முன்னோக்கு

பொலிஸ் மிருகத்தன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நைஜீரிய அரசாங்கம் படுகொலைகளை கட்டவிழ்த்து விடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நைஜீரியாவின் அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நாட்டை உலுக்கிய பொலிஸ்-விரோத மிருகத்தன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கொடிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. செவ்வாயன்று இரவு, அது முன்னாள் ஜெனரலும் ஆட்சிக் கவிழ்ப்பு குழுவின் தலைவருமான ஜனாதிபதி முகம்மது புஹாரி தலைமையிலான ஊழல் மலிந்த முதலாளித்துவ அரசின் ஆட்சிக்கு பெருகிய முறையில் நேரடி சவாலாக முன்வந்த ஒரு இயக்கத்தை அடக்குவதற்கு, அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்ய நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்த படையினரை அனுப்பியது.

நைஜீரியாவின் பரந்துவிரிந்து கிடக்கும் வணிக மூலதனத்தில் லாகோஸ் தீவை லாகோஸ் பிரதான நிலத்துடன் இணைக்கும் ஒரு அதிவேக நெடுஞ்சாலையை லெக்கி-ஐகோய் பாலத்தில் சுங்கச்சாவடிகளைத் தடுத்து செயலிழக்கச் செய்திருந்த ஒரு பெரிய கூட்டத்தின் மீதான இராணுவத் தாக்குதலில் எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் படுகாயமடைந்தனர் என்று சமூக ஊடக பதிவுகள் காட்டின. படுகொலையின் அளவு உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு சாட்சி பிபிசிக்கு குறைந்தது 20 உடல்களையும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததையும் பார்த்ததாக தெரிவித்தார். துருப்புக்கள் முன்னேறிச் செல்வதற்கு முன்பு, அவர்கள் சுங்கச்சாவடி பிளாசாவில் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராவை துண்டித்துவிட்டனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க துருப்புக்கள் உடல்களை எடுத்துச் செல்வதாக செய்திகள் வந்தன, அதே நேரத்தில் இராணுவம் சுற்றி வளைத்து கொலை செய்ய வரும் என்ற அச்சத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதாக ஒரு மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.

லாகோஸ் அதிகாரிகள், செவ்வாயன்று 20 மில்லியன் மக்கள் உள்ள நகரம் முழுவதும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தனர், "எங்கள் அரசில் அராஜகத்தை நாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம், அனுமதிக்க மாட்டோம்" என்று அறிவித்தனர். முன்னதாக, நைஜீரிய இராணுவம் "நாசவேலை சக்திகள் மற்றும் பிரச்சனை செய்பவர்கள்" மீது நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்று எச்சரித்தது.

ஆயினும்கூட, நகரின் சர்வதேச விமான நிலையத்தை அணுகல் உட்பட பிரதான வீதிகளை கூட்டத்தினர் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளனர், அதேவேளையில் லாகோஸின் ஒரிலே இகான்மு மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் நிலையம் செவ்வாயன்று தீயிடப்பட்டிருப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவு மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், இரவு வரை தொடரும் மக்கள் எதிர்ப்புக்கு எதிராக அதிகாரிகள் காலக்கெடுவை இரவு 9 மணி வரை நீட்டித்தனர்.

நைஜீரிய குடிமக்களை, குறிப்பாக நாட்டின் இளைஞர்களைக் கொலை, சித்திரவதை மற்றும் சூறையாடல் ஆகியவைகளுக்காக அறியப்படும் நைஜீரிய பொலிஸ் படையின் ஒரு உயரடுக்கு பிரிவுமான வெறுக்கப்பட்ட SARS (சிறப்பு கொள்ளை-எதிர்ப்புப் பிரிவு - Special Anti-Robbery Squad) கலைக்கப்பட வேண்டும் என்று கோரும் ஒரு இயக்கமாக தொடங்கிய இயக்கம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

கடந்த வாரம் புஹாரி அரசாங்கம் SARS ஐ கலைத்ததாக கூறிக்கொண்டதோடு, அதற்குப் பதிலாக ஒரு புதிய பிரிவானது சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்களுடன் அல்லது SWAT என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய பிரிவு அமெரிக்காவில் கொல்லும் பொலிஸ் உயரடுக்கு பிரிவிற்கு வழங்கப்பட்ட அதே பெயர் என்று பெயரிடப்பட்டதை அறிவித்தது. "பொலிஸ் சீர்திருத்தத்திற்கு" தான் உறுதிபூண்டிருப்பதாகவும், போராடும் இளைஞர்களை ஒரு தந்தையாக அவர் கருதுவார் என்றும் ஜனாதிபதி வலியுறுத்துகிறார். ஆனால், தெருக்களில் அரசாங்கத்தின் விஷமத்தனமான எதிர்வினை, மிகவும் வித்தியாசமான கதையைத்தான் சொல்கிறது.

