இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தினால் முடக்கப்பட்ட வடக்கு கிழக்கு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் வலதுசாரி அரசாங்கத்துக்கு எதிராக, செப்டம்பர் 28 அன்று நடத்தப்பட்ட வெகுஜன எதிர்ப்பினால் (ஹர்த்தால்) இலங்கையின் வடக்கு மற்று கிழக்கு மாகாணங்கள் முற்றாக முடங்கின.

இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் தலைவரான திலீபனை நினைவுகூர்வதற்கு அரசாங்கம் விதித்த தடையால் தூண்டப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை அடுத்து, 1987 செப்டம்பரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து இறந்தார்.

செப்டம்பர் 15 தொடக்கம் 26 வரை – உண்ணாவிரதம் ஆரம்பித்த நாளில் இருந்து மரணமடைந்த நாள் வரை- திலீபன் நினைவு தினத்தை தமிழ் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. ஆயினும், ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகளின் அங்கத்தவரான திலீபனை நினைவு கூர முடியாது என்று கூறிக்கொண்டு, பொலிஸ் சகல எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தடைசெய்யும் ஒரு நீதிமன்ற ஆணையை செப்டம்பர் 14 அன்று பெற்றிருந்த்து. “ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பினை நினைவு கூருவது… பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படக் கூடிய ஒரு குற்றமாகும்,” என அந்த ஆணை மேலும் தெரிவித்திருந்தது. இந்த நீதிமன்ற ஆணை, ஆர்ப்பாட்டக்கார்ரகளை கொடூரமான பயங்கரவா தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கு பொலிசாருக்கு அனுமதி வழங்குகின்றது.

நீதிமன்ற உத்தரவை மீறினார் என்று கூறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை பொலிஸ் செப்டம்பர் 15 அன்று கைது செய்து, 24 மணித்தியாலங்களின் பின்னர் பிணையில் விடுவித்தது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவு இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள் மற்றும் பதைகைகளை பொலிஸ் அகற்றியது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸ் அச்சுறுத்தியது.

தமிழ் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மற்றைய பல முன்னணிகள் உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளால் விரைந்து உருவாக்கப்பட்ட “ஐக்கிய தமிழ் தேசியக் கட்சிகள்” அமைப்பு, இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தது. மதிப்பிழந்து போன இந்த கட்சிகள், வளர்ந்துவரும் வெகுஜன எதிர்ப்புக்களைக் கட்டப்படுத்துவதற்கும் வேகமாக வீழ்ச்சியடைந்துவரும் தங்கள் ஆதரவுத் தளத்தினை தக்க வைத்துக் கொள்வதற்குமே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தனவே அன்றி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அக்கறையுடன் அல்ல.

எதிர்ப்பு நடவடிக்கையில் வெகுஜனங்களின் பங்களிப்பானது, பொலிஸ் – அரச நடவடிக்கைகள் சம்பந்தமான பரந்த எதிர்ப்பையும் நினைவு தினங்கள் மற்றும் சட்டபூர்வமான போராட்டங்களை நடத்துவதற்கும் உள்ள ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டையும் வெளிப்டுத்தி இருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஒன்றாக ஹர்த்தாலில் பங்குபற்றி, சகல பொது நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகங்களையும் நிறுத்தினார்கள். பாடசாலைகள் திறந்திருந்தபோதிலும் மாணவர்கள் வருகைதரவில்லை. சட்டத்தரணிகளும் நீதமன்றங்களுக்குச் செல்லவில்லை. அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மட்டுமே திறந்திருந்தன.

ஆசிரியர்களும் அரசாங்க உத்தியோகத்தர்களும் வேலைக்கு சமூகமளிக்காதுவிட்டால், வேறுவழிகளில் தண்டிக்கப்படுவார்கள், என்பதால் வேலைக்குச் சென்றிருந்தனர். பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வீதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, கடைகளைத் திறக்குமாறு வர்த்தகர்களை அச்சுறுத்தினர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் கடைகளை திறக்குமாறு அச்சுறுத்திய இராணுவமும் பொலிசும் (picture: Lankasudar)

வவுனியாவில், பாடசாலைக்குச் சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்களை இராணுவத்தினர் திரட்டியுள்ளார்கள். உள்ளூர் செய்திகளின்படி, தகவல்களைத் திரட்டுவதற்காக புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள்.

வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றனர்

அரச ஆதரவாளர்களாகிய சிறிய குழுவினர், ஹர்த்தாலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், நாள்பூராவும் ஹர்த்தால் தொடர்ந்தது. கிழக்கில் உள்ள மக்களும் ஹர்த்தாலில் பங்குபற்றியிருந்தார்கள்.

பொலிஸ் – இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தியிலும் வடக்கு மற்றும் கிழக்கில் ஹர்த்தாலில் வெகுஜனங்கள் அதிகரித்தளவில் பங்குபற்றியமையானது ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ ஆட்சியின் கீழ், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்துச் செல்லும் தாக்குதல்களுக்கு எதிராக, நாடு பூராவும் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் எதிர்ப்பை பிரதிபலிக்கின்றது.

அண்மைய வருடங்களில், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் இனவாத பிரச்சாரங்களை மீறி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் ஐக்கியப்பட்ட வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட அதேநேரம், தமிழ் கட்சிகள் தொழிலாளர் வர்க்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக தேசியவாத்தை கிளறிவிட்டனர்.

வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள மக்கள், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட முப்பது வருட கொடூரமான இனவாத யுத்தப் பேரழிவுகளில் இருந்து இன்னமும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். யுத்தத்தின்போது, ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற வீடுகளில் வாழ்கின்றார்கள்.வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் யுத்த விதவைகளும் பல ஊனமுற்றவர்களும் பொருத்தமான வாழ்வாதாரங்கள் இல்லாமல் வாழ்கின்றார்கள்.

மேலும், நான்கு தசாப்தங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளதுடன், மக்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களுக்கும் முகம்கொடுக்கின்றனர். இராஜபக்ஷவின் ஒடுக்குமுறை மற்றும் தொடர்ச்சியான தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்கள், இராணுவத்தை அடித்தளமாக கொண்ட ஒரு சர்வாதிகாரத்தை நோக்கிய அதன் நடவடிக்கையின் ஒரு பாகமாகும் .

இரண்டு நாட்களுக்கு முன்னராக, செப்டம்பர் 26, யாழ்ப்பாண நகருக்கு வடகிழக்காக உள்ள, சாவகச்சேரி சிவன் கோயிலில், டசின் கணக்கான பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் திலீபன் நினைவாக ஒரு உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் முடிவில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ் கூட்டமைப்பின் தலமைக் கட்சி) தலைவர் மாவை சேனாதிராசா, பொலிசார் வழங்கிய “ஆதரவுக்கு” நன்றி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்திருக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தின் படைகளுக்கான தமிழ் தேசியவாதக் குழுக்களின் நெருக்கமான விசுவாசம் மற்றும் ஆதரவினையே தமிழரசுக் கட்சி தலைவரின் குறிப்புக்கள் பிரதிபலிக்கின்றன. பொலிசாரும் படையினரும் யாழ்ப்பாணத்தில் ரோந்து சுற்றிக் கொண்டும், மக்களை அச்சுறுத்திக்கொண்டும் மற்றும் அவரது சகாவான சிவாஜிலிங்கம் கைதிசெய்யப்பட்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே, மாவை சேனாதிராஜா அத்தகைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும், சேனாதிராசா படைகளின் நடவடிக்கைகளையோ அல்லது அவற்றினை வழிநடத்தும் அரசாங்கத்தினையோ கண்டனம் செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் நேரடி ஆதரவாளராக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, அந்த அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் மற்றும் யுத்தக் குற்றவிசாரணைகளைக் கீழறுப்பதற்கும் உதவி வந்துள்ளது. அண்மைய மாதங்களில், அதன் தலைவர்கள், ஜனாதிபதி சர்வாதிகாரத்தினை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் சமரசம் செய்து கொள்வதற்கு முயற்சித்தனர். இலங்கை முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவும், கொவிட் – 19 வைரசின் பூகோள தொற்றுப் பரவலால் தூண்டப்பட்ட நெருக்கடியின் மத்தியில் அதிகரித்துச் செல்லும் சமூக எதிர்ப்புக்கள் பற்றி பீதியுடன் உள்ளன.

