இலங்கை: "நாட்டின் பொருளாதாரத்தை தொற்றுநோய்க்கு தியாகம் செய்யக்கூடாது" என்பதன் வர்க்க அர்த்தம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

“தொற்றுநோய்க்கு நாட்டின் பொருளாதாரத்தை தியாகம் செய்ய முடியாது. எனவே, தொற்றுநோய் இருக்கும் போதே நாட்டை திறந்த நிலையில் வைத்து, பொருளாதாரத்தை இயக்க வேண்டும்” என்பது, ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ முதல், முதலாளித்து வர்க்கத்தின் அனைத்து பிரதிநிதிகளதும், அவர்களின் கூலிப்படை ஊடக எழுத்தாளர்களின் மற்றும் பல “கல்வியாளர்” பண்டிதர்களின் மந்திரமாக மாறியுள்ளது.

அவர்களின் வாதம் என்னவென்றால், தொற்றுநோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதன் காரணமாக, அதுவரை நாட்டை முடக்கி வைப்பது “நடைமுறை சாத்தியமானது” அல்ல, என்பதாகும். அவர்களைப் பொறுத்தவரை, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் “கடுமையாக” கடைப்பிடித்து, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். இது, “புதிய வழமை” என்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த “புதிய வழமை” என்பது, மில்லியன் கணக்கான மக்களைப் தொற்று நோய்க்கு இரையாக்கி உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் செயல்படுத்தியுள்ள, குற்றவியல் “சமூக நோய் எதிர்ப்புச் சக்தி” என்ற கொள்கையே ஆகும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த கொள்கைக்கு எதிராக, வேலைநிறுத்தங்கள் உட்பட பல்வேறு பிரச்சாரங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இராஜபக்ஷ உட்பட ஆளும் வர்க்கம், “நாட்டின் பொருளாதாரம்” எனக் குறிப்பிடுவது, உற்பத்தி சாதனங்களின் தனியார் உரிமையின் அடிப்படையில், இலாபத்துக்காக உற்பத்தி செய்யும் முதலாளித்துவ பொருளாதாரமே ஆகும். உற்பத்தி சாதனங்களை சொந்தமாக வைத்திருக்கும் முதலாளித்துவ வர்க்கமே அதை இயக்குவதால், “நாட்டின் பொருளாதாரம்” என்பது முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொருளாதாரமே அன்றி வேறில்லை. தமது சர்வதேச முதலாளித்துவ ஆளும் கூட்டாளிகளைப் போலவே, இராஜபக்ஷ உட்பட முதலாளித்துவ கூட்டம், மக்களை தொற்று நோய்க்கு பலி கொடுத்தேனும் இந்த முதலாளித்துவ பொருளாதாரத்தை, அதாவது இலாபத்தை உற்பத்தி செய்வதை, தொடர்ந்தும் முன்னெடுக்கவே செயற்படுகின்றன.

“நாட்டின் பொருளாதாரத்தை தொற்று நோய்க்கு பலிகொடுக்க கூடாது” என்பது, முதலாளித்துவத்தின் இலாப நலன்களுக்காக தொழிலாள வர்க்கம் தனது உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதே இந்த அர்த்தமாகும்.

இதை மூடி மறைக்க, முதலாளித்துவ ஆட்சியாளர்களும் அவர்களுடைய கைக்கூலிகளும் பல்வேறு சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். ஜனாதிபதி இராஜபக்ஷவும் தனது ட்விட்டர் செய்தியில், நாட்டை பகுதியளவேனும் மூடுவதன் மூலம், "கொவிட்-19” வைரசுக்கு எமது மக்களின் ஜீவனோபாயத்தை பலிகொடுக்க அனுமதிக்க முடியாது" என்று கூறினார்.

நாட்டை திறந்த நிலையில் வைத்திருப்பதற்கான காரணமாக, "மக்களின் வாழ்வாதாரங்களை" தூக்கிப் பிடிப்பது முற்றிலும் பொய்யானதாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதலாளித்துவவாதிகளின் அடிப்படைத் தேவைகளை மூடிமறைப்பதற்கு மேலாக, இங்கு மற்றொரு நோக்கமும் உள்ளது. பொது முடக்கத்தை அகற்றுவது வாழ்வாதாரத்திற்கு அனுமதியளிப்பதாகக் கூறி, தொற்றுநோயால் துன்பப்படும் மக்களுக்கு சிறிதளவேனும் பொருளாதார நிவாரணம் கொடுக்கப்படுமெனில் அதையும் கூட விட்டுவிட்டு கைகழுவிக்கொள்வதே இதன் நோக்கமாகும்.

