கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கையில் ஒரு மில்லியன் என்ற பயங்கரமான நிலையை உலகம் எட்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Worldometer கொரோனா வைரஸ் தரவுத் தளத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை, அமெரிக்க கிழக்கு நேரத்தின் படி, உலகளவில் கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்தது. அமெரிக்க ஊடகங்களில் பொதுவாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள Johns Hopkins தரவுத் தளம் 995,000 என்ற புள்ளிவிபரத்தை வழங்கியுள்ள நிலையில், அனைத்து கணக்கீடுகளின் படி, இன்று ஒரு மில்லியன் இறப்புக்களை அது பதிவு செய்யும்.

இந்த பெரும் சோகம், தொற்றுநோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் மீது இத்தகைய துயரங்களை மழை போல பொழிய அனுமதித்த ஆளும் வர்க்கங்களின் குற்றச்சாட்டாகும்.

ஜூலை 23, 2020, வியாழக்கிழமை, பொலிவியாவின் லா பாஸில் உள்ள பொது மருத்துவமனைக்கு வெளியே, ஒரு சுகாதார ஊழியர், கோவிட் 19 ஆல் இறந்துபோன ஒருவரது சடலத்தை இறுதிச் சடங்கு தளத்துக்கு எடுத்துச் செல்ல காத்திருக்கும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தூக்குப் படுக்கையில் வைத்து தள்ளிக் கொண்டு செல்கிறார் (AP Photo/Juan Karita)

209,361 இறப்புக்களுடன் அமெரிக்கா, இந்த கொடூரமான வகையில் ஏனைய அனைத்து நாடுகளை விட முன்னணியில் உள்ளது. அடுத்ததாக, பிரேசில் 141,503 இறப்புக்களுடன் இரண்டாவது இடத்திலும், மேலும் இந்தியா 95,162 இறப்புக்களுடனும் மற்றும் மெக்சிக்கோ 76,243 இறப்புக்களுடனும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

முதல் மூன்று நாடுகளின் வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்களான, டொனால்ட் ட்ரம்ப், ஜாய்ர் போல்சொனாரோ, நரேந்திர மோடி, மற்றும் நான்காவது நாட்டில் “இடது” ஜனரஞ்சக வாய்ச்சவடால்காரரான ஆண்ட்ரெஸ் மானுவல் லோப்பேஸ் ஓபரடோர் ஆகியோர், தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மக்களிடையே தொற்றுநோய் வெடித்துப் பரவ அனுமதிக்கும் ஒரேமாதிரியான கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நான்கு கடுமையான நபர்களின் கீழ், நான்கு நாடுகளின் கொரோனா வைரஸ் காரணமான மொத்த இறப்பு எண்ணிக்கை உலகின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் பாதியாக உள்ளது.

மெக்சிக்கோவில் கோவிட்-19 இறப்புக்களின் நாளாந்த சராசரி 500 க்கு நெருக்கமாக உள்ளது, என்றாலும் அனைத்து நிபுணர்களின் கருத்துப்படி, உத்தியோகபூர்வ அறிக்கைகள் மொத்தமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த மாதம் தொடக்கத்தில், தங்களிடம் இறப்புச் சான்றிதழ்கள் தீர்ந்துவிட்டதாக வெட்கக்கேடான வகையில் அரசாங்கம் அறிவித்தது. ஆகஸ்ட் நிலவரப்படி, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 69,095 என்று இருந்தது, என்றாலும் அதிகப்படியான இறப்பு எண்ணிக்கை 122,765 என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Grஉலக அளவிலான மாதாந்திர இறப்புக்களின் வரைபடம். நன்றி: உலக சோசலிச வலைத் தளம் (wsws.org)aph of monthly global deaths. Credit: wsws.org

