ஜோன்சன் அரசாங்கத்தின் பேரழிவுகர “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை பற்றி பிரித்தானிய பெற்றோர் பேசுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருந்த கல்வியாளர்களுக்கான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுவின் ஒரு முன்னைய கூட்டத்தில் சாலி என்பவர் பங்கேற்றார். அவரது கணவர் இயான் (Ian) பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர், என்றாலும் மற்ற வகையில் அவர் ஆரோக்கியமானவரே, இந்நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டால் சேவை பங்கீட்டு முறை காரணமாக அவருக்கு எந்தவித சிகிச்சையும் கிடைக்காது என்று அவரது குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். செப்டம்பர் மாதத்தில் அவர்கள் தங்களது இரண்டு குழந்தைகள் பயிலும் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பதிவை இரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர்.

சாலி அவர்களது சூழ்நிலை பற்றி பின்வருமாறு விளக்கினார்:

“பல வழிகளில், இந்த தொற்றுநோயினால் நாங்கள் எந்த வகையிலும் மோசமடையவில்லை. அதனால் பலர் மிகக் குறைந்த பாதிப்புடன் தான் உள்ளனர். தொற்றுநோய் பரவலுக்கு முன்னர் ஏற்கனவே இயானால் வேலை செய்ய முடியாது, நான் தான் அவரை முழு நேரமும் கவனித்துக் கொள்கிறேன், எனவே நாங்கள் எங்களது வேலைகளை இழந்தோம். நாங்கள் வேலைக்குச் செல்லாததால், குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி கவலைப்படாமல் பள்ளிகளிலிருந்து அவர்களது பதிவை எங்களால் இரத்து செய்து கொள்ள முடிந்தது. இருந்தாலும், மருத்துவ ரீதியாக இயான் பாதிக்கப்படாவிட்டாலும், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையினால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவராக அவர் உள்ளார்.

ஒரு மருத்துவ அவசர ஊர்தி பணியாளருடன் இயான் “சமூக இடைவெளி”யுடன் உரையாடிக் கொண்டது பற்றி சாலி விவரித்தார். “அவர் இயானிடம் மருத்துவ அவசர ஊர்தி சேவை மிகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். அதனால் அவர்கள் சில காலமாக பயன்படுத்தப்படாத பழைய மருத்துவ அவசர ஊர்திகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது… மேலும், அந்த ஊர்தி பணியாளர் இயானிடம், ‘உங்களுக்கு கோவிட்-19 நோய்தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றார். காரணம் என்னவென்றால், கோவிட்-19 நோய்தொற்று இருக்கலாம் என சந்தேகம் உள்ள எந்தவொரு வயோதிபர் அல்லது ஊனமுற்ற நபரும் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார், அதாவது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் இறப்பது கூட சாத்தியம் என்பதால் தான். மேலும் அந்த நபர் இயானிடம் தன்னை ஒரு மரணதண்டனை நிறைவேற்றுபவர் போல உணர்வதாகக் கூறினார்…

“இது ஒரு மூடிமறைப்புக் கொள்கை என்று நான் கூறவில்லை. என்றாலும் சமூக முடக்கத்தின் (lockdown) போது சில வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் புத்துயிர் கொடுக்க வேண்டாம் [Do Not Resuscitate-DNR] உத்தரவை மூடிமறைப்பது பற்றி எங்களுக்கு முன்பே தெரியும். இப்போது அது பற்றி அங்கு விசாரணை நடக்கிறது. உறவினர்களிடம் அவர்களது அன்புக்குரியவர்கள் DNR க்கு முகம்கொடுத்தது பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை…

செப்டம்பர் 3, 2020, வியாழக்கிழமை இலண்டனில் உள்ள கிங்ஸ்டேல் அறக்கட்டளை பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு முதல் நாள் வருகின்றனர் (AP Photo/Kirsty Wigglesworth)

“மருத்துவமனைகள் நிரம்பி வழிவதுடன், அங்கு ஒரு நீண்ட வரிசையும் இருந்தால், யார் தமக்கு சிகிச்சையளிப்பார்கள் என்று அவர்களால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? அவர்களுக்கு குறைந்த அளவு மருத்துவ வசதி தான் கிடைக்கிறது. இயான் தனது 40 களின் முற்பகுதியில் இருந்தாலும், அடிப்படை உடல்நல கோளாறுகள் எதுவும் அவருக்கில்லை என்பதுடன், மருந்துகள் எதுவும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவரது பெருமூளை வாத பாதிப்பைப் பொறுத்தவரை 9 நிலைகளில் அவர் 7 ஆம் நிலை பாதிப்பில் இருந்தார். இது அவரை கடுமையாக பலவீனமுள்ளவர் என்று வகைப்படுத்துகிறது, ஏனென்றால் இந்த நிலையில் அவர் தனிப்பட்ட முறையில் தன்னை கவனித்துக் கொள்ள பிறரைச் சார்ந்திருக்கிறார், அதாவது தமக்குத் தாமே உடை அணிந்து கொள்ளும், உணவு எடுத்துக் கொள்ளும் ஒரு வயோதிபரைக் காட்டிலும் உண்மையில் மோசமான நிலையில் அவர் இருக்கிறார்…

