24 மணி நேரத்தில் 850 க்கும் மேற்பட்ட மக்கள் பலி

தாமதமான மற்றும் போதமையான பொது முடக்க நடவடிக்கைகளுக்குப் பின்னர், COVID-19 வைரஸின் இரண்டாவது அலை பிரான்ஸை மூழ்கடிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மக்ரோன் நிர்வாகத்தின் சமீபத்திய கொரோனா வைரஸ் பொது முடக்க நடவடிக்கைகள் போதுமானதாகவும் இல்லை மற்றும் மிகவும் தாமதமாகவுமுள்ள நிலைமைகளுடன், இப்போது பிரான்சில் தொற்றுநோய்களின் இரண்டாவது அலை முதலாவதை விட பெரியதாக இருக்கும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் பொது மக்களின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் பொருளாதார நடவடிக்கைகளை தக்க வைத்துக் கொள்ள மக்ரோன் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இந்த கொள்கைகளின் பேரழிவுகரமான மற்றும் குற்றவியல் தாக்கத்தை ஏற்கனவே பிரான்சில் இறக்கும் எண்ணிக்கையின் அதிகரிப்பில் காணலாம். செவ்வாயன்று மட்டும், 854 மக்கள் வைரஸால் இறந்துள்ளனர், இது ஏப்ரல் மாதத்திலிருந்து அதிக எண்ணிக்கையாக உள்ளது, அதற்கு முன்னைய நாள் 416 இறப்புக்களாக இருந்தன.

Oct. 28, 2020 இல் தெற்கு பிரான்சின் Arles இல் உள்ள Joseph Imbert மருத்துவமனை மையத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஒரு COVID-19 நோயாளி தனது குடும்பத்துடன் பேசுவதற்கு ஒரு செவிலியர் ஒரு தொலைபேசியைப் பிடித்து உதவி செய்கிறார். (AP Photo/Daniel Cole)

அக்டோபர் 28 அன்று ஒரு பகுதியளவு பொது முடக்க நடவடிக்கைகளை அறிவித்த ஒரு உரையில், மக்ரோன் தனது அரசாங்கத்தின் பொறுப்பைக் குறைக்கும் பொருட்டு, தொற்று நோயின் இரண்டாவது அலையின் ஐரோப்பியத் தன்மையை வலியுறுத்தினார். "ஐரோப்பாவில், வைரஸின் பரிணாம வளர்ச்சியால் நாம் அனைவரும் ஆச்சரியப்படுகிறோம்," என்று அவர் கூறினார். மக்ரோனின் கூற்றுப்படி, அனைத்தும் கிடைக்கக்கூடிய சிறந்த தகவல்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன, அவைகள் அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் ஒரு சுயாதீனமான விதிக்கு கண்டத்தின் மக்கள்தொகை கட்டுப்படுவதைப் போன்றதாக இருக்கிறது.

இது ஒரு தெளிவான பொய், ஏனெனில் தொற்றுநோய்களின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சி சில வாரங்களுக்கு முன்பு தொற்றுநோயியல் நிபுணர்களால் குறிப்பிடப்பட்டது. ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. இப்பொழுது இந்த எழுச்சி கண்டம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்றால், ஒவ்வொரு ஐரோப்பிய அரசாங்கமும் அடிப்படையில் எந்த விலை கொடுத்தாவது மக்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்ற அதே கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறது.

வைரஸ் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியபோது, அக்டோபர் 14 அன்று மக்ரோன் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் வைரஸ் பரவுவதைத் தடுக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், அக்டோபர் 12ல் இருந்து 18 வரை 38 சதவிகித அதிகரிப்பிலிருந்து, அதற்கடுத்த வாரத்தில் கூடுதலாக 52 சதவிகிதத்தை அது முடுக்கிவிட்டது.

தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவரது கொள்கைகளுக்கு பின்னால் நிற்கும் சமூக நலன்கள் மீதான அவரது வெறுப்பை வெளிப்படுத்திய மக்ரோன், வீட்டிலிருந்து பணியாற்றுவது வணிகத்தின் செயற்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக விமர்சித்தார்.

