ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சு குறித்து ஜேம்ஸ் பி. கனன், “வார்த்தைகளால் கூறமுடியாத அட்டூழியம்”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்களின் 75 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்க ட்ரொட்ஸ்கி இயக்கத்தின் நிறுவனர் ஜேம்ஸ் பி. கனன் ஆற்றிய உரையை வெளியிடுகிறது. ஆகஸ்ட் 22 அன்று குண்டுவெடிப்புக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நியூயோர்க் நகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு ரஷ்ய புரட்சியில் விளாடிமிர் லெனினின் இணைத்தலைவரும், நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கி 1940 ஆகஸ்ட் 21 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தக் கூட்டத்திற்கு அழைப்புவிடப்பட்டிருந்தது.

ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர மரபைக் காக்கும் ஒரு உரையில், கனன் அணு குண்டுவீச்சை ஒரு ஏகாதிபத்திய அட்டூழியம் என கடுமையாக கண்டித்தார். அதற்கான அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பிரதிபலிப்பானது ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்கா, உத்தியோகபூர்வ தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தேசத்தின் குட்டி முதலாளித்துவ "இடது" தாராளவாதிகள் ஆகியோரின் பிரதிபலிப்பிற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவர்கள் அனைவரும் அமெரிக்க போர்க்குற்றத்தை பாதுகாத்தனர்.

ற்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏகாதிபத்தியப் போரினால் உருவான பிற்போக்குத்தனத்தின் ஆழத்தில் உலகம் நின்றபோது, நமது சிறந்த தலைவரும் ஆசிரியருமான தோழர் ட்ரொட்ஸ்கி ஒரு ஸ்ராலினிச படுகொலையாளரின் கைகளினால் அழிந்தார். உலகத்தால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத, ஆனால் மனிதகுலத்தின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துக்களின் சிறந்த மனிதராக நாங்கள் அவரை நினைவு கூர்ந்தோம். இன்று, அவரது துயரமான மற்றும் மிகவும் அகால மரணத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில், உலக வரலாற்றில் மிகப் பெரிய புரட்சிகர நெருக்கடியின் ஆரம்பத்தில் நாம் நிற்கும்போது, சிந்தனைகளும் வார்த்தைகளும் செயல்களாக மாற்றப்பட வேண்டும். இன்று நாம் செயல் நாயகனாக ட்ரொட்ஸ்கிக்கு நன்றியுடன் அஞ்சலி செலுத்துகிறோம்.

1938 இல் எங்கள் கட்சியின் 10 வது ஆண்டு பூர்த்தியடைந்ததை நாங்கள் கொண்டாடியபோது, ஒரு பெரிய ஆண்டுக்கூட்டத்தில் பேச்சாளர்களில் ஒருவராக தோழர் ட்ரொட்ஸ்கி இருந்தார். அவர் நியூயோர்க்கிற்கு வரமுடியவில்லை, ஆனால் அவர் எங்கள் கட்சியின் 10 வது ஆண்டு விழாவில் வாழ்த்து தெரிவித்து ஒரு ஃபோனோகிராப் (phonograph) பதிவில் பேசினார். உங்களில் பலர் அந்த பேச்சைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. எமது கடந்தகால சாதனைகளை எதிர்காலத்திற்கான ஒரு தயாரிப்பாக மட்டுமே கொண்டாட எங்களுக்கு நேரம் ஒதுக்க உரிமை உண்டு என்று அவர் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும். அதே அர்த்தத்தில், நம்முடைய உன்னதமான மற்றும் புகழ்பெற்ற இறந்தவரை நினைவுகூருவதற்கு இன்றிரவு நேரம் எடுத்துக் கொண்டால், அது முதன்மையாக அவர் நமக்கு சுட்டிக்காட்டிய குறிக்கோளுக்காக உயிருள்ளவர்களின் போராட்டத்தை தயாரிப்பதற்கும் ஒழுங்கமைப்பதற்கான ஒரு வழியாகவே இதை செய்கின்றோம்.

