பல்கலைக்கழகங்களில் அரச உளவாளிகளை ஈடுபடுத்துவதற்கு எதிராக போராடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சமூக சமத்துவத்துற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு, "பகிடிவதையை அடக்குதல்" என்ற சாக்குப் போக்கின் கீழ், இராஜபக்ஷ அரசாங்கமானது அரச உளவாளிகளை பல்கலைக்கழகங்களில் ஈடுபடுத்துவதற்கு எதிராகப் போராட முன்வர வேண்டுமென மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா உஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அறிவித்த பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, "பகிடிவதை செய்யும் பிரிவினரை பல்கலைக்கழகங்களில் இருந்து அகற்ற" அரச உளவு சேவையையும் பிற அரச புலனாய்வு சேவைகளதும் ஒத்துழைப்பு பாதுகாப்பு அமைச்சின் மட்டத்தில் இருந்து கிடைக்கும், என்று கடந்த மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிடம் கூறினார்.

இந்த திட்டத்தை நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் ஆதரித்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். புதிய திட்டத்தின் கீழ், அரச உளவுத்துறையும், பல்கலைக்கழகங்களில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒழுக்க பாதுகாப்பு அதிகாரிகளும் (மார்ஷல்கள்) கூட்டு நடவடிக்கையை செயல்படுத்தவுள்ளனர்.

இலவச கல்வியை வெட்டுவதற்கு எதிராக மாணவர்கள், கல்விசாரா மற்றும் கல்விசார் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதும், அதற்கு தலைமை தாங்கும் செயற்பாட்டாளர்களையும் அரசியல் அமைப்புகளையும் வேட்டையாடுவதே இதன் உண்மையான நோக்கம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

விடுதிகள், விரிவுரை அரங்குகள், கணினி ஆய்வகங்கள், வாசிப்பு அறைகள், பீட கட்டிடங்கள், ஆசிரியர்கள் மற்றும் பௌதிக வளங்கள் உட்பட மனித வளங்களின் கடுமையான பற்றாக்குறையை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் ஏனைய கல்விச் செலவுகளை குறைந்தபட்ச வழியில் ஈடுகட்டுவதற்கு ஒரு மாணவருக்கு மாதத்திற்கு ரூபா 15,000 செலவாகும்.

அரசாங்கத்தின் அற்ப உதவித்தொகையான 5,000 ரூபாய் குறித்த நேரத்தில் செலுத்தபடுவதில்லை. ஒருதொகை நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பெற்றோர் மீது மேலும் சுமையாக திணிக்கப்படுவதால், பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் சொந்த செலவினங்களுக்கும், சில சமயங்களில் தங்கள் குடும்ப உடன்பிறப்புகளின் கல்விச் செலவுகளுக்குமாக கொஞ்ச பணத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கும் பல்வேறு பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் பல்கலைக்கழக முறை சீரழிந்து வருவதால், உயர் தர தேர்ச்சி பெற்ற கிட்டத்தட்ட 200,000 மாணவர்களில் 20 சதவீத்துக்கும் குறைவானவர்களே பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, தொடர்ச்சியாக மாணவர்களின் போராட்டங்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில், அரச உளவாளிகள் ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புதிய மாணவர் சேர்க்கை விழாவில் பேசிய துணைவேந்தர், "ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் என்ற வகையிலும், விரிவுரையாளர்கள் என்ற வகையிலும் மற்றும் மாணவர் சங்க அதிகாரிகள் என்ற வகையிலும் உளவுத்துறை சார்ந்தவர்கள் 34 அல்லது 35 உறுப்பினர்கள் இணைகின்றார்கள். அதனால் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

கடந்த காலங்களில், இந்த உளவு வழிமுறைகளின் விளைவாக, மாணவர் மற்றும் ஆர்வலர்களை அச்சுறுத்துவதற்காக பொலிசார் அவர்களது விடுதிகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் பாய்ந்து சோதனை நடத்தினர்.

