கிரேக்க பாசிஸ்டுகளின் குற்றவியல் தண்டனையைத் தொடர்ந்து போலி-இடது அமைப்புக்கள் ஆபத்தான மாயைகளை ஊக்குவிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிரேக்க உச்ச நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில் நவ-பாசிசக் கட்சியான Chrysi Avgi (கோல்டன் டோன்) ஒரு குற்றவியல் அமைப்பு என்று தீர்ப்பளித்தது, மேலும் வன்முறை, ஒரு குற்றவியல் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தமை, கடுமையான உடல்ரீதியான தீங்குவிளைவிப்பு, மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணைக்கு உட்பட்ட 68 உறுப்பினர்கள் மீது தண்டனை விதிக்கப்பட்டது. கோல்டன் டோனுக்கு எதிரான வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது, அதன் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என நேற்று நீதிமன்றம் அறிவித்தது. கட்சித் தலைவரான நிக்கோஸ் மிகேலோலியாக்கோஸ் (Nikos Michaloliakos) ஒரு ஹிட்லர் அபிமானியும் யூதப் படுகொலை மறுப்புத் தலைவருமான இவருக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஐந்து முதல் 13 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டது. ஜியர்கோஸ் ரூபக்கியாஸ் (Giorgos Roupakias) க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2013 ஆண்டில் பாசிச-எதிர்ப்பு ராப் இசைக் கலைஞரான பாவ்லோஸ் ஃபைசாஸ் (Pavlos Fyssas) ஐ கத்தியால் குத்தியதை கட்சி ஆதரவாளர் ஒப்புக்கொண்டார். ஏனைய கட்சி உறுப்பினர்கள் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை இக் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். வரும் நாட்களில், சில தண்டனைகள் நிறுத்தி வைக்கப்படுமா என்பது குறித்து தீர்ப்புகள் வழங்கப்படும்.

அக்டோபர் 7ம் திகதி தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்னர், மத்திய ஏதென்ஸில் நீதிமன்றத்திற்கு வெளியே 20,000 க்கும் அதிகமான மக்கள் கூடி இந்த முடிவைக் கொண்டாடினர், அவர்களில் ஃபைசாஸ் இன் தாய் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் (சிரிசா- தீவிர இடது கூட்டணி) ஆகியோர் அடங்குவர். அப்போதிருந்து, பல போலி-இடது அமைப்புக்கள் இந்த முடிவை பாசிசத்திற்கு எதிரான ஒரு மகத்தான வெற்றியாக காட்ட முற்பட்டன.

முன்னாள் ஆளும் கட்சியான சிரிசா இதை "ஒரு முக்கியமான மைல்கல், ஒரு திருப்புமுனை மற்றும் எங்களுக்கு முன்னால் உள்ள போராட்டங்களுக்கு ஒரு புதிய புறப்பாட்டுப் புள்ளி" என்று விவரித்தது.

சர்வதேச சோசலிச போக்கின் (International Socialist Tendency) கிரேக்கப் பிரிவின் செய்தித்தாளான தொழிலாளர் ஒற்றுமை (Workers Solidarity), இந்தத் தீர்ப்பு "தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்" என்று கூறியது. வலதுசாரி புதிய ஜனநாயக அரசாங்கத்தின் முகாம் கூட பாசிச-எதிர்ப்பு இன் "இந்த நீரோட்டத்திற்கு முன் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முன்னாள் புதிய ஜனநாயக (New Democracy) பிரதம மந்திரி அன்டோனிஸ் சமராஸ், "கிரேக்க பொலிசுடனும் மற்றும் கோல்டன் டோனும் கூட்டாக நடத்திய இனவெறி பிரச்சாரத்தைத் தொடங்கியதுடன், இப்பொழுது தன்னை ஒரு பாசிச-எதிர்ப்புவாதி என்று அறிவித்துக் கொண்டார்." "கோல்டன் டோனுடன் மாசிடோனியாவிற்கான பேரணிகளை பாராட்டிய அவரது வாரிசான கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் (Kyriakos Mitsotakis), இப்போது பாசிச எதிர்ப்பு வெற்றிப்பதக்கங்களுக்கு பின்னால் வருகிறார்" என்றும் கூறியது.

