வேலைக்கு திரும்ப செய்வதற்கான கொள்கையை பெருமைப்பீற்றவும் தேர்தல் சதித் திட்டங்களை தீவிரப்படுத்தவும் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவைதை அரங்கேற்றுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

கோவிட்-19 உடல்நலக் குறைவின் கடுமையான பாதிப்பைச் சரிக்கட்ட அவருக்கு பலமும் சக்தியும் இருப்பதாக ஒரு பிம்பத்தைக் காட்டும் நோக்கில், தொலைக்காட்சிகளின் மாலை செய்திகளில் அரங்கேற்றுவதற்கான ஒரு சம்பவமாக, திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வால்டர் ரீட் மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.

ஏற்கனவே 210,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் மரணிப்பதற்கு இட்டுச் சென்றுள்ள இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கும் விதத்தில், அவரின் குற்றகரமான "சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கும்" கொள்கையை மீள உறுதிப்படுத்துவதே அதற்கான தெளிவான உத்தேசமாக இருந்தது.

ட்ரம்ப் வெள்ளை மாளிகை மேல்மாடத்திலிருந்து நாஜி பாணியில் புகைப்படங்களுக்குக் காட்சி கொடுத்தார், இது வெளிப்படையாக அவரின் பாசிசவாத அடித்தளத்தை உத்வேகமூட்டுவதற்காக இருந்தது. தேர்தல்களில் அனேகமாக குறிப்பிடத்தக்க தோல்வி ஏற்படலாம் என்று தெரிவதால், பதவியில் தங்கியிருப்பதற்கான ட்ரம்பின் மூலோபாயம் தேர்தல்முறை அல்லாத, சட்டவிரோதமான, அரசியலமைப்புக்குப் புறம்பான, வன்முறையான அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் மீது ஒருங்குவிந்துள்ளது.

Trump copies Hitler

மின்னஞ்சல் மூலமாக வாக்களிப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ட்ரம்ப், வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் மிரட்ட அதிவலது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகவும் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் இரண்டுக்கும் எதிராக அடியிலிருந்து எழும் ஓர் இயக்கம் குறித்து அஞ்சும் அவரின் ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர்களின் உடந்தையான கோழைத்தனத்தை அவர் கணக்கில் வைத்துள்ளார்.

அவர் பெரிதும் தொற்று ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்ற போதும், ட்ரம்ப் மருத்துவமனையிலிருந்து வந்திருப்பதன் அரசியல் நோக்கம் ஒரு ட்வீட் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டது, அது அமெரிக்க பெருநிறுவன உயரடுக்கின் வர்க்க இறுமாப்பையும் மனிதப்படுகொலை மீதான ஆவேசத்தையும் இரண்டையும் உள்ளடக்கி உள்ளது. அதில் அவர் "நிஜமாகவே நல்லவிதத்தில்" உணர்வதாக குறிப்பிட்டதுடன், “கோவிட் குறித்து பயப்பட வேண்டாம். அது உங்கள் வாழ்க்கை மீது மேலாதிக்கம் செலுத்த விடாதீர்கள்… 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட நான் ஆரோக்கியமாக உணர்கிறேன்!” என்று குறிப்பிட்டார்.

ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கும் திரும்பியதும் விரைவிலேயே ஒரு காணொளியை ட்வீட் செய்தார், அதில் அவர் கோவிட்-19 ஐ அவர் "ஜெயித்து விட்டதாக" அறிவித்ததுடன், "அது உங்கள் வாழ்க்கை மீது மேலாதிக்கம் செலுத்த விடாதீர்கள்… நாம் திரும்புகிறோம். நாம் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறோம்,” என்று மீண்டும் குறிப்பிட்டார்.

பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள், மற்றும் அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பில்லியனர்களின் இலாபத்திற்கான அக்கறையை உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் மீதான அக்கறை "மேலாதிக்கம் கொள்ள" அமெரிக்க முதலாளித்துவம் விட்டுவிடாது என்பதை ட்ரம்ப் அவரின் மூர்க்கமான பாணியில், தெளிவுப்படுத்துகிறார். மொத்தத்தில், நான், ஜனாதிபதியே "வேலைக்குத் திரும்புகிறேன்" என்றால், வாகனத்துறை தொழிலாளர்களும், இறைச்சிப் பதப்படுத்தும் தொழிலாளர்களும், சரக்கு பண்டகச்சாலை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் அவ்வாறே வேலைக்குத் திரும்பலாம் என்றவர் வாதிடுகிறார். அந்த பில்லியனிய ஜனாதிபதிக்கும் கிடைக்கும் மருத்துவ வசதிகளும் தொழில்நுட்பமும் போல எதுவொன்றும் இந்த மில்லியன் கணக்கிலான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை என்பதை அவர் மனதில் கொள்ளவில்லை.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சாதாரண மக்களிடையே அதிகரித்து வரும் இந்நோய் மற்றும் உயிரிழப்புகளின் அலை ஒருபுறம் இருக்க, ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதன் மூலமாக எடுத்துக்காட்டப்பட்ட மனித உயிர்கள் மீதான அக்கறையின்மையும் அவமதிப்பும், அவர் வேண்டுமென்றே முகக்கவசம் அணியாமலும் ஏனைய சமூக இடைவெளி நடைமுறைகளைக் கடைபிடிக்காமலும் இருந்ததன் விளைவாக டஜன் கணக்கான அவரின் மிகவும் நெருக்கமான உதவியாளர்களும் காங்கிரஸ் சபை ஆதரவாளர்களும் இதுவரையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்ற உண்மையால் எடுத்துக்காட்டப்படுகிறது.

வெள்ளை மாளிகை வசிப்பிட குடியிருப்பின் மேல்மாட நுழைவாயிலில் அவர் காட்சி கொடுப்பதற்காக படிகள் ஏறி வந்ததும், அவர் முகக்கவசத்தைக் கழற்றி காற்றைச் சுவாசிக்க மூச்சுத் திணறிய நிலையில் ட்ரம்பே கூட உடல்நலக் குறைபாட்டுடன் நோய்தொற்று ஏற்படுத்தக்கூடியவராக இருக்கிறார் என்பது வெளிப்படையாக இருந்தது.

ட்ரம்புக்கு விடையிறுப்பாக ஒரு மருத்துவர் ட்வீட் செய்தார், “கோவிட் குறித்து பயப்பட வேண்டாமா? அமெரிக்க ஜனாதிபதிக்குக் கிடைக்கும் அதிநவீன சாதனங்கள், மருத்துவர்கள் மற்றும் உயர்ரக சிகிச்சை வழங்குனர்கள் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் கிடைப்பதில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்னர் விட நீங்கள் நலமாக உணர்கிறீர்களா? அது ஏனென்றால் உளக்கிளர்ச்சி ஏற்படுத்தும் டெக்சாமெத்தசோன் (dexamethasone) மருந்து உங்களுக்கு அதிகமாக இருப்பதனால் ஆகும்,” என்றார்.

“உளக்கிளர்ச்சி" என்று அந்த மருத்துவர் எதை விவரிக்கிறாரோ அது ஓர் இரசாயன மூலக்கூறு என்பதை விட கூடுதலானதாகும். ட்ரம்ப் வர்க்க தனிச்சிறப்புரிமை என்ற நஞ்சில் ஊறிப் போயுள்ளார். ஒரு மருத்துவரின் கருத்துப்படி, ஒட்டுமொத்த நாட்டிலும் வெறும் 10 பேருக்குத் தான் ட்ரம்பின் மருத்துவர்கள் பயன்படுத்திய அதே பரிசோதனை மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் ஏனைய மருந்துகளின் கலவை கிடைத்துள்ளது.