ட்ரொட்ஸ்கியின் முக்கிய கருத்துக்கள், அவர் வாழ்ந்த மற்றும் அதற்காக இறந்த அந்த கருத்துக்கள் ஒப்பீட்டளவில் எளிமையானவை. சமூகத்தின் பாரிய பிரச்சினைகள் பெரும் எண்ணிக்கையிலான மக்களால் சமூகரீதியாக இயக்கப்படும் நவீன தொழிற்துறையானது, தனியார் உடமையின் காலத்திற்கொவ்வாத மற்றும் தனியார் இலாபத்திற்கான அதன் செயல்பாட்டால் தடைபட்டு, கட்டுப்படுத்தப்படுவதிலிருந்து எழுவதை அவர் கண்டார். நவீன உற்பத்தி சக்திகள் தேசிய அரசுகளின் செயற்கையான தடைகளைத்தாண்டி வளர்ச்சியடைந்துவிட்டதை அவர் கண்டார். உற்பத்திச் சாதனங்கள் மீதான தனியார் சொத்துடைமை மற்றும் தனியார் இலாபத்திற்கான அவற்றின் செயல்பாடுகளுக்கும் தேசிய அரசுகளின் காலாவதியான கட்டமைப்பிற்குள் தொழில்துறையை திணறடிப்பது ஆகிய இந்த இரண்டு பெரிய முரண்பாடுகள் வறுமை, வேலையின்மை, பாசிசம் மற்றும் போர் ஆகிய இந்த நவீன சமுதாயத்தின் பெரும் துன்பங்களுக்கான மூலகாரணங்களாக இருக்கின்றன.

காலாவதியான முதலாளித்துவத்தை புரட்சிகரமாக அகற்றுவதில் மனிதகுலத்திற்கான ஒரே வழியை ட்ரொட்ஸ்கி கண்டார். தொழிற்துறையானது ஒரு திட்டத்தின் அடிப்படையில் சமூகமயமாக்கப்பட்டு இலாபத்திற்காக அல்லாது பயன்பாட்டிற்காக இயக்கப்பட வேண்டும். தனித்தனி முதலாளித்துவ நாடுகளின் தேசிய விரோதங்கள் உலக சோசலிச ஐக்கிய குடியரசுகளின் ஒரு சர்வதேச கூட்டமைப்பிற்கு வழிவிடவேண்டும். சமூகமயமாக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் அனைத்து மக்களுக்கும் ஒரு தேசத்தில் மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் ஏராளமானவற்றை உற்பத்தி செய்து வழங்க முடியும். தனி சோசலிச நாடுகள், மற்றவர்களை சுரண்டுவதற்கான தேவையோ உந்துதலோ இல்லாமல், சந்தைகள், ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியங்களோ மற்றும் முதலீட்டுத் துறைகள் ஆகியவற்றில் எந்தவிதமான மோதல்களும் இல்லாமல், சுரண்டுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் காலனிகள் தேவையில்லாமல் இந்த தனித்தனி சோசலிச நாடுகள் சமாதானமான முறையிலும் மற்றும் கூட்டுழைப்பின் அடிப்படையில் ஒரு உலகளாவிய தொழிற்பங்கீட்டின் அடிப்படையில் ஐக்கியப்படும். ஒரு தேசத்தின் வலிமை அனைவருக்கும் பலமாக மாறும், ஒருவரின் பற்றாக்குறை மற்றவர்களிடமுள்ள உபரியால் நிரப்பப்படும். மனிதகுலம் கலையினாலும் விஞ்ஞானத்தினாலும் பெறப்பட்ட வெற்றிகள் அனைத்தையும் அனைத்து நாடுகளிலுமுள்ள அனைத்து மக்களின் பாவனைக்காக கூட்டுறவான பரிமாற்றத்தை ஒழுங்கமைக்கும்.

இந்த புரட்சிகர மாற்றத்தை தொழிலாளர்கள் மட்டுமே கொண்டு வர முடியும் என்று ட்ரொட்ஸ்கி கற்பித்தார். நவீன சமுதாயத்தில் ஒரே ஒரு முற்போக்கான மற்றும் புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கம் மட்டுமே, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட அனைவரின் தலைமையில் நிற்கிறது. சமூகத்தின் இந்த மாபெரும் புரட்சிகர மாற்றத்தையும் மறுசீரமைப்பையும் அவர்களால் மட்டுமே கொண்டு வர முடியும். தொழிலாளர்கள் மட்டுமே முற்போக்கான ஒரு வர்க்கம். சமுதாயத்தில் அவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் மூலோபாய நிலைமையின் அடிப்படையில் அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த வர்க்கமாகும். அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவைப்படுவது என்னவெனில் அவர்களின் வரலாற்று நலன்களையும் அவர்களின் பலத்தையும் உணர்ந்து, அதை நடைமுறைப்படுத்த ஒழுங்கமைப்பதாகும்.

