தொற்றுநோய்க்கு மத்தியில் அமெரிக்க இளைஞர்களிடையே சோசலிசத்திற்கான ஆதரவு கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான YouGov நடத்திய கம்யூனிச எதிர்ப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் கம்யூனிசம் ஞாபகார்த்த அறக்கட்டளையின் இந்த ஆண்டின் வருடாந்த ஆய்வு, குறிப்பாக 16 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களிடையே கடந்த ஆண்டை விட சோசலிசத்திற்கான ஆதரவின் மகத்தான அதிகரிப்பைக் கண்டறிந்துள்ளது.

Gen Z குழுவிற்குள் (வயது 16-23), சோசலிசத்திற்கான ஆதரவு ஒரு வருட காலப்பகுதியில் கிட்டத்தட்ட பத்து சதவீத புள்ளிகளை அதிகரித்துள்ளது. 2019 இல் 40 சதவீதமாக இருந்தது 2020 செப்டம்பரில் இந்த வாக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது 49 விகிதமாகியுள்ளது.

டெட்ராய்டில் உள்ள வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் சோசலிசத்தை ஆதரிக்கும் இளைஞர்கள் (WSWS புகைப்படம்)

ஒட்டுமொத்த மக்கள்தொகையைப் பார்க்கும்போது, முதலாளித்துவத்திற்கான ஆதரவு 2019 இல் 58 சதவீதத்திலிருந்து 2020 இல் 55 சதவீதமாகக் குறைந்து, அதே நேரத்தில் அனைத்து அமெரிக்கர்களிடையேயும் சோசலிசத்திற்கான ஆதரவு 2019 இல் 36 சதவீதத்திலிருந்து 2020 இல் 40 சதவீதமாக அதிகரித்தது.

அனைத்து அமெரிக்கர்களில் 78 சதவிகிதத்தினர், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிளவு ஒரு தீவிரமான பிரச்சினை என்று நம்புகிறார்கள். அனைத்து அமெரிக்கர்களில் 68 சதவிகிதத்தினர், பணக்காரர்கள் தங்கள் நியாயமான பங்கை வரிகளுக்கு செலுத்தவில்லை என்று நம்புகையில், 49 சதவீதமானோர் “நமது பொருளாதார அமைப்பின் முழுமையான மாற்றம்” தேவையாக இருப்பதாக நம்புகின்றனர்.

கோவிட்-19 தொற்றுநோய் அமெரிக்காவையும் உலகத்தையும் அழிக்கையில், இந்த புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டு நிகழ்ந்த அரசியல் சிந்தனை மற்றும் முன்னோக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் நடந்த கருத்துக் கணிப்புகள் இளைஞர்களிடையே சோசலிசத்திற்கான ஆதரவில் கணிசமான அதிகரிப்பு காட்டியுள்ளன. 2000 க்கு பின்னரான தலைமுறை பெரும் மந்தநிலைக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பியிருந்த நிலையில், இந்த தகவல்கள் கோவிட்-19 மற்றும் நாட்டினை அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்பினுள் இழுத்துச்சென்று, முதலாளித்துவ அமைப்பை மேலும் மதிப்பிழக்க செய்துள்ளது.

உண்மையில், அறிக்கையின்படி, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்களில் 60 சதவீதம் (வயது 24-39) “முதலாளித்துவத்திலிருந்து விலகி நமது பொருளாதார அமைப்பின் முழுமையான மாற்றத்தை” ஆதரிக்கிறது. மேலும் 57 சதவீத Gen Z உம் இதைச் செய்கிறது. கடந்த ஆண்டிலிருந்து இது முறையே, 8 மற்றும் 14 சதவீத புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. அறிக்கையின் புள்ளிவிவரங்களில் குறிப்பிடத்தக்கவை என்னவெனில் சோசலிசத்தின் மீது அதிகரித்துவரும் ஆர்வத்தை மட்டுமல்லாமல், இவை கருத்தாக்கங்களின் கலவையைக் கொண்டிருப்பதுடன் மற்றும் குறிப்பாக மார்க்சிசத்தில் ஒரு அதிகரித்துவரும் ஆர்வத்தையும் காட்டுகின்றது.

