இந்திய ஸ்ராலினிஸ்டுகள் பெருவணிக காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை ஆழமாக்குவதற்காக பீகார் தேர்தல்களைப் பயன்படுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்களைப் பயன்படுத்தி பெருவணிக காங்கிரஸ் கட்சியுடனான பிற்போக்குத்தனமான கூட்டணியை ஆழப்படுத்துகின்றன. சமீப காலம் வரை, நேரு-காந்தி குடும்பத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்கக் கட்சியாக இருந்தது.

124 மில்லியன் மக்கள் தொகையுடன், பீகார் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாகும். இது மிகவும் வறிய நிலையில் உள்ளது

பீகார் தற்போது, மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைவராக இருக்கும் ஜனதா தளம் (ஐக்கியம்) ஜே.டி (யு) மற்றும் இந்திய யூனியன் அல்லது தேசிய அரசாங்கத்தில் தலைமை வகிக்கும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சிக்கும் (பிஜேபி) இடையிலான கூட்டணியால் ஆளப்படுகிறது.

COVID-19 தொற்றுநோயை மத்திய அரசு பேரழிவுகரமான முறையில் கையாண்டமை, அதனால் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்கு திரும்ப வேண்டிய கட்டாயம், மற்றும் வேலையின்மை, மற்றும் சமீபத்தில் வறிய சிறு விவசாயிகளின் இழப்பில் வேளாண் வணிகத்தை அதிகரிக்கும் மசோதா ஆகியவற்றின் காரணமாக ஜே.டி (யு) -பிஜேபி கூட்டணி பெருகிய மக்கள் கோபத்தை எதிர்கொள்கிறது.., இதற்கு பிஜேபி இந்திய பேரினவாதத்தை தூண்டிவிடுவதன் மூலமாக பதிலளித்துள்ளது, பிரதம மந்திரி நரேந்திர மோடியே தேர்தல் பேரணிகளில் இவற்றுக்கு தலைமை தாங்குகிறார்.

சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை மகாகத்பந்தன் (Grand Alliance) இல் பெயரளவிலான பங்காளிகள், அது தேர்தல் மற்றும் வருங்கால அரசாங்கத்திற்கான ஒரு கூட்டாகும். இது பீகாரை தளமாகக் கொண்ட சாதி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் ((RJD) தலைமையிலானது, காங்கிரஸ் கட்சி RJD யின் முன்னணி பங்காளியாகும்.

மகாகத்பந்தன்இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிச-லெனினிச) விடுதலையும் இணைந்துள்ளது. 1970 களில் மற்றும் 1980 களில் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட “மக்கள் போர்” மூலம் “புதிய ஜனநாயகம்” ஒன்றை நிறுவுவதற்கான அரசியல்ரீதியான பேரழிவு முயற்சியை கைவிட்டு, தங்களை முதலாளித்துவ நாடாளுமன்ற மற்றும் எதிர்ப்பு அரசியலில் ஒருங்கிணைத்த பல இந்திய மாவோயிஸ்ட் குழுக்களில் இது மிக முக்கியமானது.

பீகாரின் கொடூரமாக ஒடுக்கப்பட்ட தலித் விவசாயத் தொழிலாளர்களின் பிரிவுகளின் போராட்டங்களை ஆதரிப்பதிலும் ஒழுங்கமைப்பதிலும் அதன் பங்கு இருப்பதால், சிபிஐ (எம்எல்) விடுதலை பீகாரில் சிபிஎம் அல்லது சிபிஐ விட பெரிய தேர்தல் தளத்தைக் கொண்டுள்ளது. "சீர்திருத்தவாதி" மற்றும் "சமூக பாசிசவாதி" என்று அது நீண்ட காலமாக கண்டனம் செய்த பழைய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளைப் போலவே, சிபிஐ (எம்எல்) விடுதலையும் ஒரு "இடதுசாரி" மற்றும் "கம்யூனிச" சக்தியாக பெற்றுக் கொண்ட நம்பகத்தன்மை எதுவாக இருந்தாலும் அதை பயன்படுத்தி உழைக்கும் மக்களை இந்தியாவின் பேராசை மிக்க ஆளும் மேல் தட்டின் வலதுசாரிக் கட்சிகள் பின்னால் கட்டி இழுத்து செல்கிறது.

