புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கட்டுப்பாடற்று பரவிக் கொண்டிருக்கையில்

ட்ரம்ப் தொற்றுநோயை "பொறுப்புணர்வுடன்" எடுத்துக் கொள்ளவில்லை என கருத்துரைத்ததற்காக வெள்ளை மாளிகை ஃபவுசியை தாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நாட்டின் உயர்மட்ட தொற்றுநோயியல் வல்லுநரும், ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute of Allergy and Infectious Diseases) இயக்குநருமான டாக்டர் அந்தோனி ஃபவுசி (Dr. Anthony Fauci), நாளொன்றுக்கு 100,000 புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களை அமெரிக்கா கடக்கும் என்றும், தொற்றுநோய் தொடர்பான கொள்கையில் “உடனடி மாற்றம்” ஏற்படுத்தப்படாவிட்டால் இறப்பு எண்ணிக்கைகள் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள் என்றும் வாஷிங்டன் போஸ்டுக்கு தெரிவித்ததற்கு எதிராக சனியன்று வெள்ளை மாளிகை அவரைக் கண்டித்தது.

அமெரிக்காவில், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையை மூழ்கடிக்க அச்சுறுத்தும் வகையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கை அதிகமாகிக் கொண்டிருந்ததுடன், வெள்ளியன்று நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையும் 100,000 என பதிவாகியுள்ளது என்று ஃபவுசி கூறினார்.

“நாங்கள் நிறைய காயப்படுகிறோம்,” என்று ஃபவுசி செய்தியிதழுக்கு தெரிவித்தார். மேலும், “இது ஒரு நல்ல சூழ்நிலை அல்ல. இலையுதிர்காலமும் குளிர்காலமும் நெருங்குகையில், மக்கள் அனைவரும் முற்றிலும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில், அனைத்து நடவடிக்கைகளும் தவறான வகையில் ஒழுங்கமைந்துள்ளன. நீங்கள் இதைவிட மோசமான நிலையில் இருத்தப்பட முடியாது” என்றும் கூறினார்.

ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபவுசி, ஜூலை 31, 2020, வெள்ளிக்கிழமை, வாஷிங்டனில் உள்ள கேபிடோல் ஹில்லில் கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்த நாடாளுமன்ற துணைக்குழு விசாரணையின் போது சாட்சியமளிக்கிறார். (Kevin Dietsch/Pool via AP)

முகக்கவசம் அணிவதையோ அல்லது வைரஸ் பரவலை தணிப்பதற்கான வேறு எந்த நடவடிக்கைகளையோ எதிர்க்கும், நோய்தொற்று தொடர்பான ட்ரம்பின் முக்கிய ஆலோசகரான டாக்டர். ஸ்காட் அட்லஸை ஃபவுசி நேரடியாக விமர்சித்தார். “அந்த மனிதருடன் எனக்கு உண்மையான பிரச்சினைகள் உள்ளன,” என்றும், தொற்றுநோய் குறித்த அவரது அணுகுமுறை “அர்த்தமற்றதாக உள்ளது” என்றும் அவர் கூறினார். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிர்வாகம் முயற்சி செய்யவில்லை என்று வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவர் மார்க் மெடோஸ் (Mark Meadows) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை பற்றி, “இந்த மூலோபாயத்தை ஒப்புக்கொண்டதற்காக அவருக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று ஃபவுசி தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடெனின் பிரச்சார முறையை, கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கும் ட்ரம்பின் கடுமையான பிரச்சாரத்துடன் சாதகமாக ஒப்பீடு செய்ய ஃபவுசி முயன்றார். பைடென், “ஒரு பொது சுகாதார கண்ணோட்டத்தில் பார்த்து இதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்,” ஆனால் அதேவேளை ட்ரம்ப் “இதை வேறொரு கோணத்தில் பார்க்கிறார்… அதாவது பொருளாதாரமும், நாட்டை மீண்டும் திறப்பதும் முக்கியம் என்கிறார்” என்று அவர் கூறினார்.

பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும், வைரஸ் பரவுவதை தணிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக விஞ்ஞானிகள் வழங்கும் ஆலோசனைகளை செயல்படுத்த உதட்டளவில் ஆமோதிக்கும் அதேவேளை, உண்மையில், பெருநிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் கிடைக்கக்கூடிய பெரும் இலாபங்களை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பவும், மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிகளுக்கு மீண்டும் திரும்பவும் கட்டாயப்படுத்தும் ட்ரம்பின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை”யின் சாராம்சத்தைத்தான் ஆதரிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் பெருநிறுவன நிதிய உயரடுக்கை பல பில்லியன் டாலர்கள் செலுத்தி பிணையெடுக்க ஏறக்குறைய ஏகமனதாக ஜனநாயகக் கட்சியினர் வாக்களித்தனர், அதேவேளை பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப அவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்காக, தொற்றுநோயின் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் குறைந்தபட்ச நலனுதவி காலாவதியாக அனுமதித்தனர். இதனால் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணியிடங்களுக்குத் திரும்புவதற்கான அழுத்தம் அதிகரிக்கும். மேலும் முன்னோக்கிச் சென்று, முகக்கவசம் அணிய மக்களை ஊக்குவிப்பதை விட சற்று அதிகமாக எதையும் பைடென் முன்மொழியவில்லை.

எவ்வாறாயினும், ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த தனது பகிரங்கமான எதிர்ப்பை இரட்டிப்பாக்குகிறார். தேர்தலை சட்டவிரோதமாக மீறும் முயற்சியாக பின்தங்கிய மற்றும் தீவிர வலதுசாரி சக்திகளை தூண்டிவிடவும், வாக்களிப்பின் முடிவை பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் நிலைத்திருக்கவும் அவர் முயல்கிறார். பெரும்பாலும் முகக்கவசம் அணியாமல் தோளோடு தோள் நின்று அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட நோய்தொற்றை அதிவேகமாக பரப்பும் நிகழ்வான அவரது சமீபத்திய தேர்தல் பேரணிகளின் போது, நாடு தொற்றுநோயின் “முனையைச் சுற்றி வருகிறது” என்ற தனது கூற்றை அவர் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். இது தொடர்பாக, அதிக பணம் சம்பாதிப்பதற்காக மருத்துவர்களும் மருத்துவமனைகளும் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டுவதாக குற்றம்சாட்டியதுடன், தொற்றுநோய் விவகாரத்தை ஊதி பெரிதாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் ஊடகங்களை கண்டித்தார்.

கடந்த வாரம் பிரச்சார ஊழியரை அழைத்துப் பேசுகையில், ட்ரம்ப், “கோவிட் நோய்தொற்றால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர். நம்மிடையே கோவிட் நோய்தொற்று பரவிக் கொண்டிருந்தாலும்… நான் இதுவரை கண்டிராத அளவில் பெரிய பேரணிகள் நடந்தன என்றார். மேலும், ஃபவுசி மற்றும் இந்த அனைத்து முட்டாள்களின் பேச்சைக் கேட்டு மக்கள் சோர்ந்து போகின்றனர்” என்று கூறினார்.

இதற்கிடையில், ட்ரம்பின் பேரணிகள் தொடர்புபட்ட தொற்றுநோயியல் தரவு பற்றி ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகம் பகுப்பாய்வு செய்த ஒரு புதிய ஆய்வு, இந்த பேரணிகளால் 30,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் உருவாகியிருப்பதுடன், 700 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளதாக கண்டறிந்துள்ளது.

இரு பெருவணிகக் கட்சிகளின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் உந்துதலின் காரணமாக கடந்த மாதம் புதிய நோய்தொற்றுக்கள் அதிரடியாக வெடித்துப் பரவின. அக்டோபர் முதல் வாரத்தில் ஒட்டுமொத்தமாக 329,797 நோய்தொற்றுக்கள் இருந்தன, அதேவேளை அக்டோபர் கடைசி வாரத்தில், இந்த எண்ணிக்கை அதிரடியாக 571,416 என உயர்ந்தது, இது 73 சதவிகித அதிகரிப்பாகும்.

அமெரிக்காவில், கோவிட்-19 நோய்தொற்று முதன்முதலில் உறுதிசெய்யப்பட்டதிலிருந்து ஒன்பது மாதங்களுக்கு சற்று கூடுதலான இந்த காலகட்டத்தில் 9.4 மில்லியனுக்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் தற்போது உருவாகியுள்ளன. அதாவது, தற்போதைய நோய்தொற்று பரவும் வீதத்தின்படி, இந்த எண்ணிக்கை வார இறுதிக்குள்ளாக 10 மில்லியனைத் தாண்டும் என்பதாகும்.

