பிரான்சின் நீஸில் தேவாலயம் மீதான பயங்கரவாத தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று காலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் பிரான்சின் தெற்கு கடற்கரை நகரமான நீஸின் நோத்ர்-டாம் தேவாலயத்திற்குள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

காலை 8:30 மணியளவில் காலை பிரார்த்தனையில் கலந்து கொள்ள தேவாலயம் சென்றவர்கள் மீது கத்தி ஆயுதம் ஏந்தியிருந்த தனியான ஒரு நபர் தாக்குதல் நடத்தினார். தேவாலயத்திற்குள் இரண்டு நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன: அதில் கிட்டத்தட்ட முழுமையாக தலை துண்டிக்கப்பட்ட 60 வயதான ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலமுமாகும். தேவாலயத்திலிருந்து தப்பிச் சென்ற சிறிது நேரத்தில் மற்றொரு 55 வயது பெண்ணும் கத்திக் குத்துக் காயங்களால் இறந்து போனார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் தாக்குதல் நடத்தியவரை நோக்கி சுட்டனர், அவர் “அல்லாஹ் அக்பர்” என்று கத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர் 21 வயதான துனிசிய புலம்பெயர்ந்தவரான ஏ. பிராஹிம் என்று கூறப்படுகிறது. அவர் கடந்த செப்டம்பரில் மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிய தீவான லம்பெடுசாவிற்கு வந்து, இம்மாத தொடக்கத்தில் பாரிசுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. எந்த பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு எதுவும் இல்லை என்றும் மற்றும் அவருக்கு கூட்டாளிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 16 ம் திகதி பாரிசின் வடமேற்கிலுள்ள Conflans நடுநிலைப் பள்ளி அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இத்தாக்குதல் நடந்துள்ளது. சாமுவேல் பட்டி என்ற புவியியல் ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். "கருத்து சுதந்திரம்" தொடர்பான வகுப்பறை விவாதத்தின் ஒரு பகுதியாக, தனது வகுப்பில் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு கேலிச் சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டியதற்காக அவர் குறிவைக்கப்பட்டார்.

தற்போதைய பயங்கரவாதத் தாக்குதல் ஒரு கொடூரமான குற்றமாகும். பயங்கரவாதமானது தன்னுடைய திவால் தன்மையையும் அரசியல் பிற்போக்குத் தன்மையையும் மீண்டும் இதன் மூலம் வெளிப்படுத்துகிறது. மூன்று அப்பாவி மக்கள் மட்டுமல்ல துன்பகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலானது மக்ரோன் நிர்வாகத்திற்கும் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்கும் அவர்களின் தற்போதைய இனவாத முஸ்லீம்-விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத பிரச்சாரத்தை விரிவாக்கவும், மக்களை குழப்பவும் பிளவுபடுத்தவும் மற்றும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளின் மேலான தாக்குதலை ஆழப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பையும் அளித்துள்ளது.

அரசாங்கம் இன்றைய பிற்பகுதியில் தொடர்ச்சியான அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. "பாதுகாப்பு கண்காணிப்பு" நடவடிக்கைக்காக 4,000 க்கும் மேற்பட்ட இராணுவ சிப்பாய்கள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக மக்ரோன் நேற்று அறிவித்தார்.

நீஸின் வலதுசாரி மேயரான கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி, France Interஇடம் "இஸ்லாமிய-பாசிசம் மீண்டும் ஒருமுறை தாக்கியுள்ளது" என்று கூறினார். ஒரு வன்முறையான ஒடுக்குமுறைக்கு அவர் அழைப்பு விடுத்தார், "நாங்கள் எங்கள் சமாதான ஆயுதங்களை கழற்றி வைத்துவிட்டு, போருக்கான ஆயுதங்களை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது" என்று அறிவித்தார்.

புகலிடம் கோருவதற்கான அனைத்து கோரிக்கைகளுக்கும் சட்டவிரோத தடை உட்பட, பிரான்சிற்கான அனைத்து குடியேற்றங்களையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தான் கோரியதாக வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினரான எரிக் சியோட்டி தெரிவித்தார். நவ-பாசிச தேசிய பேரணியின் (National Rally) தலைவரான மரின் லு பென், இந்த தாக்குதல் "எங்கள் மண்ணிலிருந்து இஸ்லாமியவாதத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய எதிர் நடவடிக்கையை எங்கள் தலைவர்கள் மீது சுமத்துகிறது" என்று ட்டுவீட் செய்துள்ளார்.

