நவீன நாணயக் கோட்பாடும் முதலாளித்துவத்தின் நெருக்கடியும்: பகுதி ஒன்று

இது இரண்டு பகுதிகளை கொண்ட ஒரு கட்டுரையின் முதலாம் பாகம்.

முதலாளித்துவத்தின் வரலாறு மற்றும் அதன் தொடர்ச்சியான நெருக்கடிகள் முழுவதும், "இடது" கோட்பாட்டாளர்களால் பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை இந்த நெருக்கடிகளையும் அவை உருவாக்கும் சமூக துயரங்களையும் முதலாளித்துவ உற்பத்தியின் அஸ்திவாரங்களைத் தொடாமல் நாணய அமைப்புமுறையை மாற்றுவதன் மூலம் அவற்றை முற்றிலுமாக அகற்றப்படாவிட்டாலும் திருத்திக்கொள்ள முடியும் என்ற முடிவிற்கு வருகின்றன.

தங்களை "இடதுசாரி" மற்றும் "முற்போக்கானவர்கள்" என்று காட்டிக்கொண்டு முதலாளித்துவ அமைப்பின் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் அதே வேளையில், பெரும் நெருக்கடியின் காலங்களில் அவர்கள் தொழிலாள வர்க்கத்தை சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்திலிருந்து திசைதிருப்ப முற்படுவதுடன், அதே நேரத்தில் நெருக்கடிக்கு எதிர்ப் புரட்சிகர தீர்வை முன்னெடுக்கும் அரசியல் சக்திகளுக்கு கருத்தியல் அடித்தளங்களை வழங்குவதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது.

நவீன நாணயக் கோட்பாடு (MMT) என அதன் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரால் இந்த புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முக்கிய கொள்கைகள், இந்த நிகழ்வுகளின் சமீபத்திய வெளிப்பாடு ஆகும். இத்தகைய போக்குகளுக்கு எதிரான போராட்டம் மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தின் தோற்றம் வரை செல்கிறது.

Karl Marx

1857–58 குளிர்காலத்தில், உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில், 1867 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மூலதனமாக மாறவிருந்த படைப்புகளின் ஆரம்ப வரைவை மார்க்ஸ் எழுதினார். அவரது ஆரம்ப பணிகள் Grundrisse என்ற வடிவத்தில் நமக்கு கிடைத்தன. இது முதன்முதலில் 1973 இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இது நவீன நாணயக் கோட்பாட்டை புரிந்துகொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்தது.

மார்க்சின் தொடக்கப் புள்ளி பணத்தைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு மற்றும் அந்த நேரத்தில் ஒரு முன்னணி சோசலிச கோட்பாட்டாளராகக் கருதப்பட்ட பிரெஞ்சு அராஜகவாதியான புருடோனின் கோட்பாடுகளை மறுப்பதுமாகும். புருடோனை பின்தொடர்பவர்களில் ஒருவரான ஆல்ஃபிரட் டாரிமோனின் பின்வரும் மேற்கோளுடன் Grundrisse தொடங்குகிறது: "தீமையின் வேர் என்பது உலோகங்களின் சுழற்சிக்கும் பரிமாற்றத்திற்கும் முக்கிய பங்கை கொடுக்கும் கருத்தினால் கடுமையாக ஆதிக்கம் செலுத்தப்படுவது ஆகும்".

புருடோனியர்களின் கூற்றுப்படி, தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற அவற்றின் சலுகை பெற்ற அந்தஸ்திலிருந்து அகற்றப்பட்டு சாதாரண பொருட்களின் நிலைக்கு குறைக்கப்பட்டால் மட்டுமே முதலாளித்துவத்தின் சமூக துன்பங்களை தீர்க்கமுடியும். அவ்வாறு செய்தால், மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான பரிமாற்றத்தின் சமத்துவமின்மை முடிவுக்கு வரப்படலாம் மற்றும் அனைத்து வகையான உழைப்புகளின் இயல்பான சமத்துவத்தையும் மீட்டெடுக்க முடியும்.

மார்க்ஸின் மறுப்பின் சாராம்சம், பரிமாற்றத்தை எளிதாக்கும் நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனமே பணம் அல்ல என்பதைக் காட்டுவதை உள்ளடக்கியிருந்தது. ஆனால் பணமானது பொருட்களின் உற்பத்தி முறையிலிருந்தே எழுந்தது. இதில் சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனி நபர்களின் உழைப்பு, அதாவது சமூக உற்பத்திக்கு சில சுயாதீனமான அளவீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். மார்க்ஸ் வலியுறுத்தினார், பணம் அரசு செய்வது போன்ற உடன்படிக்கைகளில் இருந்து எழுவதில்லை, ஆனால் பொருட்களின் பரிமாற்றத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்திலிருந்து உருவாகிறது.