"மற்ற கட்சிகளைப் போன்ற ஒரு கட்சி அல்ல"

இப்போது வரலாற்று நிகழ்ச்சி நிரலில் இருக்கும் உலகின் புரட்சிகர மாற்றத்திற்கான இந்த போராட்டத்திற்கு ஒரு கட்சியின் தலைமை அவசியம் என்று ட்ரொட்ஸ்கி கற்பித்தார். ஆனால் தோழர் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார் எமது கட்சி மற்ற கட்சிகளைப் போல ஒரு கட்சி அல்ல. எங்கள் 10 வது ஆண்டு கூட்டத்திற்கு அவர் அனுப்பிய செய்தி இதுதான்: “மற்ற கட்சிகளைப் போல ஒரு கட்சி அல்ல,” அரை மனதுடன், சீர்திருத்தவாத கட்சி அல்ல, இது ஒரு பேசிக்கொண்டிருக்கும் மற்றும் சமரசம் செய்யும் கட்சி அல்ல, ஆனால் ஒரு முழுமையான புரட்சிகர கட்சியும், ஒரு சிந்தித்து செயல்படும் கட்சியுமாகும். முதலாளித்துவத்தையும் குறிப்பாக முதலாளித்துவ போரையும் எந்த விட்டுக்கொடுப்புமின்றி எதிர்க்கும் ஒரு கட்சியாகும். அத்தகைய ஒரு கட்சிதான், காலாவதியான சமூக அமைப்புக்கு எதிரான இந்த மகத்தான தாக்குதலை வழிநடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

உலகத் தொழிலாளர்களுக்கு 1940 இல் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள் தேவைப்பட்டன. சமுதாயத்தை முதலாளித்துவத்திலிருந்து சோசலிசமாக மாற்றுவதற்கான அனைத்து பொருளாதாய நிலைமைகளும் நீண்டகாலத்தின்கு முந்தியே முதிர்ச்சியடைந்துவிட்டன. முதிர்ச்சியடையாது இருப்பது பாரிய தொழிலாளர்களினதும் மற்றும் அவர்களின் அமைப்புகளினதும் நனவும் புரிந்துகொள்ளலும் ஆகும். இரண்டாவது ஏகாதிபத்திய போரின் படுகொலைக்கு எதிராக உலகின் ஒரே ஒரு பெரிய குரலாக பேசிய ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள் அவர்களுக்கு தேவையாக உள்ளது. ஆனால் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றின்படி செயல்படுவதற்கும் அவர்கள் இன்னும் தயாராகாததுடன் இன்னும் முறையாக ஒழுங்கமைக்கப்படவுமில்லை.

தொழிலாளர்களின் பாரிய அரசியல் மற்றும் தொழிற்துறை அமைப்புகள் தொழிலாளர்களின் நலன்களின் உண்மையான பிரதிநிதிகள் அல்லாத நபர்களின் கீழே வந்துவிட்டன. மாறாக தொழிலாளர் இயக்கத்திற்குள்ளான முதலாளித்துவத்தின் முகவர்களின் கீழ் வந்துவிட்டன. சமூக ஜனநாயகக் கட்சிகள்; கம்யூனிசத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் துரோகியாக மாறிய கம்யூனிச அகிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகள்; மற்றும் பெரிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர வேலைத்திட்டத்தை நிராகரித்தன. அவர்கள் அனைவரும் முதலாளித்துவ அரசாங்கங்களை ஆதரித்தனர். அந்த அரசாங்கங்களோ மக்களை போரின் இரத்தக்களரி கசாப்புக்கடைகளுக்குள் தள்ளின.

ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் வெற்றியைப் பற்றிய நம்பிக்கையுடன் இறந்தார். இன்று அரவு எமது மேடைக்கு கொண்டுவரும் அவரின் அந்த கடைசி செய்தியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவர் வெற்றியின் நம்பிக்கையுடன் இறந்தார், ஆனால் அதனை அனுபவிக்கவும் அதில் பங்கேற்கவும் வாய்ப்பு இல்லாமல் இறந்தார்.

நாங்கள் ஆறு வருட போரைக் கண்டுள்ளோம். இந்தப் போர் தொழிற்சங்கத் தலைவர்களால் ஆதரிக்கப்பட்ட போர், பேராசிரியர்களும் புத்திஜீவிகளும் பாதுகாத்த போர், தேவாலயத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட போர். இப்போது நாம் விளைவுகளை கணக்கெடுக்கலாம். இந்த போரின் பலன்கள் என்ன? அது மனிதகுலத்திற்கு நன்மை பயனளிக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஐரோப்பாவைப் பாருங்கள்! ஆசியாவைப் பாருங்கள்! அல்லது, வீட்டிற்கு அண்மையில், மூடும் தொழிற்சாலைகள், வேலையின்மை அலுவலகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள், நீண்ட மற்றும் பசியுடன் அதிகரிக்கும் வரிசைகள், அவர்கள் உயிருடன் திரும்பி போர்க்களங்களில் இருந்து நடந்துவர முடியுமானால் திரும்பி வரும் துருப்புக்கள் விரைவில் தங்கள் சோர்வுற்ற இடங்களை எடுக்கும் வரிசைகள்.

