ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி தேர்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் டொனால்ட் ட்ரம்பால் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியாக மாற்றப்பட்டு வருகிறது, அவருக்கு எதிராக செல்லும் வாக்கெடுப்பின் எந்த முடிவுகளையும் ஏற்கப் போவதில்லை என்றவர் அறிவித்துள்ளார்.

புதன்கிழமை மாலை வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தில், “தேர்தலுக்குப் பின்னர் அமைதியாக அதிகாரத்தைக் கைமாற்றுவது குறித்து இன்று இங்கே உறுதியளிக்க" முடியுமா என்று ட்ரம்ப் கேட்கப்பட்டார். அவர் பதிலளித்தார்: “என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உங்களுக்கே தெரியும், இந்த வாக்குச்சீட்டு முறை குறித்து நான் மிகவும் பலமாக புகார் கூறியுள்ளேன். வாக்குச்சீட்டு முறை ஒரு பேரழிவு” என்றார்.

கேள்வி எழுப்பியவர் விடாது வற்புறுத்தியபோது, ட்ரம்ப் கூறினார், “மிகவும் அமைதியாக முன்னெடுத்துச் செல்லப்படும் — வெளிப்படையாக கூறுவதானால் பதவிக் கைமாற்றம் இருக்காது. அங்கே தொடர்ச்சியே இருக்கும்.”

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி Ruth Bader Ginsburg இன் மரணத்தால் காலியாகி இருந்த இடத்தை நிரப்ப துரிதமாக ஒரு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான ட்ரம்பின் தீர்மானம், கட்டவிழ்ந்து வரும் குற்றகரமான சூழ்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. அவர் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதற்கு ஆதரவாக முத்திரை குத்தும் நாகரீக சேவகர்களை உச்ச நீதிமன்றத்தில் திரட்டி வைத்திருக்க ட்ரம்ப் உத்தேசித்துள்ளார். “[இந்த தேர்தல்] உச்ச நீதிமன்றத்தில் போய் நிற்குமென நான் நினைக்கிறேன், நம்மிடம் ஒன்பது தலைமை நீதிபதிகள் இருப்பதை நான் மிகவும் முக்கியமானதாக நினைக்கிறேன்,” ட்ரம்ப் அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பை தூக்கியெறிவதற்கான தயாரிப்புகளும் நன்கு முன்னேறியுள்ளன என்பது இப்போது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. “அமெரிக்காவை உடைக்க இருக்கும் தேர்தல்" என்ற தலைப்பில் Atlantic இல் புதன்கிழமை வெளியான ஒரு கட்டுரை, சட்டத்தை தம் கரங்களில் எடுத்த வலதுசாரி குழுவினரை அணித்திரட்டுதல் மற்றும் எண்ணப்படாத வாக்குப்பெட்டிகளைக் கைப்பற்றுதல் ஆகியவை சம்பந்தப்பட்டிருக்கும், நவம்பர் 3 இன் பேராபத்தான சூழல் என்று குறிப்பிட்டு அது ஒரு சூழலை விவரிக்கிறது. தேர்தல் முடிவுகள் ட்ரம்புக்கு எதிராக சென்றால் அவற்றை எவ்வாறு மாற்றுவது என்பதன் மீது வெள்ளை மாளிகைக்குள் நடக்கும் விவாதங்களை Atlantic குறிப்பிட்டுக் காட்டுகிறது:

மாநில மற்றும் தேசிய மட்டங்களில் குடியரசுக் கட்சியின் ஆதாரநபர்களது கருத்துப்படி, தேர்தல் முடிவுகளை நிராகரித்து முன்நகர்வதற்கு அப்போதைக்கான திட்டங்களையும், குடியரசுக் கட்சியினர் சட்டமன்ற பெரும்பான்மை பெறக்கூடிய மாநிலங்களின் தேர்தல்களங்களில் விசுவாசமான வேட்பாளர்களை நியமிக்கவும் ட்ரம்ப் பிரச்சாரக் குழு விவாதித்து வருகிறது. கட்டுக்கடங்கா மோசடி வாதங்களின் அடிப்படையில் அமைந்த நியாயப்பாடுகளுடன், ட்ரம்ப் மக்களின் வாக்குகளை ஒதுக்கி விட்டு, வேட்பாளர்களை நேரடியாக அவர்களே தேர்ந்தெடுக்க அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு சட்டமன்ற உறுப்பினர்களைக் கோரக்கூடும்.