புருடோனியர்களின் கருத்தாக்கங்களின் மீதான விரிவான பகுப்பாய்வு மூலம் மார்க்ஸ் நிறுவிய முக்கிய அம்சம் என்னவென்றால், பணம் முதலாளித்துவ சமுதாயத்தின் மோதல்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கவில்லை. இது கூலி உழைப்பின் வடிவத்தில் ஒரு பொருள் உழைப்பு சக்தியாக மாறும்போது இன்னும் வன்முறை வடிவங்களை எடுத்துக்கொண்டதே தவிர, "இந்த முரண்பாடுகளின் வளர்ச்சியானது புலனறிவிற்கு அப்பாற்பட்டதாக தோற்றமளிக்கும் பணத்தின் சக்தியை உருவாக்குகிறது." [Grundrisse, Penguin Books, 1991, p. 146]

Portrait of Pierre Joseph Proudhon, 1865 (Gustave Courbet/Wikimedia)

புருடோனியர்களின் நோக்கம் அதன் தொடர்ச்சியான நெருக்கடிகளின் காரணமாக பெருகிய முறையில் வெளிப்படும் முதலாளித்துவத்தின் சமூக தீமைகளை அகற்றுவதும், உற்பத்தியின் அடிப்படை சமூக உறவுகளைத் தொடாமல் பொருட்களின் உற்பத்தியை அடித்தளமாக கொண்டு பணத்தின் உதவியுடன் விநியோகம் மற்றும் புழக்கத்தின் உறவுகளை மாற்றியமைப்பதாகும்.

இங்கே மார்க்ஸ் அவர் அடிப்படை கேள்வியை எழுப்பினார்: "தற்போதுள்ள உற்பத்தி உறவுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விநியோக உறவுகளை புழக்கத்தின் கருவிகளையும், புழக்கத்தின் அமைப்பினையும் மாற்றுவதால் புரட்சிகரமாக்க முடியுமா?" மேலும், "தற்போதுள்ள உற்பத்தி உறவுகள் மற்றும் அவற்றில் தங்கியிருக்கும் சமூக உறவுகளைத் தொடாமல் தற்போதுள்ள புழக்கத்தினை மாற்றியமைக்க முடியுமா?" [Grundrisse, p. 122]

முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளமான பொருட்கள் உற்பத்தியின் தொடர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட புருடோனியர்களின் திட்டம் ஒரு கற்பனாவாதமாகும். இது, மார்க்ஸ் வகைப்படுத்தியபடி, கத்தோலிக்க திருச்சபையை இல்லாதொழிக்காமல் பாப்பரசரை ஒழிப்பதைப் போன்றது. 1850 களின் புருடோனியர்களின் கோட்பாடுகள், முதலாளித்துவத்தின் நெருக்கடிகளை மார்க்ஸ் "புழக்கத்தின் தந்திரங்கள்" என்று அழைத்ததன் மூலம் தீர்க்க முயன்றன. அந்தக் காலகட்டத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளன.

1890களில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக, தொழிலாளர்களினதும் சிறுவிவசாயிகளினதும் வேலையின்மை 1893 ஆம் ஆண்டில் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1896 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஒப்புதல் பெற்ற வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையன், "தங்கத்தாலான சிலுவையை" மனிதகுலத்திலிருந்து அகற்றுவதாக உறுதியளித்தார்.

பணச்சுருக்கத்திற்கு (deflation) காரணமான தங்கத் தரம் (gold standard) கடைப்பிடிக்கப்பட்டது, மற்றும் பண அமைப்பை வெள்ளியை அதன் அடிப்படையாக மாற்றுவதன் மூலம் மாற்ற வேண்டியிருந்தது, இது பொருளாதார செழிப்புக்கு திரும்புவதை ஊக்குவிக்கும் எனப்பட்டது.

முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி பொருளாதார விநியோக வடிவங்கள் மற்றும் நாணய அமைப்பின் மாற்றங்கள் மூலம் நெருக்கடியைத் தணிக்க முடியும் என்று கூறும் பல கோட்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

1920 களில், சி. எச். டக்ளஸ் சமூக கடன் கோட்பாட்டை முன்வைத்தார். ஒரு தொழிற்சாலை உற்பத்தியின் மதிப்பு மற்றும் ஊதியங்கள், சம்பளம் மற்றும் பங்கு ஆதாய வடிவில் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு இடையிலான இடைவெளியை எதிரெதிராக நிறுத்தி, இந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய ஒரு தேசிய பங்கு ஆதாய தொயை செலுத்த அவர் முன்மொழிந்தார். டக்ளஸின் சமூக கடன் கோட்பாடு மற்றும் போதாமையான கிராக்கி குறித்த அக்கருத்து கெய்ன்ஸின் கருத்துக்களில் வெளிப்பாட்டைக் கண்டன. கெய்ன்ஸ் முதலாளித்துவ பொருளாதாரத்தின் பிரச்சினைகள் போதாமையான கிராக்கியின் விளைவாக ஏற்பட்டன, இந்த இடைவெளியை அரச செலவீடுகள் மூலம் அடைக்கப்படவேண்டும் என்றார். 1920 களில், முக்கிய நாணயங்கள் இன்னும் தங்கத்துடன் பிணைக்கப்பட்டிருந்தபோது, இந்த நிலைமை சில விமர்சகர்களால் மந்தமான பொருளாதார நிலைமைகளின் தொடர்ச்சிக்கு காரணமாக கருதப்பட்டது.

1924 ஆம் ஆண்டில், ஜேர்மன் பொருளாதார வல்லுனர் ஜியோர்ஜ் பிரீட்ரிக் கினப் ஒரு புதிய பணக் கோட்பாட்டை முன்வைத்தார். பொருட்களின் உற்பத்தியில் இருந்து பணம் எழவில்லை என்றும் அதற்கு எந்தவொரு உள்ளார்ந்த மதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அவர்கள் விதித்த வரிக் கடமைப்பாடுகளுக்கு பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு அடையாள வில்லையாகும் என்றார். இந்த கோட்பாடு, சார்ட்டலிசம் (இலத்தீன் வார்த்தையான சார்டா, அடையாள வில்லை என்பதிலிருந்து பெறப்பட்டது) என அழைக்கப்படுகிறது. இதுதான் நவீன நாணயக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.

நவீன நாணயக் கோட்பாடு முதல் புருடோன் மற்றும் கெய்ன்ஸ் வரை செல்லும் இந்த கோட்பாடுகள் அனைத்தும் ஒரு திட்டவட்டமான அரசியல் முன்னோக்கைக் கொண்டுள்ளது. பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் காலங்களில் வெளிவரும் இவை, இந்த நெருக்கடிகள், பொருட்களின் உற்பத்தியிலும் மற்றும் உழைப்பு சக்தியை ஒரு பொருளாகவும் அதன் சுரண்டலாகவும் மாற்றியமைப்பதில் வேரூன்றியுள்ள முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளிலிருந்து எழுவதில்லை ஆனால் அவற்றை அரசாங்க கொள்கைகளில் மாற்றம் மற்றும் ஒரு புதிய நாணய கடன் அமைப்பு முறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் கடக்க முடியும் என்கின்றன.

இந்த நெருக்கடிகளால் தொழிலாள வர்க்கத்தின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் பணியில் இருந்து திசை திருப்புவதை, அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தூக்கியெறிந்து, சோசலிச அஸ்திவாரங்களில் பொருளாதாரத்தை புனரமைப்பதை மேற்கொள்வதை தடுப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த கோட்பாட்டாளர்களின் கூற்றுப்படி, அவர்களின் தவறான கோட்பாடுகளை கைவிட்டு, அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதற்கான சக்திகளை நம்ப வைப்பதே அன்றைய பணியாகும். இது முதலாளித்துவ விரிவாக்கத்திற்கு ஒரு அடிப்படையை வழங்கும் மற்றும் ஒரு சோசலிச புரட்சியின் அவசியத்தை தவிர்க்கும். இதுதான் கெல்டனின் புத்தகத்தினதும் நவீன நாணயக் கோட்பாட்டினதும் முக்கிய விடயமாகும்.

The Deficit Myth (பற்றாக்குறை கட்டுக்கதை)

ஆரம்பத்தில் இருந்தே, கெல்டன் நவீன நாணயக் கோட்பாட்டின் ஆற்றலைப் பற்றி புகழ்ந்து பாடுவார். இது இப்போதுள்ள பலமான பொருளாதாரங்களின் நிலைமையை சவால் செய்வதாகவும், “ஒரு புதிய அரசியலையும் ஒரு புதிய பொருளாதாரத்தையும் கற்பனை செய்வதற்கான சக்தியை எங்களுக்குத் தருகிறது” என்றும் கூறி, “மற்றொரு வகையான உலகம் சாத்தியம். இதில் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் நெகிழ்ச்சியான உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்ய முடியும்” என்கிறார். [The Deficit Myth, pp. 12–13]

பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் பரந்த வளர்ச்சியால், இது ஒரு திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதாரத்தில் மனித தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும் என்பதால், இதுபோன்ற விஷயங்கள் பொருளாதாய ரீதியாக சாத்தியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவை முதலாளித்துவத்தின் கீழ் அடைய இயலாது. ஏனெனில் அது நவீன நாணயக் கோட்பாடு முற்றிலும் புறக்கணிக்கும் சமூக உறவுகள் முதலாளித்துவ பொருளாதாரத்தை சமரசம் செய்ய முடியாத வர்க்கப் பிளவுகளுடனான ஒரு சமூக அமைப்பாக அல்லாமல் ஒரு வகை இயந்திரமாக பார்க்கின்றது.

கெல்டனின் கூற்றுப்படி, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூகக் கேடுகள் அதன் புறநிலை முரண்பாடுகளின் விளைவு அல்ல, மாறாக தவறான சிந்தனையின் விளைவாகும். "எங்கள் சுயமாக திணிக்கப்பட்ட தடைகளை" கைவிட்டால், மனித தேவை மற்றும் பொது நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் முதலாளித்துவத்திற்குள் சாத்தியமாகும் என்று அப்பெண்மணி கூறுகிறார்.

இந்த தடைகள், அரசாங்க செலவினங்களை குடும்ப செலவினங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் மற்றும் சமன் செய்யும் விதத்தில் இருந்து உருவாகின்றன. ஒரு குடும்பத்திற்கு அதன் செலவினங்களுக்கு நிதியளிக்க பணத்தை பெறவேண்டும் மற்றும் அதன் வரவு-செலவுத் திட்டத்தை சமப்படுத்த வேண்டும். அதாவது, குடும்பமானது இது பணத்தை பயன்படுத்துபவராகும். மறுபுறத்தில், பணத்தை வழங்கும் அரசாங்கம் அத்தகைய தடைகளுக்கு உட்பட்டது அல்ல என்று அவர் வாதிடுகிறார்.

ஒரு குடும்பம் அதன் செலவினங்களுக்கு நிதியளிக்க டாலர்களை உருவாக்க முடியாது, ஆனால் அரசாங்கத்தால் முடியும். இதன் பொருள், ஒரு வீட்டுக்கு பொருந்தக்கூடிய செலவீனங்களுக்கான வரம்புகள் அதன் சொந்த நாணயத்தை வெளியிடும் ஒரு இறையாண்மை அரசாங்கத்திற்கு பொருந்தாது. இது எப்போதும் அதிக பணத்தை அச்சிடுவதன் மூலம் அதன் செலவினங்களுக்கு நிதியளிக்கலாம் அல்லது Federal Reserve ஒரு கணினி பொத்தானை அழுத்துவதன் மூலம் அதை உருவாக்கலாம், இது மத்திய வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றலாம்.“ பணத்தை பயன்படுத்துபவர்களுக்கும் பணத்தை வழங்குபவர்களுக்கும் இடையிலான வேறுபாடே நவீன நாணயக் கோட்பாட்டின் மையத்தில் இருக்கின்றது” என்று அவர் எழுதுகின்றார். [p. 18]

எவ்வாறாயினும், அத்தகைய செலவுகளுக்கு வரம்புகள் இல்லை, ஆனால் அவை நிதிக் கட்டுப்பாடுகளால் தீர்மானிக்கப்படவில்லை என்பது நவீன நாணயக் கோட்பாட்டின் நிலைப்பாடு அல்ல. யதார்த்தமான பொருளாதாரத்தின் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்படும்போது மட்டுமே அவ்வாறான செலவுகள் எழுகின்றன. மேலும் அரசாங்க செலவினங்களின் விளைவாக, பொருளாதாரத்தின் இயலுமையைத் தாண்டி, பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். ஆனால் அந்த நேரம் வரும் வரை, காலநிலை மாற்றம் போன்ற பல சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கூட தீர்க்கப்பட முடியும்.

இங்கு கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், இது ஒரு “அமெரிக்கா முதல்” என்ற நிகழ்ச்சி நிரல் மட்டுமல்ல, “அமெரிக்கா மட்டும்” என்ற ஒன்றாகும். உலகின் உலகளாவிய நாணயமாக டாலர் அனுபவிக்கும் பங்கின் காரணமாக, அதிகமான டாலர்களை உருவாக்குவதற்கான வரம்பற்ற திறனை அமெரிக்க கருவூலத்துறை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் உட்பட தங்கள் சொந்த நாணயத்தை கொண்ட மற்ற நாடுகளும் இதைச் செய்ய முடியும் என்று கெல்டன் கூறுகிறார். மேலும் பனாமா, துனிசியா, கிரீஸ், வெனிசுவேலா மற்றும் பல போன்ற சிறிய அல்லது பண இறையாண்மை இல்லாத நாடுகளுக்கு நவீன நாணயக் கோட்பாடு “உட்பார்வையை வழங்குகிறது”. [p. 19]

ஒரு ஆரம்ப மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனை கூட இந்த கருத்தாக்கத்தின் பொய்யை நிரூபிக்கிறது. மற்ற நாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலருக்குள்ள அதே மதிப்பான நிலையை அனுபவிக்கவில்லை. உதாரணமாக, ஆர்ஜென்டினா அல்லது வெனிசுவேலா போன்ற நாடுகளைப் பற்றி கவனமெடுக்காதுவிட்டாலும் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா, வரம்பற்ற பணப் வினியோகத்தை உருவாக்கி சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய அவற்றைப் பயன்படுத்தினால், அவர்களின் நாணய மதிப்பு உலகசந்தையில் சரிந்துவிட்டது என்பதை அவர்கள் மிக விரைவாகக் கண்டுபிடிப்பார்கள். மேலும் இது பணவீக்கத்திற்கு வழிவகுத்து மற்றும் அமெரிக்க டாலரால் குறிப்பிடப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான அவற்றின் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

ஆனால் அமெரிக்க டாலரின் சலுகை பெற்ற பாத்திரம்கூட, அமெரிக்க மத்திய வங்கியால் டாலர்களை உருவாக்குவதற்கு உள்ளார்ந்த வரம்புகள் உள்ளன. அவை பணத்தின் இயல்பான தன்மையிலிருந்து பெறப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையான பொருட்களின் உற்பத்தி தனியார் நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அது சமூக உற்பத்தியாகும். ஒவ்வொரு சமூகமும் அவை தொடர்ந்து இயங்குவதற்கு அதற்கு கிடைத்துள்ள சமூக உழைப்பு எவ்வாறு ஒதுக்கப்படுகிறது மற்றும் அதற்கு கிடைக்கும் உழைப்பின் வளங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன என்ற கேள்வியை தீர்க்க வேண்டும்.

ஒரு சோசலிச சமுதாயத்தில் இந்த பணி ஒரு நனவுபூர்வமான திட்டம் மற்றும் ஜனநாயக ஒழுங்கமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும். முதலாளித்துவ சமுதாயத்தில் இது சந்தை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது சமூகத்தின் செயல்பாட்டிற்கு தேவையான பல்வேறு வகையான உழைப்பை சமன் செய்வதை உள்ளடக்கியுள்ளது. ஒரு பொருளை உற்பத்தி செய்யும் சமூகத்தில், உழைப்பு சமூகமயமானதாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதால், இந்த ஒதுக்கீடு மதிப்புமுறை மூலம் அடையப்படுகிறது.

ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் உற்பத்தி செய்யத் தேவையான சமூக ரீதியாகத் தேவையான உழைப்பின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த மதிப்பு ஒரு சுயாதீனமான பொருள் வடிவத்தைப் பெற வேண்டும். அந்த வடிவமே பணம். மார்க்ஸ் கூறியது போல்: “பணம் என்பது ஒரு பொதுவான பொருளின் வடிவத்தில் உழைப்பின் நேரம் அல்லது பொதுவான உழைப்பு நேரத்தை பொருள்மயப்படுத்துதல், உழைப்பின் நேரம் ஒரு பொதுப் பொருளாக இருக்கிறது.” [Grundrisse, p. 168]

பணத்தின் மூலம்தான் தனிப்பட்ட தனியார் உற்பத்தியாளர்களிடையே உண்மையில் இருக்கும் புறநிலை சமூக பிணைப்பு வெளிப்படுத்தப்படுகின்றது. மக்கள் ஒரு பொருளின் மீது அதாவது பணத்தின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்கவில்லை என பொருளாதார வல்லுநர்கள் கூறுவதாக மார்க்ஸ் எழுதினார். “ஆனால் அவர்களுக்கு ஏன் இந்த பொருளின் மீது நம்பிக்கை இருக்கிறது. வெளிப்படையாக அந்த பொருள் நபர்களிடையே ஒரு பொருள்மயப்படுத்தப்பட்ட உறவு என்பதால்; ஏனெனில் இது பொருள்மயப்படுத்தப்பட்ட பரிமாற்ற மதிப்பாகும். மற்றும் இந்த பரிமாற்ற மதிப்பு என்பது மக்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இடையிலான உறவைத் தவிர வேறில்லை.” [Grundrisse, p. 160]

Loading