இலங்கை அரசாங்கம் கோவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்து வருகின்ற நிலைமையிலும் பொது முடக்கத்தை நிராகரிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட தொழிற்சாலையை மூடுமாறு கட்டாயப்படுத்தி வரும் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை எதிர்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் முடக்கத்தையும் தொற்றாளர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை “வீட்டில் தனிமைப்படுதுவதையும்” அறிவித்தார். அதே நேரம், நாட்டில் மீண்டும் கோவிட்-19, தொற்றுநோய் தலைதூக்கயிருப்பதற்கு அவர் சாதாரண மக்களை குற்றம் சாட்ட முயன்றார்.

கடந்த வாரம், சுமார் 6,000 தொழிலாளர்கள் பணியாற்றும் MAS ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான பொடிலைன் ஆடை தொழிற்சாலை மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 200 பேருக்கு ஒருவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 145 பேர் கொண்ட ஒரு குழுவை பரிசோதித்த போது, மேலும் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. தொழிலாளர்களின் எதிர்ப்பினால் தொழிற்சாலையை மூடப்பட்டது.

மாஸ் ஒரு இராட்சத நிறுவனம் ஆகும். 15 நாடுகளில் உள்ள அதன் தொழிற்சாலைகளில் சுமார் 99,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். விக்டோரியாஸ் சீக்ரெட், மார்க்ஸ் & ஸ்பென்சர் மற்றும் கால்வின் க்ளீன் போன்ற சர்வதேச தரவைகாயன ஆடைகளை அவை உற்பத்தி செய்கின்றன.

கண்டியில் கடந்த ஜூலை மாதம் போராட்டம் நடத்திய தாதிமார்

இராஜபக்ஷ தனது அலுவலகத்தில், கொவிட்-19 சம்பந்தமான ஜனாதிபதி செயலணி உடனான கலந்துரையாடலில் தனது அறிவிப்பை வெளியிட்டார். அந்த நடவடிக்கைகளை “விரைவாக பரவும் கொவிட்-19 வைரசுக்கு எதிரான போரை" அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. உண்மையில், பெரும் நிறுவனங்களை தொடர்ந்தும் இயக்குவதே இந்த தீர்மானங்களின் நோக்கும். குறிப்பாக ஏற்றுமதிக்கான தொழிற்சாலை உற்பத்திகளில், தொழிலாளர்கள் தொடர்ந்து வெலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

திங்களன்று பேசிய, குறித்த செயலணியின் தலைவரான ஜனாதிபதியின் தம்பி பசில் இராஜபக்ஷ, "நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் கருத்து," சுகாதார அதிகாரிகள் "குறைந்தது 10 நாட்களுக்காவது எல்லாவற்றையும் நிறுத்த" விரும்புகிறார்கள், இருப்பினும் பொது முடக்கம் "மேற்கு மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.

அக்டோபர் 4, மினுவாங்கொடவில் உள்ள ஒரு பிரன்டிக்ஸ் ஃபெஷன் வெயர் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது முதல், தேசிய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது, புதன்கிழமை நிலவரப்படி 24 மரணங்களுடன் 12 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர். அரசாங்கம் திட்டமிட்டு சோதனைகளை மேற்கொள்ளாததால் இந்த எண்ணிக்கை நம்பகமானதல்ல.

ஜனாதிபதி நவம்பர் 9 வரை மேல் மாகாணத்தின் பொது முடக்கத்தை நீட்டித்தார். இந்த மாகாணத்தில் முக்கிய வணிக, தொழில்துறை மற்றும் நிர்வாக மையங்களும் அமைந்துள்ளன. வடமேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டத்தில் சில பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் பெருவணிக அல்லது அரச நிறுவனங்களை பாதிக்காது. தொற்றுநோய் இருந்தபோதிலும், பொருளாதார நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என்று கடந்த வாரம் ஜனாதிபதி இராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்தார். கொழும்பு அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் மற்ற நாடுகளில் இதேபோன்ற குற்றவியல் வணிக சார்பு கொள்கைகளை முன்னெடுக்கும் தங்கள் சமதரப்பினரை பின்பற்றுகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய கொரோனா வைரஸின் தாக்கத்தை நாடும் உணர்ந்த பின்னர், இராஜபக்சே, தொற்றுநோயை தனது அரசாங்கம் தனித்துவமாகக் கையாண்டதாகவும், மற்ற நாடுகளைப் போலல்லாமல் அதைக் கட்டுப்படுத்த முடிந்தது, என்றும் அறிவித்தார். சமீபத்திய வாரங்களில் தொற்றுநோய் பரவத் தொடங்கியதால் இந்த பொய் அம்பலமானது.

