அமெரிக்க வெளியுறவுச் செயலர் இலங்கையை சீனாவுக்கு எதிராக அணிசேர வலியுறுத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அக்டோபர் 27-28 ஆம் திகதிகளில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையானது கொழும்பினை சீனாவுக்கெதிரான வாஷிங்டனின் ஆத்திரமூட்டல்களுடன் நேரடியாக அணிசேர வேண்டுமென்ற ஒரு எச்சரிக்கையாகும். பொம்பியோ, தனது வருகையின் போது, ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்தார்.

பொம்பியோ, அக்டோபர் 26 அன்று, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பருடன் சீனாவுக்கு எதிரான ஆத்திரமூட்டலை குவிமையப்படுத்தி, இராணுவ கூட்டாண்மையைப் பலப்படுத்துவதற்கு தமது இந்திய சமதரப்பினருடன் 2+2 கூட்டத்தில் பங்கேற்பதற்கு இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமானது இந்தோ-பசிபிக் பிராந்தியங்களில் அமெரிக்க இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் பலப்படுத்துவாகும்.

வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோ, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை 2020 அக்டோபர் 28 அன்று இலங்கையின் கொழும்பில் சந்தித்தார். (Credit: US State Department / Ron Przysucha)

ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் குணவர்தன உடனான பேச்சுவார்தையின் பின்னர், பொம்பியோ தனது சமதரப்பினருடன் கூட்டாக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உறையாற்றினார். அதில் கொழும்பிடம் இருந்து வாஷிங்டனுக்கு என்ன தேவை என்பதைச் சுட்டிக்காட்டினார். உறுதியான, இறையாண்மையுடைய இலங்கையானது உலக அரங்கில் அமெரிக்காவுக்கான ஒரு பலம்வாய்ந்த மற்றும் மூலோபாய கூட்டாளியாகும் என தெரிவித்தார்.

குண்டர்தனமான கருத்துக்களை கொட்டிய பொம்பியோ, இலங்கையுடனான சீனாவின் உறவுகளை கண்டனம் செய்தார். “கெட்ட ஒப்பந்தங்கள், இறையாண்மை மீறல்கள் மற்றும் தரை மற்றும் கடல் மீதான சட்டமற்ற நிலை போன்றவற்றின் மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு கொள்ளைடிப்பாளராக காண்கிறோம்,” என அவர் தெரிவித்தார். பின்னர் அவர், அமெரிக்காவானது வேறுபட்ட வழியில் வந்துள்ளது, அதாவது நண்பனாக, பங்காளனாக வந்துள்ளது என கூறினார்.

இலங்கைக்கான பொம்பியோவின் தகவலானது பெய்ஜிங்குடன் “கொடுக்கல் வாங்கல் வேண்டாம், அமெரிக்காவின் மூலோபாய நலன்களுக்கு சேவை செய்” என்பதே ஆகும். எவ்வாறெனினும், கொழும்பில் வாஷிங்டனின் கடந்தகால அரசியல் தலையீடுகளின் படி பார்த்தால், உறுதியான மற்றும் இறையாண்மையுடைய இலங்கை என்ற அவரின் கருத்தானது முற்றிலும் பாசாங்குத்தனமானதாகும். மேலும், அமெரிக்காவானது “சுதந்திரமான மற்றும் தங்கு தடையற்ற இந்தோ-பசிபிக்” என்ற பதாகையின் கீழ், சீனாவுக்கு எதிரான தனது போர் உந்துதலுடன் அணிவகுக்குமாறு நாடுகளை நயந்து பேசியும் அச்சுறுத்தியும் கோருகின்றது.

சீனா, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்யவும், உலகிற்கு ஏற்றுமதி செய்யவும் பயன்படுத்துகின்ற இந்து சமுத்திரத்தின் பிரதான கப்பல் பாதைகளுக்கு மிகவும் அருகில் இலங்கை அமைந்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சீன-வீரோத குழுவின் டோக்கியோவில் நடந்த நாற்கூட்டு பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தில் இந்தியாவுடனான அதன் அதன் எல்லையின் வழியே 60,000 துருப்புக்களை நிறுத்தியமைக்காக சீனாவை கண்டித்ததுடன் இந்தப் பிராந்தியங்களில் அமெரிக்க இராணுவத்தைக் கட்டியெழுப்புவதானது “நாங்கள் அவர்களை எதிர்த்து அவர்கள் மீது சுமைகளைத் திணிக்கபோகிறோம்” என சீனாவிற்கு ஒரு சமிக்ஞை அனுப்பும் என்று அவர் அறிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், பொம்பியோ, இலங்கை தலைவர்களுடனான தனது கலந்துறையாடல் “உலகின் சில மிக இன்றியமையாத கடல் வழிகளைத் திறந்து வைப்பதற்கு உதவுகின்ற பாதுகாப்பு ஒத்துழைப்பின்” மீது குவிமையப்படுத்தப்பட்டது, என அறிவித்தார். அமெரிக்கா, இலங்கை பாதுகாப்புப் படைகளுடன் பயிற்சியில் ஈடுப்பட்டதாகவும் இலங்கை கடற்படைக்கு இரண்டு கரையோர காவல் கப்பல் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குனவர்த்தன இலங்கையின் வெளிநாட்டு கொள்கையானது நடுநிலையானதும் அணிசேராததும் மற்றும் சினேகபூர்வமானதும் ஆகும், என தெரிவித்து பிரதிபலித்தார். ஆனால், நமது நாடு “எமது மூலோபாய அமைவுடன், வருகின்ற வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக நனவோடு உள்ளது, நாங்கள் எமது கடல்கள் மற்றும் வான் எல்லையில் பயணத்தின் சுதந்திரத்தை பேணுவதன் முக்கியத்தையும் காண்கிறோம்,” எனக் கூறி, அமெரிக்காவை சாந்தப்படுத்த முயற்சித்தார்.

இராஜபக்ஷவுடனான பொம்பியோவின் கலந்துறையாடல்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகின. இராஜபக்ஷ “இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு” கொண்ட தனது சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை வலியுறுத்தியதோடு, இலங்கை போன்ற நாடுகளுடன் சீனாவின் உறவுகளில் அது அந்த நாடுகளை கடன் பொறிக்குள் தள்ளுகின்றது என்ற வாஷிங்டனின் விமர்சனத்தை சுட்டிக்காட்டும் வகையில்- இலங்கை “கடன் பொறிக்குள்” சிக்கியுள்ளது என்பதை மறுத்து, சீனா உடனான பொருளாதார ஒத்துழைப்பை நியாயப்படுத்தினார், என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.

இந்த அறிக்கை, “இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான இருதரப்பு உடன்படிக்கையை” குறிப்பாக சுட்டிக்காட்டியது. இராஜபக்ஷ கூடுதலான அமெரிக்க முதலீடுகளையும் வலியுறுத்தினார்.

ஒரு மெல்லிய மூடிய அச்சுருத்தல் விடுத்த பொம்பியோ, அமெரிக்காவானது “பொறுப்புடமை, நீதி மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு அர்த்தமுள்ள, பலமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுமென முழுமையாக எதிர்பார்கின்றது,” என கொழும்பு ஊடகமொன்றிற்கு கூறினார். இது போர்க்குற்ற விசாரணை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாத யுத்தத்தின் முடிவினைத் தொடர்ந்து, தமிழ் உயரடுக்குகளுடன் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை செய்துகொள்வதற்கான முயற்சி போன்றவற்றுக்கான அமெரிக்காவின் கோரிக்கைகள் பற்றிய குறிப்புகளாகும்.

பொம்பியோவின் குறிப்புகளுக்கும், இலங்கையில் “மனித உரிமைகள்” பிரச்சினையை தீர்ப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. வாஷிங்டன், 2009 மே மாதம், போரின் இறுதி மாதங்களில், பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்களை கண்மூடித்தனமாக கொல்வதில் ஈடுபட்ட -தற்போதய ஜனாதிபதியின் சசோதரர்- ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான யுத்தத்திற்கு ஆதரவளித்திருந்தது. ஒபாமா நிர்வாகம், பெய்ஜிங்கிடமிருந்து இராஜபக்ஷ தானாகவே விலக்கிகொள்ள வைப்பதற்காக மட்டுமே, மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையை தூக்கிப் பிடித்ததுடன், அதைச் செய்யத் தவறியதால், 2015 இல் அவரை வெளியேற்றுவதற்கு ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்பாடு செய்தது.

பொம்பியோ வருகை பற்றி செய்தி வெளியிட்ட வோல்ஸ்றீட்ஜேர்னல், இராஜபக்ஷ அரசாங்கம் பெய்ஜிங்கிடமிருந்து மேலும் நிதி உதவிகளை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டு, இலங்கையானது புதிய கடன்கள், பல மில்லியன் டொலர் கட்டிட ஒப்பந்தங்கள் மற்றும் அதன் பங்காண்மையைப் பலப்படுத்த புதிய சட்ட வழிகாட்டல்களுடன், சீனா உடனான அதன் உறவுகளை அதிகரிக்க இருக்கின்றது” எனக் கூறுகின்றது.

இந்த கட்டுரை, கொழும்பில் பொம்பியோவின் உரை, சீனா உடனான உறவுகளை முன்னெடுப்பதற்கான “சாத்தியங்கள் சம்பந்தமாக இலங்கைக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கை” என குணாம்சப்படுத்தியது.

இலங்கை அரசாங்கம், இதுவரைக்கும் 480 மில்லியன் டொலர் உதவி மானிய தொகையினை உள்ளடக்கிய, அமெரிக்காவின் மிலேனியம் செலன்ஜ் கோபரேசன் (எம்.சி.சி.) உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை. வாஷிங்டன் இந்த எம்.சி.சி. உடன்படிக்கையை இலங்கை போன்ற நாடுகளை தன்னுடன் அணிசேருவதற்கு நெருக்குவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துகின்றது. இந்த உடன்படிக்கையை நிராகரிக்காத இராஜபக்ஷ அரசாங்கம், அதை திருத்துவதற்கு முயற்சிக்கின்றது.

கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து, அமெரிக்காவானது, இலங்கையுடன் படை நிலை உடன்படிக்கையை (சோஃபா) புதுப்பிக்க முயல்கிறது. இந்த உடன்படிக்கை, அமெரிக்க படையினரின் சுதந்திரமான நடமாட்டத்ததுக்கு அனுமதிக்கின்றது.

தன் பங்கிற்கு, அமெரிக்க இராணுவ சுற்றிவளைப்பு பற்றி சிரத்தை கொண்டுள்ள பெய்ஜிங் பிராந்திய நாடுகளில் இதை முகங்கொடுக்க முனைகின்றது.

இலங்கைக்கான சீன துாதரகம், “வேற்றுலக மனிதர் எதிர் கொள்ளைக்காரர்” விளையாட்டின் ஒரு படத்தை காட்சிப்படுத்தி வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியுடன், சீன கம்யூனிச கட்சியை “ஆக்கிரமிப்பாளனாக” வருணிக்கின்ற பொம்பியோவின் கருத்துக்களை விமர்சித்திருந்தது. அதன் விளக்க குறிப்பு கூறியதாவது: “செயலாளர் பொம்பியோவே, மன்னிக்கவும், நாங்கள் சீன-இலங்கை நட்புறவு மற்றும் கூட்டுறவினை மேம்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறோமே தவிர உங்கள் வேற்றுலக மனிதர் எதிர் கொள்ளைக்காரர் விளையாட்டில் ஈடுபாடில்லை.”

உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் மேலும் மோசமடைந்த, பாரிய கடன் நெருக்கடியை முகங்கொடுத்துள்ள கொழும்பு, பெஜ்யிங்கிடமிருந்து மேலதிக நிதி உதவியை நாடுகின்றது. இலங்கைக்கான சீனாவின் உதவியானது மார்ச் மாதம் வழங்கப்பட்ட இன்னொரு 500 மில்லியன் கடனுடன், ஏற்கனவே மொத்த தொகை 5 பில்லியனாக உள்ளது. பெய்ஜிங்க, 1.5 பில்லியன் நிதி பரிமாற்று வசதியுடன் 700 மில்லியன் டொலர் கடன் தொகை வழங்குவது பற்றி ஆராய்கின்றது. இராஜபக்ஷ இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகைதந்த சீன உயர் வெளிநாட்டு கொள்கை அலுவலர் யங் ஜீச்சியின் அழைப்பின் பேரில், டிசம்பரில் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

பொம்பியோ அக்டோபர் 28 அன்று இலங்கையிலிருந்து இந்து சமுத்திரத்தின் கடல் பாதைகளுக்கருகில் மூலோபாயரீதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடான மாலைதீவுக்கு புறப்பட்டார். 2018 இல், புது டெல்லியின் ஆதரவுடன் வாஷிங்டன் அமெரிக்க சார்பு இப்ராகிம் மொகமட் சொலிஹ் மூலம், சீன-சார்பு ஜனாதிபதி அப்துல்லா யமீனின் வெளியேற்றத்துக்கு அனுசரணை அளித்தது. மொகமட் சொலிஹ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். அமெரிக்கா கடந்த மாதத்தில் மாலைதீவுடன் பாரதூரமான செயல்வினைவுடைய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டது. பொம்பியோ, தனது பயணத்தின் போது மாலைதீவில் ஒரு அமெரிக்க துாதரகம் ஸ்தாபிக்கப்படும் என அறிவித்தார்.

Loading