சாலி, “ஏப்ரல் மாதம் தானும் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அது நுரையீரல் அழற்சி போன்ற பாதிப்பாக இருக்கக்கூடும் என்று தாம் நினைத்ததாகவும் கூறினார். பின்னர் எனது நுரையீரலில் ஒரு உராய்வுச் சத்தம் எழுவதை நான் உணரத் தொடங்கினேன், மேலும் மே மாதம் வாக்கில் மூச்சு விடுவதில் எனக்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், ஏதோ முடிந்த உதவியை இயானுக்கு செய்தேன். அப்போதிருந்து எனக்கு இதயத்தில் படபடப்பு அதிகமாகியதையும், எனது நுரையீரலில் ஒரு அரிப்பு உணர்வு இருப்பதையும், உடல் சோர்வடைவதையும் நான் உணர்ந்தேன். இதனால் ஒருவேளை எனக்கு லேசான கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர் நினைக்கிறார்…

மேலும், “சமூக முடக்கத்திற்கு முன்னர், எங்களுடன் ஒரு ஊனமுற்ற நண்பர் தங்கியிருந்தார், பின்னர் அவரது வீட்டிற்கு சென்றதும் உடனடியாக A&E பரிசோதனை செய்து கொண்டபோது அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டதுடன், பரிசோதனை செய்யப்படவில்லை என்றாலும் அவருக்கு ‘கோவிட்-19 நோய்தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கும்’ நிலையில் அவர் இருந்தார். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து அவரை வெளியேற்றி நேரடியாக அவரது தங்குமிடத்திற்கு அனுப்பிவிட்டனர், பின்னர் அவர் குணமடைய சிறிது காலம் பிடித்தது, மேலும் அவருக்கு இருந்த நோயறிகுறிகள் எனக்கு இருந்தது போலவே இருந்தது, இருந்தாலும் அவரது நிலைமை என்னைவிட மிகவும் மோசமாக இருந்தது” என்றார்.

சாலி, 5 மற்றும் 7 ஆம் வகுப்புகளில் பயிலும் தனது குழந்தைகளை வசந்த கால விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருந்தார். அவர், “நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் இரண்டு பள்ளிகளுமே மிகுந்த புரிதலுடன் இருந்தன, என்றாலும் குழந்தைகள் பள்ளிக்கு வராதிருப்பது குறித்து நாங்கள் அபராதத்தை அல்லது வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அங்கீகாரம் இல்லாமல் எப்போதும் அவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்க முடியாது என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என்றார். பின்னர் அவரது குழந்தைகளுக்கு பள்ளிகளில் பதிவை இரத்துசெய்து, வீட்டிலிருந்து கல்வி கற்பவர்களாக இருந்தனர். “நீங்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும்போது அதை முடிக்க உங்களுக்கு ஆறு மாதங்கள் பிடிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள், மேலும் அவர்களை முழுநேரமும் நான் தான் கவனித்துக்கொள்கிறேன். இந்நிலையில், சில வகையான தொலைதூர கல்வி கற்றலையே நாம் பெரிதும் விரும்புவோம், என்றாலும் பள்ளிகள் மிகவும் நீட்டிக்கப்பட்டிருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம், அத்துடன் எங்களது சொந்த வழியை நாங்கள் கண்டுபிடிப்போம்.

