முன்னோக்கு

ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள்: தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு குற்றகரமான சதி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை, ஃபியட் கிறைஸ்லர் (Fiat Chrysler) நிறுவனம், பெரும் குற்றகரமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் (United Auto Workers-UAW) தொழிற்சங்கத்தின் அதிகாரிகளுக்கு முன்னரே மூடிமறைக்கப்பட்ட இலஞ்சமாக பல்லாயிரக்கணக்கான டாலர்களை வழங்கியதைக் காட்டும் நீதிமன்ற ஆவணங்களை ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனம் சமர்ப்பித்தது.

ஜெனரல் மோட்டார்ஸின் தனிப்பட்ட புலனாய்வாளர்களிடம், கடைசி ஐந்து UAW தலைவர்களில் நான்கு பேர் உட்பட, உயர்மட்ட UAW அதிகாரிகளின் நன்மைக்காக சுவிட்சர்லாந்து, பனாமா, சிங்கப்பூர், லிச்சென்ஸ்டீன் (Lichtenstein) மற்றும் கேமன் (Cayman) தீவுகளில் உருவாக்கப்பட்டுள்ள நாடுகடந்த வங்கிக் கணக்குகளுக்கான வெளிப்படையான ஆவணங்கள் உள்ளது. இந்த இரகசிய கணக்குகள், தொழிலாளர்களை காட்டிக்கொடுக்கும் தொழிற்சங்க அதிகாரிகளது சேவைகளுக்காக மில்லியன் கணக்கான டாலர்களை சட்டவிரோதமாக வாரியிறைக்கும் ஃபியட் கிறைஸ்லரின் அதிநவீன திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன.

இந்த வெளிப்பாடுகள், UAW க்கு உள்ளே காணப்படும் ஊழல்களின் அளவானது, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான மத்திய புலனாய்வின் கண்டுபிடிப்புக்களை காட்டிலும் மிகப்பெரிய அளவில் இருப்பதை குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இந்த புலனாய்வு, இதுவரை, ஒரு டசினுக்கும் மேற்பட்டவர்களை, அதிலும் பெரும்பாலும் UAW மற்றும் ஃபியட் கிறைஸ்லர் நிர்வாக அதிகாரிகளை தண்டனைக்குட்படுத்த வழிவகுத்துள்ளது.

தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் UAW அதிகாரிகளின் பட்டியலில், UAW இன் முன்னாள் தலைவர் கேரி ஜோன்ஸ் (Gary Jones), மற்றும் UAW இன் முன்னாள் துணைத் தலைவர்கள் ஜோ ஆஸ்டன் (Joe Ashton) மற்றும் நோர்வுட் ஜ்வெல் (Norwood Jewell) ஆகியோர் அடங்குவர். UAW இன் இடையேற்புத் தலைவர் ரோரி கேம்பிளும் (Rory Gamble) இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மத்திய புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

UAW க்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் தனது போட்டி நிறுவனத்திற்கு நியாயமற்ற அனுகூலத்தை வழங்கியது என்று கூறி, ஃபியட் கிறைஸ்லருக்கு (FCA) எதிரான தனது வழக்கை மீளதிறக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே ஜெனரல் மோட்டார்ஸ் இந்த புலனாய்வைத் தொடங்கியுள்ளது. இதை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் கருதியிருக்குமானால், அதற்கு UAW இன் ஊழல் அதன் சொந்த நிறுவன நலன்களை கீழறுக்கும் அளவிற்கு வளர்ந்திருந்ததே காரணமாக இருந்திருக்கும்.

FCA உடன் ஜெனரல் மோட்டார்ஸை இணைப்பதற்கு வலியுறுத்தும் நோக்கம் கொண்டதான Operation Cylinder என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெனரல் மோட்டார்ஸின் இயக்குநர்கள் குழுவின் நேரடி முகவராக ஆஸ்டன் செயல்பட்டதற்கான ஆதாரங்களும் புதிய நீதிமன்ற வழக்குப்பதிவு ஆவணங்களில் அடங்கும்.