OKDE- Spartakos குழுவின் பப்லோவாத வலைத் தளமான International Viewpoint இல் தீர்ப்பைக் கொண்டாடி, "பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள், வேலையற்றோர், புலம்பெயர்ந்தோர்கள், இளைஞர்கள், பாசிச எதிர்ப்புவாதிகள், பாசிச காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக ஒரு சுவரை எழுப்பி, வரலாற்று சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். கோல்டன் டோனையும் அதன் கிளைகளையும் சிறைக்கும் மற்றும் வரலாற்றின் குப்பைகளுக்கும் அனுப்புகின்றன... இதற்கு முன்னர் சமராஸின் அரசாங்கத்தைப் போலவே, மிட்சோடாக்கிஸ் இன் அரசாங்கமும் நாஜிக்களுடன் அதன் இரத்த உறவுகளை துண்டித்து, பாரிய மற்றும் பல்வடிவ பாசிச எதிர்ப்பு போராட்டத்தின் சுமையின் கீழ் நீதிமன்றத்திற்கு அவர்களை இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று எழுதுகிறது.

இந்த மதிப்பீடுகள் விளையாட்டுத்தனமானது மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் குற்றமாகும். கோல்டன் டோனுக்கு எதிரான தீர்ப்பை தொடர்ந்து எந்த வகையிலும் அகற்றப்படாத பாசிச அச்சுறுத்தலை தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கையில் அவர்கள் தொழிலாளர்களை நிராயுதபாணியாக்குகிறார்கள். சாமராஸ் மற்றும் மிட்சோடாக்கிஸ் (Mitsotakis) தங்களை பாசிச-எதிர்ப்புவாதிகளாக மாற்றிக் கொள்ளவில்லை மற்றும் "நாஜிகளுடனான இரத்த உறவுகளை" முறித்துக் கொள்ளவில்லை, மாறாக அவர்களின் கொள்கைகளை தழுவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சர்வதேச வங்கிகளையும் கிரேக்க தன்னலக் குழுக்களையும் வளப்படுத்த கிரேக்க மக்களை "இடது" மற்றும் வலதுசாரி கிரேக்க அரசாங்கங்கள் சூறையாடிய பல ஆண்டுகளுக்குப் பின்னர், நாடு பல தசாப்தங்களாக அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இது நம்பமுடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளது. கோல்டன் டோன் இன் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அரசாங்கம் பதிலளித்துள்ளது: அதாவது இது தேசியவாதத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறது, அகதிகளை துஷ்பிரயோகம் செய்கிறது மற்றும் பரம எதிரியான துருக்கிக்கு எதிராக போருக்கு தயாரிப்பு செய்கிறது, இது ஆயிரக்கணக்கான இளம் சிப்பாய்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

அமெரிக்கா முதல் பிரேசில், பிலிப்பைன்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஹங்கேரி மற்றும் பிற இடங்களிலும் உலகெங்கிலும் பாசிச இயக்கங்களின் வளர்ச்சியானது, வர்க்க பதட்டங்கள் ஜனநாயக வழிவகைகளால் இனி மேல் மூடிமறைக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த மட்டத்தை அடைந்துவிட்டதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வறுமை, இராணுவவாதம் மற்றும் அவர்களுடைய கொரோனா வைரஸ் கொள்கையின் பேரழிவுகரமான விளைவுகளை எதிர்கொண்டுள்ள ஆளும் வர்க்கமானது சர்வாதிகார ஆட்சி வடிவங்களை ஸ்தாபிப்பதற்காக எல்லா இடங்களிலும் பாசிச கும்பல்களை ஊக்குவித்து வருகிறது.

