பிரேசிலின் மருத்துவமனை தீ விபத்து தொழிலாளர்களின் உயிரின்மதிப்பை குற்றகரமாக புறக்கணிக்கப்பதை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அக்டோபர் 27 அன்று ஏற்பட்ட ஒரு தீ விபத்து எட்டு பேரை பலிகொண்டது, அதில் குறைந்தது மூன்று கோவிட்-19 நோயாளிகளும் இறந்துள்ளனர். மருத்துவமனையின் பல பிரிவுகளூடாக அடர்ந்த புகைமண்டலத்தை பரப்பிய கீழ்தளத்தில் தோன்றிய தீப்பிழம்புகளிலிருந்து தப்பிக்க விரைந்து இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்த அனைத்து நோயாளிகளுமே ஏதோவொரு வகை சிக்கல்களால் பாதிக்கப்பட்டனர்.

எந்தவொரு அவசரகால திட்டமும் இல்லாததால் நிலைதவறிப் போன நிலையில், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் என அனைவரும் எவ்வாறேனும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், இந்நிலையில் சில நோயாளிகளை தற்காலிகமாக இடமாற்றுவதற்கு அருகிலுள்ள டயர் கடைகளை கூட அவர்கள் பயன்படுத்த நேரிட்டது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் 42 வயது நுபியா ரோட்ரிக்ஸ் (Nubia Rodrigues) ஒருவராவார். இவர் ஒரு கதிரியக்கவியலாளராக இருந்துள்ளார், சில நாட்களுக்கு முன்னர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஏற்கனவே இரண்டு பொது சுகாதாரப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று பின்னர் இங்கு வந்து சேர்ந்திருந்தார். அவர் தனது சக பணியாளர்களால் ஒரு படுக்கை விரிப்பில் வைத்து வேறொரு மருத்துவமனைக்கு மருத்துவ அவசர ஊர்தியில் கொண்டு செல்லப்பட்டார், என்றாலும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தீ விபத்து ஏற்பட்ட நாளில் இடமாற்றம் செய்யப்பட்ட 44 நோயாளிகளில் 21 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

தீ விபத்தின் போது பொன்சுசெசோ மருத்துவமனைக்கு வெளியே உள்ள நோயாளிகளும் ஊழியர்களும் (Credit: Tania Rego/Agencia Brasil)

உண்மையில், ரியோ மாவாட்ட பொது சுகாதார வலையமைப்பில் உள்ள மிகப்பெரிய மருத்துவ வளாகமான பொன்சுசெசோ ஃபெடரல் மருத்துவமனையில் (Federal Hospital of Bonsucesso-HFB) ஏற்பட்ட தீ விபத்து, பிரேசிலின் ஒட்டுமொத்த பொது சுகாதார அமைப்பு முறையையும் பாதிக்கும் ஆபத்தான நிலைமைகளின் குற்றவியல் விளைவாகும்.

தொற்றுநோயின் ஆரம்பகட்டத்தில், இதே மருத்துவமனை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்றதொரு மையமாக கருதப்பட்டது. மாதத்திற்கு சராசரியாக 1,300 உள்நோயாளிகளின் சேர்க்கைகளைக் கொண்டதான இந்த மருத்துவமனையில், கோவிட்-19 நோயாளிகளுக்காக அண்ணளவாக 200 புதிய படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படவிருந்தது, என்றாலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபணர்களின் பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சரான நெல்சன் டீச் (Nelson Teich) – இந்த ஆண்டு மட்டும் இந்த பதவியில் இருந்த மூவரில் ஒருவராவார் – இந்த மருத்துவமனையை பார்வையிட்டதுடன், அடிப்படை பொருட்கள் மற்றும் சுவாசக் கருவிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த மருத்துவமனை குறைவாக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) வாங்கவும், ஏற்புடைய வேலை நிலைமைகளை உருவாக்கவும் கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரது இந்த விஜயத்திற்குப் பின்னர், இந்த மருத்துவமனையை ஒரு கோவிட்-19 மையமாக நியமிக்கப்படுவது நிராகரிக்கப்பட்டது, மேலும் அதிகரித்தளவில் ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

தீ விபத்தின் போது பொன்சுசெசோ மருத்துவமனை (Credit: Tania Rego/Agencia Brasil)

