“ஆரோக்கிய நிலையில்” இருந்த பத்தொன்பது வயது வடக்கு கரோலினா பல்கலைக்கழக மாணவன் கோவிட்-19 ஆல் இறந்துபோனார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வடக்கு கரோலினா மாகாணம், பூனில் உள்ள அப்பலாச்சியன் அரசு பல்கலைக்கழகத்தின் (Appalachian State University) 19 வயது மாணவர் ஒருவர் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு நரம்பியல் சிக்கல்களால் திங்களன்று இறந்துபோனார். அவரது மாமாவால் “நல்ல எதிர்கலம் கொண்டவர்” என்று வர்ணிக்கப்பட்ட சாட் டோரில் என்ற அந்த மாணவர், இலையுதிர் கால வகுப்புகளுக்காக பூனிற்கு திரும்பியதன் பின்னர் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகரித்த நிலையில், டோரில் வீட்டிற்கு திரும்பினார், பின்னர் செப்டம்பர் 7 அன்று அவருக்கு கோவிட்-19 நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவரது மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, அவர் பள்ளிக்குத் திரும்பினார். விரைவில், அவர் கடுமையான நரம்பியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். மேலும், “அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முயன்றபோது அவரது கால்கள் செயலற்றுப் போன நிலையில், எனது சகோதரர் தான் அவரை காரில், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது” என்று அவரது மாமா டேவிட் டோரில் நியூ யோர்க் டைம்ஸூக்கு தெரிவித்தார். “இந்த பிரச்சினை கோவிட்-19 ஆல் ஏற்பட்டிருந்தது, அதாவது அவரது சுவாச அமைப்பு பாதிக்கப்படுவதை விட அவரது மூளை பாதிக்கப்பட்டுவிட்டது” என்றும் அவர் கூறினார்.

சாட் டோரில்

டோரில் நீண்டதூர ஓட்டப்பந்தய வீரர் என்பதுடன், உயர்நிலைப் பள்ளிக் கால முன்னாள் கூடைப்பந்தாட்டக்காரரும் ஆவார். “அவர் ஆரோக்கியமாக இருந்தார்… மேலும் ஒல்லியானவர். அவரால் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆறு மைல் தொலைவு வரை ஓட முடியும். உண்மையில் மூன்று வாரங்களுக்கு முன்பு கூட எங்களுடன் அவர் ஓடினார். இந்த பாதிப்பு ஏற்படும் வரை அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்,” என்று அவரது மாமா விளக்கமளித்தார்.

டோனியா மாக்ஸி என்ற அவரது குடும்ப நண்பரின் கூற்றுப்படி, கோவிட்-19 நோய்தொற்றின் தாக்கத்தால் டோரிலுக்கு Guillain-Barre என்ற நோயறிகுறி ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். Guillain-Barre, உடம்பின் நோயெதிர்ப்பு அமைப்பின் நரம்பு செல்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இந்த நோய்தொற்று, 2015 இல் பிரேசிலில் நிகழ்ந்த ஜிகா வைரஸ் நோய்தொற்று பரவலுடன் கூட இணைத்துப் பார்க்கப்பட்டது, அதாவது இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. நரம்பியல் விஞ்ஞான இதழ் தெரிவிப்பது போல, ஜூன் 29 நிலவரப்படி, உலகளவில் கோவிட்-19 நோயாளிகளில் தோராயமாக 31 பேருக்கு Guillain-Barre நோயறிகுறிகள் இருப்பதாக பதிவாகியுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்வதானால், டோரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியேயிருந்து பயின்று வந்தார் என்பதுடன், இணையவழி வகுப்பில் மட்டுமே அவர் பங்கேற்றார், மேலும் அவரது மாமா, “முகக்கவசம் அணிவதில் எப்போதும் அவர் கவனமாக இருப்பார் என்றும் எங்களிடம் தெரிவித்தார்.” என்றாலும், அவருக்கு வைரஸ் நோய்தொற்று ஏற்பட்டு, முற்றிலும் தவிர்க்க வாய்ப்புள்ள இறப்பிற்கு அது இட்டுச் சென்றது. அவரது தாய் சூசன் டோரில், “புகைப்பிடிக்கவோ, போதைப்பொருளை நுகரவோ அல்லது பயன்படுத்தவோ இல்லாத 19 வயதான, மிகுந்த ஆரோக்கியமுள்ள இளைஞனுக்குக் கூட இந்த நோய்தொற்று பாதிப்பு ஏற்படுகிறது என்றால், இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” என்று கூறினார்.

183 மாணவர்களுக்கும், மூன்று ஊழியர்களுக்கும் கோவிட்-19 நோய்தொற்று இருப்பதை உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழகம் ஒப்புக்கொள்கின்ற போதிலும், நேரடி மற்றும் கணினி வழி வகுப்புக்கள் இரண்டையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த அரை ஆண்டு கல்விப் பருவ முடிவில் கல்லூரி 7,569 மாணவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்துள்ளது என்றும், அதில் 334 பேருக்கு அதாவது 4.4 சதவிகிதம் பேருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது என்றும், அப்பலாச்சியன் அரசு பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் நியூ யோர்க் டைம்ஸூக்கு தெரிவித்தார். மார்ச் மாதம் முதல், 594 மாணவர்கள், 29 ஊழியர்கள் மற்றும் 41 துணை ஒப்பந்தக்காரர்களுக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டிருப்பதாக பள்ளி பதிவு செய்துள்ளது.

டோரில் இறந்ததன் பின்னர் கூட, பள்ளி அதன் நடைமுறைகளில் எந்தவித மாற்றத்திற்கோ அல்லது ஏதேனும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கோ அறிவிக்கவில்லை. மாறாக, பல்கலைக்கழக சான்சிலர், ஷெரி எவேர்ட்ஸ் (Sheri Everts), தொடர்ந்து மாணவர்களின் “தனிப்பட்ட பொறுப்பு” மட்டுமே இதற்கு பொறுப்பாகும் என்கிறார்.