அகதிகளைத் தாக்குவதற்கும், தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும், இடதுசாரி ஆர்வலர்களைக் கொலை செய்வதற்கும் அவர்களுக்கு அரச அனுமதி வழங்கப்பட்ட பின்னர், ஹிட்லர் அபிமானியான Michaloliakos மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் இப்போது பல வருடங்கள் சிறைக்குப் பின்னால் செலவிட வேண்டும் என்றால், எல்லாவற்றிற்கும் மேலாக தந்திரோபாய காரணங்களுக்காகத்தான் இது இருக்கிறது. நாஜிக்கள் மீதான பெருகிவரும் எதிர்ப்பானது முதலாளித்துவ ஆட்சிக்கே ஒரு அச்சுறுத்தலாக மாறும் என்று அரசாங்கம் அஞ்சுவதுதான் இதற்குக் காரணமாக இருக்கிறது.

தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அவர்களின் பாசிச இரத்தவெறிகளை அவிழ்த்து விடுவதற்கும், எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கு அவர்களை ஒரு இறுக்கிய முறையில் வைத்திருக்கவும் அல்லது தற்காலிகமாக அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் எடுக்கும் முடிவானது ஆளும் வர்க்கத்திற்கு சூழ்நிலைக்கேற்ற ஒரு தந்திரோபாய அடிப்படையாக மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளுவதாகத்தான் எப்போதுமே இருந்து வந்துள்ளது. ஜேர்மனியில், நாஜிக்களின் துணை இராணுவக் குழுவான SA ஆனது ஏப்ரல் 1932 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தடைசெய்யப்பட்டது, ஏனெனில் தொழிலாள வர்க்கத்துடன் ஆயுத மோதல்களானது தொழிலாளர்களின் வெற்றியை விளைவிக்கும் அபாயமாக இருந்தது. ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், ஆளும் வர்க்கம் ஹிட்லரை அரசாங்கத்தின் தலைமையை ஒப்படைத்து அவருக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்கியது.

கிரேக்க அரசியலில் பாசிசம் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது என்பதற்கு வரலாற்று அனுபவம் சான்றாகும். நாஜி ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைத்ததில் இருந்து, 1967 க்கும் 1974க்கும் இடையே கேணல்களின் சர்வாதிகாரம், மற்றும் 2011 இல் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பெற்ற தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்தில் வோல்கிஷ்-தேசியவாத L.A.O.S கட்சியை சேர்த்துக் கொண்டதிலும், வலதுசாரி தீவிரவாத குழுக்கள் மீண்டும் மீண்டும் ஒரு முன்னணி பாத்திரத்தை வகித்துள்ளன.

கிரேக்கத்தில் இன்று பல ஆர்வமுடையவர்கள் உள்ளனர், அவர்களின் தலைவர்கள் சிறிது காலத்தில் விடுவிக்கப்படாவிட்டால், கோல்டன் டோன் இன் அடிச்சுவடுகளைப் பின்பற்றலாம். கடந்த வாரம் பொதுமக்களுக்கு கசிந்த ஒரு பொலிஸ் அறிக்கையின்படி, சுமார் 16 வலதுசாரி தீவிரவாத குழுக்கள் கோல்டன் டோன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப முயல்கின்றன என்று தெரிவித்தது. அவைகளில் ஒன்றான Elliniki Lysi (கிரேக்க தீர்வு) ஏற்கனவே கிரேக்க நாடாளுமன்றத்தில் 10 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இலியாஸ் காசிடியாரிஸ் ஜூன் மாதம் கோல்டன் டோன் இலிருந்து பிரிந்து நிறுவிய கிரேக்கர்களுக்கான தந்தைநாட்டுக்கான (Greeks for the Fatherland) அமைப்பு கருத்துக் கணிப்பு வாக்குகளில் 1.5 முதல் 3 சதவிகிதம் வரை ஆதரவைப் பெற்றிருக்கிறது.