ஆர்ப்பாட்டங்களில் டஜன் கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர், மேலும் பலர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான 17 வயது சிறுமியான சைபுல்லா என்று மட்டுமே அடையாளம் காணப்பட்டார், வடக்கு கனோ மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார், சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடிகளையும் கத்திகளையும் ஏந்திய குண்டர்களை கட்டவிழ்த்துவிட்டதோடு பலரைக் காயப்படுத்தியுள்ளது. பொலிசாரோ கண்ணீர்ப்புகைக் குண்டு, நீர்ப் பீரங்கி மற்றும் உண்மையான துப்பாக்கி ரவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்ப்பாளர்களைத் தாக்கியுள்ளனர்.

SARS பொலிஸின் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டங்கள் குறைந்த பட்சம் 2017 க்கு முற்பட்டன, அரசாங்கம் மீண்டும் மீண்டும் அந்தப் பிரிவு "சீர்திருத்தப்பட்டிருப்பதாக" கூறி, பொலிஸ் தன்னுடைய மிருகத்தனத்தை முழுமையாக தண்டனையின்றி தொடர்ந்து வருகிறது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி, SARS பொலீசார் வாடிக்கையாக நீதித்துறைக்கு புறம்பான கொலைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள் மற்றும் "தூக்கிலிடுதல், கேலிசெய்தல், அடித்தல், குத்துதல், சிகரெட்டால் சுடுதல், தண்ணீரால் சித்திரவதை செய்தல், பிளாஸ்டிக் பைகளுடன் மூச்சுத்திணற வைத்தல், கைதிகள் மன அழுத்தம் நிறைந்த நிலைக்கு உடலை வைத்திருத்தலும் பாலியல் வன்முறைகளையும் கட்டாயப்படுத்துதல்" போன்ற சித்திரவதைகளில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளனர்.

ஒடுக்குமுறை மற்றும் ஊழல் நிறைந்த போலீஸ் மீது ஆழ்ந்த வெறுப்புடன், நைஜீரியாவின் வெகுஜன எதிர்ப்புக்களானது 206 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆபிரிக்காவின் மிகப் பெரிய நாட்டில், பாரிய வேலையின்மை, சமூக நோயாகவுள்ள வறுமை மற்றும் முன்னோடியில்லாத சமூக சமத்துவமின்மை ஆகியவைகளின் நிலைமைகள் மீதான மக்களின் சீற்றத்தால் எரியூட்டப்படுகின்றன. இந்த நீண்டகால நிலைமைகள் அனைத்தும் COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் மற்றும் அரசாங்கத்தின் பேரழிவுகரமான திறமையற்ற விடையிறுப்பு, பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விடுவதற்கான அதன் உந்துதலுடன் தொழிலாளர்களின் வாழ்வில் முற்றிலும் அலட்சியத்துடன் இணைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸ்ஃபாமின் ஆய்வுப்படி, ஆபிரிக்காவின் மூன்று பெரும் செல்வந்த பில்லியனர்கள் —அவர்களில் மிகப் பெரும் செல்வந்தர் நைஜீரியாவின் அலிகோ டாங்கோடே— ஆபிரிக்காவின் மக்கள் தொகையில் கீழ்மட்டத்திலுள்ள 50 சதவிகிதத்தினரை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளனர், கண்டம் முழுவதிலுமுள்ள 650 மில்லியன் மக்களை விட அதிக செல்வம் அவர்களிடம் உள்ளது. ஐந்து செல்வந்த நைஜீரியர்களின் மொத்த நிகர மதிப்பு 29.9 பில்லியன் டாலர்கள் என்று உதவி நிறுவனம் கூறுகிறது, இது 112 மில்லியன் நைஜீரியர்களை வறுமையில் இருந்து அகற்றப்போதுமானதாக இருக்கும்.

நைஜீரியாவில் இன்றைய கிளர்ச்சி ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது, அவை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட காலனித்துவ ஒடுக்குமுறைவரை நீண்ட வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது. 1960-ல் ஐக்கிய இராச்சியத்தினால் (UK) நாட்டிற்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது, அதில் ராணி எலிசபெத்தை நைஜீரியாவின் அரசராகவும், அரசுத் தலைவராகவும் வைத்துக் கொள்ள முடிந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, கண்டத்தின் வேறு எங்கும் அடையப் பெற்ற அதேபோன்ற ஏற்பாடுகளைப் போலவே, இந்த உடன்பாடு, ஒரு விருப்பமுள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு விருப்பத்தோடு, தற்போதுள்ள அரசு எந்திரத்தையும், காலனியாதிக்கவாதிகளிடமிருந்து மரபுவழியாகப் பெற்ற ஒடுக்குமுறைப் படைகளையும் கொண்டு அவர்கள் தங்கள் சொந்த செல்வம் மற்றும் அதிகாரத்தை உத்தரவாதம் செய்ய உருவாக்கப்பட்ட செயற்கையான எல்லைகளைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டனர்.

சுதந்திரத்தின் முதல் நான்கு தசாப்தங்கள் தொடர்ச்சியான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கள் மற்றும் கசப்பான உள்நாட்டுப் போர்களால் குறிக்கப்பட்டன, இதில் பியாஃப்ரா மோதல் உட்பட 3.5 மில்லியன் பேர் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் பட்டினியால் இறந்த குழந்தைகளாகும்.