எவேர்ட்ஸ் செவ்வாய்க்கிழமை விடுத்த ஒரு பொது அறிக்கையில், “நமது சமூகத்துடன் நாம் எங்கிருந்தாலும் நமது பாதுகாப்பு நடத்தைகளுடன் நாம் தான் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் வரைபடத்தில் வளைவை சரியச் செய்யலாம், ஆனால் அதற்கு நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். மிகச்சிறிய செயல்களில் இருந்து மிக முக்கியமான தனிப்பட்ட உறவுகள் வரை, அதிகம் தொற்றும் தன்மை கொண்ட இந்த நோயின் பரவலைக் குறைக்க ஒவ்வொரு நாளும் நாம் தீவிரமாக உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். “மாணவர்கள் மத்தியில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் அதிகரிப்பதை” ஒப்புக்கொண்டபோதிலும், எவர்ட்ஸ், 25 பேர் வரை கூடும் உள்அறை வகுப்புகள், மற்றும் 50 பேர் வரை கூடும் வெளி வகுப்புகள் போன்ற நேரடி வகுப்புக்களுக்கு தொடர்ந்து அனுமதியளிக்கிறார்.

வளாகம் மீண்டும் திறக்கப்பட்டது முதல், அப்பலாச்சியன் அரசு பல்கலைக்கழகம் அமைந்துள்ள வாட்டுகா மாகாணத்தில் கோவிட்-19 உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, 900 க்கும் கூடுதலாக இரு மடங்கிற்கும் மேலாக உள்ளது. கடந்த வாரம், இந்த மாகாணம் அதன் மோசமான ஏழு நாள் காலத்தை எதிர்கொண்டது. அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி சமூகங்களைப் போல, மாணவர்களை மீண்டும் திரும்பச் செய்வதன் மூலம், அப்பலாச்சியன் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிந்தே மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், பரந்த சமூகத்தின் உயிர்களையும் சேர்த்து பணயம் வைத்துள்ளனர்.

நாடு முழுவதிலும், 1,300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உறுதிசெய்யப்பட்டுள்ள கோவிட்-19 நோய்தொற்றுக்கள் உட்பட, கல்லூரி வளாகங்களில் 130,000 க்கு மேற்பட்ட நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அதிரடியான நோய்தொற்று பரவல் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட, குறைந்தது 70 பேர் பலியாவதற்கு இட்டுச் சென்றது.

கோவிட்-19 நோய்தொற்று வெடிப்புக்கள் இங்கிலாந்தில் 45 பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டது உட்பட, சர்வதேச அளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நோய்தொற்று வெடிப்புக்கள் நிகழ்கின்றன. ஸ்பெயினில், 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் முதல் வார வகுப்புகளுக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொடர்புபட்ட சம்பவங்கள் பற்றி பதிவு செய்தன. மேலும், ஜேர்மனி மற்றும் பிரான்சிலும் பள்ளிகளில் நோய்தொற்று வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கிரேக்கத்தில் நிகழும் ஏராளமான நோய்தொற்று வெடிப்புக்கள் மற்றும் பள்ளிகளில் நிலவும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலைமை ஆகியவற்றை எதிர்த்து, நாட்டின் மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேற்பட்ட வகையில் 700 பள்ளிகளை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

அமெரிக்காவைப் போல, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசியல்வாதிகள் தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு உண்மையான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கையை ஏற்றுக்கொண்டனர், இது பொருளாதாரம் முழுமையாக திறக்கப்படுவதை எளிதாக்கும் வகையில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஏழ்மையான பிரிவுகள் முழுவதுமாக கட்டுப்பாடின்றி நோய்தொற்று பரவுவதற்கு வழிசெய்கிறது. வணிகங்களையும் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறப்பதற்கான மைய நோக்கம், இறப்புக்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் பள்ளிகளை மீண்டும் திறக்க கட்டாயப்படுத்துகிறது.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும், முதலாளித்துவ சார்பு ஆசிரியர் சங்கங்கள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு உதவுகின்றன என்பதுடன், மிச்சிகன் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களின் சமீபத்திய ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தை போல வேலைநிறுத்தங்கள் வெடித்த இடங்களில் எதிர்ப்பை நசுக்குவதற்கும் உதவின.

அமெரிக்காவில், கல்வியாளர்கள் சுயாதீன சாமானிய பாதுகாப்பு குழுக்களை அமைப்பதன் மூலம் பொறுப்பற்ற வகையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளனர். ஆகஸ்டில், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கும், மற்றும் பள்ளிகள் பாதுகாப்பற்ற வகையில் திறக்கப்படுவதை தடுக்க தேசிய அளவிலான ஒரு பொது வேலைநிறுத்தம் செய்வதற்குமான ஒரு தேசிய வலையமைப்பாக கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இது தொடங்கப்பட்டதிலிருந்து, குழுக்கள் புளோரிடாவின் டுவால் மாகாணம்; டெட்ராய்ட்; நியூயோர்க் நகரம்; லாஸ் ஏஞ்சல்ஸ்; மற்றும் டெக்சாஸ் ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் அமைக்கப்பட்டுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சியும், மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்ற அதன் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமும், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏனையோரை இந்த குழுவில் சேரும்படியும், பள்ளிகளையும் கல்லூரிகளையும் மீண்டும் திறப்பதற்கான பொறுப்பற்ற உந்துதலை தடுத்து நிறுத்த போராடும்படியும் கேட்டுக் கொள்கின்றன.

Loading