முன்னோக்கு

ட்ரம்ப் "அக்டோபர் ஆச்சரியத்திற்கு" தயாரிப்பு செய்து வருகிறாரா?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு வெறும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில், வாஷிங்டன் உலகெங்கிலும் அபாயகரமான மோதல்களைத் தூண்டிவிட்டு வருகிறது. அவற்றில் ஏதேனும் ஒன்று ஓர் இராணுவ மோதலாக தீவிரமடைந்து விடலாம் என்ற அபாயம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓர் "அக்டோபர் ஆச்சரியத்திற்கு" தயாரிப்பு செய்து வருகிறாரா என்பதே அதிகரித்தளவில் அமெரிக்க வெளியுறவு கொள்கை வட்டாரங்களிலும் மற்றும் கவலை கொண்டுள்ள உலகெங்கிலுமான அரசாங்கங்களிலும் விவாதிக்கப்பட்டு வரும் கேள்வியாக உள்ளது.

திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ, அக்டோபரில் நடந்துள்ள சம்பவங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது, இவை வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. 1956 இல், சினாய் போர் மற்றும் ஹங்கேரிய புரட்சியின் வெடிப்பு ஜனாதிபதி ட்வைட் டி. ஐசன்ஹோவருக்குப் பின்னால் ஆதரவைத் திரட்ட உதவியது. 1968 இல், ஜோன்சன் அரசாங்கம் வடக்கு வியட்நாம் மீதான குண்டுவீச்சை அது கைவிட இருப்பதாக அறிவித்த அறிவிப்பு ஏறத்தாழ தேர்தலை ஜனநாயகக் கட்சியின் ஹூபேர்ட் ஹம்ப்ரேவிடம் இருந்து கைமாற்றியது. 1972 இல், வியட்நாமில் "அமைதி கையில் உள்ளது" என்ற ஹென்றி கிஸ்ஸிங்கரின் இழிவார்ந்த அறிவிப்பு, கருத்துக்கணிப்புகளில் ஜோர்ஜ் மெக்கோவர்னை விட நிக்சனுக்கு செல்வாக்கை அதிகரித்தது.

ஆனால், 1980 இல் குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்ட் ரீகனின் பிரச்சாரக் குழு நிர்வாகி வில்லியம் கேய்சி (William Casey) இனாலும், அதற்கடுத்து சிஐஏ இயக்குனராலும் "அக்டோபர் ஆச்சரியம்" (October Surprise) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 1979 இல் ஈரானிய மாணவர்களால் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டதில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அமெரிக்க சிப்பாய்களை ஈரான் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறு தான், ரீகன் மற்றும் கேய்சியின் விடயத்தில், “ஆச்சரியம்" சம்பந்தமான கேள்வியாக இருந்தது. அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இருதரப்பினரது கருத்துப்படி, கேய்சி மற்றும் ரீகன் பிரச்சாரக் குழு, தேர்தல் முடியும் வரையில் பிணைக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைக்க தெஹ்ரானுடன் இரகசிய பேரம்பேசல்களில் ஈடுபட்டன.

ஒரு பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் நான்கு F/A-18 ஹார்னெட் போர்விமானங்களும் இரண்டு F-22 ரக ராப்டர் போர்விமானங்களும். (படம்: அமெரிக்க கடற்படை பிரிவு/ தலைமை கட்டளை அதிகாரி Wade Spradli)

“அக்டோபர் ஆச்சரியம்", அமெரிக்க இராணுவவாத வெடிப்பின் வடிவில் வருமா என்பதே இன்றைய அச்சுறுத்தலாக உள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் David Ignatius கடந்த வாரம் ஒரு கட்டுரையில் எழுதுகையில், “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக 'அக்டோபர் ஆச்சரியத்தை' உருவாக்கும் விதத்தில், அடுத்த ஒரு சில வாரங்களில் அமெரிக்கா-ஈரான் மோதல் வெடிக்கக்கூடிய இடமாக ஈராக் உள்ளது,” என்று எச்சரித்தார். அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடன் நெருக்கமான தொடர்புகள் வைத்துள்ள Ignatius இந்த வார்த்தைகளை மேம்போக்காக பயன்படுத்துவாரா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

ஈரானுடன் அணி சேர்ந்த ஈராக்கிய ஷியா போராளிகள் குழு அமெரிக்க தளத்திற்குப் பொதுவான அருகாமையில் உள்ள ராக்கெட்களைக் கைப்பற்றி உள்ள நிலையில் அதை பாக்தாத் ஆட்சி ஒடுக்காவிட்டால், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை வாஷிங்டன் மூடிவிடும் என்று ஈராக்கின் புதிய பிரதம மந்திரி முஸ்தாபா அல்-காதிமிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ ஓர் இறுதி எச்சரிக்கை விடுத்ததை அவர் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். அதுபோன்றவொரு ஒடுக்கும் நடவடிக்கை அந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வித்திடக்கூடும்.