முதலாளித்துவத்தின் கீழ் தொழிற்சாலைகள் அழிவின் கருவிகளை உற்பத்தி செய்ய முழு அளவில் இயங்குகின்றன, ஆனால் அவை அமைதி என்று அழைக்கப்படும் நேரத்தில் மனித தேவைகளுக்காக உற்பத்தி செய்ய திறந்திருக்க முடியாதிருந்தது. ஐரோப்பா முழுவதும், பெரிய கலாச்சரம்மிக்க ஐரோப்பா முழுவதும், பசி மற்றும் விரக்தி மற்றும் பேரழிவு மற்றும் மரணத்தின் கண்டமாகியுள்ளது.

பொட்ஸ்டாமில் (Potsdam) வெற்றி பெற்றவர்கள் வெற்றியின் பலனை மற்றும் விடுதலையை ஐரோப்பாவிற்கு அறிவித்தனர். ஐரோப்பா கண்டத்தின் மிக சக்திவாய்ந்த மற்றும் உற்பத்தித் தொழிற்துறையான ஜேர்மன் தொழிற்துறையின் உடைவிற்கு அவர்கள் கட்டளையிட்டனர். ஐரோப்பாவின் பட்டறையான தொழில்துறைமயமாக்கப்பட்ட ஜேர்மனியின் வாழ்க்கைத் தரம், பேரழிவிற்குள்ளான பின்தங்கிய விவசாய நாடுகளை விட உயர்ந்ததாக இருக்க முடியாது என்று அவர்கள் அறிவித்தனர். இது மிகக் குறைந்த நிலையில் உள்ளதை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது அல்ல, ஆனால் மிக உயர்ந்த மற்றும் மிகவும் வளர்ந்த மற்றும் கலாச்சாரமிக்க நாடுகளை மிகக் குறைந்த மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலைக்கு இழுத்துச் செல்வதுதான். இது சமாதானம் என்று அழைக்கப்படுபவதை உருவாக்குபவர்களின் வெளிப்படையான வேலைத்திட்டமாகும். ஐரோப்பாவிற்கான திட்டம் இதுதான்.

மனிதர்களைப் பொறுத்தவரை இதன் முடிவுகள் என்ன? நான் இன்று நியூ யோர்க் டைம்ஸில் பிராங்பேர்ட்டில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு தகவலைப் படித்தேன். இது ஒரு சாதாரண விஷயத்தின் உண்மைத் தகவல், அதில் இருந்து அந்தப் பகுதியின் நிலைமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை நான் மேற்கோள் காட்டுகிறேன். டைம்ஸின் நிருபர் கூறுகிறார், “இந்த பிராந்தியத்தின் சராசரி நுகர்வோர் ஒரு நாளைக்கு 1,100 முதல் 1,300 கலோரி உணவுடன் வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகிறது, இது இராணுவத்தின் 3,600 என்ற பங்கீட்டு விகிதத்திற்கு எதிர்முரணாக உள்ளது.” இது படையினரை ஒரு மட்டத்தில் பராமரிக்க இராணுவம் மதிப்பிட்டுள்ள உணவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக அமெரிக்க கட்டுப்பாட்டு பகுதியில் ஜேர்மனியின் "விடுவிக்கப்பட்ட" மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக ஐரோப்பிய மக்கள் தம்மை விடுதலை செய்தவர்களுடன் மிகுந்த அன்பையும் பாராட்டையும் வளர்ப்பார்கள்தான்.

நிச்சயமாக ஆயிரம் ஆண்டுகளின் சமாதானத்திற்கு அடித்தளம் இடப்படுகிறது. முதலாளித்துவம் அதன் மரண வேதனையில் மனிதகுலத்தை படுகுழிக்கு இழுத்துச் செல்கிறது. முதலாளித்துவம் ஒவ்வொரு நாளும் போரைப் போலவே சமாதானம் என்று அழைக்கப்படுவதின் போது தன்னை மக்களின் எதிரி என மேலும் மேலும் நிரூபித்து வருகிறது. இறக்கும் வரை மக்களுக்கு குண்டு வீசுங்கள்! தீக்குண்டுகளால் அவர்களை எரிக்கவும்! அவர்களின் தொழில்களை உடைத்து, அவர்களைப் பட்டினியால் இறக்கவிடுங்கள்! அது போதுமான கொடூரமானதாக இல்லாவிட்டால், அவர்களை அணுகுண்டுகளை வீசி பூமியிலிருந்து துடைத்தழியுங்கள்! அதுதான் முதலாளித்துவத்தின் விடுதலை செய்யும் வேலைத்திட்டமாகும்.