ரீஜெனரன் (Regeneron) நிறுவனம் தயாரித்த மொனோகுளோனல் (monoclonal) எதிர்உயிரி அத்துடன் கிலீட் உருவாக்கி உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வினியோகம் கொண்ட ரெம்டிசிவிர், மற்றும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே பொதுவாக வழங்கப்படும் ஸ்ட்ராய்ட் டெக்சாமெத்தசோன் (dexamethasone) ஆகியவற்றின் பரிசோதனை கலவை ட்ரம்புக்கு வழங்கப்பட்டிருந்தது. ஒரு பத்திரிகை செய்தியின்படி, ஆக்சிஜன் மற்றும் டெக்சாமெத்தசோன் இரண்டும் அவசியப்படும் அளவுக்கு மிகவும் தீவிரமாக உள்ள நோயாளிகளின் இறப்பு விகிதம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

President Donald Trump salutes on the balcony of the White House Monday. (AP Photo/Alex Brandon)

இப்போதும் அதிகளவில் நோய்தொற்றுக்கு உரியவராக உள்ள நிலையில் இந்நோயின் போக்கில் ஒரு தருணத்தில் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதென ட்ரம்பின் முடிவில் படுமோசமான இரத்தவெறியின் ஓர் அம்சம் உள்ளது. பதின்ம வயதில் உள்ள அவரின் கடைசி மகன் உட்பட இதுவரையில் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத அவரின் குடும்பத்தினர் மற்றும் அவரின் சொந்த பணியாளர்களுக்கும் நோய்தொற்று ஏற்படுத்தும் அபாயம் குறித்து அவர் முற்றிலும் அலட்சியமாக இருப்பதாக தெரிகிறது.

அவரின் மிகவும் நெருக்கமான உதவியாளர்களில் பத்திரிகை தொடர்பு செயலர் Kayleigh McEnany க்கு திங்கட்கிழமை காலை நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது, அதேபோல பத்திரிகை தொடர்பு அலுவலகத்தில் இன்னும் இரண்டு பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களில் அவர் அதிகளவில் நோய்தொற்றுக்கு உரியவராக இருந்திருக்கக்கூடிய அந்த நாட்கள் உட்பட, McEnany பல முறை முகக்கவசம் அணியாமலேயே செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார்.

தேர்தல் பிரச்சார நிர்வாகி பில் ஸ்டீபன், குடியரசுக் கட்சியின் தேசியக் குழு தலைவர் ரொன்னா மெக்டேனியல், அமெரிக்க செனட்டர்கள் ரொன் ஜோன்சன், மைக் லீ மற்றும் தோம் தில்லிஸ் உள்ளடங்கலாக குடியரசுக் கட்சியின் பல பெருந்தலைகளுக்கு வாரயிறுதியில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது.

வால்டர் ரீத் மருத்துவமனையிலிருந்து ட்ரம்ப் அனுப்பப்படுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஜனாதிபதியின் மருத்துவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அதில் அவர்கள் அவருக்கு கடைசியாக நோய்தொற்று இல்லை என்று எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற முக்கிய கேள்வி உள்ளடங்கலாக, ட்ரம்பின் மருத்துவ நிலைமை குறித்த முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்திருந்தனர்.

வியாழக்கிழமை, அக்டோபர் 1 மதியம் தான் முதலில் ட்ரம்புக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர் என்றாலும், பல நாட்களுக்கு முன்னரே அவருக்கு நோய்தொற்று இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கும், அவ்வாறு அவருக்குக் கொரொனா வைரஸ் இருப்பது தெரிந்திருந்தும் அவர் செவ்வாய்கிழமை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடெனுடன் விவாதிக்கச் சென்றார்.

அந்த விவாதத்தில், ட்ரம்பின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் முகக்கவசத்தைக் கழற்றியதுடன், அந்த விவாதத்தை இணைந்து நடத்திய க்ளீவ்லாந்து மருத்துவமனை, ட்ரம்ப், பைடென் மற்றும் விவாதத்தைத் தொகுத்தளிக்கும் க்ரிஸ் வாலஸ் தவிர அங்கே கலந்து கொண்டிருக்கும் மற்றவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளுக்குக் கீழ்படிய மறுத்தனர்.