பேரழிவுகரமான மரணங்களை சகித்துக் கொள்ள விருப்பம் கொண்டுள்ள அரசாங்கத்தின் கொள்கைகளால் கட்டளையிடப்படுகின்றன. அக்டோபர் 28 அன்று பேசிய மக்ரோன், ஒரு புதிய பொது முடக்கம் இல்லாமல், "இன்னும் ஒரு சில மாதங்களில் இன்னும் 400,000 இறப்புக்கள் குறித்து துக்கம் விசாரிக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்தார். "இன்னும் பல படுக்கைகளை தயார் செய்ய முடியும் என்றாலும், நமது கொள்ளளவு இரட்டிப்பாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான நமது சக தேசத்தின் குடிமக்கள் மருத்துவ விளைவுகளைக் கொண்ட தீவிர சிகிச்சையில் வாரங்கள் செலவிட வேண்டும் என்று யார் தீவிரமாக விரும்புவார்கள்?" என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் மக்ரோன் அதைத்தான் செய்துள்ளார். மருத்துவமனை அமைப்புமுறை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்கனவே நிரம்பி வழியும் நிலையில் இருக்கும்போது மட்டும் தான் பதிலிறுப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது, அரசாங்கம் நோய்த் தொற்றுக்களை வேகமாக அதிகரிக்க அனுமதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை அறிவிப்பதற்கு அவரை இட்டுச் சென்றது கூட மனிதாபிமான அக்கறைகள் அல்ல, மாறாக தொழிலாள வர்க்க எழுச்சியால் அவரது அரசாங்கம் கீழிறக்கப்படும் என்ற அச்சம் இருப்பதன் காரணமாகும்.

"இந்த கட்டத்தில், நாம் என்ன செய்தாலும், கிட்டத்தட்ட 9,000 நோயாளிகள் நவம்பர் நடுப் பகுதியில் தீவிர சிகிச்சையில் இருப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம், இது கிட்டத்தட்ட பிரான்சின் அனைத்து கொள்ளவுகளாகும்," என்று மக்ரோன் கூறினார். விஞ்ஞான சபையினால் விவாதிக்கப்பட்ட மற்றும் அரசாங்க பாதுகாப்பு ஆலோசகர் கூட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலவரங்கள் இரகசியமாக வைக்கப்படுவதால், மக்ரோன் என்ன தரவுகளை அடிப்படையாக கொண்டிருந்தார் என்பது தெளிவாக இல்லை.

மக்ரோனின் பேச்சிலிருந்து, தொற்றுநோயின் பரிணாம வளர்ச்சிக்கான பாஸ்டர் நிறுவனம் உருவாக்கிய இரண்டு சாத்தியமான நிலவரங்கள் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 8 ஆம் திகதி கடைசியாக உச்சத்தை எட்டிய 7,148 உடன் ஒப்பிடும்போது, முதல் முன்கணிப்பானது நவம்பர் 15 ம் திகதி 5,400 இலிருந்து 6,020 வரை நோயாளிகள் தீவிர சிகிச்சையில் இருப்பார்கள். ஆனால் இது பொது முடக்க கொள்கைகள் வசந்த காலத்தில் செயற்படுத்தப்பட்டதைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறது.

தற்போதைய நடவடிக்கைகள் இப்போது குறைவான செயற்திறன் கொண்டதாக இருந்தால், நவம்பர் நடுப்பகுதியில் (6,300 முதல் 7,050 க்கு இடையில்) மூச்சுக்குழலுக்குள் குழாய் செருகப்பட்ட நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 6,600 ஐ விட அதிகமாக இருக்கும் என்று பாஸ்டர் நிறுவனம் கணித்துள்ளது, இது பல வாரங்களுக்குப் பின்னர் 8,200 இலிருந்து 9,100 வரை ஒரு உச்சநிலையில் இருக்கும்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்க நடவடிக்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை. பொருளாதாரத்தை திறந்து வைக்கவும், மற்றும் பெருநிறுவன இலாபங்கள் பாதிக்கப்படாமல் உறுதி செய்யவும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் முதலாவது பொது முடக்கத்தில் இருந்ததை விட பணிகளில் ஈடுபட வைக்கப்படுகின்றனர். சில்லறை விற்பனை, உபசரிப்பு சேவை உள்ளிட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் வணிக நிறுவனங்கள் மட்டுமே மூடப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொண்டுள்ளது. 12 மில்லியன் மாணவர்களும் கூட, அரசாங்கம் சிடுமூஞ்சித்தனமான முறையில் வலியுறுத்துவது போல், இளைஞர்களின் நல்வாழ்வையும் கல்வியையும் ஒரு முன்னுரிமையாக கொண்டிருப்பதால் அல்ல அவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்கின்றனர், மாறாக, தங்கள் குழந்தைகளை வேறு விதமாக கருத்தில் வைத்திருக்கும் தொழிலாளர்கள், தொழிலாளர் படையிலிருந்து நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நெரிசலான மற்றும் மோசமாக காற்றோட்டமான வகுப்பறைகளைக் கொண்ட பள்ளிகள் குறிப்பாக வைரஸ் பரவுவதற்கு உகந்தவைகளாக இருக்கின்றன. 10–11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்களைப் போலவே தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சிறு வயது குழந்தைகளின் தொற்று குறித்து பெரும் நிச்சயமற்ற நிலை உள்ளது, ஆனால் சிறு வயது குழந்தைகளுக்கு அதிக தொற்று ஆபத்து இருப்பதைக் காட்டும் தீவிர ஆய்வுகள் கூட அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தொற்றுகளின் பாதிப்பிற்குள்ளான பள்ளிகள் குறித்த தரவுகள் நம்பமுடியாத அளவிற்கு அரிதாக உள்ளன. எடுத்துக்காட்டாக, பொது சுகாதார பிரான்ஸ் வலைத் தளமானது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலுள்ள ஒரு கொத்தணிகளின் பட்டியலை வயது அல்லது நிறுவனரீதியாக பிரிக்காமல் வழங்குகிறது. பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களில் நோய் தொற்றுக்களின் வரைபடங்களை வழங்க தற்போதைய தொழில்நுட்பத்தினால் இது எளிமையாக வழங்க முடியும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த அத்தியாவசிய தகவல்கள் மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