சிபிஎம் மற்றும் சிபிஐ நீண்டகாலமாக சிபிஐ (எம்எல்) விடுதலைடன் உறைபனி உறவுகளைக் கொண்டிருந்தன. ஆனால் பூகோள மூலதனத்திற்கான மலிவான தொழிலாளர் புகலிடமாக இந்தியாவை மாற்றுவதற்கான முதலாளித்துவத்தின் உந்துதலுக்கு ஆதரிப்பதிலும், வசதி செய்வதிலும் அவர்களின் பங்கின் காரணமாக, தொழிலாள வர்க்கத்திற்குள் அவர்களுக்கு இருந்த ஆதரவு தளம் கடந்த தசாப்தத்தில் இரத்தக்கசிவு அடைந்துள்ளது, இதன் விளைவாக தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் ஏற்பட்டன. இதன் விளைவாக, பிரதான ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள் சிபிஐ (எம்எல்) விடுதலையின் அரசியல் கருத்துக்களுக்கு இணக்கமாக பதிலளித்துள்ளன, பிந்தையது இப்போது ”விரிவாக்கம் செய்யப்பட்ட இடது முன்னணி” இல் சிபிஎம் மற்றும் சிபிஐ உடன் அதிகரித்த அளவில் கூட்டை உருவாக்கியுள்ளது.

அவர்களின் முந்தைய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மூன்று ஸ்ராலினிச / மாவோயிஸ்ட் கட்சிகள், மோடியையும் அவரது இந்து மேலாதிக்க பாஜக வையும் முதலாளித்துவ வர்க்கம் தழுவிய நிலையில், வர்க்க மோதல் வியத்தகு முறையில் கூர்மையடையும் போது கூர்மையாக வலதுபுறமாக திரும்புவதன் மூலம் பதிலளித்துள்ளன.

நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வேலைகள் அல்லது வருமானம் இல்லாமல் ஒரு மோசமான முறையில் தயாரிக்கப்பட்ட COVID-19 பொது முடக்கத்தை விதித்த பின்னர், மோடி அரசாங்கம் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" என்ற கொலைகாரக் கொள்கையை செயல்படுத்தத் திரும்பியது. எதிர்க்கட்சி தலைமையிலான மாநில ஆட்சியின் ஆதரவுடன் அது அனேகமாக கட்டுப்பாடின்றி நோய்தொற்று பரவுவதை அனுமதித்தது, எனவே இந்திய பெரு வணிகத்தினர் மீண்டும் பெரும் இலாபத்தை ஈட்ட தொடங்க முடியும்.

COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கையில் இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடமாக மாறியுள்ள நிலையில், பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்க வேண்டும் என்ற பெயரில் மோடி அரசு, தொடரான புதிய தாராளமய தொழிலாளர் மற்றும் விவசாய “சீர்திருத்தங்கள்” மூலம் விரைந்து வந்து பூகோள முதலீட்டிற்கான ஒரு காந்தமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு துடைத்துக்கட்டும் தனியார்மயமாக்கல் இயக்கத்தை முடுக்கி விட்டுள்ளது. இந்தியாவின் ஆளும் உயரடுக்கின் உற்சாகமான ஆதரவுடன், பாஜக இந்தியாவை சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைத்துள்ளது. இந்த மாதம் முதல் தடவையாக இந்தியா அமெரிக்காவுடனும் அதன் பிரதான ஆசிய –பசிபிக் ஒப்பந்த கூட்டாளிகளுடன் ஒரு கூட்டு கடற் பயிற்சியில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது.

சி.பி.எம், சிபிஐ மற்றும் அவர்களின் மாவோயிச –ஸ்ராலினிச சகோதரன் சிபிஐ (எம்எல்) விடுதலை ஆகியோர் காங்கிரஸ் மற்றும் RJD மற்றும் தமிழ் நாட்டில் திமுக போன்ற ஒரு திரளான வலதுசாரி பிராந்தியவாத மற்றும் ஜாதி அடிப்படையிலான கட்சிகளுக்கு வழங்கும் கேவலமான ஆதரவை நியாயப்படுத்த வாதிடுவது என்னவென்றால் இந்து மேலாதிக்க பாஜக மற்றும் அதன் தீவிர வலதுசாரி கூட்டாளிகளை எதிர்த்து போராட இது போன்ற கூட்டணிகள் அவசியம். எவ்வாறாயினும், "இடது" கட்சிகள் வர்க்கப் போராட்டத்தை முறையாக அடக்குதல் மற்றும் தொழிலாள வர்க்கத்தை இந்திய முதலாளித்துவத்தின் கட்சிகளுக்கு கீழ்ப்படிய செய்தல் ஆகியவை அரசியல் வலதுசாரிகளை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் தான் சேவை செய்துள்ளன.