அதன் வீழ்ச்சியடைந்த கட்டத்தில் முதலாளித்துவத்தின் உண்மையான தன்மை குறித்த ஒரு வர்ணனை எவ்வாறிருக்கின்றது என்றால், அனைத்து மனிதகுலத்தின் சுமைகளையும் குறைக்க பகுத்தறிவுடன் பயன்படுத்தப்படக்கூடிய அணு ஆற்றலின் அற்புதமான இரகசியத்தை விஞ்ஞானரீதியாக வென்றதை, அரை மில்லியன் மக்களின் மொத்த அழிவுக்கு முதலில் பயன்படுத்தப்படுகிறது.

முதல் இலக்காக இருந்த ஹிரோஷிமாவில் 340,000 மக்கள் வசிக்கின்றனர். இரண்டாவது இலக்காக இருந்த நாகசாகியின் மக்கள் தொகை 253,000. நிருபர்கள் விளக்கியபடி, ஏறக்குறைய 600,000 மக்கள் வசிக்கும் இரண்டு நகரங்களில், பலமற்ற கட்டுமான நகரங்களில் வீடுகள் கூரைக்கு மேலே கூரையாக கட்டப்பட்டிருந்தன. எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? அணு ஆற்றலின் இரகசியத்தைக் கண்டுபிடித்ததைக் கொண்டாட எத்தனை ஜப்பானிய மக்கள் அழிக்கப்பட்டனர்? இதுவரை கிடைத்த அனைத்து அறிகுறிகளிலிருந்தும், எங்களுக்கு கிடைத்த அனைத்து அறிக்கைகளிலிருந்தும், அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட அனைவருமே.

இன்று டைம்ஸில் டோக்கியோ வானொலியில் இருந்து நாகசாகி பற்றி வந்த ஒரு அறிக்கை உள்ளது. அதில் “ஒருகாலத்தில் செழித்திருந்த நகரத்தின் மையம் ஒரு பரந்த பேரழிவாக மாறியுள்ளது, கண்ணுக்குத் தெரிந்தவரை இடிபாடுகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.” குண்டுச்சேதத்தை காட்டும் புகைப்படங்கள் ஜப்பானிய செய்தித்தாளான Mainichi முதல் பக்கத்தில் தோன்றின. அந்த அறிக்கை கூறுகிறது: “இந்தப் படங்களில் ஒன்று வான் அணுதாக்குதலின் மையத்திலிருந்து 10 மைல் தொலைவில் ஒரு சோகமான காட்சியை வெளிப்படுத்தியது,” அங்கு பண்ணை வீடுகள் நசுக்கப்பட்டன அல்லது கூரைகள் முற்றாக தூக்கியெறிபட்டுள்ளன. வெடிகுண்டு தாக்கிய உடனேயே நகரத்திற்கு விரைந்த யமாஹா புகைப்பட நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரை மேற்கோள் காட்டி இந்த ஒளிபரப்பு பின்வருமாறு கூறியது: “நாகசாகி இப்போது ஒரு இறந்த நகரம், எல்லா பகுதிகளும் உண்மையில் தரைமட்டமாக இடிக்கப்பட்டுள்ளன. ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, அவை சாம்பலிலிருந்து வெளிப்படையாக எழுந்து நிற்கின்றன.” புகைப்படக்காரர் "இறந்த மக்கள்தொகையின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது, தப்பிப்பிழைத்தவர்கள் கூட காயம் இல்லாமல் தப்பவில்லை" என்று கூறினார். இதுவரை ஜப்பானிய பத்திரிகைகள் ஹிரோஷிமாவிலிருந்து தப்பிய ஒருவரை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளன.

கணப்பிடப்பட்ட இரண்டு தாக்குதல்களில், இரண்டு அணுகுண்டுகளுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் அரை மில்லியன் மனிதர்களைக் கொன்றது அல்லது காயப்படுத்தியது. இளைஞர்களும் வயதானவர்களும், தொட்டிலில் உள்ள குழந்தையும், வயதானவர்களும், பலவீனமானவர்களும், புதிதாக திருமணமானவர்கள், உடல்நலமானவர்களும் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்கள் அனைவரும் வோல் ஸ்ட்ரீட் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதேபோன்ற ஜப்பானின் கும்பலுக்கும் இடையிலான ஒரு சண்டையால் இந்த இரண்டு தாக்குதலினால் இறந்துபோக நேரிட்டது.