இந்த "புதிய வழமையின்" கீழ், தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தொடரும் போது, எதிர்கொள்ளும் ஆபத்துக்களை ஏற்கனவே அவர்கள் அனுபவித்து வருகின்றனர். மினுவாங்கொடவில் உள்ள பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமை, இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு ஆகும். இந்த “சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள்” அனைத்தையும் கைவிட்டிருந்த அதன் நிர்வாகிகள், தொழிலாளர்கள் தாங்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாலும் கூட, வலி நிவாரணி மருந்துகளை கொடுத்து வேலை வாங்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, இந்தளவு பேரழிவை ஏற்படுத்திய பிரன்டிக்ஸ் நிறுவனம், கொக்கலவில் உள்ள அதன் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருந்த போது, பொலிசாரைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றியது. ஏனைய நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் பிற தொழிற்சாலைகளின் நிலைமை இதிலிருந்து வேறுபட்டதல்ல.

அத்துடன், முதலாளிகளின், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் “முத்தரப்பு ஒப்பந்தம்” மூலம், தொழிலாளர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டு, கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலட்சக் கணக்கானோர் வேலை இழந்தனர். இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், மக்களின் வாழ்வாதாரங்கள் இவ்வாறே "பாதுகாக்கப்பட்டன". ஆனால், முதலாளித்துவ வர்க்கம் சம்பந்தமாக, அரசாங்கத்தின் பதிலிறுப்பு, முற்றிலும் வேறுபட்டது ஆகும். தொற்று நோய்க்கு மத்தியில், அரசாங்கம், 150 பில்லியன் ரூபாய்களை மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு வழங்கியது.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள படி, ஒரு வரலாற்றுத் தூண்டுதல் நிகழ்வான இந்த தொற்று நோய் மூலம், முதலாளித்துவ முறைமையின் அனைத்து முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக, வர்க்க முரண்பாடுகள் தெளிவாக புலப்படும் வகையில் மேற்பரப்புக்கு வந்துள்ளன. தங்கள் சொந்த உயிரைப் பாதுகாத்துக்கொள்வது என்பது, தொழிலாள வர்க்கத்தின் முதன்மைத் தேவையாக இருக்கும் அதே வேளை, தொற்று நோயைப் பயன்படுத்தி இலாபத்தை குவித்துக்கொள்வதே முதலாளித்துவ வர்க்கத்தின் தேவையாகும். முதலாளித்துவத்தின் இந்த நலன்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித செலவு எந்தளவு என்றால், உலகம் முழுதும் தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 இலட்சமாகும்.

புளூம்பேர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, கடந்த ஆண்டில் உலகின் முன்னணி பில்லியனர்களில் 500 பேர், தங்கள் சொத்துக்களை 813 பில்லியன் டாலர்களால் அதிகரித்துக்கொண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில், இலங்கையின் முன்னணி கோடீஸ்வரரான தம்மிக பெரேராவின் வருமானம் 1.5 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது என்று தெரனஅருண நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் ஒரு கணக்கெடுப்பின் படி, இந்த காலகட்டத்தில், இலங்கையின் மக்கள் தொகையில் 7 சதவிகதம் பேர், தங்கள் வருமானத்தை முழுவதுமாக இழந்துள்ளதுடன், அவர்களில் 57 சதவீதமானவர்களின் வருமானம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 2 சதவீதமாக இருக்கும் அநேகமான முதலாளிகளின் வருமானம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"புதிய வழமையின்" கீழ், முதலாளித்துவ வர்க்கம் அதன் இலாப நலன்களுக்காக, தொழிலாளர்களை தொற்று நோய்க்கு பலிகொடுத்து வேலை வாங்கும் போது, தொழிலாள வர்க்கம் இந்த பேரழிவில் இருந்து தப்புவதற்கான தொழிலாள வர்க்க முன்னோக்கை முன்வைத்தது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் கிளைகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் (சோ.ச.க) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே.

தொற்றுநோய் ஒழிக்கப்படும் வரை, உணவு மற்றும் சுகாதார பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கடுமையான சுகாதாரக் கொள்கைகளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற அதே நேரத்தில், ஏனைய தொழிற்சாலைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். மூடப்படுகின்ற மற்றும் இயங்குகின்ற அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அனைத்து கொடுப்பனவுகளுடன் கூடிய முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரைக்கின்றோம். அது மட்டுமன்றி, தமது வாழ்வாதாரத்தை இழக்கும் அனைவருக்கும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஒரு கொடுப்பனவை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

