இலங்கையில் கோவிட்-19 வெடிப்பானது தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையானது ஒக்டோபர் 4 தொடங்கிய வாரத்தில் இருந்து இரட்டிப்பாகியுள்ளதோடு மொத்த எண்ணிக்கை 6,000 க்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதுடன் 13 பேர் இறந்துள்ளனர் என இலங்கை சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். அனைத்து அறிகுறிகளும் நாடு முழுவதும் கோவிட்-19 பரவல் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் 24 மாவட்டங்களில் 22 இல் நோய் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய புள்ளிவிபரங்கள், தனது நிர்வாகம் மற்றைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் வைரஸைக் கட்டுப்படத்தியுள்ளது என்ற ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் பெருமை பிதற்றல்களை தகர்த்தெறிந்துள்ளது. இலங்கையில் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது உலகலாவிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 மில்லியனையும் கடந்து 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலைமையிலேயே நடந்துள்ளது.

இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றாளர்கள் காணப்பட்டமை, பிரதானமாக முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் மறுத்து வந்ததன் பெறுபேறாகும். வைத்திய நிபுணர்கள் நாளொன்றுக்கு குறைந்தது 5,000 பரிசோதனைகள் செய்யப்படவேண்டும் எனக் கோரியுள்ளனர்.

ஒக்டோபர் 4 அன்று, மினுவாங்கொடையில் உள்ள பிரன்டிக்ஸ் ஃபாஸ்ட் ஃபெஷன் ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளியொருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கம்பகா மருத்துவமனையில் கண்டறியப்பட்டது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் சிகிச்சையின்றி வேலை செய்ய முடியாதென்றும் வலியுறுத்தன் பின்னர், அந்தப் பெண் தொழிலாளி மருத்துவமனைக்கு செல்ல நிர்வாகம் அனுமதித்தது.

சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலையில் ஏனைய தொழிலாளர்களை பரிசோதிக்க ஆரம்பித்தனர். அங்கு வேலை செய்த 1,400 பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டறிந்தனர். சில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதோடு ஏனையோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

பிரன்டிக்ஸ், பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது நாடு முழுவதிலும் பல்வேறுபட்ட தொழிற்சாலைகளில் சுமார் 5,000 தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இந்த நிறுவனமானது கப், விக்டோரியாஸ் சீக்ரட் மற்றும் மார்க் ஸ்பென்சர் உள்ளடங்களாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சில்லறை நிறுவனங்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்கின்றது.

நெருக்கமான ஜனத்தொகையைக் கொண்ட மினுவாங்கொடை, கம்பஹா மாவட்டத்தில் கொழும்புக்கு அருகாமையில் அமைந்துள்ளது. அங்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்ததக வலயம் உட்பட ஆறு சுதந்திர வர்த்தக வலயங்கள் உள்ளன. அரசாங்கமானது இந்த மாவட்டத்தின் பல பகுதிகளை முடக்கி வைத்துள்ளது.

பிரன்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கடந்த வாரம்உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, ஊழியர்களுக்கு சரியான பாதுகாப்பு சுகாதார உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் கொடூரமான சுரண்டலுக்கு ஆளாக்கினார்கள் என்றும் கூறினார்.

தெற்றுக்குள்ளான தொழிலாளரைக் கண்டிறிவதற்கு முன்னரான வாரங்களில், கிட்டத்தட்ட 200 தொழிலாளர்கள் காச்சலுடன் இருந்ததாக அவர் விளக்கினார். முதலில் ஊழியர்கள் தங்கள் உடல்நலக் குறைபாட்டை பற்றி புகாரளித்தபோது, நிர்வாகமானது இது ஒரு வெறும் சதாரண காய்ச்சல் என்றும், ஒரு வெளிநாட்டு கொள்வனவாளரிடமிருந்து ஒரு அவசரமான உற்பத்தி உத்தரவு உள்ளதால் உற்பத்தி இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் பதிலளித்தது. தொழிலாளர்களின் விடுமுறை குறைக்கப்பட்டதோடு நாளொன்றுக்கு சுமார் 10 மணித்தியாலங்கள் வேலை செய்து வருகின்றனர்.