இவ்வாறு செய்கையில், ட்ரம்ப் 20 ஆண்டுகளுக்கு முன்னர் Bush v. Gore வழக்கில் தலைமை நீதிபதி அன்டோனின் ஸ்காலியாவின் வாதங்களின் அடிப்படையில் செயல்படக்கூடும், அப்போது உச்ச நீதிமன்றம் புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, தேர்தலை புஷ்ஷிடம் ஒப்படைக்க குறுக்கிட்டது.

ட்ரம்ப் ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவில்லை. அவர் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் ஒரு சதியை நடைமுறைக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இது, கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைக் கையிலெடுக்கவும் மற்றும் உள்நாட்டு போராட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்தவும் அச்சுறுத்தி, மொத்தத்தில், அவரின் ஜூன் 1 உரையில் தொடங்கப்பட்ட சதியின் தொடர்ச்சியாக உள்ளது.

ட்ரம்பும் அவரின் சக-சதிகாரர்களும் அவர்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் விதத்தில் உள்ள மூர்க்கத்தனத்திற்கும், ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடெனின் கோழைத்தனம் மற்றும் அலட்சியத்திற்கும் இடையே மலைப்பூட்டும் அளவிற்கு எதிர்முரணான முரண்பாடு உள்ளது. ட்ரம்ப் சட்டவிரோதமாக பதவியைத் தக்க வைத்துக் கொள்ள உதவியாக உச்ச நீதிமன்றத்தில் அவர் ஆட்களைத் திரட்டுவதற்குத் திட்டமிட்டு வரும் நிலையிலும் கூட, ஜனநாயகக் கட்சியினரோ நவம்பர் தேர்தலுக்கு முன்னதாக வேறொரு நீதிபதியை ட்ரம்ப் நியமிப்பதைத் தடுக்க அங்கே எதையும் செய்வதற்கில்லை என்று அறிவித்துள்ளனர்.

கீன்ஸ்பேர்க்கின் காலியிடத்தை ட்ரம்ப் நிரப்புவதை அவர் ஆதரிக்க இருப்பதாக குடியரசு கட்சி செனட்டர் மிட் ரோம்னி செவ்வாய்கிழமை அறிவித்த பின்னர், ட்ரம்புடன் முறித்துக் கொள்ளும் நான்கு குடியரசுக் கட்சியினர் மற்றும் செனட்டின் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கொன்னல் ஆகியோரைக் கண்டுபிடிக்கும், அதன் மூலம் உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பைத் தடுக்கும், அவ்விதத்தில் அதை தடுக்க முடியும் என்பதைப் போல, அவர்களின் "எதிர்ப்பு" மூலோபாயத்தை ஜனநாயகக் கட்சியினர் கைவிட்டனர்.

செனட் சிறுபான்மைத் தலைவர் சார்லஸ் ஷுமர் "அனைத்து சாத்தியக்கூறுகளும் மேசையில் உள்ளன" என்று அறிவித்துள்ளார், ஆனால் உச்சநீதிமன்ற வேட்பாளர் உறுதி செய்யப்பட்ட பின்னரே, ஜனநாயகக் கட்சியினர் செனட் மற்றும் வெள்ளை மாளிகை இரண்டின் கட்டுப்பாட்டையும் வென்றால் மட்டுமே. ஆனால் வெள்ளை மாளிகையில் தனது நிலையை தக்க வைக்கும் ட்ரம்பின் மூலோபாயத்திற்கு உச்ச நீதிமன்ற வேட்பாளர் தேர்வு முக்கியமானதாக உள்ளது.

அவரின் அம்புக்கூண்டு "அம்புகளால் நிறைந்திருப்பதாக" அறிவித்த, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, செவ்வாய்கிழமை, தேர்தலுக்குப் பின்னர் வரையில் மத்திய அரசுக்கான நிதியை நீடிக்க நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுச்சுடன் ஓர் உடன்பாட்டை எட்டியதன் மூலமாக, ட்ரம்ப் அவரின் உச்ச நீதிமன்ற வேட்பாளர் மூலமாக முன்நகர்த்தக்கூடிய முயற்சிக்கு விடையிறுப்பாக அரசு முடங்குவதற்கு இருந்த அச்சுறுத்தலை நீக்கினார்.

இந்த கோழைத்தனமான சரணடைவுடன், ஜனநாயகக் கட்சியினர் உச்ச நீதிமன்ற ஆசனத்தை மட்டும் வழங்கவில்லை, அவர்கள் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு சரணடைவதை நோக்கி நீண்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறை குழு தலைவர் Adam Schiff புதன்கிழமை கூறுகையில், ட்ரம்ப் "மில்லியன் கணக்கானவர்களின் வாக்குகளை அவமதிக்கவும், மில்லியன் கணக்கானவர்களின் வாக்குரிமையைப் பறிக்க உச்ச நீதிமன்றத்தில் தஞ்சமடையவும், தன்னைப் பதவியில் நிலைநிறுத்திக் கொள்ளவும்" முயன்று வருகிறார் என்றதுடன், இவ்விதமாக “ஜனநாயகங்கள் எவ்வாறு முடிவடைகின்றன என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்" என்று எச்சரித்தார்.

ட்ரம்ப் நடவடிக்கைகளுக்கு "வெளிநாட்டு உதவி" மீது பழிபோட்டதற்குக் கூடுதலாக, எதிர்கால ஜனாதிபதிகளைக் கட்டுப்படுத்தும் சட்டமசோதாவைப் பரிந்துரைத்தது மட்டுமே Schiff இன் ஒரே விடையிறுப்பாக இருந்தது. “ட்ரம்ப் மற்றும் ட்ரம்பிசத்தைப் பெருவாரியாக நிராகரிப்பதைக் காட்டும் விதமாக [வாக்காளர்கள்] பாரியளவிலான எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள்" என்றவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தற்போது பதவி வகிப்பவரைப் பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி வேட்பாளர் பெருவாரியான வாக்குகளைப் பெற வேண்டும் என்பது அரசியலமைப்புக்கு அவசியமில்லை. Schiff இன் அறிக்கை, பைடென் பெருவாரியான வெற்றிக்குக் குறைவாக எதையேனும் பெற்றால் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புக்கு அடிபணிவார்கள் என்ற ஓர் பிரகடனத்திற்கு நிகராக உள்ளது.

பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினரில் உளவுத்துறை முகமைகளுக்கு மிக நெருக்கமான ஒருவரான Elissa Slotkin நேற்று கூறுகையில், ட்ரம்ப் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்த முயன்று வருகிறார், அவர் உயர்மட்ட ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார் என்பது உள்ளார்ந்துள்ளது என்றார். “மிகவும் உயர்மட்ட அதிகாரிகள் பலர் அவருக்கு உதவாமல் ஜனாதிபதியால் தேர்தல் முடிவுகளை வெற்றிகரமாக மறுக்க முடியாது,” என்றவர் ட்வீட் செய்தார்.

ஆனால் ட்ரம்ப் ஒத்துழைக்க மறுத்தால் அதிகாரத்தைக் கைமாற்றுவதை பென்டகன் அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள் என்பதை அவர்களிடமிருந்து உத்தரவாதம் பெற அப்பெண்மணி முயன்று வருவதாக குறிப்பிட்டு, வெறுமனே இராணுவத்திற்கு முறையிட்டதே அவரின் விடையிறுப்பாக இருந்தது. “தலைமை அரசு தரப்பு வழக்கறிஞர், பாதுகாப்புத்துறை செயலர், முப்படைகளின் தலைமைத் தளபதிகளின் தலைவர், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலருக்கு,” “வரலாறு உங்களிடம் வருகிறது, நீங்கள் தான் ஒரு முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.