அத்துடன், சர்வதேச அளவில் உள்ள பரந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவையும், மகத்தான செல்வத்தையும் இணைத்து, தொற்றுநோய்க்கு ஒரு சிகிச்சையை கண்டுபிடிப்பதற்கான உலகளாவிய முயற்சியின் அவசியத்தையும் நாங்கள் எடுத்துரைத்தோம். எவ்வாறாயினும், தொற்றுநோயானது வெறுமனே ஒரு மருத்துவ பிரச்சினை அல்ல என்றும், மிகவும் அடிப்படையில் அது ஒரு அரசியல் பிரச்சினை என்றும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய பிரதிபலிப்பின் மூலம் மட்டுமே அதற்குத் தீர்வு காண முடியும் என்றும், அனைத்துலக குழு பலமுறை வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ ஆட்சியாளர்களும் அவர்களுடைய கைக்கூலிகளும், முதலாளித்துவ அரசாங்கங்களும் நிறுவனங்களும் இந்தச் சுமையைத் தாங்க முடியாது என்று கூறுகின்றனர். இதற்கு ஏற்றாற் போல், அனைத்துலக குழுவின் முன்நோக்கு “நடைமுறை சாத்தியமற்றது” என "அறிஞர்கள்" என்று கூறிக்கொள்பவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த வாதங்கள், தங்களது சொந்த வர்க்க நலன்களிலிருந்து அல்லது மனித சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய அறியாமையிலிருந்து உருவாகின்றன. அடிமைத்தனம் மற்றும் நிலப்பிரபுத்துவம் போலவே, முதலாளித்துவமும் வரலாற்று ரீதியாக அபிவிருத்தியடைந்த சமூக அமைப்பாக இருந்தன என்பதையும், வரையறுக்கப்பட்ட உற்பத்தி முறைமையான அது, ஏனைய சமூக அமைப்புகளைப் போலவே வரலாற்றுக்குள் அடங்க (முடிவுக்கு வர) வேண்டிய ஒன்று என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சமூக பொருளாதார அமைப்பின் ஒரே சாத்தியமான வடிவம் முதலாளித்துவமே, என்ற கருத்தை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி, "சமூக வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், சமுதாயத்தின் சட உற்பத்தி சக்திகள், அப்போதுள்ள உற்பத்தி உறவுகளுடனோ அல்லது அவை இன்றுவரை இயங்கி வந்த சொத்து உறவுகளுடனோ முரண்பாட்டுக்கு வருகின்றன. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியில், அந்த வடிவங்கள், அவற்றிற்கு விலங்காக மாறும். அப்போது புரட்சியின் காலகட்டம் தொடங்கும்.”

முதலாளித்துவ உற்பத்தி முறை வேரூன்றிய இருக்கின்ற தேசிய அரசு அமைப்பு மற்றும் தனியார் சொத்தை அடிப்படையாக கொண்ட இலாப நோக்குடைய உற்பத்தியும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைகளாக மாறிவிட்டன. அதனால்தான், முதலாளித்துவ அமைப்பிற்குள் தொற்றுநோய்க்கு தர்க்கரீதியான மற்றும் சாத்தியமான தீர்வு கிடையாது.

அனைத்துலகக் குழு சொல்வது போல், ஒரு பகுத்தறிவான திட்டத்தை முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் செயல்படுத்த முடியாது. அதற்கு தேவையான ஆதாரவளங்கள் இல்லாமை அதற்கு காரணம் அல்ல. மாறாக, பில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் பரந்த சமூக செல்வமானது ஒரு சிலரின் கைகளில் குவிந்து இருப்பதாலும், ஒன்றோடொன்று போட்டி அரசுகளாக உலகம் பிரிக்கப்பட்டுள்ளதாலுமே அத்தகைய திட்டத்தை செயற்படுத்த முடியாது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் வரலாற்று முரண்பாடுகள் எந்தளவுக்கு பாரதூரமானது எனில், பில்லியன் கணக்கான மக்கள் தொற்று நோய், போர், வேலையின்மை மற்றும் வறுமை ஆகியவற்றுக்கு பலியாகியதைத் தவிர, மனித முன்னேற்றத்தின் சிறிதளவு தடயத்தை கூட காண முடியவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி, உலக சோசலிச வலைத் தளம் ஊடாக, அக்டோபர் 22 வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டவாறு (இணைப்பு), “சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், உலகளாவிய முதலாளித்துவத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தின் மூலமே, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அணுக முடியும்.” சோ.ச.க., தொற்று நோய் வெடித்த ஆரம்பத்தில் இருந்தே, இந்த நடவடிக்கைக்கான போராட்டத்தை இன வேறுபாடின்றி தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் ஆழப்படுத்தியுள்ளது.

வங்கிகள், பெரிய தோட்டங்கள் மற்றும் பெருவணிகங்களை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்த மறுக்கும், ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டம், இந்த போராட்டத்தின் மையமாகும். இந்த முன்னோக்கு தெற்காசிய சோசலிச குடியரசிற்கான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது."

Loading