முன்னோக்கு

ட்ரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுப்பது தேர்தலுக்கு பிந்தைய நெருக்கடிக்கு களம் அமைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போதுமான மாநிலங்களை வெல்லும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் அவர் வென்றதாக செய்தி ஊடகங்கள் பகலில் அறிவித்தன. மேலும் அவர் தற்போது முன்னிலை வகிக்கும் நெவாடா மற்றும் அரிசோனாவில் அவர் வெல்ல வாய்ப்புள்ளது. அவர் பென்சில்வேனியா, வட கரோலினா அல்லது ஜோர்ஜியாவை வெல்லாவிட்டாலும் கூட, இது அவரை 270 தேர்தல் வாக்குகளை பெறும் நிலையில் இருத்தும். இந்த மூன்று மாநிலங்களில், ட்ரம்ப் தற்போது முன்னணியில் உள்ளார், ஆனால் தபால் மூலமான வாக்குகள் எண்ணப்படுவதால் அவரது பெரும்பான்மை குறைந்து வருகிறது. எவ்வாறாயினும், பைடென் ஒரு முறை தனது "மோசமான கனவு" என்று விவரித்திருக்கும் தேர்தலில் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது உண்மையில் வெளிவருகிறது.

புதன்கிழமை அதிகாலை வெள்ளை மாளிகையில் ஒரு அசாதாரண உரையில், ட்ரம்ப் தன்னை வெற்றியாளராக அறிவித்தார். "வெளிப்படையாக நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றோம்," என்று அவர் கூறினார். “எனவே நாங்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். அனைத்து வாக்களிப்பும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”. “வாக்களிப்பு” முடிவடைந்தது என்று அறிவித்ததன் மூலம், சட்டபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூலமான வாக்குகளை தொடர்ந்து எண்ணுவதை நிறுத்துவதையே ட்ரம்ப் கருதுகிறார்.

ட்ரம்ப் நேற்று இதனை இரட்டிப்பாகி, இன்னும் போட்டியிலுள்ள ஒரு தொடர் மாநிலங்களில் தனது வெற்றியை அறிவித்தார். "தேர்தல் வாக்கு நோக்கங்களுக்காக, ட்ரம்ப் பாரியளவு முன்னணியில் உள்ள காமன்வெல்த் பென்சில்வேனியா (இது சட்டபூர்வ பார்வையாளர்களை அனுமதிக்காது), ஜோர்ஜியா மாநிலம் மற்றும் வட கரோலினா மாநிலம் ஒவ்வொன்றிலும்," இவ்வாறு நாங்கள் கூறியுள்ளோம்” என்று அவர் எழுதினார். "மேலும், மிச்சிகன் மாநிலத்திற்கு நாங்கள் உரிமை கோருகிறோம். உண்மையில், அங்கு இரகசியமாக வீசப்பட்ட ஏராளமான வாக்குகள் பற்றி பரவலாக அறிவிக்கப்படுகின்றது!"

ட்ரம்ப் பிரச்சாரப்பிரிவு ஏற்கனவே ஜோர்ஜியா, மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியாவில் வாக்குகளை எண்ணுவதை நிறுத்த வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், விஸ்கான்சினில் மறுபடி எண்ணுமாறு கோருகிறது. இது முடிவடைய வாரங்கள் ஆகலாம். உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியான சவால்கள் முடிவடையும் என்று அவர் நம்புகிறார். அதில் இப்போது அவரது மிக சமீபத்திய வேட்பாளர் ஆமி கோனி பாரெட் அடங்குவார். சில வாரங்களுக்கு முன்பு ஜனநாயகக் கட்சியின் கடுமையான எதிர்ப்பின்றி அவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். முடிவுகள் ஆட்சேபனை செய்யப்பட்டால், மிச்சிகன் போன்ற மாநிலங்களில் குடியரசுக் கட்சி மாநில சட்டமன்றங்கள் தங்களது சொந்த ட்ரம்ப் சார்பு பிரதிநிதிகளை பரிந்துரைக்க முடியும்.