Gen Z இன் முப்பது சதவீதம் மார்க்சிசத்தைப் பற்றி சாதகமான பார்வையையும், நூற்றாண்டு மாற்றத்தின் போது பிறந்தவர்களில் இது 27 சதவீதத்தையும் கொண்டுள்ளது. அறிக்கை ஆசிரியர்கள் தங்கள் கருத்து வாக்குப்பதிவில் 2.32 சதவிகிதம் கூட அல்லது குறைவான பிழை இருப்பதாக நம்புகையிலும், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இளைஞர்களிடையே மார்க்சிசத்திற்கான இந்த வெளிப்படையான ஆதரவு பல தசாப்தங்களாக கம்யூனிச எதிர்ப்பின் மையமாக இருந்த ஒரு நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க விகிதமாகும்.

மேலும், Gen Z 74 சதவீதமும் நூற்றாண்டு மாற்றத்தின் போது பிறந்தவர்களில் 70 சதவீதமும் மார்க்சிசத்தை "அதன் குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்கும் ஒரு சர்வாதிகார அரசாக" பார்க்கவில்லை. அந்த அறிக்கையின்படி, அனைத்து அமெரிக்கர்களில் கால் பகுதியினர் (26 சதவீதம்) "ஒரு சோசலிச அமைப்பிற்கு ஆதரவாக முதலாளித்துவ அமைப்பை படிப்படியாக நீக்குவதை" ஆதரிக்கிறது. குறிப்பாக, இது நூற்றாண்டு மாற்றத்தின் போது பிறந்தவர்களில் 35 சதவீதமாகவும் மற்றும் Gen Z இல் 31 சதவீதமாகவும் உள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் கடந்த பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒட்டுமொத்தமாக நடந்து வரும் ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இது தற்போதைய அரசியல் நெருக்கடியால் பெரிதும் அதிகரித்துள்ளது. நூற்றாண்டு மாற்றத்தின் போது பிறந்தவர்களினதும் மற்றும் Gen Z ஆகிய இருபிரிவினரது அரசியல் அனுபவங்களும் முதலாளித்துவ அமைப்பின் வரலாற்றுக் குழப்பங்கள் மற்றும் குற்றங்களால் உருவானவை.

நூற்றாண்டு மாற்றத்தின் போது பிறந்த தலைமுறை தாம் வளர்ந்துவருகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விளைவாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் சமூகக் கொலைக்கு சாட்சியம் ஆனது. அவர்கள் வயதுக்கு வந்து உழைப்புச் சந்தையில் நுழையும்போது, பரவலான, திட்டமிட்ட ஊழல் மற்றும் ஊகவாணிபங்களால் தூண்டப்பட்ட உலகளாவிய பொருளாதார அமைப்பின் பாரிய நிலைமுறிவால் அவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுகளில், பராக் ஒபாமாவின் கீழ் அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பரந்தளவிலான கண்காணிப்பு முறையை மேற்பார்வையிட்டது என்பதை அவர்கள் எட்வார்ட் ஸ்னோவ்டெனிடமிருந்து அறிந்து கொண்டனர்.

இதற்கிடையில், பெரும் செல்வந்தர்களின் வாழ்க்கை இன்னும் பெரியதாக மாறியது. பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை மிகவும் ஆபத்தானதாக மாறுகையில் பங்குச்சந்தை மீண்டும் எழுச்சியடைந்தது. இளைஞர்களால் வாடகை கொடுக்க முடியாதுள்ளதுடன், "சுய பொருளாதாரத்தில்" (“gig economy”) குறைந்த ஊதியம் பெறும் துண்டு வேலைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, சுகாதாரப் பாதுகாப்பு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து வருவதையும், பாரிய மாணவர் கடன்களுடனும் மற்றும் வீடுகள் அல்லது குழந்தைகளை பெறுவதற்கான மற்றும் ஒரு கௌரவமான ஓய்வூதிய வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் இல்லாமையையும் எதிர்கொள்கின்றது.

இப்போது, Gen Z அரசியல் வாழ்க்கையில் நுழைகையில், அமெரிக்க சமுதாயத்திற்குள் அழுகிய மற்றும் ஊழல் நிறைந்தவை அனைத்தும் ஜனாதிபதி பதவிக்கு வந்துவிட்டன. ஸ்பானிய காய்ச்சலுக்குப் பின்னர் மிக மோசமான தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள ஆளும் வர்க்கம், வைரஸின் பரவலை அடக்குவதற்கு தேவையான நெறிமுறைகளைச் செயல்படுத்தவும், தேவையான நிதியைச் வழங்கவும் மறுத்துவிட்டது. மாறாக, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ நாடுகளைப் போலவே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை ஏற்றுக்கொள்வதாகும். அதாவது, வைரஸை தடையின்றி பரப்ப அனுமதிப்பது, தனியார் இலாபத்தை பாதுகாக்கும் பெயரில் எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்வதாகும்.

இந்த பாரிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், அதிகாரிகளை கடத்தி, மாநில தலைநகரங்களை கைப்பற்றுவதன் மூலம் ஜனாதிபதியை அதிகாரத்தில் வைத்திருக்க பாசிச ஆயுதக்குழுக்களிடம் மேம்பட்ட திட்டங்கள் உள்ளன என்பது இந்த மாதத்தில் தெரியவந்தது.

இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியினர் ஆட்சியில் நீடிக்கும் முயற்சி உட்பட ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எவ்விதமான குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும் முன்வைக்கவில்லை. இதற்கு எதிராக அவர்கள் ஒரு வெகுஜன எதிர்ப்பை ஊக்குவித்தால், அது அவர்களையும் மூழ்கடிக்கும் ஒரு சமூக வெடிப்பை தூண்டிவிடும் என்றும் பயப்படுவதாலேயே, அவர்கள் உளவுத்துறை அமைப்புகள், இராணுவவாதம் மற்றும் பாலியல் முறைகேடுகளை ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பின் அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள்.

ட்ரம்ப் சோசலிசத்தை எதிர்க்க பாசிச அரசியலுக்கான ஒரு ஜனரஞ்சகவாத அடித்தளத்தை அணிதிரட்ட முற்படுகையில், ஜனநாயகக் கட்சி அதிருப்தி அடைந்த இளைஞர்களை சமுதாயத்தை இனங்களுக்கும் பாலினத்துக்கும் இடையிலான மோதலாகப் பார்க்க ஊக்குவிக்க முயல்வதுடன், மக்கள் கோபத்தை வர்க்க அடிப்படையிலான அரசியலுக்கு மாறாக அடையாள அரசியலை நோக்கி திருப்பிவிடவும் குழப்பிவிடவும் முயற்சிக்கின்றது. இந்த அரசியல் சமூகத்தின் இதயத்தில் உள்ள அடிப்படை அழுகலை நிவர்த்தி செய்ய ஒன்றும் செய்யாததுடன், ஜனநாயகக் கட்சியின் உயர்-நடுத்தர வர்க்க ஆதரவாளர்களின் செல்வந்த அடுக்குக்கு நன்மைகளை வழங்குவதை நோக்குநிலையாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பெரும்பான்மையான மக்கள் அவர்களின் தோலின் நிறத்தை பொருட்படுத்தாமல் விரக்தியில் ஆழமாகத் தள்ளப்படுகிறனர்.

இந்த உள்ளடக்கத்தில், தொழிலாளர்கள், குறிப்பாக இளம் தொழிலாளர்கள் மற்றும் இளம் மாணவர்கள் சோசலிசத்திலும் மார்க்சிசத்திலும் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமல்ல. இந்த வார்த்தைகளின் அர்த்தத்தில் நிச்சயமாக பெரும் குழப்பம் இருந்தாலும், சோசலிசம் அதிக சமூக சமத்துவத்தை பிரதிபலிக்கிறது மற்றும் முதலாளித்துவம் தன்னால் வழங்க இயலாது என்று நிரூபித்துள்ள தரமான ஊதியத்தில் ஒரு வேலை, இலவச உயர்தர கல்வி மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்கான உரிமை ஆகியவற்றிற்கு உத்தரவாதம் வழங்கும் என்ற ஒரு பொது உணர்வு இருக்கின்றது.

WSWS 2020 இன் தொடக்கத்தில், "சோசலிச புரட்சியின் தசாப்தம்" தொடங்கியது என்று எழுதியது. நாங்கள் அதில் பின்வருமாறு குறிப்பிட்டோம்: “தமது போராட்டத்தின் போக்கில் அனுபவங்களை பெற்றுக்கொண்டு, மக்கள் சமூக மற்றும் அரசியல் நோக்குநிலையில் ஆழமான மாற்றத்தை அடைந்து வருகின்றனர். இந்த புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கின் பின்னணியில்தான் சோசலிச நனவுக்கான போராட்டம் அபிவிருத்தியடையும்.” விட்டுக்கொடுப்பற்ற புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வளர்ச்சியடையும் புறநிலை இயக்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கான போராட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி தலைமை தாங்குகிறது.

Loading