தூதரகத்தை "மூடுவது போராளிகள் குழுக்களுக்கு எதிராக பலமான அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு ஒரு முன்னறிவிப்பாகவும் இருக்கக்கூடும்" என்பதை Ignatius சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற இராணுவ நடவடிக்கை விரைவிலேயே ஏற்கனவே ஏனைய முகப்புகளில் தீவிரமடைந்து வரும் ஈரானுடனான ஒரு மோதலாக தீவிரமடையலாம். அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி போர்க்கப்பலின் தாக்கும் படை ஒன்று கடந்த நவம்பருக்குப் பின்னர் முதல்முறையாக பாரசீக வளைகுடாவுக்குள் ஹோர்மூஸ் ஜலசந்தி மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. வாஷிங்டன் ஒருதலைபட்சமாக முறித்துக் கொண்ட ஓர் உடன்படிக்கையான, தெஹ்ரானுக்கும் பிரதான சக்திகளுக்கும் இடையே இருந்த 2015 அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் நீக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் தடையாணைகளை மீண்டும் ஒருதலைபட்சமாக திணிப்பதற்கு உரிமை இருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அடாவடித்தனமாக வாதிட்டுள்ள நிலையில் இந்த நிலைநிறுத்தல் வருகிறது.

ஈரானுக்கு வழக்கமான இராணுவ ஆயுத ஏற்றுமதி மீதான தடை அடுத்த மாத மத்தியில் காலவதியாக உள்ள நிலையில் அதன் மீது மீண்டும் தடை விதிக்கும் உரிமை இருப்பதாகவும் அமெரிக்கா இப்போது வாதிட்டு வருகிறது என்பது அந்த தடையாணைகளில் முக்கியமானதாக உள்ளடங்கி உள்ளது. ரஷ்யா மற்றும் சீனா இரண்டுமே அதுபோன்ற ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்க தயாராகி வருகின்றன. அமெரிக்கா இப்போது தொடர்ந்து அந்த தடையை மீளப் பலப்படுத்த சூளுரைத்திருப்பது பெருங்கடல்களிலோ அல்லது பாரசீக வளைகுடாவிலோ ரஷ்ய அல்லது சீன வாகனங்களை அமெரிக்க போர்கப்பல்கள் பறிமுதல் செய்வதற்கான சாத்தியக்கூறை அதிகரிக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் இரண்டு பிரதான அணுஆயுத போட்டியாளர்களுக்கும் இடையிலான நேரடி மோதல் அச்சுறுத்தல் பரந்த இராணுவ நடவடிக்கை களங்களுக்குள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

பென்டகன் ரஷ்ய எல்லைகளில் அண்மித்து தொடர்ந்து ஆத்திரமூட்டும் இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம், ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமெரிக்க போர்விமானங்கள் பிரமாண்டமான அளவில் "போர் விமானச் சண்டை" ஒத்திகை செய்து கொண்டிருந்த போது, விமானப்படையின் F-16 ரக போர்விமானத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ஏங்கெல் பறந்து சென்றார். ஒரு "இராணுவத்துடன் ஒன்றிணைந்த" செய்தியாளராக, ஏங்கெல் சாகச வார்த்தைகளுடன் விமானத்தில் இருந்தே ஆத்திரமூட்டலைத் தூண்டிவிட்டார்.

இந்த நடவடிக்கையானது, ரஷ்யாவின் பல ராக்கெட் அமைப்புமுறைகளைச் சுட்டுவீழ்த்துவதில் "பன்முக ராக்கெட் செலுத்தும் அமைப்புமுறை" என்பதாக அமெரிக்க ஆயுதப்படை விவரிக்கும் ஒன்று சம்பந்தப்பட்ட எஸ்தோனியாவில் நடந்த நேரடியான குண்டுவீச்சு பயிற்சிகளுக்கு வெறும் ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள மாஸ்கோ தூதரம் அந்த நடவடிக்கையை "பிராந்திய ஸ்திரப்பாட்டிற்கு மிகவும் அபாயகரமான மற்றும் ஆத்திரமூட்டும்" நடவடிக்கை என்பதாக விவரித்தது. “அமெரிக்க எல்லையில் எங்கள் இராணுவம் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வைச் செய்தால் அமெரிக்கா எவ்வாறு எதிர்வினையாற்றும்?” என்று அது கேள்வி எழுப்பியது.