நேற்று தனது உரையில், "மீண்டும் ஒருமுறை நாம் தாக்கப்பட்டிருந்தால், நமது மதிப்புகளின் காரணமாக இருக்கிறது, நமது சுதந்திரத்தின் சுவையும், நமது நாட்டில் சுதந்திரமாக நம்பப்படும் இந்த சாத்தியங்களுக்காகவும் மற்றும் பயங்கரவாதத்தின் ஆன்மாவிற்கு எதையும் விட்டுக் கொடுக்க கூடாது" என்று இமானுவல் மக்ரோன் அறிவித்தார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் அரசியல் பொறுப்பை மூடிமறைப்பதை இந்த மோசடியானது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பெரும்பகுதி மீது ஒரு வரலாற்றுரீதியாக காலனித்துவ சக்தியாக விளங்கும் பிரான்சானது, ஆப்கானிஸ்தான் முதல் சிரியா, லிபியா மற்றும் சஹேல் வரை இப்பிராந்தியம் முழுவதும் இரண்டு தசாப்தங்களாக முடிவற்ற போர்களில் பங்கேற்றுள்ளது. பிராந்தியத்தின் இயற்கை வளங்கள் மற்றும் புவிசார் மூலோபாய நிலை மீது பிரெஞ்சு நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் பாரிஸ் நவ காலனித்துவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதன் விளைவாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2011ல் தொடங்கி, லிபியா மற்றும் சிரியா இரண்டிலும், முயம்மர் கடாபி மற்றும் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கங்களை அகற்றுவதற்கான ஆட்சி-மாற்றப் போர்களில் அதன் பினாமிகளாக, அல் கெய்தாவுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள குழுக்கள் உட்பட, இஸ்லாமிய குழுக்களுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்து, ஆயுதபாணியாக்க உதவியது. நேற்று நீஸில் நிகழ்ந்த இந்த அட்டூழியத்தின் வகையானது, பிரெஞ்சு அரசின் "ஜனநாயக" கூட்டாளிகளால் சிரியாவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட குறுங்குழுவாதிகளிற்கு இடையேயான ஒரு வாராந்திர மற்றும் தினசரி இரத்தக்களரி நிகழ்வாக இருந்தது. பயங்கரவாதக் குழுக்களின் உறுப்பினர்கள் நேட்டோ உளவுத்துறை முகமைகளின் கண்காணிப்பில் ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்குக்கும் இடையே சுதந்திரமாக பயணித்தனர்.

இந்த இரண்டு தசாப்த கால முடிவில்லாத நவ காலனித்துவ போர்களினால் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள உள்நாட்டு அரசியலை ஆழமாக பாதித்துள்ளன. அதே காலகட்டத்தில், புலம்பெயர்ந்தோரையும் முஸ்லிம்களையும் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் இடைவிடாத பிரச்சாரத்தைக் கண்டு வந்திருக்கிறது, 2004 ஆம் ஆண்டில் பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்கான தலைமறைப்பு தடைசெய்யப்பட்டது, 2010 இல் பொது இடங்களில் பர்தா தடை செய்யப்பட்டதும் உள்ளடங்கும்.

மக்ரோன் பதவிக்கு வந்ததிலிருந்து இந்த கொள்கைகள் அனைத்தையும் விரிவாக்கி அதிகரித்துள்ளார். அவர் தற்போது முஸ்லீம் மத கல்வி நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கின்ற "பிரிவினைவாத எதிர்ப்பு" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற பதாகையின் கீழான ஒரு சட்டம் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார், ஆனால் மற்றய மத பள்ளிகள் மீது அதற்கு இணையான கட்டுப்பாடுகள் இல்லை, மேலும் "குடியரசின் மதிப்புகளை" மீறுவதாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்களை கலைக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது. இஸ்லாம் ஒரு "நெருக்கடியில்" இருப்பதாகவும், பிரான்சைக் கைப்பற்றுவதை "தீவிர இஸ்லாம்" நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் மக்ரோன் அறிவித்துள்ளார்.

ஜனவரி தொடக்கத்தில் இருந்து மட்டும், 71 மசூதிகள் பிரெஞ்சு போலீசாரால் மூடப்பட்டுள்ளன, அவைகள் "தீவிரமயமாக்கல்" மற்றும் "பயங்கரவாதத்தின்" சாத்தியமான ஆதாரங்கள் என்று கூறப்படுவதன் அடிப்படையாக இருக்கின்றன. கடந்த வாரம், சாமுவேல் பட்டியினை விமர்சித்த மாணவர்களில் ஒருவரின் பெற்றோர் முகநூல் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்ட ஒரே காரணத்தின் அடிப்படையில் பாரீஸ் புறநகர் பகுதியான Pantin என்னும் இடத்தில் உள்ள மசூதி மூடப்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அந்த வீடியோவை மசூதி உடனடியாக நீக்கியது, அது அதைக் கண்டித்தது.

இந்த நடவடிக்கைகள் முஸ்லீம் மக்களை அச்சுறுத்துவதற்கும் இகழ்ச்சிக்குள்ளாக்குவதற்கும் சேவை செய்ய மட்டுமல்ல. வழிபாட்டு தலங்களை மூடுவது பிரான்சின் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாத தாக்குதல்களின் சாத்தியமான ஆதாரமாகக் கருதப்படும் ஒரு தீவிர வலதுசாரி சூழ்நிலையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அக்டோபர் 16ம் திகதி பட்டி கொலை செய்யப்பட்டதிலிருந்து, மக்ரோன் நிர்வாகத்தின் முஸ்லீம்-விரோத பிரச்சாரம் ஒரு காய்ச்சலின் உச்சநிலையை அடைந்திருக்கிறது. அது பயங்கரவாத தாக்குதல்களைத் தூண்டுவதற்கு திட்டமிட்டிருந்தால், அது அதிகரித்துவரும் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை விட வேறுவிதமாக செயற்பட்டிருக்க முடியாது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த வாரம், உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன், பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழைந்த போது, அதாவது ஹலால் மற்றும் கோஷர் போன்ற உணவுகளை சர்வதேச உணவுகளுக்கான பிரத்தியேக அடுக்குகளில் பார்த்தபோது “அதிர்ச்சியடைந்தேன்” என்று அறிவித்தார், மேலும் “வகுப்புவாதம் இப்படித்தான் தொடங்குகிறது” என்று வலியுறுத்தினார்.

கல்வி மந்திரி ஜோன்-மிஷேல் பிளாங்கே "இஸ்லாமிய-இடதுசாரிவாதம்" என்று குற்றம் சாட்டினார், அதாவது, அரசாங்கத்தின் முஸ்லீம்-விரோத கொள்கைகளை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதத்தின் "அறிவுசார் உடந்தையாளர்கள்" என்று குற்றம் சாட்டினர்.

மக்ரோனின் முஸ்லீம்-விரோத கொள்கைகள் பங்களாதேஷ், துனிசியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலி உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளில் பிரெஞ்சு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளன. பிரான்ஸ் மற்றும் துருக்கி இடையே தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதலுக்கு மத்தியில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இந்த வாரம் மக்ரோனைக் கண்டித்தார்.

சார்லி ஹெப்டோவால் ஆத்திரமூட்டும், பாசிச முஸ்லீம் எதிர்ப்பு கார்ட்டூன் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமீபத்திய இராஜதந்திர மோதல் ஏற்பட்டது. எர்டோகன் உள்ளாடைகளில் இருந்து கொண்டு ஒரு தலைமறைப்பு அணிந்துள்ள ஒரு முஸ்லீம் பெண்ணின் பாவாடையை அவளின் பின்னால் இருந்து தூக்கி அவளின் பின்பகுதியைக் காட்டுவதை உருவப்படம் சித்தரிக்கிறது. உருவப்படத்தை பாதுகாப்பது "கருத்து சுதந்திரத்தை" பாதுகாப்பதன் ஒரு பகுதியாகும் என்று மக்ரோன் இழிந்த முறையில் அறிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் பிரான்சின் நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தான் ஒரு “சிறந்த சிப்பாய்” என்று பாராட்டிய மக்ரோன், தீவிர வலதுசாரிகளை ஊக்குவிக்க நனவுபூர்வமாக செயற்பட்டு வருகிறார். இந்தப் பிரச்சாரத்தின் தாக்கமானது Avignon என்ற இடத்தில் ஒரு பாசிசவாதி பயங்கரவாத தாக்குதலுக்கு முயன்றதாக நேற்று வந்த செய்திகளால் சுட்டிக்காட்டப்படுகிறது. பாசிச “Identitaire” (அடையாளம்) இயக்கத்தின் 33 வயதான உறுப்பினரும், “ஐரோப்பாவைப் பாதுகார்” என்ற ரீ சேட் அணிந்து கொண்டு பொலிசாரால் சுடப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்னர் ஒரு வட ஆபிரிக்க கடை உரிமையாளரை ஒரு துப்பாக்கியால் மிரட்டி நாசி வணக்கம் செய்தார்.

Loading