தேர்தல் முடிவுகளை சவால் செய்ய ட்ரம்ப்பின் முயற்சி தீவிர வலதுசாரி சக்திகளை அணிதிரட்டுவதோடு சேர்ந்து வருகிறது. புதன்கிழமை இரவு, நூற்றுக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள், சிலர் நீண்ட துப்பாக்கி ஆயுதம் ஏந்தி, அரிசோனாவில் வாக்குகள் எண்ணும் நிலையத்தினுள் உள்நுழைய முயன்றனர். புதன்கிழமை பிற்பகல் மிச்சிகன் தேர்தல் அலுவலகங்களின் முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “எண்ணிக்கையை நிறுத்து” போராட்டங்கள் திட்டமிடப்பட்டிருப்பவை தொடர்பான ஒரு சிறிய அறிகுறியாகும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூடுதல் ஆர்ப்பாட்டங்கள் இன்று ஜோர்ஜியா, பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் ட்ரம்ப் சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரிசோனாவிலும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

சட்டரீதியான சவால்கள், வலதுசாரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறையை உண்மையாக பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் தனது தோல்வியைத் தடுப்பதிலிருந்து குறுகிய காலத்தில் அவர் வெற்றி பெற்றாலும் இல்லைவிட்டாலும் டொனால்ட் ட்ரம்ப்பும் மற்றும் அவர் நிதியுதவி அளித்து வளர்ச்சி பெற்றுவரும் அரசியலமைப்பு-எதிர்ப்பு பாசிச இயக்கம் ஆகியவை அரசியல் காட்சியில் இருந்து மறைந்துவிடப் போவதில்லை.

கடந்த ஜூன் மாதம் சதி முயற்சித்ததில் இருந்து உலக சோசலிச வலைத் தளம் பலமுறை எச்சரித்ததைப் போல, ட்ரம்ப்பின் அரசியல் மூலோபாயம் ஒருபோதும் தேர்தல் கணக்கீடுகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த மூன்று மாதங்களில், அவர் வெறுமனே ஜனாதிபதி என்பதை விட பாசிச தலைவரின் பாத்திரத்திற்காக அதிகமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த பாசிசவகைப்பட்ட பிரச்சாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இறுதி வாக்களிப்பு முடிவு அவருக்கு எதிராக சென்றாலும், ட்ரம்பும் அவரைச் சுற்றியுள்ள இயக்கமும் அமெரிக்க அரசியலில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும். புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கவனமளிக்கக்கூடிய தலையங்கத்தில், பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் வெற்றியை அறிவிப்பதிலும், வாக்கு எண்ணிக்கையை சவால் செய்வதிலும் ட்ரம்பின் நோக்கம் “முடிவை முன்கூட்டியே தீர்மானிப்பது மட்டுமல்ல, ஜனாதிபதி பைடெனை (ஜனநாயகக் கட்சிக்காரர் தேர்ந்தெடுக்கப்பட்டால்) சட்டவிரோதமானவர் என்று களங்கப்படுத்துவதாகும். அவர் இன்னும் வெற்றி பெறக்கூடும்” என்று எழுதியது.

பைனான்சியல் டைம்ஸ் தொடர்ந்தது: “ஓரளவு உறுதிப்பாட்டை தரக்கூடிய ஒரு நாளில், அமெரிக்கா திரு. ட்ரம்ப்புடன் கணக்கு தீர்த்துக்கொள்ளவில்லை என்பதை உறுதியாகக் கூறலாம் (அல்லது ஒருவேளை அதற்கு மாறாக). ஒரு தடவை மட்டும் நிகழ்ந்த ஒரு பிறழ்ச்சியாக அவரை பொது வாழ்க்கையிலிருந்து அகற்றும் ஒரு தேர்தல் அவருக்கு அதில் ஒரு நீடித்த மற்றும் மையப் பங்கைக் கொடுத்துள்ளது. அவர் ஜனாதிபதியாக தொடர முடியாவிட்டாலும், அவர் குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் குரலாக மாறுவார்”.

தேர்தலுக்கு ட்ரம்பின் ஆக்ரோஷமான பிரதிபலிப்பு பைடெனின் வெற்றியின் குறுகிய அளவினால் எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி வாக்குகளின் மொத்தம் முன்னாள் துணை ஜனாதிபதிக்கு தேவையான 270 தேர்தல் வாக்குகளை அளிக்கலாம் என்று கருதப்படுகின்றது.