பாசிஸ்டுகள் குறிப்பாக அரசு எந்திரத்திற்குள் ஒரு வலுவான ஆதரவு அடித்தளத்தை அனுபவிக்கின்றனர். 2012ல், மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், அனைத்து போலீஸ் அதிகாரிகளில் 23 சதவிகிதத்தினர் பாசிஸ்டுகளுக்கு வாக்களித்தனர். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் அணுகுமுறை மீண்டும் ஒருமுறை காட்டப்பட்டுள்ளது, சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த ஆயுதமேந்திய போலீசார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை நீதிமன்ற கட்டிடத்திலிருந்து தண்ணீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிகளால் விரட்டியடித்தனர்.

நீதிமன்ற முடிவை ஒரு வெற்றியாகக் கொண்டாடும் சிரிசாவும் போலி-இடது குழுக்களும் தீவிர வலதுசாரிகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன, தொடர்ந்து அதைச் செய்கின்றன. அவர்கள் மக்களிடமிருந்து பாசிச அச்சுறுத்தலை மறைப்பதற்குக் காரணம், ஏனெனில் மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளின் பிரதிநிதிகளான அவர்கள் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கிறார்கள், அவை எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலம் மட்டுமே ஆட்சியைப் பராமரிக்கப்பட முடியும்.

அவர்களின் தேசியவாத மற்றும் தொழிலாளர்-விரோத கொள்கைகளுடன், சமூக ஜனநாயக Pasok மற்றும் அதன் பொறிவை தொடர்ந்து, சிரிசாவானது இராணுவ சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்த பின்னர் முற்றிலும் மதிப்பிழந்த அதி-வலது சக்திகளை மீண்டும் உயிர்த்தெழிவதற்கு வழிசெய்தது. தங்களுடைய சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் போலி-இடது அமைப்புக்கள் இந்தக் கொள்கைகளை மூடிமறைத்தன அல்லது வெளிப்படையாக ஆதரித்தன.

1990 களில் Pasok அரசாங்கம் மாசிடோனியாவுக்கு எதிராக ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன், தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் கிரேக்கப் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்தபோது, கோல்டன் டோன் ஆனது 1990 களில் தோன்றியது. இப்பொழுது தண்டனை பெற்றுள்ள மிகேலோலியாக்கோஸ் (Michaloliakos), அந்த நேரத்தில் கிரேக்க உளவுத்துறை அமைப்பில் பணியாற்றி வந்தார்.

சிப்ராஸின் சிரிசா அரசாங்கத்தின் கீழ், 2015 ஆம் ஆண்டில் கோல்டன் டோன் அதன் செல்வாக்கின் உயர் நிலையை அடைந்தது, அது 7 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக மாறியது. 300 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தில் 18 பிரதிநிதித்துவங்களை அவர்கள் பெற்றனர், ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கனக் கொள்கைகள் மற்றும் அரசு எந்திரத்திற்குள் ஊழல் நடந்திருப்பது குறித்து பரவலான சமூக கோபத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்து 2015 ஜனவரியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிரிசா வெற்றி பெற்றது. ஆனால் சிப்ராஸ் தீவிர வலதுசாரி சுதந்திர கிரேக்கர்களுடன் (Independent Greeks - Anel) ஒரு கூட்டணியை உருவாக்கி, சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார், இறுதியில் புதிய ஜனநாயகம் (New Democracy) அதிகாரத்திற்கு திரும்புவதற்கு வழிவகுத்தார், இது பெரும்பாலும் பாசிஸ்டுகளின் செயற்திட்டத்தை ஏற்றுக்கொண்டது.

பாசிஸ்ட்டுகள் இன்னும் ஒரு வெகுஜன இயக்கத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தால் அவர்களை எதிர்த்து போராடப்படவில்லை என்றால், அவர்கள் தங்கள் செல்வாக்கை அதிகரிக்கக்கூடிய ஆபத்து மிக அதிகமாக உள்ளது. இதற்கு சிரிசா மற்றும் அதன் போலி-இடது சுற்றுவட்டதிலிருந்து ஒரு முழுமையான உடைவு தேவைப்படுகிறது, மற்றும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து ஒடுக்கப்பட்ட தட்டினரின் முன்னணி சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இதற்கு கிரேக்கத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஒரு பிரிவு கட்டமைக்கப்படுவது அவசியமாகும்.

Loading