கடந்த நான்கு தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் கீழ் பெருகிய முறையில் சீரழிக்கப்பட்டு வரும் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு, இந்த அரசாங்கம் கடந்த ஒன்பது மாதங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த வாரம், கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் முதல் தொடர்புகளை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதாகவும், அர்கள் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்றும் கூறினார். ஏனென்றால் போதிய இடமும் நிதியும் இல்லை. நேற்று, கிட்டத்தட்ட 64,000 பேர் ஏற்கனவே "வீட்டு தனிமைப்படுத்தலில்" இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு முறையான பி.சி.ஆர். பரிசோதனைகளை நடத்த அரசாங்கம் பரிந்துரைக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட 10 வது நாளில் மட்டுமே சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

"தொடர்ச்சியான மற்றும் வழக்கமான அவ்வப்போதான சோதனைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை" இராஜபக்சே இழிந்த முறையில் வலியுறுத்தினார். ஆயினும் அரசாங்கத்திடம் வெறும் 25 பி.சி.ஆர் சோதனை இயந்திரங்களே உள்ளன, இவற்றில் தினமும் சுமார் 8,000 மாதிரிகளை மட்டுமே பரிசோதிக்க முடியும் என்று அரச சுகாதார செய்தித் தொடர்பாளர் மருத்துவர் ஜெயருவன் பண்டார கூறினார். பல நாட்களாக பழுதடைந்திருந்த ஒரு இயந்திரம், இந்த வாரம்தான் திருத்தப்பட்டது.

அரசாங்க சார்பு ஐலண்ட் செய்தித்தாளில் ஒரு ஆசிரயர் கருத்துரை, பொது சுகாதாரத் துறையின் வீழ்ச்சியைக் சமிக்ஞை செய்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் விரைவில் நிரம்பிப் போகலாம் என்று அது எச்சரித்தது. "நாட்டில் 641 மருத்துவமனைகuளில் 84,728 படுக்கைகள் (1,000 பேருக்கு 3.9 படுக்கைகள்) மட்டுமே உள்ளன, மேலும் அவற்றில் பெரும்பாலானவை கொவிட்-19 பரவுவதற்கு முன்பே நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நோயாளிகள் பொதுவாக படுக்கைகளின் கீழ் மற்றும் தாழ்வாரங்களிலும் உள்ளனர்."

100,000 நபர்களுக்கு 91 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 212 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். தலையங்கம் மேலும் கூறியது: “இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. முன்நிலை சுகாதார ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள், அவர்களில் சிலர் கொவிட்-19 வைரஸால் கூட பாதிக்கப்பட்டுள்ளார்கள்.”

ஏற்கனவே, மருத்துவர்கள், தாதிமார் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் உட்பட சுமார் 100 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்புக்கு அருகிலுள்ள கடுவேலா பகுதியில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு சம்பவம், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அரசாங்கத்தின் கொள்கைகள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபித்தது. வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் நான்கு நாட்கள் வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்தபோது, "மருத்துவமனைகளில் இடமில்லை" என்று அவரிடம் கூறப்பட்டது. தனது மனைவியும் குழந்தைகளும் தொற்றுக்கு உள்ளாகிவிடுவார்களோ என்ற பயத்தில் அவர் நான்கு நாட்களையும் தனது வீட்டிற்கு வெளியே கழித்துள்ளார்.

தொற்றுநோயியல் நிபுணர்களால் பரவலாக அங்கீகரிக்கப்படாத குறைந்த விலையிலான துரதமான சரீரஎதிர் பரிசோதனையைப் (RAT) பயன்படுத்த அரசாங்கம் கடந்த வாரம் முடிவு செய்தது. இலங்கையின் மருத்துவ நிபுணர் ரவி ரன்னன் எலிய டெய்லி மிரர் பத்திரிகையிடம் கூறியதாவது: "ரட் பரிசோதனைகள் பி.சி.ஆரைப் போல துல்லியமாக இல்லை, ஏனெனில் இலங்கையில் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலோர் அறிகுறி வெளிப்படுத்தாதவர்களாக இருந்தனர்."

அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தின் பொறுப்பை மூடிமறைக்க இராஜபக்ஷ சாதாரண மக்களை குற்றம் சாட்டுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் அவர் கூறியதாவது: “இது அரசாங்கத்தால் போடப்பட்ட வைரஸ் அல்ல. இது உலகளாவிய சுகாதார பிரச்சினை. மக்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. மக்கள் இந்த பொறுப்பை கைவிட்டுவிட்டதால் இந்த நிலைமை எழுந்துள்ளது.”