ட்ரம்ப் அவரின் மனிதப்படுகொலை கொரொனா வைரஸ் கொள்கையை இரண்டு மடங்கு கைவிடுவதும் மற்றும் அதிவலது போராளிகளுக்கு அவர் முறையீடுகள் செய்வதும் பெயரளவிற்கான அவரின் ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர்களின் முதுகெலும்பற்றத்தன்மை மற்றும் திவால்நிலைமையிலிருந்து கிடைக்கும் அதிக நிம்மதியில் தங்கியுள்ளது. பைடெனில் இருந்து, ஒபாமா, பெலோசி மற்றும் சாண்டர்ஸ் வரையில், அவர்கள் அனைவரும் பாசிசவாத வன்முறையை அவர் தூண்டிவிடுவதைக் குறித்தோ, உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அதிவலது நீதிபதியைச் சேர்க்க அவர் முண்டியடிப்பதைக் குறித்தோ, தேர்தலைக் களவாடுவதற்காக அவர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ள உத்தேசத்தைக் குறித்தோ எதுவும் குறிப்பிடாமல், "நல்லிணக்கத்திற்கும்" ட்ரம்ப் அந்நோயிலிருந்து விரைவாக குணமடைவதற்கும் அனுதாப அழைப்புகளை விடுத்து விடையிறுத்தனர்.

பைடென் திங்கட்கிழமை தெற்கு புளோரிடா நிகழ்ச்சிகளில் உரையாற்றுகையில், நவம்பர் 3 தேர்தலுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் தொடுத்து வரும் அச்சுறுத்தல்களைக் குறித்து எதுவுமே கூறவில்லை. நான்சி பெலோசியும் திங்கட்கிழமை MSNBC இல் அளித்த ஒரு பேட்டியில் அந்த விவகாரத்தை முன்னுயர்த்தவில்லை.

இன்னும் சொல்லப் போனால், காங்கிரஸ் சபை உதவியாளர்களின் ஆரோக்கியம் மீதான அக்கறைகள் மீது அவரின் அலட்சியத்தைக் காட்டும் முகமாக, பெலோசி ட்ரம்பையே எதிரொலித்தார். காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அனைவரும் மற்றும் அவரின் உதவியாளர்களும் பணியாளர்களும் வழமையாக கொரொனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்த, சமீபத்தில் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து உயிர்பிழைத்த கனக்டிக்கட் பிரதிநிதி ஜஹானா ஹயெஸின் முறையீட்டை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.

உலக சோசலிச வலைத் தளம் முன்னர் வலியுறுத்தி உள்ளவாறு, ட்ரம்பின் உடல்நல நிலைமையை முகமதிப்பாக எடுத்துக் கொண்ட எந்த செய்தியும் வெள்ளை மாளிகையிலிருந்து வரவில்லை. டெக்சாமெத்தசோன் பயன்படுத்துவதென்ற முடிவு நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற போதினும், வெள்ளை மாளிகை மருத்துவரும் கடற்படை தளபதியுமான சீன் கொன்லெ, இந்த தொற்றுநோயால் ட்ரம்பின் நுரையீரல்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்—இது X-rays மற்றும் CT ஸ்கேன்களிலேயே தெரிந்துவிடும்.

இதேபோல, ட்ரம்புக்கு ஐந்து நாட்களுக்கு ரெம்டிசிவிர் கலவை மருந்து வழங்குவதென்ற முடிவு, இது செவ்வாய்கிழமை வெள்ளை மாளிகையில் முடிவுக்கு வரும், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் கீழ் மருத்துவரீதியில் "அவசரகால பயன்பாட்டுக்கு" மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகும்.

“மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே டெக்சாமெத்தசோன் பரிந்துரைக்கப்படுகிறது,” என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. “அது அந்த வைரஸினால் ஏற்படும் மரணங்களைக் குறைக்கிறது என்றாலும்—ட்ரம்புக்குக் கொடுக்கப்பட்டதைப் போல—அது கொடுக்கப்பட்ட நோயாளிகளில் அண்மித்து ஒரு கால்வாசி பேர் ஆக்சிஜனுடன் சேர்த்து அது கொடுக்கப்பட்டும் உயிரிழந்துள்ளனர். ஸ்டெர்ராய்டுகள் அதிக வீரியம் உள்ளவை, காலம் செல்ல செல்ல அது சித்திபிரமை (delirium), மருட்சி நோய் (hallucinations) மற்றும் குழப்பம் உட்பட மனநிலை பாதிக்கும் தீவிர கோளாறுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதை ஓர் ஆய்வு கண்டறிந்தது,” என்றது குறிப்பிட்டது.