இலாபத்திற்கான போர்

இவ்வாறுதான் அமெரிக்க ஏகாதிபத்தியம் கிழக்கிற்கு நாகரிகத்தை கொண்டு வருகிறதாம். என்ன ஒரு கூறமுடியாத கொடுமை! அமெரிக்காவிற்கு என்னவொரு ஒரு அவமானம் வந்துள்ளது. ஒரு காலத்தில் நியூயோர்க் துறைமுகத்தில் உலகிற்கு அறிவொளி தரும் ஒரு சிலையை அமெரிக்கா வைத்திருந்தது. இப்போது அதன் பெயரால் உலகம் திகிலூட்டப்படுகிறது. போரை ஆசீர்வதித்த சில பிரசகர்களும் கூட எதிர்ப்பு தெரிவிக்கத் தள்ளப்பட்டுள்ளனர். ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்: “அமெரிக்கா தனது தார்மீக நிலையை இழந்துவிட்டது.” அதனுடைய தார்மீக நிலை? ஆம். அது அதையெல்லாம் இழந்துவிட்டது. அது உண்மை. குண்டுகளை வீசிய ஏகாதிபத்திய அரக்கர்களுக்கு அது தெரியும். ஆனால் அவர்கள் பெற்றதைப் பாருங்கள். கிழக்கின் எல்லையற்ற செல்வத்தின் கட்டுப்பாட்டை அவர்கள் பெற்றனர். தூர கிழக்கில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை சுரண்டுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் அவர்கள் சக்தியைப் பெற்றனர். தார்மீக நிலைப்பாட்டிற்காக அல்ல மாறாக இலாபத்திற்காகத்தான் அவர்கள் போருக்குச் சென்றனர்.

பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப்பட்ட மற்றொரு போதகர், சாந்தகுணமுள்ள, மென்மையான இயேசுவைப் பற்றி பைபிளில் ஒரு முறை படித்ததை நினைவூட்டி, மதபோதகர்களை இனி தூர கிழக்கிற்கு அனுப்புவது பயனற்றது என்று கூறினார். இது ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்புகிறது. இதுபற்றி அவர்கள் தங்களுக்குள் விவாதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். House of Rockefeller மற்றும் House of Morgan ஆகியவற்றின் உள் வட்டங்களில் ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல் நடைபெறுவதை ஒருவர் கற்பனை செய்யலாம். அவர்கள் ஒரே நேரத்தில் தற்செயலாக, நிச்சயமாக கிழக்கில் உள்ள புறஜாதியினரை நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்தவ சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தூதவர்களை அனுப்புவோமா அல்லது அணு குண்டுகளை வீசி அவர்களை நரகத்திற்கு அனுப்பலாமா?” இந்த விவாதத்திற்கு ஒரு உட்பொருள் உள்ளது. இது ஒரு கொடூரமான கருப்பொருளுடனான விவாதம். எவ்வாறாயினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் சம்பந்தப்பட்ட விடயத்தில், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவர் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு உலகத்தின் பயத்தையும் வெறுப்பையும் தன்னுள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று உலகம் முழுவதும் மனிதகுலத்தின் எதிரியாக கருதப்படுகிறது. முதல் உலகப் போரில் 12 மில்லியன் பேர் இறந்தனர். ஒரு நூற்றாண்டின் கால் பகுதிக்குள் இரண்டாம் உலகப் போரில் ஏற்கனவே 30 மில்லியனுக்கும் குறையாமல் இறந்துவிட்டனர். மேலும் போரின் இழப்புகளின் முடிவுகள் எண்ணப்படுவதற்கு முன்னர் 30 மில்லியனுக்கும் மேலானோர் பட்டினியால் இறந்துவிட்டனர்.

முதலாளித்துவத்தின் மரண அறுவடை உலகிற்கு எதனைக் கொண்டு வந்துள்ளது! இறந்தவர்கள் அனைவரின் மண்டை ஓடுகளையும் ஒன்றாகக் கொண்டு ஒரு பிரமிட்டில் குவிக்க முடிந்தால், அது எவ்வாறான ஒரு உயர்ந்த மலையை உருவாக்கும்! இது முதலாளித்துவத்தின் சாதனைகளுக்கு என்னவொரு நினைவுச்சின்னமாக இருக்கும். இது முதலாளித்துவ ஏகாதிபத்தியம் உண்மையில் என்ன என்பதற்கான அடையாளமாக இருப்பதற்கு எவ்வளவு பொருத்தமானதாக இருக்கும். அதை முழுமையாக்குவதற்கு ஒரே ஒரு விஷயம்தான் அங்கே இல்லை என்று நான் நம்புகிறேன். இது நான்கு சுதந்திரங்களின் முரண்பாடான வாக்குறுதியை பறைசாற்றும் மண்டை ஓடுகளாலான பிரமிட்டில் ஒரு பெரிய மின்சார விளம்பர பதாகையாகும். இறந்தவர்கள் குறைந்தபட்சம் துன்பத்திலிருந்தும் பயத்திலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் தப்பிப்பிழைத்தவர்கள் எதிர்காலத்தின் பசியிலும் பயங்கரத்திலும் வாழ்கிறார்கள்.