வெளிப்படை கணக்கீட்டு அமைப்பின் (Open Accounts Association) ஆய்வின் படி, மருத்துவமனையின் வரவு-செலவுத் திட்டம் 2010 முதல் அநேகமாக 40 சதவிகித அளவிற்கு குறைக்கப்பட்டது, அதாவது ஆண்டுக்கு 218 மில்லியன் ரைஸ் (சுமார் 38 மில்லியன் அமெரிக்க டாலர்) முதல் 131 மில்லியன் ரைஸ் (சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்) வரை என குறைக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த மருத்துவமனை சீரழிவுக்குள்ளாகும் என்பது முன்கணிக்கத்தக்கதே. 2019 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, தீ பரவாமல் தடுக்கும் அமைப்புமுறையில் இருந்த கடுமையான குறைபாடுகளையும், மேலும் இரண்டு மின்மாற்றிகளின் அதிக வெப்பமடையும் தன்மையினால் “வெடிப்பதற்கான அதிகபட்ச ஆபத்து” இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறியமையும், அத்துடன் ஊழியர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமையும், தேசிய மற்றும் மாநில அளவிலான முதலாளித்துவ அரசாங்கங்களின் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தும் கொள்கைகளின் ஒரு பகுதியாகவே உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரியோ டி ஜெனிரோவில் ஏற்கனவே ஏற்பட்ட மருத்துவமனை தீ விபத்துக்களில் இது நான்காவதாகும். பிரேசிலின் அனைத்து மாநிலங்களிலும் இதே பிரச்சினைகள் உள்ளன என்றாலும், ரியோ நகர மருத்துவமனை தீ விபத்துக்களில் ஏற்பட்ட இறப்புக்கள் காரணமாக இந்த விவகாரங்கள் குறிப்பாக தீவிரமானவையாக உள்ளன. ஸ்பிரிங்க்ளர் பிரேசில் நிறுவனம் (Sprinkler Brazil Institute), 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, நாடு முழுவதுமான பொது மற்றும் தனியார் சுகாதார வசதிகளில் 45 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 96 சதவிகித அதிகரிப்பாகும். பெரும்பாலும் தீ விபத்துக்கள் விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்படாத நிலையில், உண்மையான இழப்புக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள்தொகையில் 70 சதவிகிதத்தினர் நம்பியிருக்கும் பொது சுகாதார அமைப்புமுறையின் ஆபத்தான உட்கட்டமைப்பு, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக இன்னும் அதிக சோகமான விளைவை எதிர்கொண்டுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான “போராட்டம்” என்பது, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தற்காலிக மற்றும் ஆபத்து நிறைந்த இடங்களில் மருத்துவ வசதிகளை நிறுவுதன் மூலம் குறித்துக்காட்டப்பட்டது, இது பொது வளங்களை முறையாக திருப்பிவிட உதவியது, அதேவேளை ஏற்கனவே உள்ள மருத்துவமனைகள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தன.

இந்த நிலைமைகளின் கீழாகவும், மற்றும் ஜனாதிபதி ஜாய்ர் போல்சொனாரோ மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் ஊக்குவித்த சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும் கொள்கையின் கீழாகவும், 160,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன என்றும், 5.5 மில்லியனுக்கும் அதிகமாக நோய்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் பிரேசில் ஏற்கனவே பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரியின் கண்காணிப்பின் படி, கொரோனா வைரஸ் பரவும் வீதம் பிரேசிலில் மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கை, குறியீட்டு எண் 1.01 ஆக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. (ஆகஸ்டில், இது முதல் முறையாக 1 ஆக குறைந்தது).

தீ விபத்தின் போது பொன்சுசெசோ மருத்துவமனை (Credit: Tania Rego/Agencia Brasil)

உச்சபட்ச எண்ணிக்கையிலான நோய்தொற்றுக்களையும் மற்றும் அதிகரித்து வரும் நோய்தொற்று வீதத்தையும் கருத்தில் கொள்ளாமல், ஏற்கனவேயுள்ள போதாத மருத்துவமனை உள்கட்டமைப்புக்கள் கூட அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாரா மாநிலத்தில் உள்ள காஸ்டன்ஹால் பிராந்திய மருத்துவமனை (Castanhal Regional Hospital) மூடப்பட்டதன் பின்னர் கடந்த மாதம் சுமார் 300 ஊழியர்கள் அங்கு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காலம்தாழ்த்தப்பட்ட ஊதியத்தையும் பணிநீக்க ஊதியத்தையும் கூட பெற முடியாததன் பின்னர், அக்டோபர் 15 அன்றும், மீண்டும் அக்டோபர் 28 அன்றும் அவற்றை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும், கால்பந்து விளையாட்டு மைதானங்களில் அமைக்கப்பட்டிருந்த கள மருத்துவமனைகள் உட்பட, பல மாநிலங்களில் உள்ள பெரும்பாலான தற்காலிக படுக்கைகள் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மித மிஞ்சிய நோயாளிகளின் வருகையினால் மற்ற மருத்துவமனைகள் ஸ்தம்பித்துள்ளன.

பொன்சுசெசோ ஃபெடரல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பின்னர், மருத்துவமனை முழுமையாக மூடப்படும் என்றும், அதன் ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நிர்வாகம் அறிவித்தது. என்றாலும், இதற்கு பதிலிறுப்பாக, குறைந்தபட்சம் மருத்துவமனையின் அடிப்படை உள்கட்டமைப்பு நெருப்பினால் பாதிக்கப்படவில்லை என்பதால், மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கோரி மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின்னர், நிர்வாகம் அதிலிருந்து பின்வாங்கி, மருத்துவமனையை பகுதியளவில் மீண்டும் திறக்க தீர்மானித்தது.

இந்த விவகாரங்கள் ஒவ்வொன்றும் நிரூபிப்பதான, அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பை பாதுகாப்பது மற்றும் மருத்துவமனை படுக்கைகள் பயன்படுத்தப்படாமல் விடுவதற்கு எதிரான போராட்டம், வளங்கள் குறைக்கப்படுவது மற்றும் உண்மையில் எரிந்து அழியும் பிரேசிலிய பொது மருத்துவமனைகளின் மோசமடைந்து வரும் நிலை ஆகிய அனைத்தையும் சரிசெய்ய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கையால் மட்டுமே உத்தரவாதம் வழங்க முடியும். கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பாரிய நோய்தொற்றுக்களும் இறப்புக்களும், முதலாளித்துவத்தின் முழுமையான இணக்கமற்ற தன்மையினால் முன்னரே உருவாக்கப்பட்டிருந்த நிலை குறித்தும், அத்துடன் தரமான இலவச சுகாதாரப் பாதுகாப்பு உட்பட, தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசிய சமூக தேவைகள் குறித்தும் அம்பலப்படுத்தியுள்ளன.

Loading