எவ்வாறாயினும், இந்த சதித்திட்டத்தின் உண்மையான பாதிப்பாளர் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அல்ல, மாறாக வேலைகளையும் சலுகைகளையும் இழந்த தொழிலாளர்கள்தான் இதனால் பேரழிவுகரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தொழிலாளர்களைச் சுரண்டுவதில் நிர்வாகத்திற்கு உடந்தையாகவுள்ள வெறும் முகவராக மட்டும் UAW செயல்படவில்லை, மாறாக நேரடி பங்கேற்பாளர்களாகவும் பயனாளிகளாகவும் அதன் அதிகாரிகள் உள்ளனர் என்ற உண்மையை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த இலஞ்ச ஊழல் நடவடிக்கை, பரிவர்த்தனைகளை மூடிமறைக்கும் ஒரு அதிநவீன அமைப்பு மூலம் மில்லியன் கணக்கில் டாலர்களை கைமாற்றி பெரியளவில் நடத்தப்பட்டுள்ளது. இதைச் செய்தவர்கள் கற்றுக்குட்டிகள் அல்ல. அதாவது இந்த அளவிலும், நுட்பத்துடனும் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையை விவரிக்க ஊழல் என்ற ஒரு வார்த்தை மட்டும் போதுமானதல்ல.

இந்த ஆவணங்கள் UAW ஒரு குற்றகரமான கூட்டமைப்பு என்பதை அம்பலப்படுத்துகின்றன. இந்த அளவிற்கு அவர்களால் குற்றங்களில் ஈடுபட முடிகிறதானால், அவர்கள் எந்தளவிற்கு திறமைபடைத்தவர்கள் என்று யாருக்குத் தெரியும்? அதற்கு, 2018 ஆம் ஆண்டில், 21 வயதான ஜாக்கோபி ஹென்னிங்ஸ் (Jacoby Hennings) என்ற தொழிலாளி, ஒரு புகாரளிக்க UAW அலுவலகத்திற்குள் நடந்து சென்றார், ஆனால் அதன் பின்னர் அவர் உயிருடன் திரும்பவில்லை என்பதை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது.

இந்த அமைப்பின் மிகுந்த சமூக இருப்பிலிருந்துதான் குற்றங்கள் வெளிப்படுகின்றன. இந்த இலஞ்ச ஊழல்கள் ஒரு விபத்து அல்ல, மாறாக ஆரோக்கியமான அமைப்பின் மீதான ஒரு கட்டி போன்றது. ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலில் ஈடுபடும் முழு அமைப்பும் இந்த குற்றங்களில் தான் தனது வெளிப்பாட்டைக் காண்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) முன்னோடிக் கட்சியான வேர்க்கஸ் லீக் (Workers League), 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே, UAW இன் பெருநிறுவனவாத வளர்ச்சியை சுட்டிக்காட்டியதோடு, பாசிச இத்தாலியின் முசோலினியின் தொழிலாளர் கூட்டமைப்புகளுக்கு இது இணையானது என்றும் எச்சரித்தது. அந்த நேரத்தில், தொழிற்சங்க-நிர்வாகத்தின் உடனுழைப்புக் கொள்கையை UAW வெளிப்படையாக ஏற்றுக்கொண்டது.

இது 1980 களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை பல்வேறு கூட்டு திட்டங்களையும், கூட்டு பயிற்சி மையங்களையும் அமைப்பதற்கு வழிவகுத்தது, அது UAW இன் கஜானாவிற்குள் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களில் பெருநிறுவன பணத்தை பாய்ச்சுவதற்கான ஒரு வழியாக செயல்பட்டது.