நிலைமையானது மிகவும் பேரழிவுகரமான சூழ்நிலையை நோக்கி நகர்கிறது, வசந்த காலத்தை விட மருத்துவமனை அமைப்புமுறை நிரம்பி வழிதல் நீண்ட காலம் நீடிக்க இருக்கிறது, COVID-19 நோயுடன் தொடர்புபட்ட மிக உயர்ந்த இறப்புகளும் மற்றும் பல வாரங்களுக்கு ஒழுங்காக நிர்வகிக்க முடியாத பிற நோய்களுக்கும் கணிசமான அதிகப்படியான இறப்புக்களும் இருக்கப் போகின்றன.

மக்ரோன் இந்த குற்றவியல் கொள்கையை மட்டுமே செயல்படுத்த முடியும், ஏனெனில் எந்தவொரு தீவிர அரசியல் எதிர்ப்பையும் அவர் எதிர்கொள்ளவில்லை. அனைத்து ஸ்தாபகக் கட்சிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, மேலும் வேலைக்கு திரும்புவதற்கும் பள்ளி அமைப்புமுறையை மீண்டும் திறப்பதற்கும் ஆதரவளித்துள்ளன. தொழிற்சங்க எந்திரங்களும் பணிக்கு திரும்புவதை ஆதரித்தன, வணிகத்திற்கும் அரசுக்கும் நம்பகமான பங்காளிகள் மற்றும் ஆலோசகர்களாக தங்களை முன்வைத்து செயற்படுகின்றனர்.

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற போலி-இடது கட்சிகள் பொருளாதார மறுதிறப்பை எதிர்த்து எந்த எதிர்ப்பையும் ஒழுங்கமைக்கவில்லை. மீண்டும் திறப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, சுகாதார மற்றும் கல்வி அமைப்புமுறைக்கு கூடுதல் வளங்களைக் கோருவதன் மூலம் பிரச்சினையை குழப்ப அவர்கள் முயன்றனர். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள், அவைகள் மக்ரோனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதினாலும், சுகாதார நிலைமையை எந்தவிதத்திலும் தீர்வுகாணாது.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரெஞ்சு பகுதியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) 2016 இல் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியானது (PES) தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கிறது. ஆராய்ச்சியாளர்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட விஞ்ஞானத் தரவுகளை, தொழிலாள வர்க்கத்தின் அமைப்பு மற்றும் பாதுகாப்புக்கான நடவடிக்கை வேலைத் திட்டத்துடன் இணைக்கும் ஒரே ஒரு கட்சி எங்கள் கட்சிகள் மட்டுமேயாகும். பல மாதங்களாக, சுகாதார நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் ஐரோப்பா முழுவதிலும் இரண்டாவது அலை வளர்ந்து வரும் நிலையில், தீவிர அக்கறை மற்றும் பகிரங்கமாக கிடைக்கக்கூடிய விஞ்ஞான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக பணித் தளங்களிலும் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழுக்களை அமைக்குமாறும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் (herd immunity) ஆளும் வர்க்கக் கொள்கைக்கு எதிராக ஒரு சர்வதேச பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்வதற்கும் PES அழைப்புவிடுகிறது. எமது இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பானது பள்ளிகளை மூடுவதற்கும், இளைஞர்களையும் அவர்களது குடும்பங்களையும் பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாக்கவும் ஐரோப்பா முழுவதும் ஒரு பள்ளி வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைப்பதற்கு அழைப்புவிடுகிறது.

Loading