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு திட்டங்களுக்கான நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation Projects), இன்றுவரை நிகழ்ந்துள்ள 236,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களுடன், பெப்ரவரி 1 நிலவரப்படி மேலும் 170,000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் நிகழக்கூடும் என்ற நிலையில், மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 400,000 ஐ விட அதிகரிக்கும் என்று கூறுகிறது. பொது சுகாதாரத்திற்கான ஹார்வர்டின் டி.ஹெச். சான் பள்ளியின் (Harvard’s T.H.Chan School of Public Health) பேராசிரியர் டாக்டர் மைக்கல் மினா, “நோய்தொற்றுக்கள் மற்றும் தீவிர நோய் பரவல்களின் பாரிய வெடிப்புக்களை நாம் எதிர்கொள்ளக்கூடும், இது நாம் இதுவரை கண்ட எண்ணிக்கைகள் பெரிதல்ல என்றளவிற்கு உச்சபட்ச எண்ணிக்கையாக இருக்கக்கூடும்” என்று தேசிய பொது வானொலிக்கு (National Public Radio) தெரிவித்தார்.

பைடென் இந்த தேர்தலில் வெற்றி பெற்று, ஜனவரி மாதம் ஆட்சிக்கு வருவதிலும் வெற்றி காண்பாரானால், பொது சுகாதார நெருக்கடி குறித்தோ அல்லது தொற்றுநோய்க்கான உத்தியோகபூர்வ பதிலிறுப்பு விளைவிக்கும் சமூக பேரழிவு குறித்தோ தீவிரமாக தீர்வு காண அவர் எதுவும் செய்யப்போவதில்லை. பைடென் நிர்வாகத்தின் கொள்கையும், ஜேர்மனியின் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரான்சின் இமானுவல் மக்ரோன் போன்ற ஐரோப்பிய தலைவர்கள் தங்களது நாடுகளில் நோய்தொற்றுக்கள் பெரியளவில் வெடித்துப் பரவும் நிலையிலும், வைரஸ் பரவுவதற்கான முக்கிய பரப்புமிடமாக உள்ள தொழிற்சாலைகளையும் பள்ளிகளையும் திறந்தே வைத்திருக்கும் அதேவேளை, பகுதியளவிலான சமூக முடக்கங்களை செயல்படுத்த வற்புறுத்தியது போன்ற அவர்களது கொள்கைகளையே ஒத்திருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை, CNN இன் State of Union நிகழ்ச்சியில், விஸ்கான்சினின் ஜனநாயகக் கட்சி ஆளுநரான டோனி எவெர்ஸ், கடந்த பல வாரங்களாக அவரது மாநிலத்தில் தொற்றுநோய் விளைவித்த தாக்கம் பற்றி பேரழிவு தரும் மதிப்பீட்டை வழங்கினார். எவ்வாறாயினும், மற்றொரு சமூக முடக்கத்திற்கு அவர் பரிசீலிப்பாரா என்று கேட்கப்பட்டபோது, “இல்லை. சமூக முடக்கம் குறித்து நான் பரிசீலிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

மார்ச் 24 அன்று, உலக சோசலிச வலைத் தளம் CARES சட்ட பிணையெடுப்பு பற்றி குறிப்பிட்டு, பின்னர் இவ்வாறு இறுதி செய்தது: “இந்த தேவையற்ற பெரும் செலவு (boondoggle), தொற்றுநோயின் காரணமாக உருவாகியுள்ள மருத்துவ ரீதியான அல்லது நிதிய ரீதியான ஆபத்து குறித்தும் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு குறித்தும் மக்களுக்கு உதவ எதையும் செய்யவில்லை. உண்மையில், கூட்டாட்சி கருவூலத்தை திடீர் சோதனை செய்வதற்கும், அமெரிக்க மக்களைக் கொள்ளையடிப்பதற்கும், முடிந்தவரை இருப்பதை பறித்துக் கொள்வதற்குமான ஒரு வாய்ப்பாகவே பொது சுகாதார நெருக்கடியை நிதிய பிரபுத்துவம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

இந்த பகுப்பாய்வு அடுத்தடுத்த நிகழ்வுகளால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Loading