பிரென்னா டெய்லரைக் கொன்றவர்களைக் குற்றமற்றவர்களாக ஆக்கியதற்கு பின்னர்: பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னோக்கிய பாதை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அரசால் பூசிமொழுகப்பட்டுள்ள ஒரு கொடூரமான பொலிஸ் படுகொலைக்கு விடையிறுப்பாக மீண்டுமொருமுறை அமெரிக்கா எங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சம்பவத்தில், கென்டக்கியின் லூயிஸ்வில்லில் பிரென்னா டெய்லர் மார்ச் 13 அதிகாலை அவரது வீட்டில் பொலிஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்டதற்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாது என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டதற்கு விடையிறுப்பாக மக்கள் கோபம் எழுந்துள்ளது.

மின்னிசொடாவின் மினெயாபொலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிஸ் படுகொலை பொலிஸ் வன்முறை பல இனத்தவரும் பல வம்சாவழி சார்ந்தவர்களும் கலந்து கொண்ட பாரிய போராட்டங்களைத் தூண்டிவிட்டு நான்கு மாதங்களுக்குப் பின்னரும், விஸ்கான்சினில் கெனொசாவில் ஜேகப் பிளேக் பொலிஸால் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னரும், இந்த போராட்டங்கள் வந்துள்ளன.

டெய்லரின் நண்பர் கென்னெத் வால்க் தான் முதலில் சுட்டார் என்பதற்காக டெய்லரைக் கொல்ல சரமாரியான தோட்டாக்களைச் சுட்ட இரண்டு அதிகாரிகளுக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட போவதில்லை என்று இந்த சம்பவத்தில் சிறப்பு புலன்விசாரணையாளராக செயல்பட்டு பெரு நடுவர் மன்றத்திற்கு ஆதாரங்களை வழங்கிய குடியரசு கட்சியின் கென்டக்கி துணைநிலை ஆளுநர் (Attorney General) டானியல் கேமரோன் தெரிவித்துள்ளார். தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸிற்கு எதிராக தற்காப்புக்காக செயல்பட்டதாக வால்கர் கூறியுள்ளார்.

டெய்லரை சுட்டதற்காக அல்ல, மாறாக சுடப்பட்ட தோட்டாக்கள் மற்றொருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பம் வரை சென்றதால், பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் "பொறுப்பின்றி ஆபத்து ஏற்படுத்தியதற்காக" மட்டுமே ஒரேயொரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொலிஸ் நள்ளிரவில் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்கள் கண்ணில் படும் எவரொருவரையும் கொல்ல விலக்கீட்டுரிமை பெற்றுள்ளனர் என்றாகிறது.

மீண்டுமொருமுறை, கனரக கவச வாகனங்களில் கலகம் ஒடுக்கும் துணைக்கருவிகளுடன் வந்த பொலிஸ் போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை நோக்கி கண்ணீர் புகைக்குண்டுகள், மிளகுப்பொடி மற்றும் இரப்பர் தோட்டாக்களை வீசியது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், லூயிஸ்வில்லிலும் நாடெங்கிலும் பொலிஸால் அவர்கள் மூர்க்கமாக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பொலிஸ் முகவர்கள் இந்த கோடைக்காலத்தின் பெரும்பாலான சம்பவங்களில் செய்ததைப் போலவே, போர்ட்லாந்திலும், வியாழக்கிழமை இரவு மத்திய அரசு பாதுகாப்பு சாதனங்களுக்குப் பின்னால் நின்றவாறு மிளகு பந்துகளை எறிந்து, போராட்டக்காரர்களைத் தாக்குவதில் பொலிஸிற்கு உதவி செய்தனர்.

லூயிஸ்வில் நகர மையப்பகுதியில் திங்கட்கிழமை சமூக அடைப்பு செய்யப்பட்டு, பெரு நடுவர் மன்றம் அதன் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. கென்டக்கியின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் தேசிய பாதுகாப்புப் படையை எச்சரிக்கைப்படுத்தி இருந்தார், லூயிஸ்வில்லின் ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவர் இரவு 9 மணிக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி உள்ளார்.