"ஜனநாயக" மற்றும் "மதச்சார்பற்ற" என்றழைக்கப்படும் சக்திகளை - அதாவது இந்திய முதலாளித்துவத்தின் மற்ற கட்சிகளில் இருக்கும் அதன் கன்னைவாத எதிராளி பிரிவினரை – அணிதிரட்டுவதன் மூலமாக பாஜக வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முடியும் என்பது தான் - கடந்த மூன்று தசாப்தங்களாக சிபிஎம் மற்றும் சிபிஐ கூறிவந்த முதன்மையான உடனடியான அல்லது "தந்திரோபாய" குறிக்கோளாக இருந்தது. ஆயினும் பாஜகவும் அதன் இந்து வலதும் முன்னெப்போதையும் விட வலிமையானவையாக இருக்கின்றன.

ஏனென்றால், ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக முடக்கினர், சந்தை சார்பு கொள்கைகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய பங்காளித்துவத்தையும் பின்பற்றிய வலதுசாரி அரசாங்கங்களுக்கு கீழ்ப்படிய செய்தனர். சமூக நெருக்கடிக்கு தனது சொந்த சோசலிச தீர்வை முன்னெடுப்பதில் இருந்து தொழிலாள வர்க்கம் தடுக்கப்பட்ட நிலையில், வெகுஜன வேலையின்மை, தேக்கநிலை வருமானங்கள் மற்றும் பரவலான சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீதான பரந்தளவிலான சமூக கோபத்தை பாஜக வாய்சவடால்கள் மூலமாக பயன்படுத்த முடிந்தது.

இது எதுவுமே ஸ்ராலினிஸ்டுகளையோ அல்லது அவர்களின் புதிய மாவோயிச கூட்டாளிகளையோ இடைநிறுத்தவில்லை.

சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் சிபிஐ (எம்எல்) விடுதலை அரசியல் பணியக உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “மோடி அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதும் இறுதியில் பதவி நீக்கம் செய்வதும் நாட்டில் ஜனநாயகத்திற்கு அவசியம். அதற்கு பீகாரில் (மகாகத்பந்தனின்) வெற்றி வழி வகுக்கும். ”

சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, அக்டோபர் 23 அன்று இந்துவுக்கு அளித்த பேட்டியில், "பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளை தோற்கடிப்பதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “இந்த இலக்கை அடைய அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். இப்போது, பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பிற்கும், நம் நாட்டின் ஜனநாயக அமைப்பு முறை மற்றும் நமது சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டுமானத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நமது நாடும் அரசியலமைப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்றார்.

இந்திய முதலாளித்துவ அரசின் நிறுவனங்கள் - “நமது அரசியலமைப்பு,” பாராளுமன்றம், நீதிமன்றங்கள் மற்றும் இராணுவம் ஆகியவை பாஜகவுக்கு எதிரான “ஜனநாயக” அரண் என்ற பொய்யை ஸ்ராலினிஸ்டுகள் முறையாக ஊக்குவித்துள்ளனர். உண்மையில், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிடமிருந்து மொத்தமாக கையகப்படுத்தப்பட்ட இந்த அரசு நிறுவனங்கள், மீண்டும் மீண்டும் இரக்கமின்றி தொழிலாள வர்க்கத்தை நசுக்கியுள்ளன. அதற்கும் மேலாக இந்திய முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சி எப்போதும் வலதுபுறமாக செல்வதை அவை பிரதிபலிப்பதை செய்துகாட்டி இன்னும் ஆழமாக வகுப்புவாதமயமாகிவிட்டன, தரைமட்டமாக்கப்பட்ட பப்ரி மஜித் இருந்த இடத்தில் ராமருக்கு ஒரு கோவில் கட்டுவதற்கும் மற்றும் காஷ்மீரில் தொடர்ந்து அடக்குமுறைக்கும் உச்சநீதிமன்றத்தின் முத்திரை குத்தப்பட்டது.

சிபிஐ (எம்எல்) விடுதலையும் கூட இதேபோன்ற தீங்கு விளைவிக்கும் பாத்திரத்தை வகிக்கிறது. பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது மோசடியாகக் கூறினார்; “ஊழல், சொந்த பந்தங்களுக்கு சலுகை, வகுப்புவாதம், நிலப்பிரபுத்துவ எதிர்வினை மற்றும் எதேச்சதிகார சக்திகளைத் தோற்கடிக்க” இடது அணியினர் இடதுசாரிகளின் போராடும் மரபுகளை மீட்டெடுக்க ஒன்றுபடுகிறார்கள்”.

இது ஒரு வெட்கமில்லாத மோசடி. மாவோயிஸ்டுகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் கூட்டாளிகள் பிற்போக்குத்தனமான இனவியல், வகுப்புவாத மற்றும் சாதி அரசியலில் மூழ்கியிருக்கிறார்கள். இந்த கட்சிகள் அனைத்தும் - ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை உட்பட - சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் "முதலீட்டாளர் சார்பு" கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன, இதன் விளைவாக மக்கள் தொகையில் முக்கால்வாசி மக்கள் ஒரு நாளைக்கு 2.50 டாலருக்கும் குறைவாக வாழ போராடும் ஒரு நாட்டில் வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆழமடைகின்றன.

பிற்போக்குத்தனமான முதலாளித்துவக் கட்சிகளிடையே "மதச்சார்பற்ற" கூட்டாளிகளை தேடுவதில், ஸ்ராலினிஸ்டுகள் அனைத்து விதமான வகுப்புவாத சக்திகளையும் சக பயணிகளையும் அரவணைக்கத் தயாராக உள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள பாசிச சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசாங்க கூட்டணிக்கு அவர்கள் தங்கள் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளனர். 2014 முதல் 2017 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஜே.டி.யூ, பா.ஜ.க.விடம் இருந்து விலகியபோது, ஸ்ராலினிஸ்டுகள் அதை ஒரு கூட்டாளியாக கருதி அதை ஒரு "மதச்சார்பற்ற" கட்சியாக அறிவித்தனர் – அது 17 வருடங்களாக பா.ஜ.க.வின் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தது என்பது ஒரு பொருட்டாக இல்லை.

மகாகத்பந்தன் ஆட்சிக்கு வருமாயின் அது ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தை அமைக்கும்.

இந்திய முதலாளித்துவத்தின் "சந்தை சார்பு" நிகழ்ச்சி நிரலை காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து நீண்ட காலத்திற்கு தலைமை தாங்கியது மட்டுமல்லாமல், இந்து வலதுடன் ஒத்துழைத்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது பாப்ரி மஸ்ஜித் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டியதுடன், கடந்த ஆகஸ்டில் மோடி இந்து கோவிலைக் கட்டியெழுப்பியபோது அதன் ஒரே புகார் அது அழைக்கப்படவில்லை என்பது தான். சீனாவுடனான தற்போதைய எல்லை மோதலின் போது, காங்கிரஸ் கட்சி பலமுறை மோடியை வலமிருந்து தாக்கியுள்ளது, அவர் பெய்ஜிங்கிற்கு எதிராக போதுமான அளவு ஆக்ரோஷத்தை காட்டவில்லை என்று குற்றம் சாட்டினார்

RJD யைப் பொறுத்தவரை, அதன் ஊழல் மற்றும் சாதி அடிப்படையிலான விண்ணப்பங்களுக்கு அது இழிபுகழ் பெற்றது. "சமூக நீதி" க்காக முன்நின்று போராடுவதாக கூறும்போது, அது ஒரு குறுகிய சாதி அடிப்படையை கொண்ட மேல் அடுக்கின் நலன்களை உயர்த்திப் பிடிக்கிறது. இட ஒதுக்கீடு (கல்வி வாய்ப்புகள் மற்றும் அரசுத் துறை வேலைகளில் உறுதியான நடவடிக்கை) மூலம் செல்வம் மற்றும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு பரிமாற்றமாக இந்த மேல் தட்டு சமூக துயரங்களை அடக்கு முறை மூலம் கட்டுப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது, இதை தான் 1995 முதல் 2005 வரை பீகாரின் மாநில அரசுக்கு RJD தலைமை தாங்கிய போது செய்தது.

பீகாரில் காங்கிரஸ் மற்றும் RJD உடனான ஸ்ராலினிஸ்டுகளின் தேர்தல் கூட்டணி தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுடனான தங்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என்பதற்கான மேலதிக அறிகுறியாக, சிபிஎம் மத்திய குழு அதன் அக்டோபர் 30 -31 கூட்டத்திற்குப் பிறகு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது அடுத்த ஆண்டு நான்கு மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான கட்சியின் திட்டங்களை தீட்டியது.

34 ஆண்டுகளாக மாநில அரசுக்கு தலைமை தாங்கி 2011 ல் முடிவடைந்த மேற்கு வங்கத்தில், சிபிஎம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என்று அறிக்கையை உறுதிப்படுத்தியது. இது வடகிழக்கு மாநிலமான அசாமில் காங்கிரஸ் மற்றும் பிற "மதச்சார்பற்ற கட்சிகளுடன்" சேரும். தமிழகத்தில், தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் உறுப்பினராக சிபிஎம் தேர்தலில் போட்டியிடும். பீகாரைப் போலவே, இந்த கூட்டணியில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு காங்கிரஸ் பிரதான எதிர்ப்பாக இருக்கும் கேரளாவில் மட்டுமே, ஸ்ராலினிஸ்டுகள் இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சிக்கு எதிராக பெயரளவில் எதிர்ப்பார்கள்.

Loading