மையத்தில் உள்ளன. பள்ளிக்கு மீண்டும் செல்லும் கொள்கை பெரும் தொற்றுநோயை துரிதப்படுத்துகிறது, இது ஏற்கனவே உலகளவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்களை இழந்துள்ளது. எல்லா இடங்களிலும் இந்த கொள்கைக்கு பெரும் எதிர்ப்பைத் தூண்டுகிறது. நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் அதைக் கண்டித்தன; நூற்றுக்கும் மேற்பட்ட முகநூல் குழுக்கள் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டு, நூறாயிரக்கணக்கான ஆதரவாளர்களை ஈர்க்கின்றன.

இந்த சூழலில், பிரெஞ்சு பள்ளிகளை எவ்வாறு மீண்டும் திறப்பது என்று விவாதிக்கும் தொடர் கட்டுரைகளை Révolution Permanente (RP) வெளியிட்டுள்ளது. “Covid உடன் மீண்டும் திறக்கிறது’’ என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரையில்: ‘பள்ளிகள் தயாராக இல்லை’ என்று மருத்துவர்கள் சங்கம் கூறுகிறது,” பள்ளி மறு திறப்புகள் “இஸ்ரேல் அல்லது சிலி போன்ற நாடுகள் பெரும் தொற்றுநோய்க்கு தீவிர தூண்டுதலாக அமைந்தது” என்று ஒப்புக்கொள்கிறது. உண்மையில், கடுமையான சமூக இடைவெளி நடவடிக்கைகள் இல்லாமல், ஜேர்மனியில் ஒரு மில்லியன் உயிர்களை இழக்க நேரிடும் என்று ஜேர்மன் உளவுத்துறை எதிர்பார்க்கிறது.

எவ்வாறாயினும், ஆபத்து வருவது பொறுப்பற்ற முறையில் மீண்டும் திறப்பதிலிருந்து அல்ல, ஆனால் "குழப்பம்" மற்றும் "சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட" அரச சுகாதார நெறிமுறைகளிலிருந்து (state health protocols) என்று Révolution Permanente (RP) கூறுகிறது: அதாவது “2020 மீண்டும் பள்ளிக்கு திருப்புதல் செப்டம்பர் 1 அன்று தொடங்கியது, பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் ஐந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் ரியூனியன் தீவில் ஒன்று என ஏற்கனவே வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் வகுப்புகள் மூடப்படுவதைக் காட்டிலும் கவலையாகவுள்ளமை இந்த சிறப்பு சூழ்நிலைகளில் இந்த புதிய பள்ளி ஆண்டில் ஆதிக்கம் செலுத்தும் பெரும் குழப்பத்தை பிரதிபலிக்கும் சீரற்ற சுகாதார நெறிமுறைகள் (health protocols).”

பள்ளிகளில் COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் இல்லாமையானது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை உந்தித் தள்ளும் என்று Révolution Permanente (RP) கவலைப்படுகிறது. "ஒரு குழப்பமான பள்ளி மறுதொடக்கம் என்று தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையில் அது எழுதுகிறது: இலவச முகமூடிகள், பாரிய பரிசோதனை மற்றும் ஆட்சேர்ப்பு எங்களுக்கு வேண்டும்," அது எழுதுகிறது: "போதுமான சுகாதார நடைமுறைகள் மற்றும் மனித வளங்கள் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பாக மாணவர்களைப் சேர்த்துக்கொள்ளுவதற்கான வழிமுறைகள் பற்றாக்குறை ஆகியவைகள் ஆசிரியர்கள் மத்தியிலான கோபங்களிற்கான காரணங்கள் குறைந்து போகவில்லை."

ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பும் கோரிக்கைகளையும், Révolution Permanente (RP) இன் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிராக அணிதிரட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்புவிட மறுக்கும் கோரிக்கைகளையும் ஒரு வர்க்க இடைவெளி பிரிக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஆபத்தானது ஒன்று அல்லது மற்றய பள்ளி மீண்டும் திறக்கும் நெறிமுறைகளிலிருந்து (reopening protocols) அல்ல, மாறாக ஒரு கொடிய பெரும் தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் உருவாகிறது.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை மரண அபாயங்களுக்கு உட்படுத்தியுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கும் மற்றும் வேலைக்கு மீண்டும் திரும்புவதற்கும் எதிராக ஒரு சர்வதேச பொது வேலைநிறுத்தத்தை தயாரிக்க மற்றய தொழிலாளர்களுடன் அணிதிரளுமாறு ஆசிரியர்களுக்கு உலக சோசலிச வலைத் தளமும் (பிரான்ஸ்) சோசலிசசமத்துவக்கட்சியும் (PES) அறைகூவல் விடுத்திருந்தது.

அமெரிக்காவில், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்கா முழுவதும் 1,000 பல்கலைக்கழக வளாகங்களில் 51,000 க்கும் மேற்பட்ட உறுதிசெய்யப்பட்ட தொற்றுக்குள்ளானவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அவற்றில் 35,000 பதிவுகள் கடந்த மூன்று வாரங்களில் நிகழ்ந்தன. பிரான்சில், பெருந் தொற்றுநோயின் விரைவான வளர்ச்சி மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. பிரான்ஸ் நாடு ஒரு நாளைக்கு சுமார் 10,000 புதிய தொற்றுநோய்களைப் பதிவுசெய்துள்ள நிலையில், 32 கல்வி நிறுவனங்கள் மற்றும் 524 வகுப்புகள் பள்ளிக்கு மீண்டும் திரும்பிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு மூடப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் உயரடுக்குகள் பாடசாலை மறுதிறப்புகளை முன்னெடுப்பதற்கு Révolution Permanente (RP) ஒரு "இடது" மறைப்பை வழங்குகிறது. Révolution Permanente (RP) ஆனது பள்ளி மறுதிறப்புகள் மற்றும் மீண்டும் வேலைக்குச் செல்லுதலை உந்தித்தள்ளுவதை எதிர்க்கவில்லை, மாறாக முற்றிலும் எதிராக அது இருக்கிறது. அது தனது பிற்போக்குத்தனமான கோரிக்கைகளை ஒரு "போர்க்குணமிக்க" வெளிச்சத்தில் முன்வைக்க முயற்சிக்கிறது. அதாவது இலவச முகமூடிகள் மற்றும் சோதனைகள் மாணவர்களுக்கும் மற்றும் ஆபத்தான மற்றும் கூட்ட நெரிசலான வகுப்பறைகளில் கற்பித்தலை நடத்தும் ஆசிரியர்களுக்கும் — ஆனால் Révolution Permanente (RP), தொழிற்சங்கக் கொள்கையுடன் இணக்கமாகவும் அரசுடன் சிறிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளது.

Révolution Permanente (RP) ஆனது, பள்ளி சுகாதார நெறிமுறைகளை மாற்றுவதற்கான கையாலாகாத அதனது அழைப்புகளுக்கு பின்னால், பள்ளி மறுதிறப்புகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே சமயம் ஆசிரியர்களும் தொழிலாளர்களும் பள்ளிக்கு மீண்டும் செல்லுதல் பிரச்சாரத்தையே எதிர்க்க வேண்டும்.

ஆசிரியர்களும் தொழிலாளர்களும் ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். Révolution Permanente (RP) ஆனது இந்தக் கொள்கையை மூடிமறைக்கிறது, இது ஒரு சதி அல்ல என்று வலியுறுத்துகிறது: அதாவது "ஆளும் உயரடுக்கின் சுகாதார மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் எந்த சதியும் இல்லை. ஆன்மீக இருளை கற்பனை செய்வதாக இது இருக்கும் (பின்னர் அது மாற்ற முடியும் என்ற ஒரு மனநிலையில்?), உண்மையில் அது வர்க்க நலன்களைப் பற்றிய பிரச்சினை மட்டுமே. விமான நிறுவனங்கள் அடிக்கடி நமக்கு நினைவூட்டுவது போல, ஒரு நெருக்கடியை வீணாக்கக் கூடாது."

உண்மையில், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாயாத நலன்களுக்காக மில்லியன் கணக்கான உயிர்களை தியாகம் செய்ய ஏற்றுக் கொள்வதை விட மோசமான "இருள்" இல்லை என்பதை வரலாறு காட்டியுள்ளது. ஆளும் உயரடுக்குகள் தொழிலாளர்களின் வாழ்க்கையை அவமதிப்பதை இந்தப் பெருந் தொற்றுநோய் காட்டியுள்ளது. பல மாதங்களாக, சர்வதேச அளவில் அரசாங்கங்களுக்கு புலனாய்வு அமைப்புகளாலும் மற்றும் சீன அதிகாரிகளாலும் வைரஸின் கொடிய தன்மை குறித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் நீண்ட காலமாக சமூக இடைவெளி, பொது முடக்க அடைத்தல்கள் போன்ற திறமையான நடவடிக்கைகளை எடுக்க மறுத்தனர். NPA போன்ற மத்தியதர வர்க்கக் கட்சிகளானது இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளை ஏற்றுக் கொண்டன.

