முன்னோக்கு

2020 தேர்தல் முடிவுகள் அடையாள அரசியல் சொல்லாடலை உடைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2020 ஜனாதிபதி தேர்தலில் வாக்குகள் மீதான ஓர் ஆரம்ப ஆய்வு, ஜனநாயகக் கட்சியால் இடைவிடாது ஊக்குவிக்கப்படும் அமெரிக்க அரசியலின் இனவாத சொல்லாடலைப் பொய்யென அம்பலப்படுத்துகிறது. குறிப்பாக தேர்தல் முடிவின் பல அம்சங்கள், அந்த முடிவுகளில் சமூக பொருளாதார காரணிகளே மேலோங்கி இருப்பதை எடுத்துக்காட்டுவதில் முக்கியமானவையாக உள்ளன.

2016 தேர்தல் முடிவுகளுக்கும் 2020 தேர்தல் முடிவுகளுக்கும் இடையிலான ஓர் ஒப்பீடானது, பைடெனுக்குத் தங்கள் வாக்குகளை வழங்கிய வெள்ளையின தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் மீது தொற்றுநோயின் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பே தேர்தலை மாற்றுவதில் முக்கிய காரணியாக இருந்ததை எடுத்துக்காட்டுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தில் இருந்தும் கீழ்மட்ட நடுத்தர வர்க்க பிரிவுகளிடமிருந்தும் வாக்குப்பதிவு கணிசமானளவுக்கு அதிகமாக இருந்தது. மக்கள் வாக்குகள் மூலமாக பைடென் வெற்றி பெறுவதில் அவருக்கான வாக்கு வித்தியாசத்தை அதிகரிக்க உதவிய இது, மதிப்பிடப்பட்ட 6 அல்லது 7 மில்லியன் வாக்குகளை விட அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது — 2016 இல் ட்ரம்பைத் தோற்கடிக்க கிளிண்டன் பெற்ற வித்தியாசத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். தகுதியான வாக்காளர்களில் 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த ஆண்டு வாக்களித்தனர், பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட 1900 க்குப் பின்னர் மிக உயர்ந்த விகிதமாகும். 1968 இல் வாக்குப்பதிவு 60.7 சதவீதமாக இருந்தது, அதற்குப் பின்னர் அது ஒருபோதும் 60 சதவீதத்தை எட்டியதில்லை.

அங்கே ஆண்கள், வெள்ளையின ஆண்கள் மற்றும் கல்லூரி பட்டங்கள் இல்லாத வெள்ளையர்கள் மத்தியில் ட்ரம்புக்கு எதிரான வாக்குகளில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது. விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் அரிசோனா உட்பட கொரொனா வைரஸ் தொற்றுநோயால் சீரழிக்கப்பட்ட மாநிலங்களில், வெள்ளையின ஆண்களிடையே இந்த மாற்றம் மாநிலத்தின் சூழலை மாற்றி பைடென் கணக்கில் சேர்ந்தது.

2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்குக் கிடைத்ததை விட பைடென் மதிப்பிடப்பட்ட (எல்லா இனத்தையும் சேர்ந்த) 8.6 மில்லியனுக்கும் அதிகமான ஆண்களின் வாக்குகளை வென்றார், அதேவேளையில் ஆண்களிடையே ட்ரம்புக்கான ஆண்களின் வாக்குகள் தோராயமாக 2016 இல் கிடைத்ததை விட அதிகரித்திருந்தது. ஆனால் பைடென் வெள்ளையின வாக்காளர்களில் 42 சதவீதத்தினரின் வாக்குகளை வென்றார், இது 2016 இல் கிளிண்டன் வென்றதை விட 37 சதவீதம் அதிகரிப்பாகும். ஒட்டுமொத்தமாக, 2016 ஐ விட 2020 இல் 6.4 மில்லியனுக்கும் அதிகமான வெள்ளையினத்தவர்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்திருப்பதாக மதிப்பிடப்பட்டது.

Votes by Gender in the 2020 US elections

2020 இல், வெள்ளையின ஆண்களின் வாக்குப்பதிவு மொத்தத்தில் அதிகமாக இருந்ததற்கு மத்தியிலும், 2016 இல் 28.33 மில்லியனில் இருந்து 2020 இல் ட்ரம்ப் 28.77 மில்லியன் வாக்குகளை வென்றிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வெள்ளையின ஆண்களிடையே, ட்ரம்ப் சற்று சரிவைச் சந்தித்தார். இருந்தும் பைடென் ஒட்டுமொத்தமாக இந்த கூட்டத்திலிருந்து பெரும்பான்மையைப் பெறத் தவறிய போதும், 2016 இல் வெள்ளையின ஆண்களிடையே கிளிண்டன் வென்றதை விட பைடென் தோராயமாக 5.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை வென்றார்.