படம் 1 நிரூபிப்பதன்படி, உலக அளவிலான நாளாந்த இறப்பு எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் கிட்டத்தட்ட தொடர்ந்து நிலையாக உள்ளது. வரைபடத்தில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள செப்டம்பர் மாத நெடுவரிசை, சமீபத்திய ஏழு நாள் சராசரி மதிப்பீட்டைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 5,300 இறப்புக்கள் நிகழ்வதை கடந்த நான்கு நாட்கள் காண்பதை எடுத்துக்காட்டுகிறது. அனைத்து கணக்கீடுகளின் படி, தொற்றுநோய் காலம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பதில்களும் நடவடிக்கைகளும் உலகெங்கிலுமாக வைரஸின் தாக்கத்தை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளன. என்றாலும், குளிர்காலம் நெருங்குகையில் அதிக மக்கள்தொகை கொண்ட வடக்கு அரைக்கோள நாடுகளில், நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கைகள் மீண்டும் ஏறுமுகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 க்கு பலியானவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையான ஒரு மில்லியனுடன், மருத்துவ பரிசோதகர்கள் அல்லது சுகாதார அதிகாரிகளால் கையொப்பமிடப்பட்ட மரணத்திற்கான காரணங்கள் அறியப்படாத இறப்புக்கள் அல்லது, இருதய நுரையீரல் அல்லது உறுப்பு செயலிழப்பு காரணமான இறப்புக்கள், மேலும் தொற்றுநோயின் உண்மையான தாக்கத்தை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெரியளவில் மறைக்கின்ற வகையிலான இறப்புக்கள் என நூறாயிரக்கணக்கான இறப்புக்கள் சேர்க்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அதிகப்படியான இறப்புக்கள் Credit: Our World in Data

Economist செய்தியிதழின் படி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், மேற்கு ஐரோப்பா, சில இலத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கான அனைத்து காரணங்களின் அடிப்படையிலான இறப்பு தரவுகளும், மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 900,000 அதிகப்படியான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதைக் காட்டின. என்றாலும், 580,000 இறப்புக்கள் மட்டுமே கோவிட்-19 இன் காரணமாக ஏற்பட்டவை. இது, கோவிட்-19 இறப்புக்களின் உண்மையான எண்ணிக்கை, Worldometer மற்றும் Johns Hopkins போன்ற தரவுத் தளங்கள் உத்தியோகபூர்வ இறப்பு அறிக்கைகளின் அடிப்படையில் பராமரிக்கும் புள்ளிவிபரங்களைக் காட்டிலும் 55 சதவிகிதம் அதிகம் என்று அறிவுறுத்துகிறது.

அமெரிக்காவின் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300,000 க்கு நெருக்கமாக உள்ள நிலையில், அது 30 சதவிகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்று Economist குறிப்பிடுகிறது. அவர்களது மதிப்பீடுகளின்படி, தொற்றுநோயின் காரணமாக உலகளவில் நிகழ்ந்த உண்மையான இறப்புக்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனுக்கு நெருக்கமாக இருக்கலாம்.

இந்த அதிகப்படியான இறப்புக்களில் சில வைரஸின் காரணமாக ஏற்பட்டது என்பதை விட, தொற்றுநோய் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைபொருளாக அது உள்ளது. அடைப்பு மற்றும் நிதி நெருக்கடிகளைச் சுற்றியுள்ள சமூக நெருக்கடி என்பது, கொரோனா வைரஸ் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நியாயமான பயத்தை தாண்டி சுகாதாரப் பிரச்சினைகளுக்காக மருத்துவ கவனிப்பை நாடுவதிலிருந்து மக்களைத் தடுக்க வழிவகுத்தது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பாதுகாப்பு மையத்தின் இயக்குநரான Tom Inglesby, “அமெரிக்கர்கள் தங்களது ஆரோக்கியத்தை பேணும் வகையில் எல்லா நேரங்களிலும் செய்து கொள்ளக் கூடிய ER பரிசோதனைகளும், தேந்தெடுக்கப்பட்ட அறுவைசிகிச்சை தொடர்பான ஆய்வுகளும், அதிர்ச்சியூட்டும் வகையில் நீண்ட காலமாகவே வீழ்ச்சியடைந்துள்ளது” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரிவித்தார்.

மாரடைப்பு, முதுமறதி (Aszheimer) மற்றும் முதுமை, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புக்களுக்கான வாராந்திர மதிப்பீடுகள் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து அடிப்படையான எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்தன. பாஸ்டன் பல்கலைக்கழகம், ராபர்ட் வுட் ஜோன்சன் அறக்கட்டளை மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தரவுகளின்படி, அதிகப்படியான இறப்புக்களில் 20 சதவிகிதம், ஏழை சமூகங்களில் மிக மோசமான பாதிப்பை விளைவித்த கோவிட்-19 ஐ காட்டிலும் ஏனைய காரணிகளுடன் தொடர்புபட்டுள்ளன.

இந்த தடுக்கக்கூடிய சோகம் குறித்த பரிமாணத்திற்கான சூழலை வழங்கும், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் 2017 இல் 2,813,503 இறப்புக்களை பதிவு செய்தன. 2020 ஆம் ஆண்டில் “சாதாரண” இறப்பு எண்ணிக்கை ஏறக்குறைய அதனை ஒத்திருக்கும். இதற்கான அர்த்தம் என்னவென்றால், இந்த ஆண்டு, கோவிட்-19 இறப்புக்கள் மொத்த அமெரிக்க இறப்புக்களில் அண்ணளவாக பத்து சதவிகித அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது என ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் இன்னும் பல மாதங்கள் இப்படியே தொடரும் என்பதாகும்.

பியூனோஸ் எயர்ஸில் வீடற்றவர்களுக்கான முகாம் Credit: Ronaldo Schemidt

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, உலகளவிலான ஒரு மில்லியன் கோவிட்-19 இறப்புக்கள் என்பது 2019 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் தொடர்புபட்ட நோய்களால் 690,000 பேர் இறந்ததை காட்டிலும் அதிகமானதாகும். 2016 ஆம் ஆண்டில், 216 மில்லியன் மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய மலேரியா 445,000 இறப்புக்களுக்கு வழிவகுத்தது. 2018 இல், காசநோய் 1.5 மில்லியன் பேரைக் கொன்றது.

தொற்றுநோயினால் விளைந்த பொருளாதார தாக்கம், ஏழை மக்களைப் பொறுத்தவரை, பள்ளிகள் மூடப்பட்டதால் அவர்களது கல்வியில் பின்னடைவைக் கொண்டுவந்தது, முக்கியமான தடுப்பூசி திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போனது, மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருந்துகளை அவர்கள் அணுகுவது குறைந்தது என்ற வகையில் அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பொருள் என்னவென்றால், தொற்றுநோயின் தாக்கம் உலகளவில் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அதன் பின்னர் குறையும் அல்லது அதற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம்.

இரண்டு டாலருக்கு குறைவான தொகையில் ஒரு நாளை கழிக்கும் மிக வறிய மக்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 70 முதல் 100 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று உலக வங்கி முன்கணிக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, கோவிட்-19 தொடர்புபட்ட பசி பட்டினியால் ஒரு நாளைக்கு 12,000 பேர் வரை, அதாவது தற்போது இந்த நோயால் இறப்பவர்களை விட அதிகமானவர்கள் இறக்கக்கூடும் என்று ஜூலையில் ஆக்ஸ்ஃபாம் அமைப்பு ஒரு ஊடகத்தில் சுருக்கமாக குறிப்பிட்டது.

ஆக்ஸ்ஃபாம், “மோதல்கள், காலநிலை மாற்றம், சமத்துவமின்மை, மற்றும் மில்லியன் கணக்கான உணவு உற்பத்தியாளர்களையும் தொழிலாளர்களையும் வறிய நிலைக்கு தள்ளிய உடைந்து போன உணவு முறை ஆகியவற்றின் தாக்கங்களுடன் ஏற்கனவே போராடும் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களுக்கு இந்த தொற்றுநோய் இறுதி வைக்கோலாகும். இதற்கிடையில், உயர் மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து இலாபம் ஈட்டுகின்றனர்: அதாவது உலகம் முழுவதும் தொற்றுநோய் பரவி வரும் நிலையில் கூட, மிகப்பெரிய உணவு மற்றும் பான வகை நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு ஜனவரி முதல் 18 பில்லியன் டாலருக்கு அதிகமாக பங்குத்தொகை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டது.

2019 ஆம் ஆண்டில், 821 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் உணவு பாதுகாப்பு இல்லாதவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர், இதில் சுமார் 149 மில்லியன் பேர் “நெருக்கடி நிலை பசி அல்லது மோசமான நிலைமையால்” பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை ஆண்டின் இறுதிக்குள்ளாக 270 மில்லியனாக அதிகரிக்கும் என்று உலக உணவுத் திட்டம் மதிப்பிடுகிறது, அதாவது 82 சதவிகித அதிகரிப்பாகும்.

எஞ்சியிருக்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால், வைரஸ் பரவுவதிலிருந்து பெரும்பகுதி மக்கள் பாதுகாக்கப்படும் வகையில் உலகம் எந்த அளவிற்கு போதுமான எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளது என்பதே. செயற்கை முறை சிறுநீர் கலவைப் பிரிப்பு (dialysis) செய்யப்படும் நோயாளிகளின் ஒரு பெரிய தேசிய அளவிலான மாதிரியில் SARS-CoV-2 ஆன்டிபாடிகளின் பாதிப்பு இருப்பது குறித்து வெள்ளிக்கிழமை Lancet இல் வெளியான ஒரு குறுக்குப்பிரிவு ஆய்வு, அமெரிக்க வயோதிக மக்களில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவானவர்களிடம் நோயெதிர்ப்பு சக்தி வெளிப்பாடும் வளர்ச்சியும் இருப்பது கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கிறது.

19 நாடுகளில் நடத்தப்பட்ட 279 நிணநீரியல் (serological) ஆய்வுகளின் மதிப்பீடு, உலகளவில் தோராயமாக 500 முதல் 730 மில்லியன் மக்கள், அல்லது மொத்தத்தில் 6.4 முதல் 9.3 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளது.

இந்த பூகோள ரீதியான சமன்பாட்டில் முக்கியமானது SARS-CoV-2 க்கு எதிரான தடுப்பு மருந்து அதிகரிப்பும், மற்றும் இந்த உயிர் காக்கும் நடவடிக்கைகளை அணுக முடிவதும் ஆகும். இந்த தடுப்பு மருந்துகளுக்கான சோதனைகள் நெறிமுறையுடனும் சரியான முறையிலும் நடத்தப்படுமா என்பதும் கேள்விக் குறியே, அத்துடன் அனைத்து மதிப்பீடுகளின் படி, அடுத்த ஆண்டு வசந்த காலம் அல்லது கோடை காலம் வரை தேவையான தகவல்களும் கிடைக்காது. கூடுதலாக, தடுப்பு மருந்துகளின் உற்பத்தியும் விநியோகமும் பெரும்பாலும் தோல்வியுற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் நிதிய பொறிகளை கட்டாயப்படுத்தும் ஒரு அரசியல் சூழ்ச்சியாகவே பயன்படுத்தப்படும்.

இந்த மில்லினுக்கு அதிகமான மக்கள் இறப்பு என்பது, நிதிய தன்னலக்குழுக்களும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் தொற்றுநோய்க்கு அவர்களது குற்றகரமான பதிலிறுப்பு குறித்து எந்தவித பொறுப்பும் ஏற்காமல் கைவிட்டன என்பதற்கான தெளிவான அறிகுறியாக உள்ளது. எந்த அளவிலும், தொற்றுநோய் இன்னும் வெடித்து பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற நிலையில், இந்த எரியும் நெருப்பை உடனடியாக தணிக்கும் முக்கிய அக்கறை தொழிலாள வர்க்கத்திடம் மட்டுமே உள்ளது. மேலும், மேலதிக உயிரிழப்புக்களைத் தடுக்கும் திறனும் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

Loading