டெய்லரின் படுகொலை பூசிமொழுகப்படுவது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கான அடிப்படை அரசியல் பிரச்சினைகளை எழுப்புகிறது.

பொலிஸ் வன்முறையைத் தூண்டிவிடுவதும் எதிர்ப்பை மூர்க்கமாக ஒடுக்குவதும் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் உள்ளார்ந்த பாகமாக உள்ளது. ஜூன் 1 இல், ட்ரம்ப், ஃபுளோய்ட் படுகொலை மீதெழுந்த பாரிய போராட்டங்களை, கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கும் மற்றும் உள்நாட்டு எதிர்ப்புக்கு எதிராக அமெரிக்கா எங்கிலும் இராணுவப் படைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சியில் கைப்பற்றி இருந்தார். அதற்கடுத்து அவர் போர்ட்லாந்தில் போராட்டக்காரர்களைக் கடத்துவதற்கு உள்நாட்டு பாதுகாப்புத்துறையில் மத்திய அரசு பொலிஸை அணித்திரட்டினார்.

கெனொசாவில் இரண்டு போராட்டக்காரர்களைச் கொன்ற 17 வயதான குடிப்படை குழு உறுப்பினர் கைய்ல் ரிட்டன்ஹவுஸை கடந்த மாதம் ட்ரம்ப் பகிரங்கமாக பாதுகாத்தார். இம்மாத ஆரம்பத்தில், போர்ட்லாந்து போராட்டாக்காரர் Michael Reinoehl ஐ இலக்கு வைத்து படுகொலை செய்ததைப் போன்ற அதே மாதிரியான "பதிலடி" வடிவங்களை நடத்துமாறு அவர் ஆதரவாளர்களுக்கு வலியுறுத்தி, அந்த சம்பவத்தை ட்ரம்ப் பாராட்டி இருந்தார்.

தேர்தல்களுக்கு வெறும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அவருக்கு எதிராக சென்றால் அதை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்து, இப்போது அவர் தேர்தல்களை ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக மாற்ற முயற்சித்து வருகிறார். லூயிஸ்வில் மற்றும் ஏனைய நகரங்களின் வீதிகளில், தேர்தல் நாளிலும் அதைச் சுற்றியும் செய்ய வேண்டிய நிர்வாக அணுகுமுறைகளைத் திட்டமிட்டு பரிசோதித்து வருகிறது. சட்டத்தை தம் கரங்களில் எடுத்த அதிவலது அமைப்புகளை அணித்திரட்டுவது மற்றும் வன்முறையான மோதல்களைத் தூண்டிவிடுவது ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.

ஃபுளோய்ட் படுகொலையை தொடர்ந்து வெடித்த பாரிய போராட்டங்களைக் கைப்பற்றி மக்கள் கோபத்தை இன அரசியலுக்குப் பின்னாலும், இறுதியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடெனின் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னால் திருப்பியதன் மூலமாக ஜனநாயகக் கட்சி அவற்றுக்கு விடையிறுத்தது.