Votes by Gender and Race in the 2020 US elections

2020 இல், ட்ரம்ப் மற்றும் பைடென் இருவருக்குமே கல்லூரி பட்டம் பெறாத வெள்ளை இனத்தவர்களிடம் இருந்து வாக்குகள் அதிகரித்திருந்தது. ட்ரம்புக்கு அத்தகைய வாக்காளர்களிடம் இருந்து 2016 இல் கிடைத்ததை விட 2020 இல் மதிப்பிடப்பட்ட 3.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்த அதேவேளையில், பைடெனோ கிளிண்டனுக்குக் கிடைத்ததை விட சுமார் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பைடென் இந்த வகைப்பாட்டின் "புதிய" வாக்காளர்களின் வாக்குகளை 60-40 என்ற வித்தியாசத்தில் வென்றார். ட்ரம்பின் வாக்குப் பங்கு 2016 இல் இருந்து சற்று வீழ்ச்சி இருந்தது, அதேவேளையில் ஜனநாயகக் கட்சியின் பங்கு 29 இல் இருந்து 35 சதவீதத்திற்கு அதிகரித்தது.

2020 முடிவுகள் தொழிலாள வர்க்கத்தில் ட்ரம்புக்கு எதிரான ஒரு மாற்றத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.

குடும்ப வருமானம் 100,000 டாலருக்குக் கீழே உள்ள குடும்பங்களின் வாக்காளர்கள் 2016 இல் கிளிண்டனுக்கோ அல்லது ட்ரம்புக்கோ இட்ட வாக்குகளை விட சுமார் 23 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை இம்முறை பைடெனுக்கோ அல்லது ட்ரம்புக்கோ இட்டிருந்தார்கள். 50,000 டாலருக்கும் குறைவான குடும்ப வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் மத்தியில், ட்ரம்ப் 2016 இல் அவர் பெற்றதை விட மதிப்பிடப்பட்ட 2.1 மில்லியனுக்கும் அதிக வாக்குகளைப் பெற்றார், ஆனால் பைடென் கிளிண்டனை விட 4.9 மில்லியன் அதிக வாக்குகளை வென்றார். இது 2016 இல் 53 சதவீதத்திலிருந்த ஜனநாயகக் கட்சியினரின் பங்கை 2020 இல் 57 சதவீதத்திற்கு உயர்த்தியது.

செல்வ செழிப்பான வட்டாரங்களில், ட்ரம்ப் கணிசமானளவுக்கு அவர் ஆதரவை அதிகரித்திருந்தார். 2016 இல், 100,000 டாலருக்கும் அதிகமான குடும்ப வருமானம் பெறுபவர்கள் மத்தியில் கிளிண்டனும் ட்ரம்பும் சமமாக இருந்தனர், இருவருமே சுமார் 21.8 மில்லியன் வாக்குகளை வென்றிருந்தனர். ஆனால் 2020 இல், பல மில்லியன் டாலர் செல்வ செழிப்பானவர்கள் ட்ரம்புக்கு ஆதரவை மாற்றியிருந்தனர். “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" ட்ரம்பின் கொள்கை பங்குச் சந்தையை உயர்த்துவதற்கும் இந்த ஒட்டுண்ணித்தனமான அடுக்கைச் செழிப்பாக்கவும் தீனிப் போட்டதால் செல்வந்த வாக்காளர்கள் ட்ரம்பை ஆதரித்தனர்.

ஆனால் வாக்காளர்களின் பங்கு, அதாவது 100,000 டாலருக்கும் அதிக குடும்ப வருமானங்கள் பெறும் வாக்காளர்கள் எண்ணிக்கை 34 சதவீதத்தில் இருந்து 28 சதவீதத்திற்குக் கணிசமாக சரிந்திருந்தது, இது 2016 இல் இருந்ததை விட 2020 இல் மதிப்பிடப்பட்ட 3 மில்லியன் வாக்கு வீழ்ச்சியாக இருந்தது.

இது எப்போதுமே அதிக இசைவுடன் வாக்களிக்கும் செல்வந்தர்கள் மத்தியில் பெரும்பாலும் வாக்குப்பதிவு சரிந்ததன் விளைவு என்பதால் அல்ல. இது பிரதானமாக 2016 இல் கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதைப் பிரதிபலிக்கிறது, இவர்கள் 2016 இல் 100,000 டாலருக்கும் அதிக வருமானம் ஈட்டும் குடும்பங்களாக இருந்ததில் இருந்து 2020 இல் 50,000-100,000 டாலர் பிரிவுக்குள் சரிந்துள்ளனர். இந்த தொற்றுநோயால் ஏற்பட்ட பாரிய வேலையிழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த அடுக்கு, இப்போது வாக்காளர்களில் 38 சதவீதமாக உள்ளது. இது 2016 இல் 30 சதவீதத்தில் இருந்ததை விட ஒரு பாரிய அதிகரிப்பாகும்.