சில சமயங்களில், அவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் குழப்பும் நோக்குடன், அரசியல் இயலாமை மற்றும் வங்குரோத்து நடவடிக்கைகளுடன் புலிகளின் நினைவுகளைத் தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

தோற்கடிக்கப்பட்ட புலிகள் உட்பட அனைத்து தமிழ் தேசியவாத கட்சிகளும், கொழும்பு அராசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பரவலாக்கலை பெற்றுக்கொள்வதற்காக, இந்திய முதலாளித்திடமும் மற்றும் குறிப்பாக அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகளிடமும் விண்ணப்பிப்பதேயே தங்களின் அடிப்படை முன்னோக்காக கொண்டுள்ளனர். புலிகளின் தோல்வியின் பின்னர், இந்தக் கட்சிகள் மேலும் வலது பக்கம் நகர்ந்து, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பூகோள நலனுக்கு ஆதரவளித்து வருகின்றன. இந்த மாற்றத்தின் ஒருபாகமாகவே, 2015 இல், மகிந்த ராஜபக்ஷவை வெளியேற்றிய ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவளித்திருந்தது.

1987 இல் இருந்து இரண்டு வருடங்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கினை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த போது நடைபெற்ற திலீபனின் உண்ணாவிரதம், முக்கியமான படிப்பினைகளைக் கொண்டது. 1987 ஜூலை 29ம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, அமைதி காத்தல் என்னும் போர்வையில், இந்திய இராணுவம் வடக்கு மற்றும் கிழக்குக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தம், தமிழ் தட்டுக்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக, வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகாரப் பரவலாக்கல் உட்பட மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை முன்மொழிந்தது.

இரக்கமற்ற பிராந்தியப் பொலிஸ்காரனான புது டில்லியின் ஆணையின் பேரில், புலிகளும் இந்த ஒப்பந்தத்துக்கு உடன்பட்டிருந்தனர். பிரதானமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் அணிதிரண்ட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், மற்றும் மற்றைய ஆயுதக் குழுக்களும், இந்த ஒப்பந்தத்தையும் மற்றும் இந்திய இராணுவ தலையீட்டையும் முழுமையாக ஆதரித்தன.

உண்மையில், தமிழர் எழுச்சியை நசுக்குவதும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தினால் இந்தியத் துணைக்கண்டத்தில் திணிக்கப்பட்டிருந்த யுத்தத்துக்கு பிந்திய தீர்வுகளுக்கு மத்தியில், இலங்கை முதலாளித்துவத்தின் ஒற்றை ஆட்சியைப் பாதுகாப்பதுமே இந்தியாவின் வகிபாகமாக இருந்தது.