ஏப்ரல் மற்றும் மே மாத இறுதியில், ஜனாதிபதி இராஜபக்ஷவினால் இந்த தொழிற்சாலைகள் மீளத் திறப்பதற்கு உத்தரவிடப்பட்டதில் இருந்தே, பிரன்டிக்ஸில் நிலவும் பாதுகாப்பற்ற சுகாதார நிலைமைகள், அனைத்து இலங்கை தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பொதுவானவையாகும். கம்பஹா மாவட்டத்தின் ஏனைய தொழிற்சாலைகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளும் புட்டப்பட்டன.

இருப்பினும், நேற்று கடுநாயக சுதந்திர வர்த்தக வலைய கம்பனி உரிமையாளர்களின் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டே, சுதந்திர வர்த்தக வலயம் புட்டப்படாது எனக் கூறினார். அவர் 36,000 தொழிலாளர்கள் இருந்தாலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கு மற்றும் பொது அடைப்பு நடவடிக்கைகள் காரணமாக, 8,000 தொழிலாளர்களே வேலைக்கு வருகின்றார்கள் எனத் தெரிவித்தார்.

வேகமாகப் பரவும் தொற்று நோயின் ஆபத்தின் தீவிரத் தன்மையினைப் பொருட்படுத்தாமல், இலங்கை அரசாங்கமும் ஆளும் உயரடுக்குகளும், தங்களுடைய உலகலாவிய சகாக்களைப் போலவே, ஒரே கொள்கையினைப் பின்பற்றுகின்றார்கள்: அதாவது மனித உயிர்களின் அழிவைப் பொருட்படுத்தாமல் இலாபங்கள் பேணப்பட வேண்டும் என்பதாகும்.

நேற்றைய தினம் பெர்னாண்டோ உடனான கூட்டத்தின் பின்னர், இலங்கை தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அரசாங்கமும் நாடும் மற்றும் தொழிற்சாலைகளும் சுகாதார பாதுகாப்பு முறைகளுடன் சாதாரணமாகப் பாரமரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

கொவிட்-19 வெடிப்பை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, ஒரு நாடு தழுவிய பொது அடைப்பானது பொதுமக்களின் பெரும்பாண்மையோருக்கும் பிழைப்புத் தேட முயற்சிப்பவர்களுக்கும் அடக்குமுறையானதாக இருக்கக் கூடும்” என இழிந்த முறையில் அறிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர்களின் அவல நிலை குறித்து கொழும்பு ஆட்சியாளர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. நோய் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்க மறுத்த பின்னர், ஜனாதிபதி இராஜபக்ஷ, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கான எந்தவொரு திட்டமிடல் மற்றும் போதுமான சமூக ஆதரவும் கூட இல்லாமல், மார்ச் 21 அன்று திடிரென ஒரு தேசிய முடக்கத்தை அமுல்படுத்தனார். ஒரு மாதத்திற்கு பின்பு, பெருவணிகங்களின் கோரிக்கைளுக்கு இணங்க, அரசாங்கமானது மீண்டும் பொருளாதாரத்தைத் திறக்க ஆரம்பித்தது.

கடந்த வாரம், கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் பல சுகாதார ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானதன் பின்னர், பல விடுதிகள் மற்றும் சத்திர சிகிச்கை நிலையம் போன்றன மூடப்பட்டதோடு சில உள்ளுர் மருத்துவமனைகளும் அவற்றின் வளாகங்களை மூட நிர்ப்பந்திக்கப்பட்டன. பல பல்கலைக்கழக மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெகுஜனங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி முற்றிலும் பொருட்படுத்தாமல், பொதுமுடக்கப் பகுதிகளில் இருந்தும் கூட நுாராயிரக் கணக்கான தரம் ஐந்து கற்கும் மாணவர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று புலமைப்பரிசில் பரீட்சைக்கு செல்லத் தள்ளப்பட்டனர். நேற்று 350,000 மாணவர்கள் பங்குபற்றும் நீண்ட வாரகால உயர்தரப் பரீட்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

“பிரதான கொத்தணி” மினுவாங்கொடவிற்குள் வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் கட்டுப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் கூறி, அரசாங்கம் தொற்று நோய் வெடிப்பின் தீவிரத்தை குறைத்துக் காட்ட முயற்சிக்கிறது.