இந்த 50,000-100,000 டாலர் பிரிவின் "புதிய" வாக்காளர்கள் (அதாவது இவர்கள் 2016 இல் உயர் வகுப்பில் இருந்தனர் அல்லது 2016 இல் இவ்விரு பிரதான கட்சிகளில் எதற்கும் வாக்களிக்காமல் இருந்தனர்) ட்ரம்புக்கு மதிப்பிடப்பட்ட 5.2 மில்லியன் வாக்குகளும் பைடெனுக்கு 14.1 மில்லியன் வாக்குகளும் வழங்கினர். 2016 இல் ட்ரம்ப் 49-46 சதவீத வித்தியாசத்தில் இந்த வகைப்பாட்டை வென்றார் என்கின்ற அதேவேளையில் 2020 இல் பைடென் இதை 56-43 வித்தியாசத்தில் வென்றார்.

Votes by Income in the 2020 US elections

பெண்களிடம் இருந்தும், பணக்காரர்களிடம் இருந்தும், ஆபிரிக்க-அமெரிக்க, இலத்தீனோ, ஆசிய-அமெரிக்க மற்றும் LGBT மக்களின் செல்வ செழிப்பான பிரிவுகளிடம் இருந்தும் ட்ரம்புக்கு கணிசமானளவுக்கு ஆதரவு அதிகரித்தது என்ற உண்மை குறிப்பாக முக்கியமானதாகும்.

ஆபிரிக்க-அமெரிக்க ஆண்களிடையே, ட்ரம்புக்கு அவரின் வாக்கு பங்கு 2016 இல் கிடைத்த 13 சதவீதத்தில் இருந்து 2020 இல் 18 சதவீதமாக அதிகரித்தது, இது மொத்த வாக்குகளில் சுமார் 500,000 அதிகரிப்பைக் கணக்கில் கொண்டு வருகிறது. ஜனநாயகக் கட்சியினருக்கும் சுமார் 600,000 வாக்குகள் மட்டுமே கருப்பின ஆண்களிடம் இருந்து அதிகரித்தது, இதன் அர்த்தம் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு "புதிய" ஆபிரிக்க-அமெரிக்க ஆண் வாக்காளர்களின் மொத்த வாக்குகள் ஏறக்குறைய 50-50 என்று பிரிந்திருந்தது.

ஆபிரிக்க-அமெரிக்க பெண்கள் மத்தியில், ட்ரம்புக்கு அவரின் மொத்த வாக்குகள் மற்றும் அவரின் வாக்கு பங்கு இரண்டுமே இரண்டு மடங்கை விட அதிகமாக அதிகரித்திருந்தது. 2016 இல் ஆபிரிக்க-அமெரிக்க பெண்களின் மொத்தம் சுமார் 383,000 வாக்குகளில் நான்கு சதவீதம் மட்டுமே ட்ரம்புக்கு வாக்களித்தனர். 2020 இல், ட்ரம்ப் எட்டு சதவீதம் வென்றார், அல்லது 868,000 வாக்குகள் வென்றார். இது முன்பில்லாத வெற்றியாகும்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆபிரிக்க-அமெரிக்க வருமான வகைப்பாட்டைப் பிரித்துக் காட்டவில்லை என்றாலும், அது கல்வி அடிப்படையில் ஒட்டுமொத்த "வெள்ளையினத்தவர் அல்லாத" வாக்குகளைப் பிரித்துக் காட்டின, இது கிடைக்கும் வருமானத்திற்கு நெருக்கமான பிரதியீடாக உள்ளது. மக்கள்தொகையில் பொதுவாக செல்வசெழிப்பான பிரிவுகளிடம் இருந்து (மொத்தம் 5.4 மில்லியன்) ட்ரம்ப் 2016 இல் பெற்றதை விட மதிப்பிடப்பட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை வென்றார். அவருக்கு 2016 இல் கிடைத்த 22 சதவீத வாக்கு பங்கை விட அது 2020 இல் 27 சதவீதமாக அதிகரித்தது.

Votes by Income in the 2020 US elections

இலத்தீனோ வாக்காளர்களின் புள்ளிவிபரங்களும் ஆபிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் ஆசிய-அமெரிக்கர்களின் புள்ளிவிபரங்களைப் போலவே உள்ளன. LGBT வாக்காளர்கள் மத்தியில், ட்ரம்பின் மொத்த வாக்குகள் மூன்று மடங்கு அதிகரித்ததுடன், ஒட்டுமொத்த LGBT வாக்குகளின் பங்கு இரண்டு மடங்கு அதிகரித்தது. 2016 இல், ட்ரம்ப் LGBT மக்களிடம் இருந்து சுமார் 950,000 வாக்குகள் வென்றார்—இது ஜனநாயகக் கட்சியினரின் 77 சதவீதத்தினருடன் மொத்தம் 14 சதவீதமாகும். 2020 இல், ட்ரம்ப் சுமார் 3 மில்லியன் வாக்குகள் வென்றார், அல்லது இது ஜனநாயகக் கட்சியினரின் 61 சதவீதத்தில் மொத்தம் 28 சதவீதமாகும்.