ட்ரம்பின் சூழ்ச்சிக்கு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளரின் மிதமான விடையிறுப்பு, அனைத்திற்கும் மேலாக, எதிர்க்குமாறு விடுக்கப்படும் எந்தவொரு அழைப்பும் அடிமட்டத்திலிருந்து ஒரு பாரிய இயக்கத்தைத் தூண்டிவிடலாம், அது கட்டுப்பாட்டை மீறி முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களையே அச்சுறுத்தக்கூடும் என்ற அதன் அச்சத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்றவொரு அபிவிருத்தி வேறெதையும் விட மிகவும் பயங்கரமானதாக ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகின்றனர். ட்ரம்புக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை, ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கை கோருவதன் மீது மையமிட்டிருந்த, வெளியுறவு கொள்கை மீதான ஆளும் வர்க்கத்திற்குள் நிலவிய மோதல்களுக்குப் பின்னால் திசைதிருப்புவதில் தான் கடந்த நான்காண்டுகளாக அவர்களின் ஒட்டுமொத்த ஒருங்குவிப்பும் இருந்துள்ளது.

ட்ரம்புக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் அடிபணிய செய்வது ஓர் அரசியல் பேரழிவுக்கு மட்டுமே இட்டுச் செல்லும்.

அமெரிக்க ஜனநாயகம் பொறிந்து வருவதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ட்ரம்பின் மொழி, பாசிசத்தின், சர்வாதிகாரத்தின், உள்நாட்டு போரின் மொழியாகும். இதற்கிடையே, அவரின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான ஆற்றலை ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புக்கு வழங்கி வருவதுடன், அவர்கள் அதிகாரத்திற்கு வந்தாலும், அவர்களும் இதே அடிப்படை வர்க்க கொள்கையையே நடைமுறைப்படுத்துவார்கள்.

அமெரிக்காவின் அரசியல் நெருக்கடிக்கு அடியில், என்ன கட்டவிழ்ந்து வருகிறது என்றால், அவ்விரு அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்தும் பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு பாரிய மோதல் கட்டவிழ்ந்து கொண்டிருக்கிறது. ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியானது முற்றிலுமாக "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" ஆளும் வர்க்க கொள்கையுடன் பிணைந்துள்ளது—அதாவது இந்த தொற்றுநோய் பரவி வருவதற்கு மத்தியிலும் தொழிலாளர்களைத் தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்திப்பதற்கும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்குமான முனைவு, மற்றும் செல்வந்தர்களுக்கு செல்வ வளத்தைப் பாரியளவில் மறுபகிர்வு செய்ய இந்த தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொள்வதுடனும் பிணைந்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமானது, மற்றும் பாரியளவில் சமூக நெருக்கடி, முடிவில்லா பொலிஸ் வன்முறை அலை மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டமானது, முற்றிலும் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே இப்போதைய முக்கிய பிரச்சினையாகும். வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் இந்த நெருக்கடியின் தர்க்கம், உழைக்கும் மக்களின் முன்னால் ஓர் அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை முன்நிறுத்தி உள்ளது. ட்ரம்பின் குற்றகரமான சதிக்கு எதிர்ப்பைத் தயார் செய்வதற்கு, உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டிலான மக்கள் அமைப்புகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

லூயிஸ்வில்லில் Breonna Taylor இன் பொலிஸ் படுகொலையை நேற்று பூசிமொழிகியதால் தூண்டிவிடப்பட்டவை உட்பட வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் இந்த அதிகரித்து வரும் அலை, ட்ரம்பைப் பதவியிலிருந்து நீக்குவதைக் கோரும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குள் ஒன்று திரள வேண்டும்.

Loading