இந்த ஆபத்தான சூழ்நிலைகளில் தொழிலாளர்களுக்கான ஒரே நீடித்து நிலைக்கத்தக்க மூலோபாயமானது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்தில், அனைவருக்கும் ஏற்புடைய நிலைமைகளில் பொது முடக்க அடைத்தலுக்கு அணிதிரட்டுவது, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக பாரிய வளங்களை செலவிடுவது மற்றும் சுகாதார செலவினங்களை பாரியளவில் அதிகரிப்பதாகும். இதற்கு தொழிற்சங்க எந்திரத்துடனும் மற்றும் ஆளும் ஸ்தாபகத்துடன் பிணைக்கப்பட்டுள்ள NPA போன்ற கட்சிகளுடன் ஒரு அரசியல் உடைவே இதற்குத் தேவைப்படுகிறது.

தொழிற்சங்கங்களுக்கு வெளியே தொழிலாளர்களின் தீவிரமயமாக்கல் வளர்ந்து வருவதை நனவாக உணர்ந்த Révolution Permanente (RP) ஆனது, ”முதலாளித்துவ வர்க்கம் பள்ளிக்கு மீண்டும் திரும்புவது மற்றும் அதன் விளைவுகளுக்கு மாற்றாக ஒரு மாற்றீடு முன்மொழியவேண்டும் என்ற நோக்கிலும் இந்த நிலைமையிலும் “ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் குழுக்கள் ஆனது பள்ளி நிர்வாகம் மற்றும் அரசிலிருந்து சுயாதீனமாக உருவாகிறது” என்று முன்மொழிகிறது.

RP ஆனது தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர் குழுக்களை உருவாக்க முன்மொழிகிறது. ஆனால் PES போலல்லாமல், தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் தொழிற்சங்கங்களில் இருந்து தீவிரமாக சுயாதீனமாக இருக்க வேண்டும் என்பதை அது தெளிவுபடுத்தவில்லை. ஏனென்றால், ஒட்டுமொத்தமாக NPA ஐப் போலவே, இது CGT தொழிற்சங்கத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த குழுக்களை தொழிற்சங்கங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கும் கீழ்ப்படுத்த விரும்புகிறது.

NPA ஆனது ஒட்டுமொத்தமாக தொழிற்சங்கங்களுடன் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த உயர் நடுத்தர வர்க்கத்தின் வசதிபடைத்த உறுப்புகளுக்காக பேசுகிறது. ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைக்கான அதன் ஆதரவு பொருள்சார் வர்க்க நலன்களில் வேரூன்றி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புகள் மூலம் நிதியப் பிரபுத்துவமானது பில்லியன் கணக்கான யூரோக்களை வங்கிகளுக்கும் நிதியச் சந்தைகளுக்கும் உட்செலுத்துகிறது. ஒருபுறம், அரசானது தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை மீண்டும் வேலைக்கும் பள்ளிக்கும் செல்லும்படி கட்டாயப்படுத்துகிறது. மறுபுறத்தில், இந்த நிதிப் பாய்ச்சல்களானது தொழிற்சங்கங்களின் கருவூலங்களிலும், வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தின் பங்கு முதலீடுகளிலும் தான் பாய்கின்றன.

ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் Révolution Permanente (RP) இலிருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்கக்கூடாது. தொழிற்சங்கங்களுடனும் அவர்களது கூட்டாளிகளான Révolution Permanente (RP) மற்றும் NPA போன்றவைகளுடனும் முறித்துக் கொள்வதுடன், தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த சுயாதீனமான குழுக்களை உருவாக்கும் பணியையும் மேலும் இந்த குழுக்களை பெருந் தொற்றுநோய்க்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான சோசலிசத்திற்கான போராட்டத்தில் அணிதிரட்டலையும் எதிர்கொள்கின்றனர்.

Loading