இருப்பினும், தேசிய மருத்துவ ஆராய்சி நிறுவனத்தின் இயக்குனரான வைத்தியர் ஜெயருவன் பண்டார, ஒக்டோபர் 5 அன்று தெரன தெலைக்காட்சியில் பேசுகையில், கடந்த பல மாதங்களாக கொவிட்-19 சமூகத்தில் இருக்கின்றதெனவும் நிலைமை ஆபத்தானதெனவும் கூறினார்.

“ஜனவரி முதல் இப்போது வரைக்கும் வைரஸானது எப்படியோ சமூகத்தில் உள்ளது. நாங்கள் ஒரு நோயாளியை இப்போது எப்படி கண்டு பிடிப்பது? என பண்டார அங்கு கூறினார். அரசாங்கமானது மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இருந்து பண்டாரவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிப்பதன் மூலமே இதற்கு பதிலிறுத்தது.

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைகளை நிராகரித்து, அரசாங்கம் புதிய வெடிப்புக்களுக்கு ஊடகங்கள் மீதும் மக்கள் மீதும் பழி போட முயற்சிக்கின்றது.

தொழிலாளி ஒருவரை கொழும்பில் ரயிலில் ஏறுவதற்கு முன்பு சிப்பாய்கள் சோதனை செய்கிறார்கள் (Credit:: WSWS)

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, அரசாங்கத்தின் தேசிய “விழிப்புணர்வு” பிரச்சாரம் நாட்டின் வெகுஜன ஊடகங்களால் தவறவிடப்பட்டுள்ளதோடு (பொதுமக்கள்) நோயின் பரவலை மறந்துவிட்டார்கள்” என கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் கூறினார்.

அரசாங்கத்தின் பரிசோதனை குறைப்பை பற்றிய எந்தவொரு கருத்தும் கூறாத இராஜபக்ஷ, “தொற்றுநோயின் பரவலினைக் கட்டுப்படுத்துவதற்கு எங்களுடைய திட்டங்களுக்கு உதவ பொதுமக்களும் ஊடகங்களும் கடமைப்பட்டுள்ளனர்” என்றார்.

ஏப்ரல் மதாத்தில், இராஜபக்ஷ, தனியார் நிறுவனங்களை தொழலாளர்களில் மூன்றில் ஒரு பங்கு அல்லது தேவையான அளவு ஊழியர்களுடன் மீண்டும் திறப்பதற்கு பணித்தார். அதே நேரம், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழில் அமைச்சரினால் வேலை மற்றும் ஊதிய வெட்டுக்கள் அனுமதிக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிப்பது பற்றிய அரசாங்கத்தின் அறிக்கைகள் முதலாளிமாரால் எப்போதாவது கடைப்படிக்கப்பட்டன அல்லது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன.

இதன் உச்சமாக, அரசாங்கம் குறைந்த எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளைக் கூட கிட்டத்தட்ட நிறுத்தியது. 100,000 பரிசோதனை கருவிகள் பெற உத்தரவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முன்னர் செய்தி வெளியிட்டன, ஆனால் எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. சுகாதாரத் துறைக்கு எந்தவொரு பெரிய மாற்றம் செய்யப்படவோ அல்லது போதுமான நிதியோ வழங்கப்படவில்லை.

ஒக்டோபர் 9 அன்று, கொவிட்-19 க்காக ஒதுக்கப்பட்ட 12 மருத்துவமனைகளில் 1,552 படுக்கைள் மட்டுமே உள்ளன எனவும், இந்த மருத்துவமனைகளில் 1,133 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அரசாங்கம் அடுத்த வருடத்திற்கான அதன் வரவு செலவு திட்டத்தை அறிவித்தது. பாதுகாப்பு மற்றும் உள்பாதுகாப்புக்கு சுமார் 500 பில்லியன் ரூபாயினை (2.7 பில்லியன் டொலர்) பெறும் அதே வேளை, சுகாதாரத் துறையானது 159 பில்லியன் ரூபா மட்டுமே பெறுகிறது.

அரசாங்கத்தின் முன்னுரிமை கொடுப்பது இலங்கையின் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சுகாதாரம் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அல்ல. மாறாக அரசாங்கத்திற்கும் ஆளும் உயரடுக்குக்கும் எதிராக தவிர்க்க முடியாமல் வெடிக்கும் வெகுஜன சமூக எதிர்ப்பினைத் நசுக்குவன் நோக்கில், அரசை வலுப்படுத்துவதாகும்.

Loading