30 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட போரில் வென்றவர் யார்? எமது மிலிட்டண்ட் பத்திரிகையில் உள்ள எங்கள் கார்ட்டூன் வரைபவர், சிறந்த கலைத் தகுதியுடனும், நுண்ணறிவுடனும், பேனாவின் சில பக்கங்களில் அதை விளக்கினார், முதலாளித்துவத்தின் அந்தப் படத்தை அவர் கையில் பணப்பைகள் கொண்டு வரைந்து, உலகின் மேல் ஒரு கல்லறையில் ஒருகாலுடன் நின்று, மற்றொரு காலினை அழிக்கப்பட்ட நகரங்களில் வைத்து, "ஒரே வெற்றியாளர்" என்ற தலைப்பில் கீறியிருந்தார். அந்த ஒரே வெற்றியாளர், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதில் தங்கியிருக்கும் பிற நாடுகளுமாகும்.

முன்னோக்குகள் என்ன? ஆறு ஆண்டுகாலப் போரின் இந்த மாபெரும் சாதனைக்குப் பின்னர் நமது தலைவர்கள் எதிர்காலத்தை எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள்?

மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்பு

இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், மனித வாழ்க்கை மற்றும் மனித கலாச்சாரத்தின் அனைத்து திகிலூட்டும் மற்றும் அழிவுகளும் பொதுவாக முடிவடைவதற்கு முன்னரே, அவர்கள் ஏற்கனவே மூன்றாவது ஒன்றைப் பற்றி சிந்தித்து, திட்டமிடுகின்றனர்.

இந்த பைத்தியக்காரர்களை நாம் தடுத்து நிறுத்தி அதிகாரத்தை அவர்களின் கைகளில் இருந்து எடுக்க வேண்டாமா? இதை மாற்றுவதற்கு ஏதேனும் வழி இருக்க வேண்டும் மற்றும் இதைவிட மேலை செல்லவிடக்கூடாது என்று உலக மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் நாம் ஐயம் கொள்ளலாமா? புரட்சிகர மார்க்சிஸ்டுகள், மனிதகுலம் எதிர்கொள்ளும் மாற்றீடு சோசலிசமா அல்லது ஒரு புதிய காட்டுமிராண்டித்தனமா என நீண்ட காலத்திற்கு முன்னரே கூறினர். முதலாளித்துவம் அழிவிற்குள் செல்லவும், மனிதசமுதாயத்தை அதனுள் இழுத்துச் செல்லவும் அச்சுறுத்துகிறது. ஆனால் இந்தப் போரில் அபிவிருத்தி செய்யப்பட்டு, எதிர்காலத்திற்காக திட்டமிடப்பட்டவற்றின் வெளிச்சத்தில், மாற்றீட்டானது இன்னும் துல்லியமாக என்னவென்பதை இப்போது தெளிவாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: மனிதகுலம் எதிர்கொள்ளும் மாற்றீடு சோசலிசமா அல்லது நிர்மூலமாக்கலா! என்பதே. முதலாளித்துவம் நிலைத்திருக்க அனுமதிக்கப்படுகிறதா அல்லது இந்த கோளத்தில் மனித இனம் தொடர்ந்து உயிர்வாழ வேண்டுமா என்பதுதான் பிரச்சினை.

உலக மக்கள் இந்த பயமுறுத்தும் மாற்றீட்டை எழுப்பி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சரியான நேரத்தில் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உலகின் புதிய எஜமானரான அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது வெற்றிகளை பலப்படுத்த நேரம் கிடைக்கும் முன், அது இரு தரப்பிலிருந்தும் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒருபுறம் உலக மக்கள், வோல் ஸ்ட்ரீட்டின் காலனித்துவ அடிமைகளாக மாற்றப்பட்டு, ரோம் பேரரசுக்கு எதிராக வெற்றிகொள்ளப்பட்ட மாநிலங்களில் எழுந்ததுபோல ஏகாதிபத்திய எஜமானருக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள். அந்த எழுச்சியுடன், அதனுடன் எங்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், ட்ரொட்ஸ்கிச கட்சி, அமெரிக்காவின் தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்களை நமது பிரதான எதிரி மற்றும் மனிதகுலத்தின் முக்கிய எதிரியான அமெரிக்காவின் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான புரட்சிகர தாக்குதலுக்கு வழிநடத்துவோம்.