இராஜபக்ஷவின் பெருநிறுவன உயரடுக்குக்கு முண்டு கொடுப்பதே அன்றி, சுகாதாரத் துறைக்கு நிதியளிப்பதல்ல. அரசாங்கம் பெருவணிகத்திற்கு, மத்திய வங்கி வழியாக, மொத்தம் 178 பில்லியன் ரூபாய் நிதியை விடுவித்துள்ளது, ஆனால் 2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் சுகாதார செலவினங்களுக்காக 159 பில்லியன் ரூபாயை (873 மில்லியன் அமெரிக்க டொலர்) மட்டுமே ஒதுக்கியுள்ளது.

அதே நேரம், அரசாங்கம் 500 பில்லியன் ரூபாயை இராணுவ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுக்காக ஒதுக்கியுள்ளது. தொழிலாள வர்க்க அமைதியின்மையை அடக்க இராஜபக்ஷ ஆட்சி தயாராகி வருகிறது.

வணிக உயரடுக்கின் நலனுக்காக, குறிப்பாக ஏற்றுமதி உற்பத்திக்காக அரசாங்கம் பொருளாதாரத்தை திறந்து வைத்திருக்கிறது. ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் பிரபாஷ் சுபசிங்க, கடந்த வாரம், ஏற்றுமதியாளர்கள் சமீபத்தில் நீட்டிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப்படுத்தப்பட்ட திட்ட விருப்பத்தேர்வுகள் (ஜி.எஸ்.பி.+) என்ற வரி சலுகைகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இலங்கை ஏற்றுமதியாளர்கள் "ஜி.எஸ்.பி. காரணமாக இயல்பாகவே ஒரு பாதுகாப்பு அரனைக்" கொண்டுள்ள அதே சமயம், "ஐரோப்பிய இறக்குமதியாளர்களுக்கு செலவு சலுகையையும் உருவாக்குகிறார்கள்" என்று சுபசிங்க கூறினார்.

இலங்கை ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய சந்தையாகும், அதே நேரம் அமெரிக்கா இலங்கை ஆடை உற்பத்தியில் மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது. இராட்சத விநியோகச் சங்கிலிகள், இலங்கையில் உள்ள மலி உழைப்பு சந்தையில் இருந்தும் அதே போல் பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் ஏனைய வறிய நாடுகளில் இருந்தும் ஆடை மற்றும் ஏனைய இறக்குமதிகள் மூலம் பிரமாண்டமான இலாபத்தை ஈட்டுகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களும், உள்ளூர் பெருவணிகத்துடன் இணைந்துள்ள சிலரும், கொடிய தொற்றுநோய்க்கு மத்தியில், இராஜபக்ஷ ஆட்சியின் ஆசீர்வாதத்துடன், முதலீட்டுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ளவை உட்பட தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன.

சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு வெளியே உள்ள 1,615 தொழிற்சாலைகளில் 580,000 தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்ற அதே நேரம், 133,000 தொழிலாளர்கள் சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள் வேலை செய்கிறார்கள். ஆயினும், முதலீட்டுச் சபை புள்ளிவிவரங்களின்படி, இந்த 700,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் 28,670 பி.சி.ஆர். பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய குறைந்த எண்ணிக்கையிலான சோதனைகளிலேயே 1,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முதலீட்டுச் சபை ஆணையாளர் நாயகம், சன்ஜய மொஹோட்டல கூறியபடி: “பொதுவாக அனைத்து தொழிற்சாலைகளும் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்கின்றன. முதலீட்டுச் சபையானது குறித்த விதிமுறைகளை வலுவாக ஆதரிக்கிறது."

உண்மை இதற்கு நேர்மாறானது. ஏப்ரல் மாத இறுதியில் இந்த தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதாக அரசாங்கம் அறிவித்தபோது, முதலாளிகள் குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டு, சில வாரங்களுக்குள் அவற்றையும் கைவிட்டனர்.

செப்டம்பர் மாதத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் நோய்த்தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்தி இருந்தாலும் கூட, பிரான்டிக்ஸ் ஃபெஷன் வெயர் நிர்வாகம் அதன் மினுவாங்கொட ஆலையில், தொழிலாளர்களை மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கவில்லை என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் தொடக்கத்தில் அனைத்து தொழிலாளர்களையும் பரிசோதனைக்கு உட்படத்த நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்ட போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மனிதர்களின் உயிர்பிழைப்பைப் பற்றி அன்றி, தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியில் இருந்து இலாபத்தைப் பிழிந்தெடுப்பதைப் பற்றி மட்டுமே, இராஜபக்ஷ அரசாங்கமும் பெரும் வர்த்தகர்களும் கவலை கொண்டுள்ளனர்.

Loading