“வெள்ளையினத்தின் மேலாதிக்கம்" மற்றும் "அமைப்புரீதியில் நிலவும் இனவாதமே" பொலிஸ் வன்முறைக்குக் காரணம் என்றும், சிறுபான்மையின அதிகாரிகளையும் பொலிஸ் தலைவர்களையும் அதிகமாக நியமிப்பதன்மூலமாகவும் அத்துடன் அதிக கறுப்பின அதிகாரிகளைத் தேர்தலில் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவும் அதை தீர்க்க முடியும் என்றும், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர். அதே நேரத்தில், பைடெனும் அவருடன் இணைந்து போட்டியிடும் செனட்டர் கமலா ஹாரீஸூம் "பொலிஸிற்கான நிதி குறைப்பு" மீதான கோரிக்கைகளை நிராகரித்தும், போராட்டக்காரர்களை "அராஜாகவாதிகள்" மற்றும் "தீயிட்டு கொளுத்துபவர்கள்" என்று அவர்கள் கண்டிக்கும் ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சாரத்தைத் தொடங்கியதன் மூலமாகவும், பொலிஸிற்கான அவர்களின் விடாப்பிடியான ஆதரவைத் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இனப் பிளவு அரசியலை ஊக்குவிப்பதானது, வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களை அச்சுறுத்தும் விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அணித்திரள்வையும் தடுப்பதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சியுடன் கைகோர்த்துச் செல்கிறது. ட்ரம்ப் செயலூக்கத்துடன் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குச் சூழ்ச்சி செய்து வருகையில், ஜனநாயகக் கட்சியினரோ அந்த நிர்வாகத்திற்கு எதிரான எந்தவொரு பாரிய இயக்கத்தையும் தடம் புரளச் செய்ய முயன்று வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள அமைப்புகளின் இனவாத அரசியல் அடிப்படை வர்க்க பிரச்சினைகளை முக்கியமற்றதாக ஆக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. பொலிஸ் வன்முறை பிரச்சினை, தென் ஆபிரிக்கா மற்றும் கென்யாவில் இருந்து பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வரையில் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தைப் பீடித்துள்ளது. பொலிஸ் வன்முறை மற்றும் அதன் உலகளாவிய தன்மையின் பலமான தன்மை முதலாளித்துவ அரசின் இயல்பையும் முதலாளித்து சமூகத்தின் இதயதானத்தில் உள்ள வர்க்க சுரண்டலையும் குறித்து பேசுகின்றன, இதில் ஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்புகளாக பொலிஸ் அவற்றைத் தாங்கிப் பிடிக்க பணிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் வன்முறைக்குப் பாரபட்சமாக ஆபிரிக்க அமெரிக்கர்கள் பலியாகி உள்ளார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ஏனென்றால் பிரதானமாக அவர்கள் விகிதாச்சாரத்திற்குப் பொருந்தாத விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட வறிய அடுக்குகளின் பிரிவாக உள்ளனர் என்ற உண்மையின் விளைவாகும்.

இனவாதம் ஒரு பாத்திரம் வகிக்கிறது, உள்ளாட்சியிலும் மத்திய அரசு மட்டத்திலும் பொலிஸ் படைகளுக்குள் பாசிசவாத கூறுபாடுகள் நியமிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன என்பது நன்கறியப்பட்டுள்ளது. ஆனால் கறுப்பின அரசியல்வாதிகளை அதிகமாக தேர்ந்தெடுப்பதால் பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என்ற கருத்து கென்டக்கி அட்டார்னி ஜெனரல் கேமரூன் வகிக்கும் பாத்திரத்தால் மறுத்தளிக்கப்படுகிறது, ஆபிரிக்க அமெரிக்கரான இவர், பெருநடுவர் மன்றம் அதன் முடிவை முன்னெடுப்பதில், குடியரசு கட்சியின் உயர்ந்து வரும் நட்சத்திரமாக விளங்குகிறார். டெய்லர் சம்பவத்தை அவர் கையாளும் விதம் குறித்து ட்ரம்ப் "அருமை" என்று பாராட்டி இருந்தார்.

முதல் கறுப்பின ஜனாதிபதியான ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ், பொலிஸ் வன்முறை தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்தது. 2014 இல் மைக்கெல் பிரௌன் படுகொலையை அடுத்து எழுந்த போராட்டங்கள் மத்திய அரசின் உதவியுடன் பொலிஸால் வக்கிரமாக ஒடுக்கப்பட்டன.