நைஜீரிய தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்குள் நடக்கும் பரஸ்பரம் நாசம் ஏற்படுத்தும் போராட்டங்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது, நாட்டின் எண்ணெய் வளத்தில் யார் மிக அதிகமான அவர்களுடைய பங்கைப் பெறுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டுள்ளன. இது 90 சதவிகித வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களையும், அரசாங்க வருவாயில் 80 சதவிகிதத்தையும் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் நாடுகடந்த எரிசக்தி பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் Royal Dutch Shell, Agip, ExxonMobil, Total S.A. மற்றும் Chevron ஆகியவைகள் அடங்குகின்றன.

ஆபிரிக்கா முழுவதிலும் மற்றும் முன்னாள் காலனித்துவ உலகின் ஏனைய பகுதிகளிலும் இருப்பது போல், நைஜீரியாவின் கசப்பான அனுபவங்களானது மாபெரும் ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கியால் விவரிக்கப்பட்டு, 1938ல் அவர் நிறுவிய நான்காம் அகிலத்தால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் எதிர்மறையை உறுதிப்படுத்தியுள்ளது. காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளில், தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்திற்கான போராட்டம் மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் மற்றும் உண்மையான தேசிய விடுதலை மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கான ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் விளக்கினார். இந்தப் புரட்சி நிரந்தரமானது, அதிகாரத்தைக் கைப்பற்றிய தொழிலாள வர்க்கம் ஜனநாயகப் பணிகளில் தன்னை நிறுத்திக் கொள்ள முடியாது, அது ஒரு சோசலிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். அதே நேரத்தில், உலக சோசலிசப் புரட்சிக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அது விரிவாக்கப்படும் அளவிற்கு மட்டுமே அது வெற்றியை அடைய முடியும் என்ற இரண்டாவது அர்த்தத்தில் புரட்சி நிரந்தரமானது என்று வரையறுத்தார்.

அத்தகைய சர்வதேசரீதியாக ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான நிலைமைகள் விரைவாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன, முன்னோடியில்லாத வகையில் முதலாளித்துவ உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பு மற்றும் உலகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்த முறையில் ஒத்த நிலைமைகளின் மீது புறநிலையாக நிறுவப்பட்டுள்ளது.

நைஜீரியா, அமெரிக்கா, சிலி, கொலம்பியா இன்னும் பிற நாடுகளில் பொலிஸ் கொலைகள் மற்றும் மிருகத்தனத்திற்கு எதிராக ஒரே நேரத்தில் வெகுஜன எதிர்ப்புக்கள் தோன்றியமையானது இப்போராட்டங்களில் முக்கிய பிரச்சினை இனம் அல்ல, வர்க்கமே என்பதை உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும் அதனுடைய போலி-இடது சுற்றுவட்டங்களும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியமான இயக்கத்தைத் திசைதிருப்பி விடவும், திணறடிக்கச் செய்யவும் முயலுகின்றன.

ஜோர்ஜ் ஃபுளோய்ட், ப்ரேயோனா டெய்லர் மற்றும் பலர் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அமெரிக்காவில், பல நிற, இன வெகுஜன மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலிருந்து நைஜீரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தெளிவாக உத்வேகம் பெற்ற அதே நேரத்தில், அவர்கள் "எங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளது (Our Lives Matter)" என்ற கோஷத்தை முழக்கமிட்டனர், நைஜீரியாவில் மட்டுமல்ல, ஆனால் இந்தப் புவிப் பரப்பிலுள்ள உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவாக கோஷமிட்டனர்.

நிதிய மற்றும் பெருநிறுவன தன்னலக்குழுக்கள் மற்றும் உயர்-மத்தியதர வர்க்கத்தின் மிகவும் சலுகை பெற்ற அடுக்குகள் குவித்துக் கொண்ட அருவருக்கத்தக்க செல்வங்களாகிய உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமையின் பாதுகாவலர்களாக பொலிஸ் உள்ளது. இந்த ஆளும் உயரடுக்கை பரந்த தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பிளவுபடுத்தும் சமூக சமத்துவமின்மையின் இடைவெளியை விழிப்புடன் அவர்கள் பாதுகாத்து நிற்கின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும், பொலிஸ் மிருகத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் தேவைப்படுகிறது. அது தொழிலாள வர்க்கத்தை நிற, இன, பாலின எல்லைகளைக் கடந்து, சோசலிசத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட முடியும்.

நைஜீரியாவில் மட்டுமல்ல, ஆபிரிக்கா முழுவதிலும் மற்றும் முழுப் பூகோளத்திலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கம் உருவாகி வருகிறது. இந்த இயக்கத்திற்கு அரசியல் மற்றும் வேலைத்திட்ட ரீதியான வழிகாட்டலை வழங்கும் மாபெரும் பணியாக இருப்பது ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளை கட்டமைப்பதாகும்.

Loading