“நான் கவனித்த வகையில், சமூக முடக்கத்திற்குப் பின்னர் குழந்தைகளின் மன ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. அதிலும் நாங்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாக கிராமப்புற சூழலில் வாழ்வதால் அவர்களுக்கு வெளிப்புற வசதித் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் இணைய வழியில் நான் பார்த்ததை வைத்து கூறுகிறேன், வேறு பல பெற்றோர்களை விட மிகவும் வித்தியாசமான அனுபவங்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். நான் சில உண்மையான திகில் கதைகளை படித்திருக்கிறேன், உண்மையில் குழந்தைகள் பள்ளிக்கு வராதது குறித்த வழக்கை எதிர்கொள்ளும் மூன்று குடும்பங்களுக்கு உதவி செய்யும் ஒரு மனித உரிமை வழக்குரைஞர் பற்றி எனக்குத் தெரியும். இது பனிப்பாறையின் முனை போன்றது என்றும், அது அவரை தினமும் குத்திக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இது அதிர்ச்சியளிக்கிறது. நோய்தொற்று காலத்தில் பள்ளிக்கு வராமை குறித்து ஒரு நியாயமான சமூகம் அனைத்து அபராதங்களையும் தடைசெய்ய வேண்டுமா இல்லையா?

சாலி, தானும் இயானும் “தமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருப்பது குறித்து ஆரம்பத்தில் குற்ற உணர்வுடன் இருந்ததாகக் கூறினார். ஆனால் தற்போது, நோய்தொற்றுக்கள் அதிகரித்து, மருத்துவமனைகள் நிரம்பி வழியத் தொடங்குவதைப் பார்த்தால், நாங்கள் சரியாகத்தான் செய்திருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரிகிறது. இதனால் உண்மையாக நிகழ்ந்த மாற்றம் என்னவென்றால், எங்கள் குழந்தைகள் மிகவும் சாதாரணமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். தற்போது பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் பற்றி மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது, அதிலும் அவர்களது பெற்றோர் பாதிக்கப்படக்கூடியவர்கள் அல்ல என்றாலும் கூட.

“உள்ளூர் கவுன்சிலர் ஒருவரது முகநூல் பக்க கருத்துக்களை நான் படித்தேன். எங்களது பள்ளிகளிலும் மற்றும் ஏனைய உள்ளூர் பள்ளிகளிலும் உறுதிசெய்யப்பட்ட நோய்தொற்றுக்கள் இருந்தன. குழந்தைகள் நீர்க்குமிழிகளில் தங்கியிருப்பது போல இருக்கையில், வகுப்புக்களுக்கு இடையில் அவர்களால் எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்க முடியும்? என்று ஒருவர் கேட்டார். மேலும் மற்றொருவர், மன இறுக்கம் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்ட தங்களது குழந்தையைப் பற்றி கேள்வி எழுப்பினார்? இதுபோன்ற குழந்தைகளுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்கிறார். மேலும் மற்றொருவருக்கும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளது, இக்குழந்தை பள்ளி நடைமுறைகளினால் மேலும் அதிகரித்தளவில் பாதிப்புக்குள்ளாவது தெரிகிறது. இவ்வாறு நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர், இதை தடுக்க முடியும்.

“நோய்தொற்றுக்கள் சரியாக எங்கெல்லாம் ஏற்பட்டிருக்கின்றன என்பதோ அல்லது எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதோ எவருக்கும் தெரியாது. ஒருவேளை ஒரு குழந்தைக்கு நோய்தொற்று இருப்பது உறுதியானால், அக்குழந்தைக்கு அடுத்தபடியாக அமர்ந்திருக்கும் ஒரே குழந்தையை மட்டும் தனிமைப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆனால், மதிய உணவு நேரத்திலும், பள்ளி நேரம் தவிர்த்தும் குழந்தைகள் கலந்து தான் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் பிற வகைக்கு பெற்றோர்கள் பணம் செலுத்தும் இடத்தில் ஒரு கைரேகை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது, இதை குழந்தை தனது கணக்கை அங்கீகரித்துக் கொள்ள பயன்படுத்துகிறது. இந்த இயந்திரம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று ஒருவர் கேட்கிறார், அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.

“மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒருவரை நான் அறிவேன், என்றாலும் ஏராளமான கோவிட்-19 நோய்தொற்றுக்களின் காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள அவரால் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. அவரது குழந்தைக்கு வீட்டிலிருந்து கல்வி பயில வசதியில்லை என்பதால், அவரது குழந்தை பள்ளிக்குச் செல்கிறது. பள்ளிகள் மகிழ்ச்சியாக சுற்றும் இடமாக உள்ளது என்றாலும், அவரது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்னர் கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே அவ்வாறு உள்ளது என்றும் அவர் கூறுகிறார். பள்ளியில் ஒருவருக்கு நோய்தொற்று இருப்பது பதிவாகியுள்ளது பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதாக பெற்றோருக்கு மின்னஞ்சல் செய்தி ஒன்றை பள்ளி அனுப்பியது. ஆனால், தனக்கு வந்துள்ள பள்ளி மின்னஞ்சல்கள் மூலம், இதுவரை குறைந்தது பத்து நோய்தொற்றுக்கள் அங்கு ஏற்பட்டிருப்பது பற்றி அவருக்குத் தெரியும். நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட ஆசிரியர்களும் அங்கு இருக்கின்றனர், என்றாலும் அதன் விபரம் எங்களுக்குத் தெரியாது.