துணை ஜனாதிபதி பதவிக்காக ஜனநாயகக் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் ஆபிரிக்க அமெரிக்கரான செனட்டர் கமலா ஹாரீஸ் —முதலில் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட அரசு வழக்குரைஞராகவும் பின்னர் கலிபோர்னியாவின் தலைமை அரசு வழக்குரைஞராகவும்— கொலை செய்த பொலிஸ்காரர்கள் மீது வழக்கு தொடுக்காமல் செய்வதிலும், மாநிலத்தின் நெரிசலான சிறை அமைப்புமுறையையும் பாதுகாப்பதிலும் நீண்ட வரலாறைக் கொண்டுள்ளார். மிகவும் அவமானகரமாக, அவர் 2014 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸால் Ezell Ford இன் படுகொலை செய்யப்பட்டதையும், சான் பிரான்சிஸ்கோவில் மாரியோ வூட்ஸின் 2015 படுகொலையையும் விசாரிக்க மறுத்ததுடன், அவ்விரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வர போவதில்லை என்று முடிவெடுத்த உள்ளாட்சி ஜனநாயகக் கட்சி வழக்குதொடுநர்களுக்கு இணக்கமாக இருந்தார்.

பொலிஸ் வன்முறை பிரச்சினையானது, அதிகாரிகளுக்கும் "பல நிற சமூகங்களுக்கும்" இடையிலான ஒரு "நம்பிக்கை" —அதாவது, “வெள்ளையின அமெரிக்காவுக்கும்" “கறுப்பின அமெரிக்காவுக்கும்" இடையிலான மோதல்— என்ற ஊடகங்களின் சொல்லாடல்களுடன் இணைந்த விதத்தில், அது ஏனைய இன அல்லது வம்சாவழி பின்புலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறையை உதறித்தள்ளி விட்டு, பிரத்யேகமாக ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் மீது ஒருமுனைப்பட்டுள்ளது.

சால்ட் லேக் நகரில் 13 வயதான ஆட்டிச பிரச்சினை கொண்ட சிறுவன் லிண்டன் கேமரூனை பொலிஸ் சுட்டுக் கொன்றமை மற்றும் மிசோரியில் நகர துணை உயரதிகாரியால் 26 வயதான சில்லறைக்கடை கடை உதவியாளர் ஹன்னா ஃபிட்ஜர், இவரும் வெள்ளையினத்தவர், கொல்லப்பட்டமை ஆகியவை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் போராட்டங்களுக்கு மத்தியிலும், மிகக் குறைவாகவே தேசிய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

இனத்தை பொருட்படுத்தாமல், கொல்லப்பட்டவர்களும் மூர்க்கமான நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டவர்களும் பெருவாரியாக தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் பொலிஸ் வன்முறை எங்கும் வியாபித்திருப்பது முன்னொருபோதும் இல்லாத மட்டங்களுக்கு வர்க்க பதட்டங்களும் சமூக சமத்துவமின்மையும் அதிகரித்திருப்பதுடன் பிணைந்துள்ளது. பொலிஸ், முதலாளித்துவ சொத்துறவுகளைப் பாதுகாப்பதற்காக அரசின் முன் வரிசையில் உள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்பட்டிருப்பதை, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கோபம் மற்றும் எதிர்ப்பிற்கு வெளியே புரிந்து கொள்ள முடியாது. அமெரிக்காவில் ஒரு சமூக மற்றும் பொருளாதார பேரழிவு முன்நகர்ந்து கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கானவர்கள் வேலைவாய்ப்பின்றி, வறுமை மற்றும் வெளியேற்றத்தை முகங்கொடுக்கின்றனர். இரு கட்சிகளது "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையின் விளைவாக, இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி சீறி வருகிறது. இந்த பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பை பரந்த வர்க்க பிரச்சினைகளில் இருந்து தனிமைப்படுத்தி விட முடியாது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும், இதற்கு இன, வம்சாவழி மற்றும் பாலின வழிகளைக் கடந்து சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது அவசியமாகும்.

Loading