பல்கலைக்கழகங்களில் அடக்குமுறையை எளிதாக்குவதற்காக, தமக்கு முற்றிலும் சாதகமான துணைவேந்தர்களை அரசாங்கம் நியமிப்பது மற்றொரு பாரதூரமான ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்கலைக்கழங்களில் முதலாளித்துவ அரசின் மற்றும் இராணுவத்தின் தலையீடு அதிகரித்திருப்பதன் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்குபேர் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபாரன் மற்றும் அழகியல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சௌமியா லியானகே ஆகியோர் அரசாங்கத்தின் சமீபத்திய பலிக்கடாக்கள் ஆனார்கள்.

தொற்றுநோயால் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், தொழிலாள வர்க்க, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமாக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைமைகளின் மத்தியிலேயே, இதுவரை அறிவிக்கப்படாமல் செயற்பட்டு வந்த உளவுத்துறை வலையமைப்பை, இராணுவத்தின் கீழ் தொடங்குவதாக புதிய இராஜபக்ஷ ஆட்சி வெளிப்படையாகக் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் கோடாபய இராஜபக்ஷ, கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், பாதுகாப்பு அமைச்சின் பொறுப்புகளை விரிவுபடுத்தத் தொடங்கினார். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தீர்க்கமான அரசு நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப் படைகளின் தளபதிகள் உட்பட 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை நிறுவியமை அதில் ஒரு குறிப்பிடத்தக்க முன் நடவடிக்கையாகும். ஜூன் மாதத்தில் நிறுவப்பட்ட இது, எந்தவொரு அரச நிறுவனத்தின் நிர்வாகத்தையும் இயக்கும் அதிகாரத்தை இராணுவத்தின் கீழ் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்த ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு, 20 ஆவது திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமான அங்கீகாரம் பெறுவதே இராஜபக்ஷவின் நோக்கமாக இருந்தது. இந்த இராணுவ சர்வாதிகாரத் திட்டங்கள், அரசாங்கத்தின் வலிமையின் பிரதிபலிப்பு அல்ல, மாறாக அது எதிர்கொள்ளும் ஆழ்ந்த நெருக்கடியின் வெளிப்பாடு என்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. சுட்டிக்காட்டுகிறது.

தொற்று நோயால் ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ அமைப்பின் அமைப்புரீதியான நெருக்கடியை எதிர்கொண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி நோக்கித் திரும்பியது. அடுத்த நான்கு ஆண்டுகளில், 4 பில்லியன் டொலர் என்ற பிரமாண்டமான வருடாந்திர கடன் தவனையை செலுத்த வேண்டியிருப்பதால் இலங்கையின் கடன் நெருக்கடி தீவிரமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், சர்வதேச நாணய நிதியம் கோருகின்ற, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சலுகைகளை வெட்டுவது மற்றும் தனியார்மயமாக்கலை தரிதப்படுத்துவதைத் தவிர வேறு வழி அரசாங்கத்துக்கு கிடையாது.

அதே நேரம், முன்னெப்போதும் இல்லாதளவு சமூக சமத்துவமின்மையை எதிர்கொண்டு, சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சக்திவாய்ந்த வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கும்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடக்கம் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் சர்வாதிகார ஆட்சி முறைமைக்கு வேகமாக மாறுகின்றன. இந்த சர்வதேச நிகழ்வுப் போக்கே இராஜபக்ஷ ஆட்சியின் நடவடிக்கையில் வெளிப்படுகிறது. அத்துடன், முதலாளித்துவ முறைமையின் அனைத்து அரசியல் கட்சிகளும் மட்டுமல்லாமல், அனைத்து மத்தியதர வர்க்க போலி-இடது அமைப்புகளும், ஏதாவதொரு முறையில் அந்த சர்வாதிகார நடவடிக்கைகளுடன் அணிதிரண்டிருப்பதை சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட முதலாளித்துவ ஸ்தாபனத்தின் அனைத்து கட்சிகள் மற்றும் போலி-இடது அமைப்புகளின் ஆதரவு காரணமாக இராஜபக்ஷவின் சர்வாதிகார பயணம் எளிதாக்கப்பட்டுள்ளது.

போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) தலைமையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.), கடந்தாண்டு உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பெயரில், பல்கலைக்கழகங்களுக்குள் இராணுவ சோதனைகளை நடத்துவதற்கு அதன் உறுப்பினர்களை ஈடுபடுத்தியது. அ.ப.மா.ஒ. மற்றும் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களும், பாடசாலைகளுக்கு துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்று பிரச்சாரம் செய்தன.

கொரோனா தடுப்பு செயலணியை இராணுவத் தளபதியின் கீழ் நியமிப்பதன் மூலம், இராணுவமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும், அரசாங்கத்தின் திட்டத்திற்கு தனது ஆதரவை அறிவித்து, மு.சோ.க. அரசாங்கத்திற்கு இரண்டு கடிதங்களை அனுப்பியது. இப்போது அ.ப.மா.ஒ., மு.சோ.க. மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் அரச உளவாளிகளை பல்கலைக்கழகங்களுக்குள் நிலைநிறுத்துவது உட்பட ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து முற்றிலும் மௌனமாக உள்ளன.

சர்வாதிகார அச்சுறுத்தலைத் தோற்கடிக்கக் கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தைச் சுற்றி முழு மாணவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, அவர்களுக்கு உள்ள விரோதப் போக்கிலிருந்தே மு.சோ.க. இன் இந்தக் கொள்கைகள் தலைநீட்டுகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன வேலைத்திட்டத்திற்கான முன்நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த ஜனநாயக விரோத உளவு பார்ப்பு நடவடிக்கையை நிபந்தனையின்றி இரத்துச் செய்ய வேண்டும் என்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரம் செய்கிறது.

* பல்கலைக்கழகங்களில், முதலாளித்துவ அரசாங்கங்கள் பின்பற்றும் அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்களைப் பாதுகாப்பதற்காக தீவிரமாக தலையிட வேண்டும் என, தொழிலாளர்களை நாங்கள் அழைக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, பல்கலைக்கழகங்களில் தொழிலாளர்களின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கவும், அவற்றுக்கு மாணவர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளவும் முன்வருமாறு பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

* தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவைப் பெறுமாறு ஐ.வை.எஸ்.எஸ்.இ. மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. ஏனென்றால், முதலாளித்துவ அரசாங்கத்தின் அடக்குமுறையைத் தோற்கடிக்கவும், அதன் தோற்றுவாயான முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறியும் திறன் கொண்டது தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும்.

* முதலாளித்துவத்தின் அமைப்புரீதியான நெருக்கடியிலிருந்து தோன்றும் இந்த தாக்குதல்களை, முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாற்ற முடியாது. எனவே, அரச அடக்குமுறையைத் தோற்கடித்து, கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது முதலாளித்துவ அரசாங்கங்களையும் முதலாளித்துவ அமைப்பையும் தூக்கிவீசுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. என்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் அதன் இலங்கைக் கிளையான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) இளைஞர் மற்றும் மாணவர் பிரிவாகும். ஐ.வை.எஸ்.எஸ்.இ., அனைத்துலகக் குழு மற்றும் சோ.ச.க. உடன் இணைந்து, உலக முதலாளித்துவ அமைப்பின் தாக்குதல்களுக்கும் ஏகாதிபத்திய உலகப் போரின் அச்சுறுத்தலுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கே போராடுகின்றது.

இந்த வேலைத் திட்டத்தை எதிர்க்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, இந்த போராட்டத்தில் செயலில் பங்கேற்கவும், பல்கலைக்கழகங்களில் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் கிளைகளை உருவாக்கவும் முன்வருமாறு, அனைத்து மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.