அமெரிக்க அணு ஆயுதங்களால் நாடுகள் இலக்கில் வைக்கப்படுவதை எதிர்பார்க்கையில் அதற்கு விடையிறுக்க மனநலம் குன்றிய ஒரு "முப்படைகளின் தலைமை தளபதி" அந்த சாத்தியத்திற்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறதா?

அந்த விவாதத்திற்கு அடுத்த நாள், ட்ரம்பின் மிகவும் நெருக்கமான பிரத்யேக உதவியாளர் ஹோப் ஹிக்ஸ், மின்னிசோட்டா தேர்தல் பயணத்தின் போது நோய்வாய்பட்டார். அப்பெண்மணி ட்ரம்ப் மற்றும் ஏனைய உதவியாளர்களுடன் அதே விமானத்தில் வாஷிங்டனுக்குத் திரும்பி வந்ததுடன், உடனடியாக பரிசோதிக்கப்பட்டு நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் ட்ரம்ப் தொடர்ந்து நியூ ஜெர்ஸியில் அவரின் கோல்ப் உல்லாச விடுதியில் நடந்த நிதி திரட்டும் நிகழ்வில் பிரச்சாரம் செய்தார், அதில் 200 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டர், இவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்பதோடு, அரசியல் உடல்நல ஆரோக்கிய உத்தரவுகளை முற்றிலும் மீறிய நிலைமைகளின் கீழ் அவர்கள் உணவு விருந்தும் எடுத்துக் கொண்டனர்.

ட்ரம்ப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், ஜனாதிபதி முந்தைய நாட்களில் விஜயம் செய்திருந்த மின்னிசோட்டா, ஓஹியோ, நியூ ஜெர்ஸி மற்றும் பென்சில்வேனியா ஆகிய நான்கு மாநிலங்களில் நோய்தொற்றின் தடமறிவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதில் ஆயிரக் கணக்கானவர்கள் ஜனாதிபதியால் உயிராபத்தான நோய்தொற்றுக்கு ஆளாகி இருக்கக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஜனாதிபதியின் சொகுசு காரில் வெளியில் சென்று வால்டர் ரீட் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் கையசைத்து செல்வதென்ற ட்ரம்பின் முடிவு இன்னும் அதிக குற்றகரமாக பொறுப்பின்றி இருந்தது. அவருடன் இரகசிய சேவை துறையினர், அமெரிக்க தற்காப்புப்படையினர், மருத்துவ உதவியாளர்கள் அனைவரும் இணைந்திருந்தனர் என்பதோடு அவர்கள் அனைவரும் ஜன்னல்கள் மூடிய காரில் அடைந்திருந்தனர்.

“முற்றிலும் அவசியமற்ற ஜனாதிபதியின் அந்த 'கார் பயணத்தில்' அந்த வாகனத்தில் இருந்த ஒவ்வொருவரும் இப்போது 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது,” என்று வால்டர் ரீட்டின் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் டாக்டர் ஜேம்ஸ் பி. பிலிப்ஸ் ட்வீட்டரில் எழுதினார். “அவர்களும் நோய்வாய்ப்படலாம். அவர்கள் இறந்தும் போகலாம். அரசியல் நாடகத்திற்காக. ட்ரம்ப் கட்டளையின்படி அந்த நாடகத்திற்காக அவர்களின் உயிர்களை அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டது. இது பைத்தியக்காரத்தனம்.”

திங்கட்கிழமை மாலை மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகைக்குக் கிளம்புவதென்ற முடிவால் உச்சத்தை அடைந்திருந்த, தனிநபராக சாத்தியமானளவுக்கு பலருக்கும் நோய்தொற்றை உண்டாக்குவதென்ற ட்ரம்பின் முயற்சியிலிருந்து என்ன நினைக்கத் தோன்றும் என்றால், மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் குறித்த எந்த அக்கறையும் கைவிடப்பட்ட, அரசியல்ரீதியில் உந்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவாக இருந்தது.

Loading