தொழிற்சங்கங்களின் தேசியவாத மற்றும் முதலாளித்துவவாத சார்பிலான இயல்பைத் தாண்டி பெருநிறுவனவாதம் வளர்ந்துள்ளது. உற்பத்தியின் மிகப்பரந்த உலகளாவிய ஒருங்கிணைந்த தன்மை கொண்ட சூழலில், சீர்திருத்தங்களை அடைவதற்கான தேசிய அடிப்படையிலான மூலோபாயம் பயனற்றது என்பது நிரூபனமானது. இதற்கு பதிலிறுக்கும் விதமாக, UAW, அமெரிக்க முதலாளித்துவத்திற்கு தடையற்ற ஆதரவை வழங்கி இனவெறிமிக்க வெளிநாட்டு எதிர்ப்பு வாய்ச்சவடால்களை வெளிப்படுத்தியது. மேலும், அதிகரித்தளவிலான சுரண்டலை எதிர்க்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும், மற்றும் அவர்களது எந்தவொரு வடிவிலான எதிர்ப்பையும் UAW நசுக்கியது.

1980 களில், UAW உம் மற்றும் ஐக்கிய எஃகுத் தொழிலாளர்கள் (United Steelworkers), ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் (United Mineworkers), Teamsters, மற்றும் ஐக்கிய உணவு மற்றும் வணிகத் தொழிலாளர்கள் (United Food and Commercial Workers) ஆகிய ஏனைய தொழிற்சங்கங்களும், ஒன்றன்பின் ஒன்றாக வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தி, காட்டிக்கொடுத்ததோடு, பெரியளவிலான சலுகை ஒப்பந்தங்களுக்கும் ஒப்புக்கொண்டன. பின்னர், 1990 களின் முற்பகுதியில், தொழிலாள வர்க்கத்துடனான தொழிற்சங்கங்களின் உறவில் ஒரு பண்புமயமான மாற்றம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிந்தது.

தொழிற்சங்கங்களை இனி “தொழிலாளர் அமைப்புக்கள்” என்று அழைக்க முடியாது என்று வேர்க்கஸ் லீக் முடிவு செய்தது. ரஷ்ய புரட்சியின் தலைவர் லியோன் ட்ரொட்ஸ்கி, 1930 களில் எழுதுகையில், தொழிலாளர்களின் பழைய அமெரிக்க கூட்டமைப்பின் தலைவர்களைப் பற்றி, "இந்த நற்பண்பாளர்கள்… தொழிலாளர்கள் தரப்பு தாக்குதல்களிலிருந்து முதலாளித்துவத்தின் வருமானத்தை பாதுகாப்பார்களா; அவர்கள் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக, ஊதிய உயர்வுக்கு எதிராக, வேலையற்றவர்களுக்கு உதவுவதற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துவார்களா [வேறுவார்த்தைகளில் கூறுவதானால், UAW உம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று செய்வதைப் போல] அப்படியானால் நாம் தொழிற்சங்கங்களை கொண்டிருக்க மாட்டோம், மாறாக கருங்காலிகளின் ஒரு அமைப்பைத்தான் நாம் கொண்டிருப்போம்” என்று குறிப்பிட்டார்.

இன்று இதுதான் UAW மற்றும் ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களின் பங்கின் துல்லியத் தன்மையாகும். அதாவது “கருங்காலிகளின் அமைப்பு” என்றொரு உண்மையான உணர்வில் தான் அவை இருக்கின்றன.

இந்த யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்காக, உலக சோசலிச வலைத் தளமும் (WSWS), சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP), அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (Democratic Socialists of America), ஜாக்கோபின் இதழ் (Jacobin Magazine) மற்றும் தொழிலாளர் குறிப்புகள் (Labor Notes) போன்ற போலி-இடதின் அனைத்து மத்தியதர வர்க்க குழுக்களின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

UAW ஐயும் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களையும் தொழிலாள வர்க்க அமைப்புக்களாக கருதுபவர்கள், யதார்த்தத்துடன் முற்றிலும் தொடர்பில்லாமல் இருப்பது மட்டுமல்லாமல், இந்த குண்டர்களின் பிடியில் தங்களைக் காணும் தொழிலாளர்களின் அவலநிலையிலும் அலட்சியமாக உள்ளனர்.

தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டிற்கு வக்காலத்து வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் UAW இன் ஊழலால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சுரண்டல் அமைப்புமுறையுடன் அவர்கள் தங்களது சொந்த நயவஞ்சகமான உறவைப் பேணுகின்றனர். புறநிலை அர்த்தத்தின் படி, இது அவர்களது நலன்களுக்கு உதவுகிறது.

இந்த புதிய வெளிப்பாடுகள், தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் சுயாதீனமான பணியிடங்களையும் தொழிற்சாலை குழுக்களையும் உருவாக்குவதற்கான அவசர தேவையை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

கொடிய தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், ஆகக் குறைந்த பாதுகாப்பு நெறிமுறைகளை கூட நிர்வாகம் கைவிட்டுவிட்ட நிலையில், வட அமெரிக்க வாகன ஆலைகளில் முழு உற்பத்திக்கு திரும்புவதற்கான எதிர்ப்பை நசுக்க வாகன நிறுவனங்களுடன் UAW உம் ஒத்துழைக்கிறது. இது, நூற்றுக்கணக்கான நோய்தொற்றுக்களுக்கு வழிவகுத்தது, உண்மையான எண்ணிக்கையை நிர்வாகமும் UAW உம் மூடிமறைக்கின்றன. டெட்ராய்ட் வாகன உற்பத்தி ஆலைகளில் இரண்டு டசினுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொற்றுநோயின் காரணமாக இறந்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் தொழிற்சங்கங்களை மீறி தொழிலாளர்கள் மேற்கொண்ட திடீர் வேலைநிறுத்தங்களினாலேயே கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வட அமெரிக்க வாகன உற்பத்தி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது என்ற உண்மையை தொழிலாளர்கள் நினைவுகூர வேண்டும்.

தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் சுயாதீனமான, சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதற்கான போராட்டம் விஸ்தரிக்கப்பட வேண்டும். டெட்ராய்ட் பகுதியில், ஃபியட் கிறைஸ்லர் ஜெபர்சன் வடக்கு வாகன ஒருங்கிணைப்பு ஆலை (Fiat Chrysler Jefferson North Assembly), ஸ்டெர்லிங் ஹைட்ஸ் வாகன ஒருங்கிணைப்பு ஆலை (Sterling Heights Assembly), டொலிடோ ஜீப் (Toledo Jeep) மற்றும் ஃபோர்ட் டியர்போர்ன் டிரக் ஆலை (Ford Dearborn Truck Plant) ஆகியவற்றில் வாகனத் தொழிலாளர்கள் எடுத்த முன்னெடுப்பை தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டும், இந்த ஆலைகளில் தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டன.

தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும் வரை, பாதுகாப்பான பணியிட நிலைமைகளுக்காகவும், அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும் கோரும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ய, தளவாடத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், சேவைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுடனும் வாகனத் தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் தேசிய மற்றும் உலகளவில் இந்த குழுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.

தொற்றுநோய் தொடர்பாக ஆளும் வர்க்கத்தின் கொலைகாரக் கொள்கைக்கு எதிரான போராட்டத்திற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியப்படுகிறது. இதன் அர்த்தம், அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்துடனான, மற்றும் முழு பெருநிறுவன ஆதரவு பெற்ற இருகட்சி அரசியல் அமைப்புகளுடனான ஒரு மோதல் அவசியமாகிறது.

இந்த போராட்டத்தில், தொழிலாளர்கள் தங்களின் கடுமையான எதிரிகளான UAW இன் குண்டர்களை எதிர்கொள்கின்றனர்.

Loading