இற்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கருத்துக்களின் பெரிய மனிதரான தோழர் ட்ரொட்ஸ்கிக்கு துக்கம் அனுசரித்தோம். இன்று, புரட்சிகர நடவடிக்கை நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு ஒரு வாழ்க்கைக்கும் மற்றும் இறப்புக்குமான தேவையாக மாறி வருவதால், கருத்துக்களிலிருந்து செயலுக்குச் செல்ல நாங்கள் தயாராகி வருகிறோம். கருத்துகளால் வழிநடத்தப்படும் செயலுக்கு, தொழிலாளர்களின் ஒழுங்கமைப்பாளரும், புரட்சிகளின் தலைவருமான செயலுக்கான பெரிய மனிதனான ட்ரொட்ஸ்கியை நினைவு கூர்கிறோம். இன்றிரவு நாம் தோழர் ட்ரொட்ஸ்கியை நினைவுகூரும் உத்வேகம் இதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு கட்சியை உருவாக்க எங்களுக்கு கட்டளையிட்டார். அவர் சொன்னதை மீண்டும் நான் மீண்டும் சொல்கிறேன்: “இது ஏனைய கட்சிகளைப் போன்ற ஒரு கட்சி அல்ல,” ஆனால் ஒரு புரட்சியை வழிநடத்த பொருத்தமான ஒரு கட்சி, தடுமாறாத ஒரு கட்சி, பாதியிலேயே விட்டுச்செல்லாது, ஆனால் போராட்டத்தை இறுதிவரை கொண்டு செல்லும் கட்சியாகும்.

நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருந்தால், நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றீர்கள் என்றால், உங்களுக்காகவும், மனிதகுலத்தின் இரட்சிப்பிற்காகவும் ஒரு சிறந்த வாழ்க்கைக்கான போராட்டத்தில் பங்கேற்க விரும்பினால், இந்த கட்சியில் எங்களுடன் சேர்ந்து இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.

எங்கள் கட்சியில் அவநம்பிக்கையாளர்கள் அல்லது துணிச்சல்குறைந்தவர்களுக்கு இடமில்லை. சுயதேவையை தேடுபவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அதிகாரத்துவவாதிகளுக்கும் இடமில்லை. ஆனால் உலகை மாற்றுவதில் உறுதியாக உள்ள தொழிலாளர்கள் மற்றும் பிரச்சினைக்கு தலையை கொடுக்கத் தயாராக இருக்கும் உறுதியான தொழிலாளர்களுக்கு கதவு திறந்திருக்கும்.

ட்ரொட்ஸ்கி எங்களுக்கு ஒரு பெரிய பாரம்பரியத்தை வழங்கியுள்ளார். எங்கள் வேலைத்திட்டத்தை உருவாக்கும் கருத்துக்களின் ஒரு பாரிய திட்டத்தை அவர் எங்களுக்கு கொடுத்தார். ஒரு புரட்சியாளருக்கான உருமாதிரியாக இருந்த, மனிதகுலத்திற்காக வாழ்ந்து இறந்த ஒரு மனிதனின் முன்மாதிரியை அவர் நம் முன் வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியில் கோட்பாட்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் காட்டினார்.

இந்த பாரம்பரியத்துடன் நாம் போராட்டத்துக்காகவும் வெற்றிக்காகவும் ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். ட்ரொட்ஸ்கியின் சீடர்களான நாம் அந்த வெற்றிக்குத் தேவைப்படுவது, அந்த கருத்துக்களை தெளிவாகப் புரிந்துகொள்வதும், அவற்றை நம் உடலிலும் இரத்தத்திலும் உள்ளிளுத்துக்கொள்வதும், அவர்களுக்கு உண்மையாக இருப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவற்றைச் செயல்படுத்துவதும் ஆகும்.

நாம் அவ்வாறு செய்தால், பூமியில் எந்த சக்தியையும் உடைக்க முடியாத ஒரு கட்சியை நாம் உருவாக்க முடியும். உலக மக்கள் மீதான ஏகாதிபத்திய போர் திட்டத்திற்கு பதிலளிக்கவும் உள்நாட்டில் புரட்சிக்கும் மற்றும் உலக மக்களுடன் சமாதானத்துடனும் அமெரிக்காவின் மக்களை வழிநடத்த பொருத்தமான ஒரு கட்சியை நாம் உருவாக்க முடியும்.

Loading