இளம் வாக்காளர்கள் (18-29 வயதினர்) இடையே வாக்குப்பதிவில் அதிகரிப்பு இல்லை என்றாலும், 2016 உடன் ஒப்பிடுகையில் ட்ரம்ப் இந்த வட்டாரத்திடமிருந்து 600,000 வாக்குகளை இழந்தார், அதேவேளையில் ஜனநாயகக் கட்சியினர் அண்மித்து இரண்டு மில்லியனைப் பெற்றனர். இளைஞர்கள் 2016 ஐ விட சற்று குறைவாக வாக்குப்பதிவு செய்தனர், ஆனால் ட்ரம்புக்கு எதிராக மிகவும் குறிப்பிடத்தக்களவில் திரும்பி இருந்தனர்.

இவ்வாறு இனவாத சொல்லாடல் கீழறுக்கப்படுவது, அமெரிக்கா "வெள்ளையின மேலாதிக்க" அடிப்படையில் உள்ளது என்றும், ட்ரம்ப் தான் வெள்ளையின மக்களின் இயற்கையான பிரதிநிதி என்றும் கூறி, இனவாத பிளவுகளை ஊக்குவிப்பதையே தங்களின் தொழில்ரீதியான பொறுப்பாக கொண்டுள்ளவர்களைக் கோபமூட்டுகிறது. தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளின் சமூக நலன்களுக்கு இனவாத சொல்லாடலைப் பேணுவது முக்கியமாக உள்ளது, இவர்கள் தங்களின் சொந்த நலன்களை முன்னெடுக்க பயன்படுத்தும் அதை பயன்படுத்துகிறார்கள்.

நியூ யோர்க் டைம்ஸின் சார்லெஸ் புளோ, ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகளில் உள்ள சில மாற்றங்களைச் சுட்டிக்காட்டி புதன்கிழமை ஒரு கட்டுரை எழுதினார், அதில் அவர் மேற்குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி போதினும், இது வெறுமனே "வெள்ளையின ஆதிக்க அதிகாரத்தை" உம், “பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை மற்றும் இனத்தையும் கூட எட்டுவதற்கான" அதன் ஆற்றலையும் எடுத்துக் காட்டுகிறது என்று கூறி நிறைவு செய்தார். அதாவது, (செல்வந்த) ஆபிரிக்க அமெரிக்கர்களின் பெருவாரியான பிரிவும் ஏனைய சிறுபான்மையினரும் வெள்ளை மேலாதிக்கத்தைத் தூக்கிப்பிடிக்க ட்ரம்புக்கு வாக்களித்ததாக புளோ அர்த்தமின்றி வாதிடுகிறார்.

வாக்கு மாறிய வடிவங்களில் மேலோங்கி செல்வாக்கு செலுத்தும் காரணிகள் தன்மையில் சமூக பொருளாதார காரணியாகும், ஆனால் தொழிலாளர்கள் அவர்களின் சுயாதீனமான வர்க்க நலன்களில் நனவுபூர்வமாக இருக்கிறார்கள் என்பதை இது தன்னியல்பாக அர்த்தப்படுத்தாது. ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் உட்பட, தொழிலாளர்கள், எல்லா விதமான செல்வாக்கிற்கும், சூழ்ச்சிகளுக்கும் ஆளாகி உள்ளனர், ட்ரம்ப் அவரின் சொந்த இழிவார்ந்த வழியில் பொருளாதார நிச்சயமற்றத்தன்மைகளுக்கு முறையீடு செய்யவும், குடியரசுக் கட்சியினரைப் போலவே பெரிதும் வங்கி பிணையெடுப்புகள், போர் மற்றும் சமூக சமத்துவமின்மையின் கட்சியாக உள்ள ஜனநாயகக் கட்சிக்கான விரோதத்தை மூலதனமாக்கவும் முறையிட முனைந்தார்.

இரண்டு முதலாளித்துவக் கட்சிகள் கட்டுப்பாட்டிலுள்ள இப்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள், மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினரின், எல்லா இன மற்றும் பாலினத்தைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின், சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கு எந்த உண்மையான வெளிப்பாடும் கிடையாது.

தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு நிஜமான வர்க்க நனவை அபிவிருத்தி செய்வதும், முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதே சோசலிஸ்டுகளின் பணியாகும்.

Loading