“தற்போது ஒரு பள்ளியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குழந்தைகள் விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில குழந்தைகள் நாங்கள் பள்ளிக்குச் செல்ல மறுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது பற்றி மேலும் விபரம் அறிய நான் முயற்சிக்கிறேன்.

டோரி அரசாங்கத்தையும், எதிர்க் கட்சியான தொழிற் கட்சியையும் சாலி விமர்சித்தார். “அரசாங்கம் சொல்வது எதுவும் அர்த்தமற்றதே. [பிரதமர்] போரிஸ் ஜோன்சன் மூன்றடுக்கு நடவடிக்கை முறையை வகுத்துள்ளார், ஆனால் அதை புரிந்துகொள்வது மிகவும் கடினம். பாரிய பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல், இது எவ்வாறு பரவுகின்றது என்பதை நீங்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை. மேலும் அவர்கள் தாத்தா, பாட்டிகளால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள். இவ்வாறாக, விதிமுறைகள், வரைபடங்கள், புள்ளிவிபரங்கள் என அனைத்தையும் மக்களுக்கு வழங்குகிறார்கள், என்றாலும் எதை நம்புவது என்று யாருக்கும் தெரியாது. இதற்கு காரணம் மக்கள் முட்டாள்கள் என்பதல்ல. அதாவது பலர் அரசாங்கத்தை நம்புவதில்லை. தொற்றுநோய் பரவுவதற்கு முன்னரும் சரி, தற்போது அதிகரித்தளவில் நோய்தொற்றுக்கள் பரவிக் கொண்டிருக்கும் நிலையிலும் சரி சில நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அப்படியே உள்ளது…

“[தொழிற் கட்சி தலைவரான] Kier Starmer நோய்தொற்று பரவாமல் இருக்க ஒரு குறுகிய “சுற்று உடைப்பி” (‘circuit breaker’) பற்றி பேசுகிறார். என்றாலும் பள்ளிகளும் பணியிடங்களும் திறந்தே இருக்கும் என்கிறார். இவ்வாறு அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு நோய்தொற்றுச் சங்கிலியை உங்களால் உடைக்க முடியுமா என்று ஏதேனும் ஒரு நோயியல் வல்லுநரைத்தான் கேட்க வேண்டும்.

“உங்களால் பொருளாதாரத்தையும் நிறுத்தி வைக்க முடியாது, ஆனால் இது பரவிக் கொண்டு தான் இருக்கும் என்று நீங்கள் சிறப்பாக கூறுகிறீர்கள். இவர்கள் கூறுவது அனைத்தும் அர்த்தமற்றதே. இவை அனைத்தும் வெற்று வார்த்தைகளே. உண்மையில் இது சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை என்று எனது உள்ளுணர்வு என்னிடம் கூறுகிறது. ஆனால் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை நிறைவேற்றுவது என்பது தடுப்பூசி மூலம் மக்களைப் பாதுகாப்பதாகும். மக்களை வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்களை இறக்க அனுமதிப்பதன் மூலம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை நிறைவேற்றப்பட்டதாக ஒருபோதும் எடுத்துக் காட்டப்படவில்லை. நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்திராத, ஆனால் மார்ச் மாதத்தில் இருந்ததை காட்டிலுமாக நிலைமை மோசமாக இருக்கும், மேலும் இது NHS க்கு 10 மடங்கு மேலாக மோசமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

“அலை மாறுகிறது என்றே நான் நினைக்கிறேன். முன்னர் கவலைப்படாத, அல்லது ஆபத்தை புறக்கணித்த, அல்லது பள்ளிகள் பாதுகாப்பானது என்று நினைத்த பெற்றோர்கள் கூட தங்களது எண்ணங்களை மாற்றி வருகின்றனர். இது கல்வியா பாதுகாப்பா என்று இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் விடயமாக இருக்கக் கூடாது. நமது குழந்தைகள், நமது ஆசிரியர்கள் மற்றும் நாம் அனைவருமே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.”

அனைத்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கல்வியாளர்களுக்கான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுவில் சேரும்படியும், மேலும் அக்டோபர் 31 அன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ள குழுவின் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும் சோசலிச சமத்துவக் கட்சி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

Loading