இதற்கிடையே வாஷிங்டன் சீனாவுக்கு எதிராக, குறிப்பாக தாய்வான் தீவு சம்பந்தமாக, இடைவிடாமல் ஆத்திரமூட்டல்களை நடத்தி வருகிறது. அங்கே கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் விஜயம் செய்துள்ளதுடன், பல பில்லியன் டாலர் ஆயுத விற்பனைகளும் இத்துடன் சேர்ந்துள்ளது, இவை அமெரிக்க-தாய்வான் உறவுகளைப் பலப்படுத்துவதையும் மற்றும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க-சீன உறவுகளின் மத்திய அம்சமாக இருந்துள்ள "ஒரே சீனா” கொள்கையை நடைமுறையளவில் மாற்றுவதையும் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.

ஒரு முழுமையான ஆத்திரமூட்டல் என்றும் மூடிமறைப்பற்ற அச்சுறுத்தல் என்றும் பெய்ஜிங் நியாயமாக விளங்கப்படுத்தி உள்ள நிலையில், அமெரிக்க ஆயுதப்படையின் பிரதான பிரசுரம் Military Review, பெய்ஜிங் இராணுவம் அத்தீவை எடுத்துக் கொள்ளும் மூலக்கூற்றின் அடிப்படையில், தாய்வான் சம்பந்தமாக சீனா உடனான அமெரிக்க போருக்கான சாத்தியக்கூறு மீது அதன் ஒட்டுமொத்த செப்டம்பர்-அக்டோபர் பதிப்பையும் அர்பணித்திருந்தது.

“அவர்களைக் கடலுக்குள் விரட்டுங்கள்" என்று தலைப்பிட்டு ஆயுதப்படை இதழில் வெளியான ஒரு கட்டுரை, “எதிரியைக் கடலுக்குள் விரட்டும்" விதத்தில் "தாய்வானுக்கு பலமான ஆயுதப்படை பிரிவுகளை அனுப்புவதற்கு" ஆலோசனை வழங்குகிறது.

“டிராகனை அதைரியப்படுத்துவது: அமெரிக்க படைகளை மீண்டும் தாய்வானுக்கு அனுப்புதல்" என்று தலைப்பிட்டு, அமெரிக்க கப்பல்படை பிரிவு அதிகாரி ஒருவர் எழுதிய மற்றொரு கட்டுரை, மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) இராணுவ முன்னேற்றங்கள் குறித்து, குறிப்பாக மத்தியதூர ஏவுகணைகள் விடயத்தில், கவலை வெளிப்படுத்துவதுடன், தாய்வானுக்கு அமெரிக்க துருப்புகளை அனுப்ப அழைப்பு விடுக்கிறது. “தவிர்க்கவியலாமல் மிகப்பெரும் மோதலைத் தூண்டும் விதத்தில் அமெரிக்கா அதன் படைகளை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது மற்றும் தாய்வானின் பாதுகாப்புக்கு அது பொறுப்பேற்றிருப்பதை அது வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது,” என்று நிறைவு செய்த அக்கட்டுரை, "அமெரிக்க தரைப்படைகள் தாய்வானில் நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் அமெரிக்க அரசாங்கம் ஒரு பெரிய மோதலுக்கு ஆளாகாது என்பது மிகவும் சாத்தியமில்லை" என்பதையும் அது சேர்த்துக் கொள்கிறது.

இந்த செயற்களங்களில் ஏதேனும் ஒன்றில் நேரடியாக மோதலைத் தூண்டுவது, சாத்தியமானளவுக்கு பாரிய உயிரிழப்புகளை விலையாக கொடுத்து உலகப் போருக்குள் இட்டுச் செல்லும் ஒரு மோதலாக அபிவிருத்தி அடைக்கூடிய அவரின் "அக்டோபர் ஆச்சரியத்தை" ட்ரம்ப் வழங்கக்கூடும். இதன் நோக்கம் பெரிதும் வாக்காளர்களின் செல்வாக்கைப் பெறுவதற்காக இருக்காது, ஏனெனில் ட்ரம்ப் 2016 தேர்தலில் அவர் மக்கள் வாக்குகளைப் பெற தவறிய நிலையில் மக்கள் வாக்குகளைப் பெறும் அடிப்படையில் ஒரு மூலோபாயத்தைக் கொண்டு செல்லவில்லை, மாறாக ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவது மற்றும் எல்லா எதிர்ப்பையும் வன்முறையாக ஒடுக்குவதை நோக்கமாக கொண்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறார். கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பிரயோகிக்கவும் மற்றும் இராணுவச் சட்டத்தைத் திணிக்கவும் அவர் வெளிப்படுத்தும் அச்சுறுத்தல்களுக்கு போர் என்பது நல்லதொரு சாக்குபோக்காக சேவையாற்றக்கூடும்.