இந்திய இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் தனது ஆக்கிரமிப்பினை விரைவில் பலப்படுத்தியதுடன், வைத்திருந்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு புலிகள் இயக்கத்தினை கட்டாயப்படுத்தியது. 2009 மே மாதம் யுத்தத்தின் முடிவில் இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வழிகாட்டலில், அரசியல் குழுவின் தலைவர் திலீபன் பல நிபந்தனைகளை முன்வைத்து, உண்ணாவிரத்தை ஆரம்பித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்; ஒரு துணைப் பொலிஸ் படையான ஊர்காவல் படைகளின் ஆயுதங்களை களைதல்; வடக்கு மற்றும் கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்தல் போன்ற சில கோரிக்கைகள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த கோரிக்கைகள் புது டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும் அவை இழிவுடன் நிராகரிக்கப்பட்டன. திலீபனின் உண்ணாவிரத்துக்கு வெகுஜனங்கள் கொடுத்த ஆதரவு, இந்தியத் தலையீட்டுக்கு அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. திலீபன் ஒக்டோபர் 26 அன்று மரணமடைந்தார். திட்டமிட்ட ஆத்திரமூட்டலின் பின்னர், வெகுஜனங்களின் மத்தியில் கோபம் வளர்ச்சியடைந்தது, ஒக்டோபர் ஆரம்பத்தில் இந்திய இராணுவம் புலிகள் மீது தாக்குதலை முன்னெடுத்தது. புலிகள் இயக்கப் போராளிகளுக்கு அப்பால், ஆயிரக் கணக்கான பொது மக்கள் இந்திய இராணுவத்தின் தாக்குதல்களினால் கொல்லப்பட்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பகுதியும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோடியுமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) மட்டுமே, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் அடிப்படையில், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும் இந்தியத் தலையீட்டையும் எதிர்த்த ஒரேயொரு இயக்கமாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தையும் இலங்கை இராணுவத்தையும் வெளியேறுமாறு பு.க.க. கோரிக்கை விடுத்தது. அத்தோடு, 1987 ஆகஸ்ட்டில், மண்டபம் நிறைந்த இரண்டு கூட்டங்களை யாழ்ப்பாணத்திலும் மற்றும் காரைநகரிலும் நடத்திய பு.க.க. ஒப்பந்தத்தின் மோசமான விளைவுகளை விளங்கப்படுத்தியது.

“இலங்கையின் அரசியல் நிலமைகளும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பணிகளும்” என்ற தலைப்பில் அனைத்துலகக் குழு ஒரு அறிக்கையை 1987 நவம்பர் 19 அன்று வெளியிட்டிருந்தது.

“பிரபாகரன், தான் புது டில்லிக்கு பறந்து சென்றதும், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதும், இந்தியாவினது தந்திரத்தினதும் கபடத்தனத்தினதும் விளைபொருள் என்கின்றார். இந்த ‘சாக்குப்போக்கு’ புலிகளின் அறியாமையை மட்டுமன்றி, குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் அரசியல் இயலாமையையுமே அம்பலப்படுத்துகிறது. புலிகளின் தலைவர் ஏன் காந்தியினால் ஏமாற்றப்படக் கூடியவராக இருந்தார் என்றால், அவரது முழு கொள்கையுமே தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு இந்திய முதலாளித்துவத்தை வருந்தி அழைத்து உதவி செய்யும்படி கேட்கும் அரசியலின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த பேரழிவுகரமான தவறான கணிப்பீட்டிற்கான மூலவேர்கள், முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்திலும் வர்க்க முன்னோக்கிலுமே உள்ளன.”

இந்திய முதலாளித்தவத்தின் தலையீட்டுக்கு எதிராக, தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக ஸ்ரீ லங்கா-ஈழம் சோசலிச குடியரசைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை அனைத்துலகக் குழு அபிவிருத்தி செய்தது. இந்த வேலத் திட்டம் 1987ல் இருந்து ஒரு தசாப்த்துக்கு மேலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வந்த காலத்தில் புலிகளின்–மற்றும் தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தேசியவாத குழுக்களதும்– வலது நோக்கிய பரிணாமம், இந்த அரசியலின் தர்க்க விளைவாகும். கடந்த முன்றரை தசாப்த கால கசப்பான அனுபவங்கள், அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் அபிவிருத்தி செய்த வேலைத் திட்டத்துக்காகப் போராட வேண்டிய அவசியத்தை சக்திவாய்ந்த முறையில் நிரூபிக்கின்றது.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒரு மாற்று வழியைத் தேடிக் கொண்டிருப்போர், இந்த பாடங்களை கற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதுடன், தமிழ் முதலாளித்தவக் கட்சிகளின் பிற்போக்கு தேசியவாத அரசியலில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, சோசலிச சர்வதேச வேலைத் திட்டத்துக்காகப் போராட முன்வர வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading