முன்னோக்கு

மிச்சிகன், மஸ்கீகன் கூட்டத்தில்

ட்ரம்ப் வன்முறை மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலைத் தீவிரப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மிச்சிகன் மாநில ஜனநாயகக் கட்சி ஆளுநரைக் கடத்தி கொலை செய்ய திட்டம் தீட்டியதற்காக 14 வலதுசாரி போராளிகள் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பிந்தைய அவரின் முதல் விஜயமாக, மிச்சிகன் மஸ்கீகன் பிரச்சார கூட்டத்தில் தோன்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அவரின் வன்முறை தூண்டல்களைத் தீவிரப்படுத்தியதுடன், காலவரையின்றி பதவியில் நீடிப்பதற்கான அவரின் அச்சுறுத்தல்களையும் தீவிரப்படுத்தினார்.

ஆளுநர் கிரெட்சென் விட்மரைப் படுகொலை செய்வதற்கான கடைசி நிமிட தயாரிப்புகளுடன் பாசிசவாதிகளின் ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து வெறும் 10 நாட்களுக்குப் பின்னர், அவர் மீதான கண்டனங்களுடன் ட்ரம்ப் அக்கூட்டத்தை முடுக்கிவிட முனைந்தார். அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கைக்கு மத்தியிலும் பிரதான வாகன ஆலைகள் உட்பட அம்மாநிலத்தில் நடைமுறையளவில் எல்லா பிரதான பெருவணிங்களும் மீண்டும் திறக்க விட்மர் அனுமதித்துள்ள போதினும், “உங்கள் மாநிலத்தை மீண்டும் திறந்து விட அந்த ஆளுநரைப் பிடியுங்கள்,” என்று ட்ரம்ப் கூச்சலிட்டார்.

“அவர் அச்சுறுத்தப்பட்டதாக அவர்கள் கூறியதாக நான் அனுமானிக்கிறேன், சரியா? ஆனால் அப்பெண்மணி என்மீது பழிசுமத்தினார்,” என்று பாசாங்குத்தனமாக ஆச்சரியம் காட்டிய ட்ரம்ப் கூறினார். “அவரை அடைத்து வையுங்கள்,” என்ற கோஷங்களுடன் அக்கூட்டம் ஒத்துழைக்கும் விதத்தில் விடையிறுத்த போது, ட்ரம்ப் அவரின் அனைத்து அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் இந்த கோரிக்கையை நீடித்தார். “'அவர்கள் அனைவரையும்' அடையுங்கள்" என்று வெளிப்படையான கெக்களிப்புடன் அவர் கூறினார்.

இரண்டு பதவி கால அரசியலமைப்பு வரம்பையும் கடந்து, “நான்காண்டுகள், எட்டாண்டுகள், 12 ஆண்டுகள், 16” என பதவியில் தங்கியிருப்பதற்கான அவரின் தீர்மானத்தை வலியுறுத்தும் அளவுக்கு அவர் சென்றார். அவரின் ஊடக விமர்சகர்களை ஏளனம் செய்த அவர், “12 ஆண்டுகளுக்கும் அதிகமாக என்று கூறும் போது உண்மையிலேயே நீங்கள் அவர்களைக் கண்மூடித்தனமாக செயல்பட செய்கிறீர்கள். பின்னர் நீங்களை அவரை பாசிஸ்ட் என்று கூறுகிறீர்கள்,” என்றார். பல ஆயிரக் கணக்கானவர்களின் அந்த கூட்டம் "இன்னும் 12 ஆண்டுகள், இன்னும் 12 ஆண்டுகள்" என்ற கோஷங்களுடன் விடையிறுத்தன. அவர் தொடர்ந்து கூறுகையில், “'அவர் ஒரு பாசிசவாதி!' என்பது தான் இப்போது பொய் செய்தியாக இருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

யதார்த்தத்திலோ, அவரையும் அவர் குடும்பத்தையும் மையப்படுத்தி ஆயுதமேந்திய, வன்முறையான, ஜனநாயக-விரோத இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான அவரின் அதிகரித்தளவில் பகிரங்கமான முயற்சிக்கு மத்தியிலும், பெருநிறுவன ஊடகங்கள் ட்ரம்புக்கு "பாசிசவாத" முத்திரை குத்த மறுத்துள்ளன. ட்ரம்ப் பிரச்சாரம் மற்றும் ஒட்டுமொத்தமாக குடியரசுக் கட்சியின் போக்கே இது தான் என்பது மறுக்க முடியாதவாறு உள்ள போதினும், நவம்பர் 3 தேர்தலில் அவரின் ஜனநாயகக் கட்சி எதிர்பாளர்கள் ஜோ பைடென் மற்றும் கமலா ஹாரீஸூம் சரி, அல்லது வாஷிங்டனில் உள்ள காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியினரும் சரி அந்த வார்த்தையைப் பயன்படுத்த கூட துணியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை NBC இன் "Meet the Press” நிகழ்ச்சியில் தோன்றிய ஆளுநர் விட்மர், மஸ்கீகன் கூட்டத்தில் ட்ரம்ப் பேசிய மொழியை எதிர்த்ததுடன், “என்னைக் கடத்தி சென்று, வழக்கில் இழுத்து, மரண தண்டனை விதிக்க திட்டம் தீட்டிய 10 நாட்களுக்குப் பின்னர் —அது வெளிப்படுத்ததப்பட்டு 10 நாட்களுக்குப் பின்னர்— அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் அதிலேயே நிற்கிறார் என்பதோடு, அதே விதமான உள்நாட்டு பயங்கரவாதத்திற்கு உற்சாகமூட்டி, ஊக்கப்படுத்தி, தூண்டிவிட்டு வருகிறார் என்பது நம்பமுடியாதளவிற்குக் கவலைக்குரியதாக உள்ளது,” என்று எச்சரித்தார்.

ஆனால் ஏனைய முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் அவர்களின் ஊடக ஆதரவாளர்களும் இந்த பிரச்சினையைக் குறைத்துக் காட்டவும் அதை முற்றிலுமாக தவிர்க்கவும் முனைந்துள்ளனர். பிரதிநிதிகள் சபையின் ஆளுநர் நான்சி பெலோசி ABC இன் ஞாயிற்றுக்கிழமை காலை பேட்டியில் தோன்றிய போது, ட்ரம்பின் வாய்சவடாலை "பொறுப்பற்றது" என்று புறக்கணித்ததுடன், உண்மையில் விட்மரின் பெயரைக் குறிப்பிடாமல் அல்லது அவரின் உயிரைப் பறிப்பதற்கான சதியைக் குறித்துக் குறிப்பிடாமலேயே மஸ்கீகன் பேரணி குறித்த ஒரு நேரடி கேள்விக்கு விடையிறுத்தார். ட்ரம்ப் தேர்தல் முடிவை நிராகரித்து காலவரையின்றி பதவியில் தங்கியிருப்பதைக் குறித்து அவர் மீண்டும் மீண்டும் அறிவித்து வருவதைக் குறித்து எதுவும் கூறாமல், “வாக்கு தான் அவர் விஷத்திற்கு மிகப்பெரிய மாற்றுமருந்து,” என்றவர் நிறைவு செய்தார்.

முன்னாள் துணை ஜனாதிபதி பைடென் ஞாயிற்றுக்கிழமை வடக்கு கரோலினா டுர்ஹாம்மில் அவர் தனித்த வாரயிறுத்தி பிரச்சார சொற்பொழிவு வழங்கிய போது விட்மரைக் கொலை செய்வதற்கான சதியைக் குறித்து அவரும் ஒன்றும் குறிப்பிடவில்லை. 2017 இல் வேர்ஜினியா சார்லட்வில்லில் நவ-நாஜி அணிவகுப்புக்குப் பின்னர், விளக்கிட்டு காட்டிய பாசிசவாதிகளுக்கு மத்தியில் "மிகவும் அருமையான மனிதர்களும்" இருப்பதாக ட்ரம்பின் அறிக்கையை பைடென் மேற்கோளிட்டுக் காட்டிய போதும், ஜனாதிபதியின் இப்போதைய அரசியல் போக்கைக் குறித்து அவர் எந்த முடிவையும் வரையவில்லை. டஜன் கணக்கான பாசிசவாத குண்டர்களைக் கொண்டு "மிச்சிகனை விடுவியுங்கள்" என்பதை நடைமுறையில் கொண்டு வருமாறு ட்ரம்ப் கோரிய அந்த மாநிலத்தில், மஸ்கீகனுக்கு ட்ரம்பின் விஜயம் குறித்து அவர் ஒன்றுமே கூறவில்லை.

அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதியே இவ்வாறு நடந்து கொள்வது அமெரிக்க அரசியல் வாழ்வில் முன்னொருபோதும் நடந்ததில்லை. ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க மக்களுக்கான நலன் எதுவுமின்றி அவர்களின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்தில் வேரூன்றிய பெரிதும் இட்டுக்கட்டப்பட்ட போலிக்காரணத்துடன் ட்ரம்ப் மீது பதவிநீக்க குற்றவிசாரணை தொடுத்தனர், ஆனால் அந்த ஜனாதிபதி ஒரு பாசிசவாத வன்முறை இயக்கத்தை உருவாக்க முனைந்து குண்டர்களைத் தூண்டிவிடும் போது அவர்கள் ஒரு சுண்டுவிரலையும் தூக்க மறுக்கின்றனர்.

கடந்த வாரம், NBC இல் ட்ரம்ப் டவுன் ஹால் நிகழ்ச்சியில் தோன்றிய போது, அவர் வெள்ளையின மேலாதிக்கத்தை உத்தியோகபூர்வமாக நிராகரிக்கும் ஒரு வாக்கியத்தை வருத்தத்துடன் மட்டுமே தெரிவித்தார், அதேவேளையில் QAnon சூழ்ச்சி தத்துவத்தை அரவணைத்த அவர் "குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை" (pedophilia) எதிர்த்து போராடும் அதன் இலட்சியத்தை அவர் பகிர்ந்து கொள்வதாக சுட்டிக்காட்டினார். கொடூரமாக குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களால் ஜனநாயகக் கட்சி நடத்தப்படுகிறது என்றும் வரவிருக்கும் "சூறாவளியில்" ட்ரம்ப் அவர்களைச் சுற்றி வளைத்து தொலைத்துக் காட்டுவார் என்பதே QAnon பிரச்சாரத்தின் பிரதான வாதமாக உள்ளது. அந்த உள்ளடக்கத்தில், ட்ரம்பின் "அவர்கள் அனைவரையும் பிடித்து அடையுங்கள்" என்ற கருத்து நடுங்கச் செய்வதாக உள்ளது.

அமெரிக்க அரசியல் வாழ்வு மீதான நிஜமான விளைவுகள் ஏதும் ஏற்படுத்தாத வெறிப்பிடித்த குழுவின் பிதற்றல்கள் என்பதாக பொதுவாக அமெரிக்க ஊடகங்கள் QAnon ஐ உதறிவிடுகின்ற அதேவேளையில், ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் பகிரங்கமாக QAnon ஐ தழுவிய ஒரு வேட்பாளரான குடியரசு கட்சி போட்டியாளரிடம் இருந்து வடமேற்கு ஜோர்ஜியா மாவட்டத்தின் காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எவ்வாறு வன்முறை அச்சுறுத்தல்களை முகங்கொடுக்கிறார் என்பதன் மீது மிகவும் கவலைக்கிடமான விபரங்களை வெளியிட்டது. அம்மாநிலத்தில் எவரொருவரும் அல்லது தேசிய ஜனநாயகக் கட்சியிலிருந்து எவரொருவரும் அவரைப் பாதுகாத்து ஒரு சுண்டு விரலைக் கூட உயர்த்தவில்லை, அவர் அவரின் வேட்புமனுவைத் திரும்ப பெற்று அம்மாநிலத்தை விட்டே வெளியேறினார்.

மிச்சிகன் விடயத்தில், ஆளுநர் விட்மரைக் கடத்திச் சென்று கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்கள் அம்மாநில குடியரசுக் கட்சியின் நிர்வாகிகளின் ஆதரவைப் பெற்றிருந்தனர் என்பதோடு ட்ரம்ப் வெள்ளை மாளிகையுடன் நேரடியாக தொடர்பு வைத்துள்ள அரசியல் கையாட்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதற்கு அங்கே நிறைய ஆதாரங்கள் உள்ளன. அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துப்படி, இந்த சதி "கடுகளவு தான்", இதுபோன்ற சதிக்கூட்டங்களால் இன்னும் பல ஜனநாயகக் கட்சியினர் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர்.

விட்மருக்கு எதிராக வன்முறைக்கும் 2020 தேர்தலில் வாக்குரிமை மீது தாக்குதல் நடத்தும் திட்டங்களுக்கும் இடையே தொடர்பிருப்பதை ஊடங்களும் சரி ஜனநாயகக் கட்சியும் சரி குறிப்பிட்டுக் காட்டவே இல்லை. ஆனால் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மிச்சிகன் மாநில வெளியுறவுத்துறை செயலர் வாக்குச்சாவடிகளில் இருந்தோ அல்லது ஆள் நடமாட்டம் தடை செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் இடங்களில் இருந்தோ 100 அடிக்குள் வெளிப்படையாக ஆயுதங்களைக் கொண்டு செல்ல தடை விதித்தபோது, மிச்சிகன் குடியரசுக் கட்சியினர் உடனடியாக அந்த கட்டுப்பாட்டை கண்டித்ததுடன், ஜனநாயகக் கட்சியினரின் பலமான தொகுதிகளில் வாக்காளர்களை அச்சுறுத்த விரும்பும் ட்ரம்ப் ஆதரவு குண்டர்களின் "இரண்டாம் அரசியலமைப்பு சட்ட" உரிமைகளை வலியுறுத்துவதற்காக அவர்கள் வழக்கு தொடுக்க இருப்பதாக அறிவித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி ஆளுநர் விட்மர் மற்றும் ஏனைய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களைக் கண்டிக்கிறது. நாம் ஜனநாயகக் கட்சியினதும் மற்றும் விட்மரினதும் அரசியலை எதிர்க்கிறோம் என்றாலும் நவம்பர் 2018 இல் 2.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஆளுநராக தேர்ந்தெடுக்க ஒருவருக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களுடன் உடன்படவில்லை.

உயர்மட்டங்களிலிருந்து திருப்பிவிடப்படும் பாசிசவாத மற்றும் அரசு வன்முறையின் மிகப்பெரும் அபாயம் நிலவுகிறது. கடந்த வாரம் தான், பொலிஸ் மரணப்படையால் பாசிசவாத-எதிர்ப்பு நடவடிக்கையாளர் மிக்கெல் ரினியோல் பாதிக்கப்பட்டார் என்பது வெளியிடப்பட்டது, அது அவருக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் வாஷிங்டன் மாநிலத்தில் ஓர் அடுக்குமாடி கட்டிடத்தின் கார் நிறுத்துமிடத்தில் அவர் கார் நுழைந்த போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ட்ரம்ப் மற்றும் அவரின் அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் உத்தரவுகளின் பேரில் அமெரிக்க மார்ஷல்ஸின் அதிரடிப்படையின் பாகமாக அந்த பொலிஸ் செயல்பட்டிருந்தது.

சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத வன்முறையை நோக்கிய உந்துதல் அமெரிக்காவில் நிலவும் மலைப்பூட்டும் அளவிலான சமூக முரண்பாடுகளிலிருந்து எழுகிறது: அதாவது மிகப்பெரும் செல்வந்தர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இடையியே வெளிப்படையாக தெரியும் சமூக இடைவெளி, இது கொரொனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் போரும் உள்நாட்டில் ஒடுக்குமுறையும் ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாக உள்ளது. ஜனநாயகக் கட்சியினரின் சொந்த கொள்கைகளே இதே வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படுவதால் ஜனநாயகக் கட்சியால் இந்த போக்கை எதிர்க்க முடியாது.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து உடைத்துக் கொள்வதன் மூலமாகவும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தும் ஓர் உண்மையான பாரிய சோசலிச இயக்கத்தை உருவாக்குவதன் மூலமாகவும் இந்த ஆபத்தை எதிர்த்து போராடுவது மட்டுமே ஒரே வழியாகும். ட்ரம்ப் மற்றும் அவரின் பாசிசவாத கட்சியினரின் சோசலிச-விரோத உணர்ச்சிப் பிரவாகமானது, பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்கு மீண்டும் திரும்ப நிர்பந்திக்கப்படுவதற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பிலும் மற்றும் அதே போல பள்ளிக்கு மீண்டும் அனுப்புவதற்காக இளைஞர்களின் எதிர்ப்பிலும் தற்போது வெளிப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் அதிகரித்திருப்பதற்கு விடையிறுப்பாக உள்ளது.

வன்முறை மற்றும் பாசிசவாத தாக்குதல்களுக்குத் தூண்டுதல்கள் தேர்தல் முடிவுகளைக் கண்டு கொள்ளாமல் போகாது. அதற்கு முரணாக, நவம்பர் 3 வாக்கெடுப்பில் ட்ரம்ப் வெளியேற்றப்பட்டால் —அந்த வாக்கெடுப்பின் முடிவுகளை ஏற்க அவர் நிர்பந்திக்கப்பட்டால்— அவரும் அவர் சக்திகளும் அவர்களின் முயற்சிகளைத் தீவிரப்படுத்த மட்டுமே செய்வார்கள். மேலும் பெலோசி மற்றும் பைடெனின் கருத்துக்கள் எடுத்துக்காட்டியவாறு, பைடென் நிர்வாகம் பாசிசவாத அச்சுறுத்தலை விட ஜனநாயகக் கட்சியினர் வலதுசாரி கொள்கைகள் மீதான தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் குறித்து மிகவும் அதிகமாக கவலை கொண்டிருப்பார்கள்.

இந்த யதார்த்தம் 2020 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகிறது. இந்த தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எந்தெந்த மாநிலங்களில் சாத்தியமோ அங்கெல்லாம் எங்கள் வேட்பாளர்களான ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் நோரிஸ்சா சாண்டா குரூஸிற்கு வாக்களிக்குமாறும் மற்ற மாநிலங்களில் அவர்களின் பெயர்களை எழுதுமாறும் நாங்கள் மீண்டும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

ஆனால் மத்திய கேள்வி என்னவென்றால் தேர்தல்களின் முடிவுகள் என்னவாக இருந்தாலும் தேர்தல்களுக்குப் பின்னர் ஏற்படும் நெருக்கடி நிலைமைகளுக்குத் தயாராக இருப்பதாகும். தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு மற்றும் இந்த இலாபகர அமைப்புமுறைக்கான கட்சிகள் மற்றும் அனுதாபிகள் அனைவருக்கும் எதிராக சோசலிச கொள்கைகளுக்காக ஒரு பாரிய சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும். இதன் அர்த்தம், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் எங்களின் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதே இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணைந்து அவற்றைக் கட்டமைப்பதாகும்.

Loading