பாசாங்குத்தனமாக ட்ரம்புக்கு அரசியல் எதிர்ப்பு காட்டும் ஜனநாயகக் கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடெனும் அதுபோன்றவொரு இராணுவ ஆத்திரமூட்டலுக்கும் மற்றும் அதன் நீண்ட கால அரசியல் விளைவுகளுக்கான நிலைமைகளை உருவாக்க மட்டுமே உதவி உள்ளனர். ரஷ்யா மற்றும் சீனா மீது ட்ரம்ப் மிகவும் "மென்மையாக" இருப்பதற்காக அவர்கள் மீண்டும் மீண்டும் ட்ரம்பைக் கண்டித்துள்ளர். சிரியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய கவச வாகனங்களுக்கு இடையிலான சமீபத்திய உரசலை அடுத்தும் இதை அவர்கள் செய்தனர், அச்சம்பவத்தில் அமெரிக்க சிப்பாய்களுக்கு ஏற்பட்ட சிறிய காயங்களுக்கு அவர்கள் பழிவாங்கும் விதமான பதிலடி நடவடிக்கையைக் கோரினர்.

இந்த யதார்த்தத்தைக் கொண்டு பார்க்கையில், ரஷ்யா அல்லது சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவ மோதல் ஏற்படும் ஒரு சம்பவத்தில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் போர் முயற்சிகளுக்குப் பின்னால் தான் அவர்களின் ஆதரவை வழங்குவார்கள்.

முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத நெருக்கடியும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தின் வீழ்ச்சியைச் சரிக்கட்டுவதற்கான ஒரு வழிவகையாக அது இராணுவ ஆக்ரோஷத்தை நோக்கி திரும்புவதுமே இந்த போர் அச்சுறுத்தலுக்கு அடியில் அமைந்துள்ளன. இது கட்டுப்பாடின்றி கோவிட்-19 தொற்றுநோயின் பரவல், பாரிய வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் அதிகரித்து வரும் சமூக அமைதியின்மை ஆகியவற்றால் தீவிரம் மட்டுமே அடைந்துள்ளது. அமெரிக்காவின் ஆளும் செல்வந்த தட்டு இத்தகைய ஆழ்ந்த தீர்க்கவியலாத உள்நாட்டு பதட்டங்களை இராணுவவாத வெடிப்பு வடிவில் வெளியில் திசைதிருப்பி விட முயல்கிறது.

குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஒன்றுபோல வேலைக்குத் திரும்ப செய்வதற்கான மற்றும் பள்ளிக்குத் திரும்ப செய்வதற்கான ஆட்கொலை திட்டநிரலைப் பின்தொடர்ந்து வருகையில், வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் தொழிலாளர்களின் உயிர்களே கூட அழிக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்துடன் சேர்ந்து, போருக்கு எதிரான போராட்டத்தை ட்ரம்ப்-பைடென் தேர்தல் போட்டியின் கட்டமைப்பிள்குள் தொடுக்க முடியாது. 2020 தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவு தொடர இருக்கிறது.

போர் அச்சுறுத்தலையும் பரந்த பெரும்பான்மை அமெரிக்க மக்கள் எதிர்கொண்டிருக்கும் வாழ்வா-சாவா பிரச்சினைகளையும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே எதிர்க்க கொள்ள முடியும். இந்த போராட்டத்தையும், மற்றும் ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கான சூழ்ச்சிகளை நிறுத்தி அவர் அரசாங்கத்தைக் கவிழ்க்க ஓர் அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கான போராட்டத்தையும் ஒழுங்கமைக்க, இதற்கு, வேலையிடங்களிலும் மற்றும் அண்டைப்பகுதிகளில் தொழிலாளர்களின் சாமானிய குழுக்களை உருவாக்க வேண்டியுள்ளது.

Loading