தற்போது அமெரிக்காவில் நிலவும் பேரழிவுகரமான நிலைமைகளைப் பொறுத்தவரை, பைடென் இறுதிக்கோட்டினை தவழ்ந்து கடக்கமுடியவில்லை என்பது ஜனநாயகக் கட்சியால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் பேரழிவுகரமான குற்றச்சாட்டாகும். பைடெனின் சொந்த விளிம்புநிலையிலுள்ள வெற்றியின் அளவு (மீண்டும், தற்போதைய போக்கு தொடர்கிறது என்று கருதினால்) மெல்லிய காகிதம்போல் இருப்பது மட்டுமல்லாமல், ஜனநாயகக் கட்சியினரின் நாடு தழுவிய செயற்பாடும் பரிதாபகரமாக இருக்கின்றது. செனட்டர்களுக்கான தேர்தல்களில் அவர்கள் முன்னேறத் தவறிவிட்டதுடன், உண்மையில் பிரதிநிதிகள் சபையிலும் இடங்களை இழந்தனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கொலைகார “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை அமல்படுத்தியதன் விளைவாக கிட்டத்தட்ட 250,000 பேர் இறந்திருந்தாலும், வேலையின்மை விகிதங்களையும் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் காணப்படாத அளவுகளை அடைந்தும், பைடெனின் பிரச்சாரம் மிகவும் பயனற்றதாக இருந்ததுடன், ட்ரம்பினால் 68 மில்லியன் வாக்குகளுக்கு மேலே பெறக்கூடியதாக இருந்தது. தொற்றுநோய்க்கு இல்லையென்றால், ட்ரம்ப் தேர்தலில் எளிதாக வென்றிருப்பார், ஒருவேளை பாரிய பெரும்பான்மையுடன் கூட என்றுதான் ஒருவர் முடிவு செய்ய முடியும்.

வோல் ஸ்ட்ரீட், உளவு அமைப்புகள் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுக்கு அழைப்புவிட இயல்பாகவே இயலாததாக உள்ளது. தொற்றுநோயைப் பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சியினர் ஒரு தேசிய முகக்கவசங்களை அணிவதைத் தவிர வைரஸை நிறுத்தவோ அல்லது பரந்த வேலையின்மை மற்றும் வறுமையை சமாளிக்கவோ எதுவும் முன்மொழியவில்லை. தற்போது தொற்றுநோயின் மையமாக இருக்கும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்களில், பைடென் தனது வாக்குகளின் சதவீதத்தை 2016 இல் கிளின்டனுடன் ஒப்பிடும்போது ஓரளவுக்கு மட்டுமே அதிகரிக்க முடிந்தது.

ட்ரம்பின் வாய்வீச்சு மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அவரது கூற்றின் மோசடி தன்மையை அம்பலப்படுத்த முற்படுவதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சி அமெரிக்க சமூகத்தில் முக்கிய மற்றும் தீர்க்ககரமான பிரச்சினையாக இனத்தை இடைவிடாமல் ஊக்குவிப்பதை இரட்டிப்பாக்கியது. ட்ரம்பின் இயல்பான மற்றும் கண்மூடித்தனமாக அர்ப்பணித்த வாக்காளர்களாக “வெள்ளையினத் தொழிலாள வர்க்கத்தை” இழிவுபடுத்தும் அனுபவவாதரீதியாக தவறான மற்றும் அரசியல்ரீதியாக பிற்போக்குத்தனமான கதைகளை ஊக்குவிக்க அது எல்லாவற்றையும் செய்தது.

மேலும், பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில் பைடென், மிச்சிகன் ஆளுநர் விட்மர் உட்பட ஜனநாயகக் கட்சி அதிகாரிகளுக்கு எதிரான பாசிச வன்முறையுடனான ட்ரம்பின் நெருங்கிய தொடர்பு மற்றும் வெளிப்படையான ஊக்குவிப்பின் முக்கியத்துவம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

ட்ரம்ப் அதிகாரத்தில் இருக்கவும் பாசிச வன்முறையைத் தூண்டவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கையில், பைடென் சமூகத்தில் சாதாரணமானவர்களையும் சிறந்தவர்களையும் பற்றிக் கூறிக்கொண்டு வருகிறார். புதன்கிழமை பிற்பகல் வழங்கிய கருத்துக்களில், பைடென் "வெப்பத்தைக் குறைக்க, பிரச்சாரத்தின் கடுமையான வார்த்தைபிரயோகங்களை எங்களுக்கு பின்னால் வைப்பது அவசியம்" என்று கூறினார். அவர் மேலும் கூறினார், "முன்னேற்றம் அடைய, நாங்கள் எங்கள் எதிப்பாளர்களை எதிரிகளாக கருதுவதை நிறுத்த வேண்டும்" என்றார்.

பைடெனின் கருத்துக்கள் ஜனநாயகக் கட்சியினர் அரசியல் மோதலை எதிர்வரும் வாரங்களில் எவ்வாறு அணுகுவர் என்பதை தெளிவுபடுத்துகின்றன. ட்ரம்பின் சதிகளுக்கு பரந்துபட்ட மக்களின் எதிர்ப்பைத் தடுக்க அனைத்தும் செய்யப்படும். வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் அச்சுறுத்தப்படுவதிலிருந்து தடுக்க, ட்ரம்பிற்கு எதிர்ப்பு தோன்றுவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சியினர் விரும்புகிறார்கள்.

ஜனவரி மாதம் பைடென் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகக் கட்சியினர் சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாதத்தின் வலதுசாரி நிர்வாகத்தை மேற்பார்வையிடுவார்கள். அவர்கள் உடனடியாக குடியரசுக் கட்சியின் பிரிவுகளுடன் அரசியல் கூட்டணியைத் தேடி, மேலும் தங்களை தீவிர வலது ஏற்ப தகவமைத்துக் கொள்வார்கள். ட்ரம்ப் அல்லது வேறு ஒருவரால் வழிநடத்தப்பட்ட ஒரு தீவிர வலதுசாரி, பாசிச இயக்கத்தின் மேலதிக வளர்ச்சிக்கு ஒரு பைடென் நிர்வாகம் சிறந்த நிலைமைகளை உருவாக்கும்.

இந்த சூழ்நிலையில், அனைத்து அரசியல் அணுகுமுறைகளிலும் மிகவும் ஆபத்தானது சுயதிருப்தியாகும். அரசியல் நிலைமை “இயல்பு நிலைக்கு” திரும்பும் என்று நம்புவது “ஓநாய் ஆட்டுக்குட்டியுடன் வசிக்கும், சிறுத்தை குழந்தை [இளம் ஆடு] உடன் படுத்துக் கொள்ளும்.” என்ற விவிலிய கனவைப் போலவே யதார்த்தமானது.

நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தேர்தலும் அதன் முடிவுகளும் ஒரு எச்சரிக்கையாகும். அமெரிக்க ஜனநாயகம் அதன் மரணப்போராட்டத்தில் உள்ளது. அதிர்ச்சியூட்டும் அளவிலான சமத்துவமின்மையால் உருவாகியுள்ள தீங்குமிக்க சமூக புண்கள் அதிசயங்களால் குணமடையாது.

தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் ஆபத்து என்பது, அமெரிக்க சர்வாதிகாரத்தின் ஒரு வடிவமாகும். இது இராணுவம் மற்றும் பொலிஸை உள்ளடக்கி, பாசிசப் பிரிவுகளுடன் இணைந்து "ஒழுங்கமைப்பின்" பாதுகாவலர்களாக தங்களை சித்தரிக்கிறது.

இந்த உண்மையான அரசியல் அச்சுறுத்தல் தோற்கடிக்கப்பட முடியும், ஆனால் அதற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் அரசியல் முகவர்களிடமிருந்து முற்றிலும் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி அவசியப்படுகிறது.

2020 தேர்தல் பிரச்சாரம் முழுவதும் சோசலிச சமத்துவக் கட்சி அபிவிருத்திசெய்த மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசியல் பகுப்பாய்வு மற்றும் வேலைத்திட்டம் சரியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்கள் பிரச்சாரத்தின் ஆதரவாளர்களையும், உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களையும் கடந்த ஆண்டின் நிகழ்வுகளில் இருந்து அத்தியாவசிய அரசியல் படிப்பினைகளை எடுத்துக்கொள்ளவும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேரவும் அதனை கட்டிமைக்கவும் முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading